பின்பற்றுபவர்கள்

2 நவம்பர், 2011

கலவை 02/நவ/2011 !

தீபாவளி : ஒருவழியாகத் தீபாவளிப் பேச்சு, ஒரு நான்கு நாள் பயணமாக உறவினர் இல்ல நிகழ்வுக்கு இல்லத்தோடு வந்து அதே விரைவில் தீபாவளிக்கு முன்பே மகள் பள்ளித் தேர்வை முன்னிட்டு திரும்ப வேண்டியதாகிவிட்டது, 400 - 500 வெள்ளிகள் இருந்தால் போதும் வார இறுதியில் கூட வந்து திரும்பலாம் சிங்கை - சென்னை பக்கம் தானே. இருந்தாலும் பயண அலுப்பு ஒருவாரத்திற்கு தொடரத்தான் செய்கிறது. தீபாவளி துணிகளையெல்லாம் சென்னையிலேயே வாங்கியாச்சு, நல்லி சின்னச் சாமி செட்டி(யார்) கடையில் வாங்கிய பட்டுவேட்டி பட்டுச் சட்டைத்தான் என்னோட தீபாவளித் துணி, ஆயிரம் பட்டுப் பூச்சிகளின் ஆத்ம சாந்தியின் மவுனத்தில் பட்டுவேட்டிச் சட்டை நன்றாகவே பளபளத்தது. சொன்னா யார் கேட்கிறாங்க ஆடுமாடு கோழி வளர்ப்புப் போல் பட்டுபுழுவும் மனித அன்றாட வாழ்க்கையின் துணித் தேவையை நிறைவுச் செய்யப் படைக்கப்பட்டதாம், அப்படியே சுடுதண்ணியில் அமுக்கி கொன்றால் பாவம் இல்லையாம். பட்டு உடைகளில் கிடைக்கும் பீடு(கம்பீரம்) வேறெதிலும் கிடைக்குமா ? பெண்கள் இன்னும் புடவைகளைத் துறக்காமல் இருப்பதற்கு பட்டும் அதன் பகட்டுமே காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சும்மாச் சொல்லக்கூடாது தீபாவளிக் கொண்டாட்டம், அதன் களை இவைகளிலெல்லாம் சென்னையை மிஞ்ச நகர் இல்லை. பட்டாசு விறுவிறுப்பாக விற்கவில்லை மற்றபடி துணிக்கடை, நகைக்கடை விற்பனை படுவேகம். முகப்பில் சின்னதாகத் தெரியும் நல்லி (பழைய கடை) பெரிய குடோன் போல் உள்ளே சென்று கொண்டே இருந்தது. விலை ? மற்ற அஞ்சு மாடிக் கட்டிடத் துணிக்கடைகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை, அதே போல் பொதுமக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளிலும். பால் பாட்டிலின் எஞ்சிய பாலைக் கொட்டிக் கழுவ இடம் தேடி படாதபாடு பட்டேன்.

மூன்று நாள் பயணத்திலும் ஒரு நாள் பயணமாக நண்பருடன் கீழத் திருப்பதிவரைச் சென்று திரும்பினேன். கீழத் திருப்பதி நுழைவாயில் எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள், அன்றாடம் அவரது சுப்ரபாதம் திருப்பதிக் கோவிலில் ஒலிப்பதன் நன்றிக்கடனோ தெரியவில்லை, குஷ்பு தவிர்த்து தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகை / பாடகிகளுக்கு தமிழ்நாட்டில் சிலை இருப்பது போல் தெரியவில்லை, அண்மையில் நடிகை சாவித்ரிக்கும் ஆந்திராவில் சிலை அமைத்துள்ளார்கள். நம்ம தமிழ்நாட்டில் சிலைகள் வைத்தால் ஒருவேளை சாதி சங்கத்துக்கு அவை சேர்ந்திடுமோ ? சுப்புலட்சுமி அம்மாள் என்கிற தமிழச்சியை பெருமைப்படுத்தியுள்ள ஆந்திர அரசுக்கு பாராட்டுகள்.

