பின்பற்றுபவர்கள்

14 அக்டோபர், 2012

வேலை மா(ற்)றும் நாள் !


பள்ளியின் கடைசி நாட்கள், கல்லூரியின் கடைசி நாள் போன்று அலுவலகங்களின் கடைசி நாள் அனுபவம், தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு கிடைக்கும் நல்வாய்ப்பு. நான் பதவி ஓய்வு நாள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை, ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் நாள் அதாவது அடுத்த நிறுவனத்திற்கு மாறும் முன் பழைய நிறுவனத்தின் கடைசி நாள் பற்றிக் குறிப்பிடுகிறேன்,  ஒரு ஆண்டுக்குள் பணிபுரிந்து விலகுபவர்களுக்கு அலுவலக கடைசி நாள் பற்றிய மிகப் பெரிய அனுபவம் இருக்காது, ஆனால் ஒன்றோ அல்லது அதற்கு மேல் பணி புரிந்து விலகுபவர்களுக்கு பழகிய அலுவலக நண்பர்களைப் பிரிகிறோம் என்கிற வருத்தம் இருக்கும்,  நான் இதுவரை பணிபுரிந்த அலுவலகம் அனைத்திலும் கடைசி நாள் எனக்கு  உணர்ச்சி மிக்கதாகவே அமைந்திருந்தது. பதவி விலகல் கடிதம் கொடுத்த அன்று முதல் உடன்புரியும் யாராவது ஒருவர் 'ஹவ்மெனி டேஸ் மோர் ?' அதைக் குறிப்பிட்டுக் கொண்டே இருப்பார். வழக்கமாக சண்டை போடுபவர்கள் கூட நட்பு பாராட்டும் விதமாக பேசுவார்கள். வேற நல்ல வேலைக்கு நல்ல ஊதியத்திற்கு வேலைக்குப் போகிறோம் என்று தெரிந்தால் வெளியே காட்டிக் கொள்ளாமல் பொறாமை அடைபவர்களும் இருப்பார்கள், ஆனாலும் இவன் போனால் நல்லது என்று நினைக்கும் நிலையை நான் இது வரை ஏற்படுத்தியதே இல்லை.

என்னைப் பொறுத்த அளவில் அலுவலகம் என்பது பகல் பொழுதுகளை இல்லத்தினரிடம் செலவழிப்பதைக் காட்டிலும் கூடுதலாக செலவழிக்கும் இடம். அவர்களில் சிலரை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை நாள் தோறும் சந்திக்க வேண்டிய வாய்ப்புள்ள இடம், முடிந்த அளவுக்கு என் மீது தவறே இல்லாவிட்டாலும் என்னைக் குற்றம் சொல்பவர்களைப் பார்த்து முகம் திருப்பிச் செல்லும் வழக்கமும் எனக்கு கிடையாது, எதுவுமே நடக்காதது போல் அவர்களிடம் மிகச் சாதாரணமாகப் பேசுவேன், காரணம் இந்த அலுவலத்திற்கு நான் வரவில்லை என்றால் அவர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் வாய்பற்றது என்ற நிலையில் நபர் எப்படி பட்ட தன்னலம் கொண்டவராக இருந்தாலும் என் மீதான அவரின் குற்றச் சாட்டுகளை நிருபனம் செய்ய இயலாத நிலையில் அவமானப்படுபவர் அவரே என்று நன்கு தெரிந்த நிலையில் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது, தவிர உடன்பணிபுரிபவர்களிடம் 'இது கூடத் தெரியாதா ?' என்று நக்கல் அடிக்காமல் கேட்கும் உதவிகளை செய்து தருவதுடன் அதில் நேரம் தாழ்வு ஏற்பட்டால் அவர்களிடம் விளக்கி மன்னிப்பு கேட்பதுடன், எப்படியாவது செய்து தரவேண்டும் என்று செய்து முடித்துவிடுவேன், முடிந்த அளவு அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்கள் வரையிலும் எல்லோரிடமும் அன்பாக பழகுவது தான் எனக்கான நல்ல சூழலை நான் வடிவமைத்துக் கொண்டு பணிபுரிய ஏற்ற இடமாகவும் அமையும் என்ற நம்பிக்கையுடன் அவ்வாறே நடந்து கொள்வதால் அலுவலகத்தில் எனது கடைசி வேலை நாள் எப்போதும் உணர்ச்சிகரமாகவே அமைந்துவிடும்.

