பின்பற்றுபவர்கள்

6 ஜூன், 2012

காணாமல் போனவை - கிணறு !


நீச்சல் தெரியாதவரை எனக்கு கிணறுகளை எட்டிப் பார்த்தால் தலை சுற்றும், பிறகு தப்பித் தவறு நீச்சல் கற்றுக் கொண்டபிறகு எந்த பயமும் இன்றி மேலே வரும் வழி இருக்கும் கிணறுகளில் மேலே இருந்து குதித்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன், கிணறுகளின் காலம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானவை என்று குறிக்க நாம் திருகுறளின் தொட்டணைத் தூறும் மணற்கேணிக் குறளை எடுத்துக் கொள்ள முடியும், அணைக்கட்டு நீர்பாசனங்கள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக கிணறுகளைத் தான் தோண்டி பயன்படுத்தி வந்தனர், 50 ஆண்டுகளுக்கு முன்புவரை கிணறுகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. பின்னர் அடிக் குழாய்கள் (அடி பைப் / அடி பம்ப்) வந்த பிறகு கிணறு தோண்டும் வழக்கம் படிப்படியாகக் குறைந்தது, காரணம் தோண்டுவதற்கும் அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளைவிட நல்ல தூயத் தண்ணீரை அடி பம்புகள் தந்துவிடுவதால் கிணறு தோண்டுவதற்கு ஒதுக்க வேண்டிய பணம் மற்றும் இட வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கிணறு தோண்டும் வழக்கம் முற்றிலுமாக குறைந்தது. கிணறுகள் ஓரளவு வசதிப்படைத்தவர்களின் வெளிப்படையான அடையாளமாகவும் இருந்தது, கிணறு உள்ள வீடுகள் வசதியானவர்களின் வீடுகளாக இருந்தன, பெரும்பாலும் விவசாயம் சார்ந்த, விற்பனைச் சார்ந்த தொழில் செய்பவர்களின் வீடுகளில், பார்பன குடியிருப்புகள் (அஹ்ரகாரம்) கிணறுகள் இருக்கும், மற்றபடி ஏழை எளியவர்களுக்கான பொதுக் கிணறுகள் அங்காங்கே இருந்தன. குளங்களைப் போன்று சாதிக் கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட கிணற்றில் தண்ணீர் எடுக்கும் சாதி உரிமை மற்றும் தீண்டாமைகளின் ஊற்றாகக் கூட கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. எந்த ஒரு இந்துக் கோவிலிலும் குளம் இல்லாவிட்டாலும் அங்கு ஒரு கிணறு இருக்கும், காரணம் அன்றாட பூசைகளுக்கு முன்பாக சிலைகளையும் சுற்றுகளையும் (பிரகாரம்) கழவ தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டுவருவதைவிட கோவிலினுள்ளேயே கிணறுகளை அமைத்திருந்தது வசதியாக இருந்தது. 

கிணறுகளின் எண்ணிக்கைக் குறைந்து போக மக்களின் ஆர்வமின்மை என்பதைவிட நிலத் தடி நீர் எட்டாத அளவுக்கு கீழே சென்றதாலும் ஆண்டு முழுவதும் ஊறாத நிலையில் கிணறுகளைத் தோண்டுவதும் அதைப் பராமரிப்பதும் தேவையற்ற செலவுகளைத் தரும் என்பதால் கைவிட்டுவிட்டனர், முனிசிபல் தண்ணீர், குழாய் வழியாக கிடைக்கத் துவங்கியதும் புதிய கிணறுகளுக்கான தேவை என்பது கிட்டதட்ட இல்லாத நிலையில் அவை வாழ்க்கையின் இன்றியமையாத அன்றாடத் தேவைகளில் இருந்து விடுபட்டுவிட்டது.  30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 100 அடி தோண்டினால் தான் கிடைக்கும் என்ற நிலையில் அதுவும் ஆண்டு முழுவதும் கிடைக்காது என்ற நிலையில் கிணறுகள் தோண்டுவது முற்றிலும் நின்று போனது. பழந்தமிழ் கதைகளாக கிணறுகள் தொடர்புடைய கதைகள் நிறைய உண்டு, நல்லத் தங்காள் கதையில் குழந்தைகளுடன் பாழும் கிணற்றில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டுஇருக்கும். பராமரிக்காமல் இருக்கும் திறந்த கிணறுகளை பாழும் கிணறு என்பர், மக்களின் இடப் பெயர்ச்சி மற்றும் வெட்டப்பட்ட குளங்கள் இவற்றினால் கிணறுகள் பயன் குறையும் போது அவற்றைச் சுற்றிலும் புதர்கள் ஏற்பட தவளைகள், பாம்புகள் அவற்றின் இருப்பிடமாக ஒரு கிணறு மாறிய பிறகு அவற்றை பாழும் கிணறு என்ற நிலையை அடைந்து அச்சப்பட வைக்கும் ஒரு இடமாக மாறிவிடும், கிராமத்தினரின் கொலை தற்கொலைகளுக்கு இந்தப் பாழும் கிணறுகள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன.