(இணையத்தில் எடுத்தப்படம், நேரில் காரில் இருந்தபடி படம் எடுக்க சரியாண கோணம் அமையவில்லை)


திரும்பும் போது 'பீமாஸ் ஹோட்டல்' ரெஸ்டாரண்டில் உண்டு வந்தோம். பீமாஸ் தனியாக இருக்கும் ரெஸ்டாண்டின் உணவுச் சுவை இங்கு இல்லை, ஒருவேளை இது விடுதியுடன் இணைந்துள்ளதால் அவ்வளவு தான் இருக்கும் போல. கோங்ரா சட்னி, பருப்புப் பொடி இருந்தது. கர்நாடகா உணவுகளில் இனிப்புக் கலந்திருக்கும் ஆந்திரா உணவுகளில் காரம், சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையின் நோயாளிகளில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் மிகுதியாகச் சிகிச்சைப் பெருகின்றனர், காரணம் காரம் தான் என்கின்றனர் சிலர்.

திருப்பதிப் போகும் வழியில் ஒரு இரயில் நிலையம், இந்தியாவிலேயே மிக நீளமானப் பெயர் கொண்ட இரயில் நிலையமாம், நண்பர் கூறினார். 'வெங்கட நரசிம்ம ராஜுவாரிப் பேட்டை' நீங்க கேள்விப்பட்டு இருக்கிங்களா ? திருத்தணி தாண்டி வருகிறது இந்த நிலையம்.

கீழத்திருப்பதியில் பெருமாளைப் பார்க்கவில்லை, ஆனால் பெருமாள் மாடுகள் அதிகம் தென்பட்டன, வெள்ளிக்கிழமைகளில் கடைகடையாக வசூல் செய்கின்றன, வழக்கமான பூம் பூம் உறுமி இல்லை, அதற்கு பதிலாக நாயணம் வாசிக்கிறார் மாட்டுகாரர். மாடும் தலையாட்டுவதில்லை, மாட்டின் தலையில் கட்டியிருக்கும் உண்டியலில் சில்லரைக்காசைப் போடுகிறார், சிலர் மாட்டைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். ரொம்ப ஆண்டுகள் ஆச்சு பூம் பூம் மாடுகளை நான் நேரில் கண்டேன்.

தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு தான் சென்னையில் இருந்து சிங்கைத் திரும்பியதால் அலுப்பு, சோர்வு நீடிக்க இந்த ஆண்டு தீபாவளி காலையில் 8 மணிக்கு எழுந்து கொண்டோம், அதன் பிறகு எல்லாவற்றையும் செய்து முடிக்க பகல் 11 ஆகி இருந்தது. இந்த ஆண்டு தீபாவளி ஏன் இவ்வளவு ஃபோராக இருக்கிறது என்று மகள் கூட அலுத்துக் கொண்டாள். செங்கதிருக்கு இது இரண்டாம் தீபாவளி. அக்கா மத்தாப்பு கொளுத்துவதை வெகுவாக ரசித்தான். அதற்கும் முன்பே சென்னையில் பட்டாசு கொளுத்திப் பார்த்தாச்சு, சிங்கையில் பூத்திரி மட்டும் தான் அனுமதி என்பதால் பட்டாசு வெடிக்கும் ஆசையை சென்னையில் தீர்த்துக் கொண்டோம்.******

நான் சென்னையில் இருந்த நாட்களில் பதிவர் நண்பர் குசும்பனை அழைத்துப் பேசினேன், பெயர் சொல்லாமல் அழைத்து கலாய்க்க அவரும் கடைசிவரை இன்னார் என்று கண்டுபிடிக்கவில்லை, நானும் சொல்லவில்லை அப்படியே துண்டித்தும் விட்டேன். அதே போல் அப்துல்லாவிடமும் ஒரு ஆட்டம், கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் பிறகு இன்னார் என்று சொன்னேன், ஓம்காரை அழைக்க அவரும் திணறினார். இன்னொரு நண்பர் டிபிசிடி மட்டும் தான் அழைத்ததும் குரலைக் கண்டுகொண்டார், ஒருவேளை எனது எண்ணை சேமித்து வைத்திருந்திருப்பார் அதன் வழியாகக் கூட கண்டுகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். சென்னை / தமிழகத்தில் இருந்து அழைத்தால் அங்கேயே இருப்பவர்கள் மட்டும் தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறார்கள், நன்றாக குரல் தெரிய பழகியவர்கள் கூட குரலை வைத்து இன்னார் என்று உடனேயே சொல்லமுடிவது இல்லை. இதப்பற்றி பஸ்ஸுல எழுத.....'உங்க குரல் எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலா ? உடனே கண்டுகொள்ள...' ஜீவ்ஸ் அடித்த கமெண்ட் ரசித்தேன், சிரித்தேன்.


