பின்பற்றுபவர்கள்

14 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 3 !


விடுதியில் முதல்நாள் காலைப் பொழுதிற்கும், அடுத்த நாள் காலைப் பொழுதிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, வழக்கம் போல் எழுந்து நான் மட்டும் விடுதியை விட்டு வெளியே கடற்கரைக் பகுதிக்கு வந்தேன், முதல் நாள் போன்றே கடல் உள்வாங்கி இருந்தது. அப்படியே கடற்கரை ஓரமாக நடக்க பறவைகள் வைத்திருந்த இடம் நோக்கிய நடைச் சாலை, அது பிரியும் இடத்தில் நேராக நடந்து சென்று பார்ப்போம், அங்கும் எதோ விடுதிகள் போன்று தெரிகிறதே என்று நினைத்தேன், பிறகு தான் தெரிந்தது அந்த இடம் நேற்றே விடுதி இலவசப் பேருந்தில் ஏறி அங்கு ஏற்கனவே வந்திருக்கிறோம் அது தான் படகு மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான இடம் என்று தெரிந்தது, எல்லாம் ஒரே வளாகம் அருகருகே இருப்பது தான் பேருந்தில் வரும் போது சற்று சுற்றி வருவதால் அது வேறு இடம் போன்று தோற்றம் அளித்திருந்தது, கடற்கரைக்கு அருகே பாதுகாப்பு மற்றும் விளையாட்டுகளை நடத்தி தருபவர்களுக்கான சிறிய குடில், குளியல் அறைகள் இருந்தன, ஒரு பணியாளரிடம் இந்த சுற்றுலாத் தளம் ஏன் இவ்வளவு ' எக்ஸ்பென்சீவ் ?', பாலி கூட இவ்வளவு எக்ஸ்பென்சீவ் இல்லையே ? என்று கேட்டு வைத்தேன், அவரும் எத்தனை நாள் இங்கு தங்குகிறீர்கள் என்றெல்லாம் அக்கரையாக விசாரித்துவிட்டுச் சொன்னார், 'இந்த சுற்றுலாத் தளம் இந்தோனேசியா அரசும் சிங்கப்பூர் முதலாளிகளின் முதல்களாலும் நடத்தப்படுகிறது, இங்கு தங்குபவர்கள் அனைவருமே சிங்கப்பூர் வழியாக வருபவர்கள், எனவே தான் இங்கு சிங்கப்பூர் வெள்ளி தான் பணமாகப் பயன்படுத்தப்படுகிறது, பாதுகாப்புக் கருதி வெளி ஆட்கள் யாரையும் எதற்கும் அனுமதிக்காததால் மலிவானப் பொருள்களை இங்கு நீங்கள் வாங்க முடியாது, பாலி சென்று வந்ததால் உங்களால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது, மற்றவர்கள் விலை ஏற்றம் பற்றி கவலைப்படுகிறார்களா என்று தெரியாது என்றார். 