வீடுகட்டுவதற்கு பார்க்கப்படும் சோசியம், நேரம், நாள் நட்சத்திரம் கிணறுவெட்டவும் பார்க்கப்பட்டது, 'கிணறு வெட்ட உகந்த நாள்' போன்ற வாஸ்து சாத்திரங்களும் உண்டு. காரணம் கிணறுவெட்டுவது பெரும் பொருள் செலவு என்பதால் தேவையான தண்ணீர் ஊற்றாக அது இருக்குமா இருக்காதா ? என்பதையெல்லாம் சோசியம் பார்த்து தான் முடிவு செய்தனர். சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பு கலவையும் கிணறுகளின் உள் சுவர்களை அமைக்கப்பயன்படுத்தினர், அதனுள் படிக்கட்டுகள் அல்லது ஏறிவரும் வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தினர், பின்னர் சிமெண்ட் புழக்கத்திற்கு வந்த பிறகு சிமெண்ட் வட்டக் குழாய்களை மேலே இருந்து வட்டமாக தோண்டி வைக்க, அதன் பிறகு கிழே தோண்ட தோண்ட அந்த குழாய் கீழே இறங்கும், பின்னர் அதன் மீது மற்றொரு சிமெண்ட் குழாயை வைத்து முழு ஆளத்திற்கு சிமெண்ட் குழாய்கள் அமைக்கபட்டு இருக்கும், இரு குழாய்களுக்கு இடையேயான இடைவெளி மற்றும் துளைகள் கிணற்றின் புறத்தில் ஊறும் தண்ணீரை கிணற்றுக்குள் சேமிக்கும். நீர் இறைக்க சகடைகளாக உறுமி வடிவ மர சகடைகளும் பின்னர் இரும்பு வளையச் சகடைகளும் பயன்படுத்தப்படுகிறது.

தொலைகாட்சிகள், நெடும்தொடர்கள் இல்லாத காலங்களில் பெண்கள் கூடும் இடமாகத்தான் கிணற்றடிகள் இருந்தன, கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டே அக்கம் பக்கம் கதைகளைப் பேசி பொழுதுகளை ஓட்டுவர். குளிப்பது, துவைப்பது அனைத்தும் கிணற்றடிகள் தான் என்பதால் பயன்படுத்தப்படும் நீர் மறுபயனீடாக தரைவழியாக உறிஞ்சப்பட்டு கிணற்றுக்குள் சென்றுவிடும். கிணறுகளை அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்துவது போல் நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தினர், இது பற்றி சுவையான கதைகள் கூட உண்டு, தெனாலி இராமன் கதையில் திருடன் வந்திருப்பதை அறிந்த தெனாலி இராமன் பண மூட்டையை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருப்பதாக மனைவியிடம் சொல்ல. அதைக் கேட்டத் திருடன் விடிய விடிய கிணற்றை இறைத்து அதை தேடிவருவான், விடியும் முன்பே கிணற்றில் எதுவும் இல்லை என்று ஓடிவிடுவான், பயிர்களுக்கெல்லாம் போதிய நீர் பாய்ச்சப்பட்டு இருக்கும், தெனாலி இராமனின் அறிவுத் திறமைக்காக இந்தக் கதை எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டு இருக்கும்.