ஒரு அலுவலகத்தில் நாம் எப்படி பணி புரிகிறோம் என்பதை நம்மிடம் உதவி கேட்பவர்களின் தயக்கத்தில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எல்லோரும் அலுவலக உதவி கேட்கிறார்கள் என்றால் நாம் செய்து தருவோம் என்று நம்மீது நம்பிக்கை வைத்திருப்பதுடன், நாம் முடியாது என்று சொல்ல மாட்டோம் என்று நம்புகிறார்கள், அப்படியான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தி இருக்கிறோமா ? என்று  நாம் நம்மை எடை போட்டுக் கொள்ளலாம். பணி புரிய ஊதியம்கொடுக்கிறார்கள், செய்ய வேண்டியது நம் கடமை என்றாலும் கடமை என்கிற பெயரில் நான் பிசி... பிசி அப்பறம் செய்கிறேன் என்று சால்சாப்பு சொல்பவர்களும் எங்கும் உண்டு, சரியான காரணங்களைச் சொல்லி முடிந்த அளவுக்கு தவிர்ப்பது என்பது அலுவலக அரசியல்களின் ஒன்று என்பதை அலுவல் செய்யும் அனைவருமே உணர்ந்துள்ளனர், இந்த நிலையில் கேட்கும் உதவி கிடைக்காவிட்டால் நாமும் எதையும் குறிப்பிட்ட நேரத்திற்கு செய்ய முடியாது என்றே உணர்ந்திருப்பார்கள், அதனால் தான் 'கடமையைத் தானே செய்கிறோம்' என்றாலும் கேட்டவுடன் உதவி செய்பவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்து போகும். இங்கு முதலாளியாக இருந்தாலும் பணிபுரிபவர் கேட்டவுடன் செய்து கொடுக்கும் வேலைக்கு 'நன்றி'யை உடனடியாகச் சொல்லிவிடுவார்.  இங்கு கடமை என்பது வேலை செய்வது மட்டுமல்ல ஒப்புக் கொண்டு உடனே செய்து தருவது என்றெல்லாம் பார்க்கும் பொழுது கடமையை தாண்டிய உதவி என்ற வகையில் வகைப்படுத்துவர். 

நான் இதுவரை ஒரு 10 நிறுவனங்களிலாவது பணி புரிந்து இருக்கிறேன், ஒவ்வொன்றின் கடைசி நாள்களும் மிகவும் உணர்ச்சிகரமானது. கண்ணீர், அழுகாச்சி என்றெல்லாம் இல்லாவிட்டாலும் விடைகொடுப்பவர்களிடம் ஒரு சோகமும், அதைத் தாண்டி அடுத்து நீ மேலும் மேலும் உயரவேண்டும் என்கிற வாழ்த்தும், அதுவரை ரொம்ப சாதாரணமாகப் பழகியவர்கள் கூட அவர்களை நான் மறக்கக் கூடாது என்பதை புரிய வைக்க அவர்களின் நம்மீதான கடைசி செயல்பாடுகளும் நம்மால் கவனிக்கத் தக்கதாகவே இருக்கும்,  நாம் அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்திருக்கிறோமா. எல்லோரும் பாராட்டும் வண்ணம் நடந்திருக்கிறோமா  இல்லையா ? என்பதை அலுவலகத்தின் கடைசி நாள் நமக்கு தெளிவாக சொல்லிவிடும்.