******

இத எப்படிச் சொல்வது, சொல்லாமல் விட்டால் நாளை வரலாறு பழிக்குமோ ? அட நானும் 'ஏழாம் அறிவு பார்த்துட்டேன்' ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனம் வந்ததால் விமர்சனம் எழுதவில்லை, படம் ஒருமுறைப் பார்க்கலாம், ஏகப்பட்ட விளம்பரப் பின்னனிகளை காட்சிக்கு காட்சி வைத்து டெண்டுல்கர் கிரிக்கெட் சட்டைப் போல் ஒரே வெளம்பர உத்தியாக இருக்கு, தமிழ் உணர்வுடன் நமக்குத் தெரியாத போதி தர்மர் உள்ளிடவர்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் வெளம்பர நெடி சகிக்க முடியவில்லை, முன்பெல்லாம் திரைப்படம் போடும் முன் விளம்பரப்படங்களைப் போட்டு முடிப்பார்கள், இப்போது திரைப்படங்களின் ஊடாகவே வந்து தொலைக்கின்றன அவைகள், காசு கொடுத்து இந்த கண்றாவிகளையும் சேர்த்தே பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறோம், போதி தர்மரை வைத்து ஏர்செல்லுக்கு வெளம்பரம் கொடுக்கனுமா ? படம் பட்ஜெட் எகிறினால் நடிகரோ, இயக்குனரோ சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா ? ஏஆர் முருகதாசுக்கு 10 கோடியாம் ஒரு படம் இயக்க, இவ்வளவும் வாங்கிவிட்டு ஏன் வலுக்கட்டாயமாக விளம்பரங்களையும் பார்க்க வைக்கிறார்கள் ?

******

இளையராஜா வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வர அவரது மனைவி இல்லப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதும் காரணமாக இருக்கலாம். என்னதான் சொத்து சுகம், வான் புகழ் இருந்தாலும் இணையைப் பிரிவதில் கிடைக்கும் இழப்பை அவை ஈடு செய்யாது, அதைத்தான் 'சம்சாரம் போனால் சகலமும் போச்சு' என்பார்கள். இளையராஜாவிற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

பிகு: எனது இடுகைகள் அனைத்தும் தட்டச்சு செய்து, திருப்பிப் படிக்க நேரமின்மையால் அப்படியே வெளி இடுகிறேன், எழுத்துப் பிழையை பொருட்படுத்தாதீர்கள்.

9 கருத்துகள்:

தமிழ் விரும்பி சொன்னது…

///நம்ம தமிழ்நாட்டில் சிலைகள் வைத்தால் ஒருவேளை சாதி சங்கத்துக்கு அவை சேர்ந்திடுமோ ?////
இருக்கலாம்... எல்லாவற்றிற்கும் மூலம் தேடுபவர்கள் நிறைந்த இடமல்லவா!

///சுப்புலட்சுமி அம்மாள் என்கிற தமிழச்சியை பெருமைப்படுத்தியுள்ள ஆந்திர அரசுக்கு பாராட்டுகள். ///
உண்மை தான், தமிழனாய் பெருமை கொள்வோம்!!!

நன்று(றி)...

தருமி சொன்னது…

//எழுத்துப் பிழையை பொருட்படுத்தாதீர்கள்.//

கண்ணில் ஏதும் படவில்லை!