அவர் சொல்வது சரிதான், பெரும்பாலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் சொந்த செலவில் தங்குபவர்களுக்கு இங்கு பணம் செலவு செய்வதற்கு 'அழமாட்டார்கள்' ஆனால் சராசரி சிங்கப்பூர்காரர்கள் ? ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு தான் பார்ப்பார்கள், பின்டனுக்கு வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள் மிகக் குறைவு, நிறுவன விழா அல்லது தேனிலவு என்று அவர்கள் வந்தால் உண்டு, பள்ளி விடுமுறைகளில் ஒரு சிலர் குழந்தைகளுடன் வருகிறார்கள், மற்றபடி பின்டன் வருபவர்களில் பெரும்பாலோனோர் சிங்கப்பூர் வழியாக வரும் வெளி நாட்டு பயணிகள் தான், சிங்கப்பூரர்களிடையே பின்டன் அவ்வளவாக புகழ்பெறவில்லை, காரணம் கூடுதல் செலவு என்றாலும் சிங்கப்பூர்களுக்கு பிடித்த அடுத்த நாடு மலேசியா, பின்னர் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் கடைசியாக ஜப்பான். தொலை தூரம் சென்றுவருவதைத்தான் சுற்றுலா என்று நினைப்பதால் பின்டன் வரும் சிங்கப்பூர் வாசிகள் மிகக் குறைவு தான். சிங்கப்பூர் வாசிகள் மலேசியாவின் விடுமுறைத் தளங்களுக்குச் செல்வது கட்டுபடியான செலவு என்று நினைப்பதால் அவர்களை பின்டன் தங்குமிடத் தளங்கள் (ரிசார்ட்) பெரிதாக ஈர்க்கவில்லை. குறிப்பாக சாப்பாடு அவர்களுக்கு பிரச்சனை இங்கே, விருப்பப்படி 10 வகை உணவுகளுடன் இரவு உணவு சாப்பிடுபவர்களுக்கு இங்கு ப்ரைட் ரைஸ் 12 வெள்ளி என்னும் போது பின்டன் அவர்களுக்கு கட்டுப்படியாகாது, குறிப்பாக சிங்கப்பூர் சீனர்களைத்தான் சொல்கிறேன். சிங்கப்பூர் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப பாலியில்(Bali) உணவு வகைகள் கிடைப்பதால் அருகே இருக்கும் பின்டனைவிட பாலிக்கு செல்லும் சிங்கப்பூர் பயணிகள் மிகுதி.

******

விடுதி அறைக்குச் சென்று குளித்துவிட்டு நாங்கள் அனைவரும் காலை உணவிற்காக விடுதி உணவகத்திற்கு வந்தோம், நேற்றைக்கும் இன்றைக்கும் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் இல்லை, அவற்றின் இடங்களை மாற்றி வைத்திருந்தனர், நேற்று சாப்பிட்ட அரிசு மாவு கூழ் நன்றாக இருந்தது, அரிசி மாவை நன்றாக வேக வைத்து அதில் பனைவெல்லம் தேங்காய்பால் சேர்த்து கலந்து வைத்திருந்தார்கள், இனிப்பு கூடுதல் தான், நன்றாகத்தான் இருந்தது, இன்றைய உணவில் அதற்கு மாற்றாக ப்ரெட் புட்டிங், ப்ரெட்டை புட்டு மாதிரி செய்து வைத்திருந்தனர், சுவைக்க இனிப்புடன் நன்றாகத்தான் இருந்தது, மற்றபடி பழங்கள், காப்பி, கெலாக்ஸ் கலவை மற்றும் ஒரு கோப்பை பச்சரிசி கஞ்சி காலை உணவு முடிந்தது. பின்னர் குழந்தைகளைக் கூட்டி கடற்கரைக்கு சென்றோம் மணி காலை 10 ஆகி இருந்தது, 12 மணிக்குள் விடுதி அறையை ஒப்படைக்க ஏற்கனவே நினைவுபடுத்தி இருந்தனர், இன்னும் 2 மணி நேரம் இருக்கே ? கடற்கரை வழியாக நடந்தோம், நேற்று பார்த்த படகு விளையாட்டு இடம் அருகில் தான் இருக்கிறது என்று கூறி அழைத்துச் சென்றேன், துடுப்புபடகில் இலவசமாக ஒரு மணி நேரம் துடுப்புப் போட அனுமதி கூப்பான் இருந்தது, ஆனால் அதை எடுத்துவர மறந்துவிட்டோம். அங்கிருந்து 5 நிமிடத் தொலைவில் விடுதி அறை இருப்பதால் விடுதிக்கு திரும்பி அறையையும் ஒப்படைத்துவிட்டு வந்துவிடலாம் என்று அறைக்கு திரும்பிவிட்டோம். 