பள்ளி மற்றூம் கல்லூடியை போல் தோழமைகளை உருவாக்கித்  தரும் இடம் அலுவலகம். ஈராண்டுக்கும் மேல் பணிபுரிந்த நிறுவனங்களில் நான் பெற்ற கடைசி நாள் துய்ப்புகளை முடிந்த அளவுக்கு நினைவில் இருந்து மீட்டும் ஒவ்வொன்றாக பிறகு எழுதுகிறேன்.

17 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

சிங்கப்பூரில் வேண்டுமானால் கடைசி நாட்கள் வாழ்க்கையில் வேலை செய்யும் இடங்களில் மறக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் திருப்பூரில் அப்படி அல்ல. ஒவ்வொருநிறுவனத்தை விட்டு வெளியே வந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தால் அவர்கள் கண்களில் ஒரு விதமான கொலவெறியை நிச்சயம் பார்க்கலாம்.

சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக பாதிப்பேர்கள் அமைதியாக அடுத்த வேலையைத் தேடி சென்று விடுகிறார்கள். இல்லாவிட்டால் பாதி முதலாளிகளின் கதி?

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிஜி,

வேலையை விட்டு அனுப்பபடுபவர்கள், பிடிக்காமல் செல்பவர்கள் என்று பலதரப்பு இதில் உண்டு. எனக்கான அனுபவங்கள் நானாக விரும்பி மாற்றிச் சென்றவை தான். பல இடங்களில் வேறுமாதிரி பொய் சொல்லிச் செல்லும் சூழல் தான் எனக்கு ஏற்பட்டவை.

வவ்வால் சொன்னது…

கோவி,

மி வெயிட்டிங் ஃபார் கொசு வர்த்தி :-))

வடுவூர் குமார் சொன்னது…

முதல் சில நிறுவனங்களில் கடைசி நாள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் பிறகு பழகிவிட்டது.

அஜீம்பாஷா சொன்னது…

நீங்க சொல்றது யோசிக்கவேண்டிய ஒன்றுதான்,நான் சம்பளம் மற்றும் பெட்டி கேஷ் கையாள்வதால் சக பணியாளர்களோடு சற்று முரட்டுத்தனமாக நடந்துக்கொல்வதுண்டு, இதுவரை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்ததில்லை, இனி யோசித்துதான் செயல் படவேண்டும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

துளசி கோபால் சொன்னது…

இந்தியாவில் கடைசியாக வேலை செய்த நிறுவனத்தில் கோபாலின் அனுபவம். அது ஆச்சு 31 வருசம்!

வெளிநாட்டு வேலை கிடைத்து நாடு மாறப்போகிறோம். காரணம் ரெண்டே ரெண்டு. குடி இருக்க நல்ல வசதிகளுடன் வீடு இல்லை. ரெண்டாவது குழந்தை இல்லாத காரணத்தால் சமூகம் கொடுக்கும் மன அழுத்தம்.

காலையில் வேலைக்குப்போன கோபால் அடுத்த அரைமணியில் வீடு திரும்பிவிட்டார்! ஒரு மாச நோட்டீஸ் கொடுக்கும் கடிதத்தை மேனேஜரிடம் கொடுத்தபோது, காரணம் கேட்டாராம். வீடுதான் என்று சொன்னதும் வீடு தரேன்னாராம். ஏற்கெனவே ஒரு வருசமா வீட்டுக்குப் போராடியும் கொடுக்காத கம்பெனி இப்போ வேலையை விட்டுப் போறேன்னதும் தரேன்னுது.

மன்னிக்கணும். நான் வேலையை விடத்தான் போறேன்னதும், ஒரு மாசச் சம்பளத்தை கையில் கொடுத்து இப்பவே போன்னுடுச்சு கம்பெனி. சரின்னு, அஞ்சே நிமிசத்தில் அக்கவுண்ட் செட்டில்பண்ணி காசோலையை வாங்கிக்கிட்டு வந்துட்டார்.

ஒரு மாசம் கழிச்சுக் கிளம்பவேண்டியவங்க ஒரே வாரத்தில் கிளம்பி ஃபிஜித்தீவுகளுக்குப் போயிட்டோம்.

