பின்பற்றுபவர்கள்

21 ஜூன், 2012

குடியரசு தலைவர் தேர்தல் குளறுபடிகள் !


பிரணாப் நன்றி உள்ளவராக இருந்தார், மன்மோகன் பிரதமர் ஆனதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பதுடன் அடுத்து ராகுலை பிரதமராக மாற்றுவதற்கு காங்கிரசுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பிராணப் தான். ஆட்சி அவர்களுடையது என்பதால் நாம் அதில் கருத்து கூறுவதைத் தவிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இதுவரை தென்னிந்தியர், வட இந்தியர் என்று மாறி மாறி வாய்ப்புக் கொடுத்து வந்தார்கள், இந்த முறை அதற்கும் ஆப்பு வைத்து வட இந்தியர் வசமே தொடர்ந்து குடியரசு தலைவர் பதவி போகிறது என்பது தவிர்த்து எனக்கு அதில் வேறு அரசியல்கள் தெரியவில்லை, குடியரசு தலைவராக யார் வந்தாலும் பொம்மையாக இருந்து கொண்டு வெளிநாட்டு சுற்றுலாக்களை அரசு செலவில் அனுபவிப்பதைத் தவிர்த்து அரசியல் ரிதியான தீர்வுகளுக்கு அப்பதவியில் எதுவும் இல்லை என்பதைத்தான் கடந்த குடியரசு தலைவர்கள் அனைவரும் நிறுபனம் செய்துவந்துள்ளனர், எனவே அது ஒரு கவுரவப் பதவி என்பது தவிர்த்து மக்கள் நலன் சார்பானது என்று சொல்ல எதுவும் இல்லை. காங்கிரசின் அடுத்த பிரதமர் திட்டம் அறிந்தவர்கள் இந்த குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரசின் எண்ணம் ஈடேறக் கூடாது என்று அப்துல் கலாமை முன் மொழிந்தனர், துவக்கத்தில் ஆசை இருந்த அவர் பின்பு பின்வாங்கிவிட்டார். எனக்கும் கலாமே மீண்டும் குடியரசு தலைவர் ஆவதில் உடன்பாடு இல்லை, அது ஒரு கவுரவப் பதவி என்னும் போது வாய்ப்பை மற்றவருக்கும் வழங்குவது தான் நல்லது, சுதந்திர இந்தியாவில் கலாமை தவிர நல்லவர்களே இல்லையா ? இல்லை என்று நினைப்பது நமக்கே பெறுத்த அவமானம். 


கலாம் சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர், சிறுபான்மையினருக்கு நாங்களும் மதிப்பு கொடுக்கிறோம் என்று காட்ட பாஜகவும் கலாம் எங்கள் 'சாய்ஸ்' என்றது, நெற்றியில் குங்குமப் பொட்டும், பொது இடங்களில் பகவத் கீதையும் சொல்லும் முஸ்லிம்கள் இருந்தால் பாஜக பிரச்சனை செய்யாது, பாஜக எதிர்பார்க்கும் அனைத்து அடையாளங்களும் இஸ்லாமியர் அப்துல்கலாமிடம் இருப்பதால் கலாமை அவர்கள் முன்மொழிந்ததில் வியப்பும் இல்லை. கலாமினால் ஏற்பட்ட நன்மைகள் என்பதில் குழந்தைகளுக்கு போடும் மாறுவேடப் போட்டி முக்கிய பங்கு அளிக்கிறது, முன்பெல்லாம், கிருஷ்ணன், முருகன், பாரதியார், காந்தி, விவேகாநந்தர், அன்னை தெரசா,  என்று குறிப்பிட்ட வேடங்கள் மட்டுமே போட முடிந்தது,  தற்பொழுது மாறுவேடப் போட்டிகளில் அப்துல்கலாமின் முகமும் வருகிறது. அதையும் தென்னிந்திய குழந்தைகள் மிகுதியாகப் போடுகிறார்கள்

கூடங்குளம் விவகாரத்தில் கலாமின் அரசு சார்பு அறிக்கைகள் அவர் மீதான நல்லெண்ணங்களை குறைத்துவிட, அப்துல்கலாம் மீண்டும் குடியரசு தலைவர் வேட்பாளர் என்று சொல்லும் பொழுது பலருக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. காங்கிரசை மீறி வேறொருவருக்கு ஆதரவு கொடுக்க முடியாத நிலையில் திமுகவின் ஒட்டுமொத்த ஆதரவும் பிராணப்புக்கு உண்டு, கொல்லர் தெருவில் ஊசி விற்பதுபோல் உடன் பிறப்புகள், குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் திமுகவின் பங்கு குறித்து பெருமிதமாக 'கலைஞர் கிங்க் மேக்கர்', அதாவது கருணாநிதி கைகாட்டுபவர் தான் குடியரசு தலைவர் ஆவாராம், பேராசிரியர் அன்பழகன் இன்னும் திடகாத்திரமாகத்தானே இருக்கிறார், கருணாநிதி அவரைக் கைக்காட்டி கிங்க் மேக்கர் என்று நிறுபனம் செய்ய வேண்டியது தானே ? மத்திய அரசை எதிர்த்து எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாதவர்களை குறிப்பிட்டு 'கிங்க் மேக்கர்' பட்டம் கொடுக்கும் போது நகைக்காமல் இருக்க முடியவில்லை.