ஒருவழியாக கூப்பானை தேடி எடுத்து, பயணப் பெட்டிகளை புறப்பட எடுத்து வைத்து, அதை விடுதி வரவேற்பில் வந்து ஒப்படைத்துவிட்டு பணம் கட்டிவிட்டு, திரும்ப படகு செலுத்தும் கடற்கரைக்கு சென்று சேரவும் பையன் கண் அசரவும் சரியாக இருந்தது, அம்மாவும் பெண்ணும் துட்டுப்படகுக்கு அனுப்பிவிட்டு பையனின் தூக்கத்திற்கு நான் காவல் இருந்தேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் மனைவிக்கு தெரியாது, பாதுகாப்பு சட்டைகள் போட்டுத்தான் படகில் ஏறினார்கள், இரண்டு பேர் அமர்ந்து துடுப்புப் போடும் கயாக்கிங்க் வகை படகு, ஒரு 10 அடி செல்வதற்குள் படகு கவிழ அணிந்திருந்த ஆடைகள் நனைந்துவிட்டது, அதன் பிறகு இன்னும் 10 அடி தொலைவுக்குச் சென்று ஒரு ஐந்து நிமிடத்தில் மனைவி 'பயமாக' இருக்கு என்று திரும்பிவிட்டாள், அதன் பிறகு நானும் என் மகளும் படகை செலுத்தினோம், படகுனுள் ஈரம் எனது உடைகளை நனைத்தது,

கரையில் இருந்து படகைக் கிளப்ப கொஞ்சம் முயற்சி மற்றும் சக்தி தேவையாக இருந்தது அதன் பிறகு துடுப்புப் போடவும் திருப்பவும் எளிதாக இருந்தது, 200 மீட்டர் அளவுக்கு கடலுக்குள் சென்றேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் பயந்து தான் உட்கார்ந்திருந்தாள், அதற்குள் அந்த பக்கமாக வந்த பாதுகாப்பாளர்கள் அவ்வளவு தொலைவெல்லாம் செல்லாதீர்கள் இங்கு நீரோட்டம் மிகுதி (High Current), அப்படியே கடலுக்குள் இழுத்துச் செல்லும் என்றார், அவர் சொன்னதை கவனிக்காமல் இருந்த மகள் என்ன சொன்னாங்க ? என்று என்னிடம் கேட்க, இங்கே ஆழம் வரக்கூடாது என்று சொன்னார்கள் என்றேன், இழுத்துச் செல்லும் என்று சொல்லி இருந்தால் பயந்து இருப்பாள், மீண்டும் கரைக்கு திரும்பி, திரும்பவும் அதே போல் கடலுக்குள் ஒரு வட்டம் அடித்து வர அரை மணி நேரத்திற்கும் கூடுதலாக ஆகி இருந்தது, பின்னர் விடுதிக்குச் சென்று எடுத்து வைத்த துணிகளை பெட்டிகளைக் கேட்டு வாங்கி மாற்றுடைகளை அணிந்து கொண்டு சிங்கப்பூருக்கு திரும்ப, படகுத்துறைக்கு அழைத்துச் செல்லும் பேருந்துக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தோம். அதற்கு மேல் சுற்றிப்பார்க்க அங்கே எதுவும் இல்லை, உடலில் பலமும் இல்லை. வீட்டுக்கு போய் எப்படா சோற்றைக் கண்ணால் பார்ப்போம் என்றாகிவிட்டது.

பேருந்து அழைத்துச் சென்று படகு முனையத்தில் விட்டது, அங்கும் ஒரு மணி நேர காத்திருத்தல், பின்னர் படகில் அனுமதிக்க சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம், புறப்படும் போது 3 மணி பயணம் ஒரு மணி நேரம், சிங்கை வரும் போது 5 மணி, நேர வேறுபாடுகளால் ஒரு மணி நேரம் இழப்பு, செல்லும் போது கிடைத்த ஒரு மணி நேரத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டது, இந்தப் பகுதியில் கடல் மாசு மிகுதி, படகில் வரும் வழியெங்கும், குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை அங்காங்கே மிதப்பதை காண முடிந்தது. 