கடைசிநாள் அனுபவமுன்னு ஒன்னு (இந்தியாவில்) இல்லாமலே போயிருச்சு.

JP சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
JP சொன்னது…

உண்மை , என் முதல் பணி மாற்றம் போது நான் இது போன்ற ஒரு உண்ணர்ச்சி பூர்வ பிரியாவிடை சம்பவம். அதன் பின் பணி இடமாற்றம், பதவி மாற்றம், பணி மாற்றம் அனுபவம் வழக்கமான ஒன்று. இந்தியவில் பணி புரிந்த போது ஒரு சில பணி நண்பர்கள் நம்மை அணுகி புதிய பணி, பணிபுரியும் இடம் , காலி இடம் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் அதிகம். மலேசியா & சிங்கப்பூர் பணி மாற்றம் அனுபவம். என்றும் இனியவை.

ஜோதிஜி சொன்னது…

மன்னிக்கணும். நான் வேலையை விடத்தான் போறேன்னதும், ஒரு மாசச் சம்பளத்தை கையில் கொடுத்து இப்பவே போன்னுடுச்சு கம்பெனி. சரின்னு, அஞ்சே நிமிசத்தில் அக்கவுண்ட் செட்டில்பண்ணி காசோலையை வாங்கிக்கிட்டு வந்துட்டார்.

திருப்பூரில் ஒரே ஒரு முதலாளி மட்டும் நான் பார்த்தவரையிலும் இன்று வரையிலும் ஆச்சரியமாக தெரிகின்றார்.

வேலையை விட்டு செல்கின்றேன் என்று சொல்பவர்களிடம் கவனமாக இரு என்பதோடு அதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்கி குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள் என்பதோடு ஒரு மாதம் ஊக்கத் தொகையும் கொடுத்து அனுப்புகின்றார். பல வருடங்கள் கழித்து பார்க்கும் போது கூட ஆர்வமாக உண்மையான அக்கறையோடு விசாரிக்கின்றார்.

அவருக்கு நான்கு மகன்கள். திருப்பூர் வாடையில்லாமல் வளர்த்த காரணத்தால் அந்த ஏற்றுமதி நிறுவனம் தள்ளாட்டம் என்பதை அறியாமல் நான்கு பேர்களும் பல மக்களின் நல்ல எண்ணங்களின் ஆசிர்வாதம் கலந்த வளர்ச்சியாக இன்று வரை நன்றாக போய்க் கொண்டுருக்கிறது.

வாழ்த்துகள் வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியம்.

Unknown சொன்னது…


//நாம் அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்திருக்கிறோமா. எல்லோரும் பாராட்டும் வண்ணம் நடந்திருக்கிறோமா இல்லையா ? என்பதை அலுவலகத்தின் கடைசி நாள் நமக்கு தெளிவாக சொல்லிவிடும்.//

மிகத் தெளிவான கருத்து!இது முற்றிலும் உண்மை! நான் அனுபவ வாயிலாக என் பணிக்காலத்தில் உணர்ந்திருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//மிகத் தெளிவான கருத்து!இது முற்றிலும் உண்மை! நான் அனுபவ வாயிலாக என் பணிக்காலத்தில் உணர்ந்திருக்கிறேன்//

ஒத்தகருத்தேற்புக்கு மிக்க நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு மாச நோட்டீஸ் கொடுக்கும் கடிதத்தை மேனேஜரிடம் கொடுத்தபோது, காரணம் கேட்டாராம். வீடுதான் என்று சொன்னதும் வீடு தரேன்னாராம். ஏற்கெனவே ஒரு வருசமா வீட்டுக்குப் போராடியும் கொடுக்காத கம்பெனி இப்போ வேலையை விட்டுப் போறேன்னதும் தரேன்னுது.//