கிணறுவெட்ட பூதம் கிளம்பிய பழமொழி குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க கிணறு தோண்டும் போது விசவாயுவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை கனிசமாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது, இறப்பிற்கான காரணம் அறிவியல் ரீதியாக தெரியாத காலங்களில் காத்து கருப்பு அடித்துவிட்டது என்பதாக இந்த பூதம் கிணறு குறித்த பழமொழியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். பாதி கிணறு தாண்டுவது - கிணற்றைத் நீளக் கொம்பினால் தாண்டி இளைஞர்கள் பந்தயம் கட்டிய விளையாட்டுகள் இருந்திருக்க வேண்டும், அதன் தொடர்பில் தான் பாதி கிணறு தாண்டினாலும் தோல்வி தான் என்பதைக் குறிக்கும் பழமொழி வந்திருக்க வேண்டும், தாகம் ஏற்படுவதற்கு முன்பே கிணறு தோண்டிவிட வேண்டும். Dig a well before you feel thirsty.  என்கிற சீனப் பழமொழி கூட கிணறு தொடர்பில் இருக்கிறதாம், மற்றபடி கிணத்து தவளை, கிணத்து நீரை ஆறு கொண்டு போய்விடுமா ? அதாவது உனக்கு என்று உடையதை யாரும் கவர்ந்துவிட மாட்டார்கள் என்ற பொருளிலும், ஒன்று குறித்த தகவல் அற்ற நிலையை 'கிணத்தில் போட்ட கல்லாக' என்ற பொருளிலும் சொல்லுவர்.

கிணற்றடிகளில் நான் பார்த்த வியப்பான ஒன்று ஆட்டுக்குட்டிகள் போடும் துள்ளாட்டம், ஆழம் குறித்த எந்த பயமும் இல்லாமல் புதிதாக பிறந்த ஆட்டுக்குட்டிகள் ஒரு மாத வளர்ச்சிக்குப் பின் போடும் துள்ளாட்டம், கிணற்றின் சுவர்களில் ஏறி நின்று துள்ளி துள்ளி குதிக்கும். தமிழ் திரையில் சலங்கை ஒலிப்படத்தில் வயதான கமலஹாசன் குடித்துவிட்டு கிணற்றின் மீது ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆட்டுக் குட்டிகளின் துள்ளாட்டம் நினைவில் வந்து போகும், படையப்பா படத்தில் பாழும் கிணறில் திருமணம் கை கூடாத நிலையில் தாலி உள்ளிட்ட பொருள்களைப் போடுவதாகக் காட்டுவார்கள், விஜய் படம் ஒன்றில் வடிவேலு நகைச்சுவையாக கிணற்றடி காட்சி ஒன்று நயந்தாராவின் கவர்ச்சி வெளிச்சமாக காட்டப்பட்டு இருக்கும்.

நல்ல வெயில் காலங்களில் வாளி வாளியாக கிணற்றடியில் நின்று நீர் இறைத்துக் குளிப்பதில் இருக்கும் இன்பம் அருவியில் குளித்த புத்துணர்ச்சியைத் தரும், கிணறுகள் பண்பாடுகள் மற்றும் நாகரீக ஊற்றாக பண்ணெடுங்காலமாக தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்தது. நாம் இழப்பு என்று உணராமல் இழந்ததில் கிணறுகளின் பயன்பாடும் ஒன்று. காரணம் மறு சுழற்சியாக நீர் பயன்பாடுகளாக, நீர் ஆதரங்களாக கிணறுகள் இருந்தன, இன்றைய காலத்தில் தூய தண்ணீர் கிடைத்தாலும் அது தொடர்ந்து கிடைப்பது அரிதாகிப் போனது மட்டுமின்றி தண்ணீர் உணவுப் பொருள் போன்று செலவீனங்களுள் ஒன்றாகவும் ஆகிவிட்டது.