*****

ஏன் 'திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம்' என்றேன் ?

1. இரண்டு நாளுக்கு தங்குவதற்கு படகு கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்டு செய்த செலவு 800 வெள்ளிகள், இதில் 75 விழுக்காடு செலவுக்கு மலேசியா கேமரான் குளுகுளு மலையில் / லங்காவியில் தங்கிவிட முடியும், அங்கு பகல் முழுவதும் ஊர்சுற்ற, நம் விருப்பம் போல் சென்று வர இடங்கள் உண்டு, இங்கு பின்டன் ரிசார்டுகள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே, அதில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதில் எந்த ஒரு மகிழ்வும் இல்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருப்பதுடன் பக்கத்தில் இருக்கும் கடற்கரை பூங்காவிற்குச் சென்றுவருவதும் ஒன்றே, பைசா செலவே இல்லாமல் முடிந்துவிடும்

2, ஹோட்டல் செக் இன் டைம் என்ற பெயரில் மாலை மூன்று மணிக்கு மேல் அறை தரும் விடுதி நிர்வாகம், 12 மணிக்குள் செக் அவட் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள், 3 மணிக்கு முன்னால் முன்கூட்டிய செக்கின் செய்யும் போது மணிக்கு, நபருக்கு  20 வெள்ளி என்ற அளவில் கூடுதல் கட்டணம் வாங்குகிறார்கள், ஒரு நாளைக்கு மேல் தங்காவிட்டால் விடுதியில் தங்கும் நேரம் 24 மணி நேரம் கிடையாது 21 மணி நேரம் மட்டுமே. 

3. கடற்கரையில் அமைந்த ஒரு விடுதி என்பது தவிர்த்து பெரிய சிறப்புகள் எதுவும் இல்லை. இது போன்று நிறைய கடற்கரை விடுதிகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உண்டு, இதைவிட கட்டணங்களும் குறைவு

4. உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்து அன்றாடப் பொருள்களும் சிங்கப்பூரைக் காட்டிலும் விலைக் கூடுதல்.

5. குழந்தைகளை ஈர்க்கும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும், இடங்களும் இங்கு இல்லை

6. வெளிநாடு சென்று வந்தோம் என்ற திருப்தி எதுவும் கிடைக்கவில்லை, காரணம் பின்டன் ரிசாட்டை விட்டு வெளியே செல்லும் வாய்ப்புக் குறைவு. அந்த நாடு எப்படி இருக்கும் என்பதை பின்டன் ரிசாட்டைவைத்து முடிவு செய்ய முடியவில்லை. பொதுமக்களை காணவோ, அங்கு வசிப்பிடச் சூழல், கடைகள் எதையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை

*******



மற்றபடி நல்ல பாதுகாப்புச் சூழல் உள்ளது, மாற்றத்திற்காகவும் மன அமைதிக்காகவும் செல்ல விரும்புவர்கள் செல்லலாம், முதல் உதவி என்ற வகையில் மருத்துவ அறை ஒன்றையும் மருத்துவர் ஒரிருவரை வைத்திருக்கிறார்கள் ,மற்றபடி உயிர்காக்கும் அவசரசிகிச்சை உடனடி மருத்துவம் என அந்த ரிசார்டை விட்டு மருத்துவமனைகளுக்குச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணிக்க வேண்டி இருக்கும்.

பாலித் தீவு சென்று வந்ததை 10 இடுகைகளாக எழுதினேன், இங்கும் செலவிட்டது அதே 3 நாள் 2 இரவு என்றாலும் 'பின்டன்' பற்றி எழுத இதற்கு மேல் நான் அறிந்த வகையில் எதுவும் இல்லை.

8 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

நீங்க சொல்லுறத பார்த்தால் காசு கொடுத்து செல்லுலர் ஜெயிலில் அடைந்து கிடக்க போவது போல இருக்கே.