இங்கேயும் இப்படி நடக்கும், வேலையை விட்டு அனுப்ப நிறுவனம் முடிவு செய்தாலும், தாமே முன்வந்தாலும் குறிப்பாக விற்பனைப் பிரிவில் பணிபுரிபவர்களை அன்றே அனுப்புவார்கள். காரணம் நிறுவன விற்பனை ரகசியங்கள் அனைத்தையும் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று நிறுவனம் நினைப்பதுடன் முனைப்பாக வேலை பார்க்க மாட்டார்கள் என்று முடிவு செய்து அந்த மாத ஊதியம் கொடுத்து அன்றே அனுப்புவார்கள், நான் சிஸ்டம் அட்மினாக வேலை செய்வதால் தகவல் என்னிடம் முதலில் வரும், உடனேயே கணிணி கணக்கை முடக்கச் சொல்லி கடவுச் சொற்களை மாற்றச் சொல்லிவிடுவார்கள். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும் இருந்தாலும் அது என்னுடைய வேலைகளில் ஒன்று.

கோவி.கண்ணன் சொன்னது…

//திருப்பூரில் ஒரே ஒரு முதலாளி மட்டும் நான் பார்த்தவரையிலும் இன்று வரையிலும் ஆச்சரியமாக தெரிகின்றார்.//

நான் அதிஷ்டம் செய்தவன் இதுவரை வேலை பார்த்த நிறுவனங்கள் அனைத்திலும் தற்போதும் ஓரளவு தொடர்பு உண்டு, முதலாளிகளும் தொடர்பில் இருக்கிறார்கள், சில நிறுவனங்களில் பிரிவு மரியாதையெல்லாம் செய்து நல்ல முறையில் தான் அனுப்பியுள்ளனர்

கோவி.கண்ணன் சொன்னது…

//அஜீம்பாஷா கூறியது...
நீங்க சொல்றது யோசிக்கவேண்டிய ஒன்றுதான்,நான் சம்பளம் மற்றும் பெட்டி கேஷ் கையாள்வதால் சக பணியாளர்களோடு சற்று முரட்டுத்தனமாக நடந்துக்கொல்வதுண்டு, இதுவரை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்ததில்லை, இனி யோசித்துதான் செயல் படவேண்டும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.//

நல்லது, இந்தப் பதிவால் உங்களிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது, பிறரிடம் உங்களுக்கு ஏற்படும் நன்மதிப்பை கண்டிப்பாக உணருவீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வவ்வால் கூறியது...
கோவி,

மி வெயிட்டிங் ஃபார் கொசு வர்த்தி :-))//

டெங்கி காய்சல் பரவலை இதைவைத்து தடுக்கலாம் என்கிற எண்ணமா ? நடத்துங்க வவ்ஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் கூறியது...
முதல் சில நிறுவனங்களில் கடைசி நாள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் பிறகு பழகிவிட்டது.//

உங்க சீன நண்பர் உங்களை வரைந்து தந்த கார்டூன் நினைவுக்கு வருகிறது, அவரிடம் நீங்கள் நன்கு பழகாவிட்டால் வரைந்து கொடுத்திருக்க மாட்டாரே, நிறுவனமும் அதில் நல்ல நபர்களும் அமைவது நாம் வாங்கிய வரம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெனகராஜ் பழனிசாமி | Janakaraj Palanisamy கூறியது...
உண்மை , என் முதல் பணி மாற்றம் போது நான் இது போன்ற ஒரு உண்ணர்ச்சி பூர்வ பிரியாவிடை சம்பவம். அதன் பின் பணி இடமாற்றம், பதவி மாற்றம், பணி மாற்றம் அனுபவம் வழக்கமான ஒன்று. இந்தியவில் பணி புரிந்த போது ஒரு சில பணி நண்பர்கள் நம்மை அணுகி புதிய பணி, பணிபுரியும் இடம் , காலி இடம் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் அதிகம். மலேசியா & சிங்கப்பூர் பணி மாற்றம் அனுபவம். என்றும் இனியவை.//

எனக்கு வாய்த்த இனிய அனுபவங்கள் போல் உங்களுக்கும் அமைந்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்