எனக்கு தெரிந்து நாகை பேருந்து நிலையம் அருகே, மருத்துவமனைக்கு வலப்புறம் கடற்கரையை நோக்கிச் செல்லும் சிறிய சாலையில் 50 அடி விட்டத்திற்கு 100 மீட்டர் இடைவெளியில் மூன்று கிணறுகள் இருந்தன, தற்போது அவை இருந்ததன் அடையாளமே அங்கு இல்லை.

கேணி, கெணறு ஆகியவை கிணறு குறித்த மற்றச் சொற்கள், கிணறு என்கிற சொல் பிறப்பை ஆராய்கையில் கிண்ணகம் என்றச் சொல் ஊற்று என்ற பொருள் தரும் பயன்பாட்டில் இருந்திருக்கிரது, கிண்ணக நீரூற்று கிணறு என்று மருவி இருக்க வேண்டும், மற்றொரு சொல் மூலம் குறித்துப் பார்க்கையில் கிணம் என்ற சொல்லும் கிணறு குறித்தச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருகிறது கிணம் + ஊற்று > கிணறு என்ற திரிச் சொல்லாக மாறி இருக்க வேண்டும். கிண்ணம் என்ற சொல்லும் வட்டு அல்லது குழிந்த என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதால். கிணம் என்றச் சொல்லே கிணற்றின் வேர்ச் சொல் என்றே கருதுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்தே.

கிணறு பற்றிய தகவல்கள் இணையத்தில் மணற்கேணி போன்று ஊற்றாக எழுதப்பட்டுள்ளன. 





கிணறு  (வாஸ்து பற்றிய இடுகை)



கிணறு:  (சிறு கதையுடன் தகவல்)

கிணறு  (விக்கிபீடியா தகவல் தொகுப்பு)

முதிரி கிணறு  (அய்யா வைகுண்டர் பற்றிய தகவல் தொகுப்பில் இடம் பெற்ற கிணறு)





ஜம்ஜம் நீரூற்று  (இஸ்லாமிய கிணறு)


நல்லத்தங்கா கிணறு  - நல்லத் தங்கா விழுந்ததாக நம்பப்படும் கதைக் கிணறு இருக்கும் இடம் பற்றிய தகவல்

கிணறு- ஒரு சிறுகதை

கிணறு....!   (சிறு கவிதை)

கிணறு பற்றிய  சிறப்பான வேறு தகவல் குறித்த இணைப்பு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

12 கருத்துகள்:

Riyas சொன்னது…

கிணறு பற்றிய நல்ல அலசல்.. இது முற்று முழுதாக கானாமல் போகவில்லை!!

இன்னும் நிறைய கிராம புறங்களில் பயன்பாட்டில் உள்ளது.. எங்கள் ஊர் உட்பட.. கிணற்றுத்தண்ணீரை விட ருசியான நீர் வேறு எங்கும் கிடையாது!!

அமர பாரதி சொன்னது…

நல்ல பதிவு. சொல் பிறப்பு ஆராய்ச்சியைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை.

//பின்னர் அதன் மீது மற்றொரு சிமெண்ட் குழாயை வைத்து முழு ஆளத்திற்கு சிமெண்ட் குழாய்கள் அமைக்கபட்டு இருக்கும், இரு குழாய்களுக்கு இடையேயான இடைவெளி மற்றும் துளைகள் கிணற்றின் புறத்தில் ஊறும் தண்ணீரை கிணற்றுக்குள் சேமிக்கும்// இதை நான் கேள்விப் பட்டதே இல்லை. எங்கும் பார்த்ததுமில்லை.

//கேணி, கெணறு ஆகியவை கிணறு குறித்த மற்றச் சொற்கள்// துரவு என்று ஒரு அழகான சொல் இருக்கிறது. பெரும் கிணறுகளைக் குறிக்கும் சொல். தோப்பும் துரவுமாக என்று சொல்வார்களே.