வவ்வால் சொன்னது…

கோவீ,

//உறவினர் இல்ல நிகழ்வுக்கு இல்லத்தோடு வந்து //

நாங்கலாம் யாரு நக்கீரர் பரம்பரையாக்கும், உங்க வீடு மொபைல் வீடா இல்லை பறக்கும் வீடா வீட்டோட சென்னைக்கு வந்திருக்கிங்க :-))(பிழை கண்டுப்பிடிங்கனு நீங்களே சொல்லி கொடுக்கறிங்களே)

//அப்படியே சுடுதண்ணியில் அமுக்கி கொன்றால் பாவம் இல்லையாம். //

உண்மையாக? சொல்லவே இல்லை!!!. அப்புறம் அஹிம்சா பட்டுனு ஒன்று இருக்கு, பட்டுப்பூச்சி கூட்டை விடு வெளியேறிய பின், அந்த கூட்டில் இருந்து செய்வது, என்ன ஒன்று அதிகம் முடிச்சுகள் தெரியும் துணியில், விலையும் அதிகம்,

//ஆந்திரா உணவுகளில் காரம், சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையின் நோயாளிகளில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் மிகுதியாகச் சிகிச்சைப் பெருகின்றனர், காரணம் காரம் தான் என்கின்றனர் சிலர்.//

காரணம் ,காரமாக இருக்க வாய்ப்பில்லை, அவர்கள் புகையிலை மெல்லும் பழக்கம் அதிகம் கொண்டவர்கள், ராஜமுந்திரி புகையிலை ரொம்ப பிரசித்தி, அங்கே அகில இந்திய புகையிலை ஆரய்ச்சி கழகம் உள்ளது, அடுத்த இடம் தமிழ் நாடு, திண்டுக்கல் அருகே வேடசந்தூரிலும் துணை ஆய்வு நிலையம் உளளது.திண்டுக்கல் சுருட்டு தான் வின்ஸ்டன் சர்ச்சில் புகைப்பது.

//சுப்புலட்சுமி அம்மாள் என்கிற தமிழச்சியை பெருமைப்படுத்தியுள்ள ஆந்திர அரசுக்கு பாராட்டுகள்.//

ரொம்ப உணர்ச்சிவசப்டாதிங்க, அவங்க தாய் மொழி தெலுங்கு! சுப்ரபாதத்தை எழுதியவர் பெயர் பிரதிவாதி பயங்கரம் , (ரொம்ப பயங்கரமா இருக்குல்ல)

செங்கதிர் என்ற உங்கள் குழந்தையின் பெயர் அருமை! உங்கள் ரசனை, தமிழ் ஆர்வம் தெரிகிறது. i like it!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாங்கலாம் யாரு நக்கீரர் பரம்பரையாக்கும், உங்க வீடு மொபைல் வீடா இல்லை பறக்கும் வீடா வீட்டோட சென்னைக்கு வந்திருக்கிங்க :-)//

வவ்ஸ், நீங்க ஆகுபெயர்கள் இலக்கணம் படிக்கனும் :)

//உண்மையாக? சொல்லவே இல்லை!!!. அப்புறம் அஹிம்சா பட்டுனு ஒன்று இருக்கு, பட்டுப்பூச்சி கூட்டை விடு வெளியேறிய பின், அந்த கூட்டில் இருந்து செய்வது, என்ன ஒன்று அதிகம் முடிச்சுகள் தெரியும் துணியில், விலையும் அதிகம்,
//

அப்படியா, பட்டுப்பூச்சியைக் கொல்லாமல் தான் பட்டுநூல் எடுத்தாங்க என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கா ? :) சும்மா அஹிம்சாகாரர்களின் பட்டு ஆசைக்கு இப்படி ஏதேனும் தந்திரம் செய்து கூட காசுபார்ப்பர்கள் இல்லையா ? #யாரைத்தான் நம்புவதோ !

