
திமுகவுக்கு எதிராக அடித்த சட்டசபைத் தேர்தலில் 29 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமை தேமுதிகவிற்கு கிடைத்துவிட்டது, ஒரு ஆண்டு சென்றதும் தான் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வேன் என்று கூறி இருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனால் எதிர்பார்த்தப்படி உள்ளாட்ச்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியால் இருந்து கழட்டிவிடப்படவே உதிரிக்கட்சிகளைத் தேற்றிக் கொண்டு உள்ளாட்ச்சித் தேர்தலை சந்தித்தார் குறிபிட்டபடி எந்த ஒரு நகராட்ச்சிக் கூடக் கிடைக்காத விரக்தியில் இனி அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வதன் மூலமே மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும் என்று நினைக்கிறது தேமுதிக.
மற்றக் கட்சிகளைப் போன்று அரசியலில் நீண்டகாலம் இருந்த ஒரு தலைவரின் தோற்றுவிப்பாக தேமுதிக இருக்கவில்லை, திராவிடக்கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்ற எதிர்ப்பார்புகளாலும், ரஜினி போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படலாம் என்று நினைத்த மக்களின் எதிர்ப்பார்ப்பை மூலதனமாக வைத்து தேமுதிக துவங்கப்பட்டது, எதிர்ப்பார்ப்பிற்கும் மேலாக சுமார் 8 விழுக்காட்டினரின் வாக்குகளை தேமுதிக தக்க வைத்துள்ளது, இந்த வாக்குவிகிதம் சரியாமல் இருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிப்பதவிகள் உருவாக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு தேர்தலுக்கு வேலை பார்க்கும் அளவுக்கு தொண்டர்களை உருவாக்கி இருந்தது தேமுதிக. தமிழ்நாட்டின் எந்த மாவட்ட சட்டமன்ற தொகுதி என்றாலும் 10000 வாக்குகள் வரையிலும் தேற்றிவிடும் அளவுக்கு தேமுதிக வலுவாகவே உள்ளது.
அதிமுக - திமுக - அதிமுக - திமுக என்று மாறி மாறி வேறு வழியின்றி மக்கள் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சூழலில் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கும் தேமுதிக பொறுப்பான எதிர்கட்சியாகச் செயல்பட்டால் இந்த அதிமுக - திமுக சுழற்சியைத் தடுக்க முடியும் என்பது உண்மை தான். கருநாநிதி சரி இல்லை என்று தான் ஜெ -விற்கு மறு வாய்ப்பு வழங்குகிறார்கள், அதே போல் ஜெ சரி இல்லை என்றால் வேறு வழியின்றி கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்குறார்கள், கங்கு கொண்டிருக்கும் கொள்ளைக்கட்டையைவிட புகைந்து கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையால் தலை அதிகமாக தீய்ந்து போகாது என்றே நினைக்கின்றனர், ஆனால் புகைந்த கொள்ளிக்கட்டை தலையில் ஏறியதும் மீண்டும் கங்கு கொள்ளத் துவங்குறது என்பதை மட்டும் வாக்கு அளிக்கும் மக்கள் உணருவதில்லை.
இது போன்ற சூழலில் புதியதொரு கட்சி ஆட்சி அமைக்க பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதன் மூலம் தான் வளரமுடியும். ஏனெனில் தமிழ்நாட்டின் மையப் பிரச்சனைகளுக்கு இயக்கங்கள் தேவையற்றது தான் இன்றைய அரசியல், திராவிர இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பண்ணையார்களின் ஆண்டான் அடிமை முறையை ஒழிக்கவும், அதற்கு ஆதரவு கொடுத்த காங்கிரசினை எதிர்த்து துவங்கியது. ஆனால் இன்றைய சூழலில் திராவிட அரசியல் என்பதும் அது முன் வைத்த திராவிட அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டதால், தன்னல நோக்காகவும் குடும்ப அரசியலாகத் தொடர்வதால், இவற்றிற்கு மாற்றுத் தேடு வேறெந்த மையப் பிரச்சனையும் இல்லை, இருந்த ஒரே ஒரு ஈழப்பிரச்சனையையும் அரசியல்வாதிகள் விருப்பம் போல் விளையாடி ஒழித்துவிட்டார்கள், எனவே அனைத்து மக்களை மையப்படுத்திய பிரச்சனைகள் இல்லாத சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாற்றங்களின் விடையாக நிற்கிறது.
29 இடங்கள் சட்டமன்றத்தில் பிடித்திருப்பது தேமுதிகவிற்கு பலம் தான், ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகள் எழுப்பி குடைச்சல் கொடுத்துக் கொண்டு சட்டமன்ற செயல்பாடுகளின் கவனத்தைப் பெற்று மக்கள் செல்வாக்கப் பெற முடியும் என்று தேமுதிக நினைக்கிறது, அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப் பெற்றதன் மூலம் நேரடியாக சட்டமன்ற விவாதங்களில் தானும் பங்குபெறுவது விஜயகாந்த் தனக்கு பலவீனம் என்றே நினைக்கிறார். இதற்கு மாற்றாக வெளியில் இருந்தே ஆளும் கட்சியை கடுமையாகச் சாடி தேமுதிகவை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்.
இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்கள் கட்சித் துவங்கினால் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆபத்து தான், ஏனெனில் விஜயகாந்தை அரசியல்வாதியாகப் பார்த்து வருவது அல்ல இன்றைய வாக்குகள், அவருக்கு கிடைக்கும் வாக்குகளும் செல்வாக்கும் அவரைப் போன்று திரையில் இருந்துவரும் பிற நடிகர்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும், மற்றபடி விஜய் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.
விஜயகாந்து வரும்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவாரா என்பதெல்லாம் அதிமுக - திமுக கட்சிகளின் செயல்பாடு பொறுத்தது, விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே கூட ஏதாவது நடிகரைத் தூண்டிவிட்டு புதுக் கட்சித் துவங்கினால் தான், விஜயகாந்தை அடுத்த தேர்தலில் அவற்றால் சமாளிக்க முடியும்.