வவ்வால் சொன்னது…

கோவி,

//கிணறுகளின் எண்ணிக்கைக் குறைந்து போக மக்களின் ஆர்வமின்மை என்பதைவிட நிலத் தடி நீர் எட்டாத அளவுக்கு கீழே சென்றதாலும் ஆண்டு முழுவதும் ஊறாத நிலையில் கிணறுகளைத் தோண்டுவதும் அதைப் பராமரிப்பதும் தேவையற்ற செலவுகளைத் தரும் என்பதால் கைவிட்டுவிட்டனர், //

கிணறு ஏன் வெட்டப்படுகிற்து என்ற நீரியல் நுட்பம் தெரியாமல் இப்படி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நீரோட்டம் மிக ஆழத்தில் இருக்குமானால் அங்கு கிணறு தான் வெட்ட வேண்டும், அதுவே பொருளாதார சிக்கனம், மற்றும் நீர் கிடைக்க வழி.
மண்ணீன் வெட்டுப்பட்ட பரப்பு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு நீர் சுரக்கும். ஏன் எனில் நிறைய ஊற்றுகள் திறக்கப்பட வாய்ப்பு உண்டு(percolation of water will be more).மிக குறைந்த நிலத்தடி நீரோட்டம் இருக்கும் இடங்களில் கிணறு வெட்டுவது குறைந்த பட்ச உத்திரவாதம் . போர் வெல் என்பதே குழாய் கிணறு என்று தான் சொல்லப்படுகிறது. நல்ல நீரோட்டம் கிடைக்கும் என் உத்திரவாதம் இருந்தால் மட்டுமே அவ்வாறு செய்வார்கள்.

வறண்டப்பகுதிகளில் எல்லாம் கிணறே அதிகம் காணப்படும். மேலும் மழைக்காலங்களில் நீர் சேமிக்கவும் கிணறுப்பயன்ப்படும்.

எங்கள் ஊரில் உள்ள வீட்டிலும் கிணறு உண்டு, வயலிலும் கிணறு உண்டு.கைப்பிடி சுவறே இல்லாமல் தரையோடு இருக்கும், ஒரு சின்ன விளிம்பு மட்டுமே இருக்கும்,அப்படிப்பட்ட கிணறே கேணி எனப்படும்.

கிணறு வெட்டுவது குறைய காரணம் இடம் அடைத்துக்கொள்வதே.அப்படியும் சிலர் கிணறு வெட்டி அதன் மீது முக்கால் வாசி வீட்டின் தளமே போட்டு வீடுகட்டிக்கொள்கிறார்கள். ஒரு ஓரமாக கிணறு இருப்பதன் அடையாளமாக திறப்பு இருக்கும், அதன் வழியே மோட்டார் போட்டு தண்ணீர் எடுப்பர்கள்.அப்படிப்பட்ட பாதாளக்கிணறுகளை சென்னையில் காணலாம் , முக்கியமாக மேற்கு மாம்பலம் பகுதியில்.

அமர பாரதி சொன்னது…

வாவி என்ற சொல்லும் கிணறைக் குறிக்கும்.

suvanappiriyan சொன்னது…

எங்கள் வீட்டில் இருந்த கிணற்றை சில வருடங்களுக்கு முன் வீடு மராத்து பண்ணும் போது இருந்த குப்பைகள் கற்கள் அனைத்தையும் கொட்டி சமப்படுத்தி விட்டேன். கிணற்றில் இருக்கும் சக்கர வளையத்தை எடுக்காமல் ஏன் மூடினாய். அது பெரிய பிரச்னையை கொண்டு வந்து விடும் என்று ஒரு பெரிசு இன்னமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். :-)

வடுவூர் குமார் சொன்னது…

சிறிய சாலையில் 50 அடி விட்டத்திற்கு 100 மீட்டர் இடைவெளியில் மூன்று கிணறுகள் இருந்தன, தற்போது அவை இருந்ததன் அடையாளமே அங்கு இல்லை.
அவரித்திடலில் கிரிக்கெட் விளையாடியதோடு சரி இந்த பக்கமெல்லாம் போனது கூட இல்லை.
வவ்வால் எப்படி போட்டாலும் அடிக்கிறாரே!! :-)
நிறைய தகவல் அவர் பதிலிலும் சொல்லியிருக்கார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Riyas கூறியது...
கிணறு பற்றிய நல்ல அலசல்.. இது முற்று முழுதாக கானாமல் போகவில்லை!!