நம்ம மக்களோட வருமானம் இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது கட்டுப்படியாவதில்லை. கோவாக்கு போயிட்டு ஒரே நாளில் ஓடி வந்தேன் ,பை நிறைய எடுத்துப்போனால் சொர்க்கம் தான் ,எனக்கோ நரகம் ஆச்சு.

நீங்கள் சொல்வது உண்மை தான் வட இந்தியர்கள் நன்றாக செலவழிக்கிறார் சுற்றுலாவில் காரணம் பெரும்பாலும் வியாபாரிகளாக இருப்பதே.

இந்த தீவில் தான் வெள்ளித்திரை என்ற பிரகாஷ் ராஜ் நடித்த படம் எடுக்கப்பட்டதா? அப்படத்தில் இது போல இடங்கள் வரும் .கருடன் பொம்மை பார்த்த நினைவு.

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்ஸ்,

ஒரு நாள் தங்குவது சரி தான், அதற்குமேல் அங்கிருந்தால் ஒவ்வொரு நாள் சாப்பாட்டு செலவே புண்ணாக்கிவிடும்.

கருடன் சிலைகள் மலேசியாவின் லங்காவி தீவிலும் உள்ளது, அங்குதான் அஜித்தின் பில்லா எடுத்தார்கள், சினிமா சூட்டிங் அவ்வப்போது நடக்குமாம், பின்டன் தமிழ்திரைக்குள் வந்ததாகத் தெரியவில்லை

kamalakkannan சொன்னது…

பின்டன் திருமணம் செய்த இளம் ஜோடிகளுக்காக "தேனிலவு " கொண்டாட உருவாக்கப்பட்ட இடம் , இளம் ஜோடிகள் கணக்கு பார்காமல் செலவு செய்வர்கள்,அவர்களுக்கு அறையினை விட்டு செல்லும் அவசியம் கிடையாது :) அண்ணனுடைய சாய்ஸ் wrong place :)

துளசி கோபால் சொன்னது…

//வீட்டுக்கு போய் எப்படா சோற்றைக் கண்ணால் பார்ப்போம் என்றாகிவிட்டது.//

இதுதான் உண்மை! நம்மூரைவிட்டு வெளியே போனால்.... அதுவும் வெளி நாடுகள் என்றால் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுதான் உண்மை! நம்மூரைவிட்டு வெளியே போனால்.... அதுவும் வெளி நாடுகள் என்றால் இப்படித்தான் ஆகிவிடுகிறது.//

யாராவது நம்மை சோற்றால் அடித்தப் பிண்டங்கள் என்று திட்டினால் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும், தேர்தலில் தோற்றபிறகு கருணாநிதி ஒருமுறை திட்டினாராம்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//kamalakkannan கூறியது...
பின்டன் திருமணம் செய்த இளம் ஜோடிகளுக்காக "தேனிலவு " கொண்டாட உருவாக்கப்பட்ட இடம் , இளம் ஜோடிகள் கணக்கு பார்காமல் செலவு செய்வர்கள்,அவர்களுக்கு அறையினை விட்டு செல்லும் அவசியம் கிடையாது :) அண்ணனுடைய சாய்ஸ் wrong place :)//

அறையை விட்டு வெளியே போகாமல் இருக்கும் ஹனிமூன் சோடிகள் ஏன் காசு செலவு செய்து விடுதியில் தங்க வேண்டும் ?
:)

Bala சொன்னது…

BINTAN is not even considered as a good tourist spot even in Indonesia. I think you should try Bunacan and lombok( if u like beaches) which is much better places and cheap.

'VellithThirai' Movie taken at Bali

கோவி.கண்ணன் சொன்னது…

//Bala கூறியது...
BINTAN is not even considered as a good tourist spot even in Indonesia. I think you should try Bunacan and lombok( if u like beaches) which is much better places and cheap.

'VellithThirai' Movie taken at Bali//

நீங்கள் சொல்வது சரிதான், அமையான இடம் ஆனால் உல்லாச சுற்றுலான்னு சொல்ல ஒண்ணும் இல்லை அங்கே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்