இப்போது புதிதாக 'கிங் மேக்கர்' பட்டியலில் கேப்டன் விஜயகாந்தும் இணைந்துள்ளார், அவர் குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறியதும், தேமுதிகவின் கனிசமான சட்டமன்ற உறுப்பினர்கள், கனமான வாக்குகள் ஆகியவற்றைக் குறி(வை)த்து காங்கிரசார் விஜயகாந்தின் கட்சிப்படி வாசலில் ஆதரவு கேட்டு காத்துக் கிடக்கின்றனர், மத்திய அரசின் தொடர்பான பேரங்களுக்கு விஜயகாந்திற்கு நல்ல வாய்ப்பு, அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தார் என நினைக்கிறேன். கருணாநிதி கிங்க் மேக்கர் என்றால் விஜயகாந்தும் கிங்க் மேக்கர் தானே.

கலாம் போட்டியிடாத நிலையில் ஜெ, மம்தா மற்றும் பாஜகவினர் கையை பிசைந்துவருகிறார்கள், கடைசி நேர பேரங்களில் பிரணாப் தான் அடுத்த குடியரசு தலைவர் ஆகும் வாய்ப்புகள் பலமாகவே உள்ளது. வெளியே தெரியாத பேரங்கள் குறித்து நாம் அறிந்திருந்தும் ஆளும் கட்சி எதிர்கட்சி ஆதரவுகள் குறித்து நாம் நம்பிக் கொண்டு இருக்கிறோம். அரசியல் பேரங்களைப் பொருத்த அளவில் கிடைப்பதில் பெரிய பங்கு ஆட்சியாளர்களுக்கு, மற்றவர்களுக்கு விழுக்காடு குறையும். கிடைப்பது போதாமல் ஆட்சி அதிகாரம், அதில் கிடைக்கும் வசதிகள், மாலை மரியாதைகள் இதற்காகத்தான் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட பங்கு கருணாநிதிக்கு போகும் என்று பேச்சுகள் உண்டு. சென்ற முறை கருணாநிதி ஆட்சியில் ஜெ மீது புதிய வழக்குகள் எதுவும் போடவில்லை, தற்பொழுது ஜெ ஆட்சியிலும் கருணாநிதி குடும்பத்தார் மீதான வழக்குகள் பெரிதாக எதுவும் போடவில்லை, கட்சியின் அடுத்த மட்டத்தில் மட்டும் வழக்குகளை வைத்துக் கொள்கிறார்கள். இதே போன்றதே பாஜக மற்றும் காங்கிரசின் ஆட்சி முறைகளும்.

பிரணாப் வேண்டாம் என்று பாஜக செல்வதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன ? தாங்கள் சிறுபான்மையினர் ஆதரவாளர்கள் என்று கலாமைக் காட்டி செல்வாக்கு பெறவேண்டும் என்று நினைப்பதைத் தவிர்த்து ? 

பிரணாப்புக்கே வாய்ப்பு என்றால் நாம் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று வழக்கம் போல் சொல்லுவோம். வேறு என்ன செய்ய முடியும்.

என்னைக் கேட்டால் கட்சிகளில் வளர்ந்து அமைச்சர்கள் ஆனவர்களை அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்காமல், ஐபிஎஸ், ஐஏஎஸ் அரசு அதிகாரிகளில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம், குடியரசு தலைவர் பதவியையும் பிரதமர் பதவி போல் கட்சி சார்ந்த பதவியாக்கி கேவலப்படுத்தி வருகிறார்கள்.

4 கருத்துகள்:

Robin சொன்னது…

பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்; வட இந்தியர் அல்ல.

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி!இந்தியாவில் முதன் முறையாக காண்ட்ரோவெர்சி ஜனாதிபதி என்கின்ற பட்டத்தை பிரணாப் பெறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிஜேபி சங்மாவை ஆதரிப்பதாக புதிய தகவல்.பார்க்கலாம்.

சங்மாவுக்கு பதிவு போட்டு டெபாசிட் கூட நான் இழந்து விடுவேன் என்றுதான் நேற்று வரை நினைத்துக்கொண்டிருந்தேன்.

சங்மாவையும் பிரணாப்பையும் மோத விடுவோம்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

இதை விட சிறப்பாக ஜனாதிபதி தேர்தல் கூத்தினை
சஞ்சீவி ரெட்டி வி.வி.கிரி தேர்தலில் கண்டு ரசித்ததாலோ என்னவோ
இந்தக் கூத்து எனக்கு சுவாரஸ்யப்படவில்லை
ஒருவேளை கட்சிக் கட்டுப்பாட்டை மீறி மனச்சாட்சிப்படி
ஓட்டளிக்கவேண்டும் என்கிற இந்திரா காந்தி அவர்கள் பாடிய
பழைய பல்லவியை சங்மாவும் பாடத் துவங்கினால்
ஒருவேளை இந்தக் கூத்தின் சுவாரஸ்யம் கூடலாம் என நினைக்கிறேன்
விரிவான அலசலுக்கு வாழ்த்துக்கள்

? சொன்னது…

//பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்; வட இந்தியர் அல்ல//

தமிழ்நாட்டுக்கு வடக்கே இருப்பதெல்லாம் நமக்கு வட இந்தியாதான்...ஆந்திரா உட்பட! :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்