இன்னும் நிறைய கிராம புறங்களில் பயன்பாட்டில் உள்ளது.. எங்கள் ஊர் உட்பட.. கிணற்றுத்தண்ணீரை விட ருசியான நீர் வேறு எங்கும் கிடையாது!!//

புதிய கிணறுகள் எங்கும் தோண்டப்படுவது இல்லை. அதைத்தான் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன், ஏற்கனவே இருப்பதும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. நன்றி ரியாஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

// இதை நான் கேள்விப் பட்டதே இல்லை. எங்கும் பார்த்ததுமில்லை.//

சிமெண்ட் வளையங்கள் என்று கூறி இருக்க வேண்டும், 2 - 3 மீட்டர் விட்டம் கொண்ட சிமெண்ட் வளையங்களை குழி பறித்து அதன் மீது பொறுத்துவார்கள், பின்னர் கீழே மண் தோண்ட வளையம் கீழே இறங்கும், பிறகு அதன் மீது மற்றொன்று.....இப்படியாக முழு ஆழத்திற்கும் சிமெண்ட் வளையம் மேலிருந்து ஒவ்வொன்றாக பொருத்தப்படும்.

// துரவு என்று ஒரு அழகான சொல் இருக்கிறது. பெரும் கிணறுகளைக் குறிக்கும் சொல். தோப்பும் துரவுமாக என்று சொல்வார்களே.// நல்லச் சொல், தோட்டம் துரவு என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

நன்றி அமரபாரதி

கோவி.கண்ணன் சொன்னது…

//வறண்டப்பகுதிகளில் எல்லாம் கிணறே அதிகம் காணப்படும். மேலும் மழைக்காலங்களில் நீர் சேமிக்கவும் கிணறுப்பயன்ப்படும்.//

அதெல்லாம் அந்தகாலம் அடிபைப்புகள் போடத் துவங்கியதும் கிணற்றிற்கான பொருள் செலவை நினைத்து அவற்றின் புதிய வரவுகள் குறைந்துவிட்டன.

வவ்வால் நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள், நன்றி, இப்பதிவின் நோக்கம் கிணறுகள் பற்றிய தகவல் தொகுப்பிற்கான இணைப்பு,

கோவி.கண்ணன் சொன்னது…

//அமர பாரதி கூறியது...
வாவி என்ற சொல்லும் கிணறைக் குறிக்கும்.//

ஓ அப்படியா ? நான் கேள்விப்பட்டதில்லை. மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் கூறியது...
எங்கள் வீட்டில் இருந்த கிணற்றை சில வருடங்களுக்கு முன் வீடு மராத்து பண்ணும் போது இருந்த குப்பைகள் கற்கள் அனைத்தையும் கொட்டி சமப்படுத்தி விட்டேன். கிணற்றில் இருக்கும் சக்கர வளையத்தை எடுக்காமல் ஏன் மூடினாய். அது பெரிய பிரச்னையை கொண்டு வந்து விடும் என்று ஒரு பெரிசு இன்னமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார். :-)//

குரானில் மூக்கில் சைத்தான் குடியிருக்கிறது என்று சொல்லியதை நம்புவீர்கள், மற்றவர்கள் வேறு நம்பிக்கைக் குறித்துச் சொன்னால் அது உங்களுக்கு கேலி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவரித்திடலில் கிரிக்கெட் விளையாடியதோடு சரி இந்த பக்கமெல்லாம் போனது கூட இல்லை.//

நான் அந்த கிணறுகளைப் பார்த்தே 35 ஆண்டுகள் ஆகி இருக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்