//ரொம்ப உணர்ச்சிவசப்டாதிங்க, அவங்க தாய் மொழி தெலுங்கு! சுப்ரபாதத்தை எழுதியவர் பெயர் பிரதிவாதி பயங்கரம் , (ரொம்ப பயங்கரமா இருக்குல்ல)
//

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தும் பின் தமிழ்நாட்டில் மறைந்தும் போகிறவர்கள் தமிழர்கள் இல்லையா ? அவ்வ்வ் தாய்மொழி எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டை, தமிழ்மொழியை நேசிப்பவர்கள் எவரும் தமிழரே.

//செங்கதிர் என்ற உங்கள் குழந்தையின் பெயர் அருமை! உங்கள் ரசனை, தமிழ் ஆர்வம் தெரிகிறது. i like it!//

முழுப் பெயர் சிவசெங்கதிர், கூப்பிடுவது கதிர் அல்லது செங்கதிர் இங்க விரிவாக எழுதி இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

தமிழ்விரும்பி நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

தருமி ஐயா நன்றி

வவ்வால் சொன்னது…

கோ வி,

//வவ்ஸ், நீங்க ஆகுபெயர்கள் இலக்கணம் படிக்கனும் :)//

ஹி..ஹி..நீங்க பிழை இருந்தா கண்டுக்காதிங்க சொன்னதால நானும் கண்டு பிடிப்பேன்னு சொன்னது, அது, சும்மா தமாசு,நீங்க ஆகு பெயர்,ஆகாத பெயர் எல்லாம் சொல்லி பயமுறுத்தாதிங்கோ!

அப்படியே சுடு தண்ணில அமுக்கி கொன்றால் பாவம் இல்லையாம் சொன்னதால சொன்னேன், உண்மைல அகிம்சா பட்டுனு இருக்கு அதுக்கு ஆதாரம் எல்லாம் எனக்கு தெரியாது, கோவைல வடவள்ளில கக்கூன்ல இருந்த பட்டு நூல் நூர்ப்பவர்கள் சொன்னது.அங்கே பட்டு நூல் எப்படி எடுக்கிறார்கள் என்பதை பார்த்தேன். ஆர்டர் வந்தா செய்வாங்களாம். பட்டு பூச்சி வெளியேறினா கக்கூன் உடைஞ்சுடும் அதனால நூல் எடுப்பது கடினம், நிறைய முடிச்சு போடுவாங்க. துணில முடிச்சு வரும்னு சொன்னாங்க.

//தாய்மொழி எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டை, தமிழ்மொழியை நேசிப்பவர்கள் எவரும் தமிழரே.//

அதுஎல்லாம் சரி தான் ஒரு தகவலுக்காக சொன்னது..நீங்க அழுத்தமா தமிழச்சினு சொன்னதால அதையும் சொன்னேன்.(குஷ்பூக்கு சிலை எங்கே இருக்குனு சொல்ல முடியுமா? போய் மாலை போடத்தான் கேட்கிறேன்)

//முழுப் பெயர் சிவசெங்கதிர், கூப்பிடுவது கதிர் அல்லது செங்கதிர் இங்க விரிவாக எழுதி இருக்கிறேன்//

சிவசெங்கதிர் அல்லது செங்கதிர் என்ற பெயரே போதும் அருமையா இருக்கு,சுட்டில போய் பார்க்கணும் என்ற அவசியமே இல்லை, மேலும் 2 வருடமா வலைப்பதிவுகள் அதிகம் படிக்கலை, அதான் தெரியலை.

கோவி.கண்ணன் சொன்னது…

//(குஷ்பூக்கு சிலை எங்கே இருக்குனு சொல்ல முடியுமா? போய் மாலை போடத்தான் கேட்கிறேன்)
//

வவ்ஸ், குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள் உள்ளே சிலை சத்தியமாக இருந்ததான்னு தெரியல, அவரே தங்கச் சிலை மாதிரி தானே இருப்பார், சுந்தர் சி அனுமதித்தால் மாலைப் போட்டுவாருங்களேன்.

மோகன் குமார் சொன்னது…

சுவாரஸ்யம். சென்னை வந்த போது ஒரு பதிவர் சந்திப்பு வைத்து அனைவரையும் பார்த்திருக்கலாமே?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்