பின்பற்றுபவர்கள்

5 ஜூலை, 2010

செந்தமிழும் நா(ள்) பழக்கம் !

செந்தமிழ் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை, பின்பு தமிழ் என்பது என்ன என்ற கேள்வி என்னுள் எழுகிறது. தூய தமிழ் என்றெல்லாம் கூடச் சொல்கிறார்கள், சிலர் தூய தமிழை சுத்தத் தமிழ் என்பார்கள், இவை பழக்கக் கேடு (தோஷம்) தான். சுத்தமென்பது தமிழ் கிடையாது என்பது பலருக்குத் தெரிவதில்லை, சுத்தம் என்பது ஸுத்த என்கிற வடசொல்லின் தமிழ்வடிவம், ம் என்ற விகுதியில் முடிகிறது, அதற்கு நேரடி தமிழ் சொல் தூய என்பதே. சுத்த தமிழ் என்பது அரைவிழுக்காடு பிறமொழி கலப்பிலான தூய்மையற்ற (அசுத்த)ச் சொல், சுத்தத் தமிழ் என்பதற்குப் மாற்றாக (பதிலாக) தூயத் தமிழ் என்று சொல்லி/எழுதிப் பழகுவோம். பச்சை தமிழன் என்பது கூட உடன்பாடற்ற பண்பு பகுதி, அப்போது சிவப்புத் தமிழன், கருப்புத்தமிழன் என்று யாரேனும் இருக்கிறார்களா என்ன ? தமிழன் தமிழன் தான், ஈழம் மற்றும் தமிழ்நாடு என தமிழர் நிலத்தை வாழ்விடமாகக் கொண்டவர்களும், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவருமே தமிழர்களே, இதில் குறிப்பிட்டு சிலருக்கு வண்ணம் பூசி பச்சை தமிழன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதால் தமிழ் வாழ்ந்துவிடுமா, வளர்ந்துவிடுமா ? செந்தமிழ் என்பது அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டிய ஒன்று என்பதாக தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் எழுதிவருகின்றன. இன்றைக்கு இவர்கள் எழுதும் தமிழ் சொல்வடிவம் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு 75 விழுக்காட்டிற்கும் மேல் பிறமொழி கலப்புடன் குறிப்பாக ஆங்கிலம் வடமொழி கலப்பில் இருந்தவையே, தமிழ் எழுத்தில் எழுதினார்கள் என்பதைத் தவிர்த்து இன்றைய நாளில் அதைப் படிக்கும் நமக்கு அது தமிழா என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

கீழே இருக்கும் படத்தை அழுத்திப் படித்துப் பாருங்கள்,


இதை மணிபவள (வட்மொழி கலந்த) நடை என்று கூடச் சொல்ல முடியாது ஏனெனில் ஆங்கிலமும் வடமொழியும் கலந்து கிட்டதட்ட கொச்சை வடிவத்திலேயே தமிழ் எழுத்துகள் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்காக எழுதப்பட்டு வந்தன. இது போன்ற எழுத்து நடைகள் கிட்டதட்ட 1960 வரையிலும் கூட புழக்கத்தில் இருந்தன, பெரியாரின் பேச்சுகள் அடங்கிய கோப்புகளிலும் கூட 50 விழுக்காடு வடசொல் கலவை உண்டு, அது பெரியாரின் தவறும் அன்று, ஏனெனில் பெரியார் படித்த காலங்களில் தமிழ் நடை என்பதாக இப்படிப்பட்ட எழுத்து நடைகள் தான் இருந்து வந்தன, அதையே அவரும் பயன்படுத்தினார், பெரியார் சமூகப் போராளி என்பது தவிர்த்து அவரை தமிழ் அறிஞர் என்று கூறிவிட முடியாது. 1930 களில் மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர் மற்றும் பாரதி தாசன் ஆகியோரால் தனித்தமிழ் எழுச்சி ஏற்படுத்தப்பட்டு அவை திராவிட சார்புடைய செய்தி இதழ்களால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் 60 களில் அண்ணா போன்றவர்களின் மேடை பேச்சுகளால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு இன்றைய நிலையில் அச்சு ஊடகங்களில் பயன்படும் தமிழுக்கு வந்திருக்கிறோம். இன்றைய தமிழ் என்பது சங்கத்தமிழும் அன்று, சங்கச் சொற்கள் அடைப்படையிலான வேர் சொற்களில் பல்வேறு புதிய சொற்களை நாம் பயன்படுத்திவருகிறோம், இவற்றை செந்தமிழ் என்று சொல்ல முடியாவிட்டாலும், முழுக்க முழுக்க தமிழ்ச் சொற்களே எனலாம்.

ஆங்கிலம் பல மொழிச் சொற்களை ஏற்கிறது தமிழும் அவ்வாறு செய்யலாம் என்பதாக பலர் அறிந்தோ அறியாமலோ பரிந்துரை செய்கிறார்கள். ஆங்கிலம் என்பது பொது மொழி என்கிற தகுதியை அடைந்ததிருக்கிறது, அது தமிழுடன் ஒப்பிடத் தக்க மொழியும் அல்ல, தமிழ் கலை இலக்கியம் பண்பாடு அறிவியல் சார்ந்து இன அடிப்படையில் பேசப்படும் மொழி, இதற்கு ