நிறுவனம் சார்ந்த உற்பத்தித் தகவல், செய்தித்தகவல், அறிவியல் தகவல், தொழில் நுட்பத் தகவல் என்று இணைய தளங்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு குறிப்பிட்டத் தகவலை எப்படி அறிந்து கொள்வது அல்லது தேடிப் பெருவது என்ற கேள்வியின் விடையாக தேடு பொறி தொழில் நுட்பங்கள் உருவாகின. தேடு பொறி தொழில் நுட்பம் உருவாகி வெறும் 20 ஆண்டுகளே ஆகிறது. முதன் முதலாக அமெரிக்காவின் மெகராஹில் மாணவர்களின் 'ARCHIE'. இந்தத் தேடு பொறி இணையப் பக்கங்களின் ஐபி எண்ணையும், இணையப் பக்கத்தின் கோப்புத் தலைப்புகளையும் சேமித்து தேடுவோருக்கு தந்தது, இதன் குறைபாடு ஏற்கனவே தேடியவற்றின் குறிப்புகளை சேமிக்க வசதி செய்யப்படாததால் ஒவ்வொரு முறையும் ஏற்கனவே தேடியதைத் தேடும் பொழுது மிகுதியான நேரங்கள் எடுத்துக் கொண்டது, அண்மைய நுட்பங்களில் இண்டெக்ஸ் எனப்படும் குறிப்புகள் தேடப்படும் தகவல்களுடன் தேடுபொறிகளின் தேடு பட்டியலில் சேமிக்கப்படும், புதிதாக இடம் பெறும் பக்கங்களிலும் அந்தச் சொல் இருந்தால் தானகவே அதே இண்டெக்ஸில் இணைத்துக் கொள்ளும், இதன் வழியாக தகவல்களை தேடும் போது விரைவாக அவை ஏற்கனவே சேமிப்பில் உள்ளவை என்பதால் நமக்கு கிடைக்கிறது, இங்கு தான் விளம்பரத் தொழில் நுட்பத்தையும் புகுத்தி, நாம் தேடுவதில் அவர்களுக்கு விளம்பரமாக அமைந்திருக்கும் பக்கங்களை முதலில் காட்டுவார்கள்.
ARCHIE க்கு பிறகு செப் 2, 1993ல் W3Catalog என்ற தேடுபொறி இணையப் பக்கங்களை வரிவடிவங்களுக்கு மாற்றித் தகவல்களை சேமித்து தேடுவோரை தொடர்புடைய இணையப் பக்கங்களுக்கு வழி காட்டியாது. அதே ஆண்டில் World Wide Web Wanderer எனப்படும் இணைய ரோபோ உருவாகி இரண்டு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது, இதுவும் குறிச் சொற்களை சேமித்து வைத்து தேடும் இணையப் பக்களின் ஐபி எண்களுக்கு திருப்பிவிடடுக் கொண்டு இருந்தது, இதன் பிறகு இணைய தளங்களில் குறிச் சொற்களையும் சேர்த்தே அமைக்கும் HTML பக்கங்கள் உருவானதும் அதனைப் பயன்படுத்தி அதே காலகட்டத்தில் நவம்பர் 1993ல் Aliweb என்கிற இரண்டாவது குறிசொல் தேடல் வகை தேடு பொறி உருவானது.
WebCrawler எனப்படும் தானியங்கி தேடு பொறி 1994ல் பொதுப் பயன்பாட்டிற்கு பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது, இதன் சிறப்பு என்னவென்றால் புதிதாக இணையப் பக்கங்களை இணையத்தில் சேர்க்கப்படும் பொழுது இந்த தேடுபொறி அதில் இடம் பெறும் அனைத்துச் சொற்களையும் குறியீடுகளாக எடுத்து சேமித்துக் கொள்ளும், இணையத்தில் இடம் பெறும் அனைத்து இணையப் பக்கங்களையும் இவை தானாகவே குறிப்பெடுத்துக் கொள்ளும், அதன் படி தேடுவோருக்கான தகவல்களைக் காட்டி குறிப்பிட்ட இணைய பக்கத்தை நாம் தேர்வு செய்ய அங்கு திருப்பிவிடும்.
1994க்கு பிறகு தேடுபொறி என்பது வியாபாரம் சார்ந்த ஒன்றாக மறுவடிவம் எடுக்க, அதாவது தேடுவதில் எதைக் கொடுப்பது என்பதை தேடுபொறி முடிவு செய்யும் என்ற நிலையில் அதனை வியாபாரம் சார்ந்த ஒன்றாக மாற்றிக் கொண்டனர். அதாவது நாம் படிப்பு / வாங்கப் போகும் பொருள் சார்ந்த ஒன்றைத் தேடும் போது ஏற்கனவே அதே படிப்புத் தொடர்பில் தங்களது இணையப் பக்கங்களை முதலில் காட்டப்பட வேண்டும் என்கிற வியாபார ஒப்பந்ததில் அவை முதலில் காட்டப்பட்டு அடுத்து அதே படிப்பு / பொருள் தொடர்புடைய பிற இணையத் தளங்களைக் காட்டும் முகமாக தேடுபொறிகள் மாறின.
1994 - 1995ல் துவங்கப்பட்ட Magellan, Excite, Infoseek, Inktomi, Northern Light, and AltaVista போன்றவை விற்பனை நோக்கமாக இயங்கி வந்த தேடுபொறிகள் தான். இவற்றில் AltaVista யாகூ நிறுவனத்தால் பின்னர் வாங்கப்பட்டது. தேடுபொறிகளின் இணையத் தளங்களை தாமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது ? அதை ஏன் உலவில் சார்பாக மாற்றக் கூடாது ? என்கிற போட்டப்போட்டியில் Netscape, IE ஆகியவை போட்டியில் குதித்தன, அதுவரையில் அவை வெறும் உலவி என்ற அடிப்படையில் தான் இணையப் பக்கங்களைக் காட்டி வந்தன, Netscape அப்போது வளர்ந்து வந்த தேடுபொறிகளான Yahoo!, Magellan, Lycos, Infoseek, and Excite ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது உலவியின் அலுவல் ஆளுமைக்கான (Official) தேடுபொறிகளாக அமைத்துக் கொண்டது, இதன் படி Netscape உலவியின் முகவரி கட்டத்தில் தட்டச்சு செய்து தேடினால் அது ஒப்பந்தம் செய்திருக்கும் தேடுபொறியின் வழியாக தேடிய தகவல்களைக் காட்டியது. அதே போன்று IE தனக்குரிய MSN தேடு பொறியை அமைத்துக் கொண்டது.
இவைகளின் ஆட்டம் 2000 ஆம் ஆண்டு வரையில் தான், September 4, 1998ல் துவங்கப்பட்டு வளர்ந்திருந்த கூகுள் உள்ளே நுழைய, அதன் எளிமை அதாவது முகப்பில் எந்த விளம்பரங்களையும் காட்டாமல் விட்டிருந்தது தேடுவோருக்கு பிடித்துப் போகவும், அதன் விரைவான தேடல் மற்றும் உடனடி கிடைக்கும் தகவல் என்று வளர பிற தேடுபொறிகள் ஆட்டம் கண்டு, ஏற்கனவே இருந்த Overture, Alltheweb ஆகியவை போட்டியை சமாளிக்க யாகூ நிறுவனத்தால் வாங்கப்பட்டது. கூகுளின் துவக்கத்தில் யாகூ அதை 2004 ஆம் ஆண்டுவரை பயன்படுத்திக் கொண்டு இருந்தது, பிறகு யாகூ தனது தேடுபொறியையே பயன்படுத்த கூகுள் தனியாக இயங்க வேண்டிய கட்டாயத்தில் மலேசியாவில் இருந்த பிரிந்த சிங்கப்பூர் போல் வேகமாக வளர்ந்தது.

கூகுள் தற்பொழுது தேடுபொறிகளின் வெல்லமுடியாத அரசனாக நிற்கிறது, கூகுள் எர்த், கூகுள் மேப், கூகுள் ராங்கிங்க், சமூக வலைதளங்கள், படம் தேடல், விடியோ தேடல், க்ரோம் உலவி, ஆண்ட்ராய்ட் செல்பேசி மென்பொருள் என இணையத்தளங்களின் அத்தனை பரிணாம வளர்ச்சியாக நின்று கொண்டு இருப்பதால் முந்தைய தேடுபொறிகள் அனைத்தும் காணாமல் போயின, யாகூவும், மைக்ரோ சாப்பிடின் தற்போதையை Bing ஆகியவை தேடுபொறி என்ற பெயருக்கே இயங்கிவருகின்றன.
நான் 2005 வரையில் பயன்படுத்திய
goto.com, alltheweb.com, overture.com. looksmart.com, excite.com, infoseek.com, lycos.com ஆகியவை முற்றிலுமாக மறைந்து போய்விட்டன.

செல்பேசி விற்பனையில் ஆப்பிள் நுழையும் வரையில் நோக்கியா சக்கைப் போடு போட்டது போல் கூகுளின் ஆட்டம் இன்னும் சில ஆண்டுகளுக்குக் கூட இருக்கலாம், இருந்தாலும் கூகுளின் தற்போதைய கட்டுமானம் அவ்வளவு எளிதாக சரிந்துவிடாது என்றே நம்புகிறேன்.
ஒரு பக்கவாட்டு தகவல், கூகுளின் ப்ரெட் வேகாமல் போனது சீனாவில் மட்டும் தான், சீனா கூகுளை புறக்கணித்து தங்களுடைய நாட்டைச் சார்தவர்களால் சீன மொழியில் உள்ள தேடுபொறியையே பயன்படுத்துகிறது, அதன் பெயர் Baidu.com, சீனாவின் நெ 1 பணக்காரர்களில் Baidu நிறுவனரும் ஒருவர், அவருக்கு பல பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு. சீனா கண்டு கொள்ளாமல் இருந்தால் அவ்வளவு பணமும் கூகுளிடம் சென்றிருக்கும், விழித்துக் கொள்பவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள் என்பதை சீனாவின் கூகுள் தடையால் புரிந்து கொள்ளலாம்.

இணைப்பு : http://en.wikipedia.org/wiki/Web_search_engine
பின்குறிப்பு : பதிவு எழுத ஒன்றுமே இல்லை என்று நினைப்போர், தங்களது ஆங்கிலப் புலமையை வைத்து விக்கிப் பீடியாவில் இருந்து நல்ல தகவல்களில் தேவையான அளவு எடுத்து மொழிப்பெயர்பாக தமிழில் பதிவாக்கலாம், நமக்கும் இணையத்தில் கூடுதலாக ஒரு தமிழ் பக்கம் கிடைக்கும், வலைப்பதிவும், மொழிப் பெயர்ப்புத் திறனும் வளரும்.
3 கருத்துகள்:
வரலாறு தெரிந்தது.
சிபி செந்தில்குமார், பின்னூட்டத்திற்கு நன்றி.
தொழில்நுட்பம் குறித்து எழுதினால் பின்னூட்டங்கள் வராது. இருந்தாலும் நிறைய பேர் படித்துள்ளனர்.
நல்ல பயனுள்ள அறிவுறுத்தல்.
நன்றி கோவி.
கருத்துரையிடுக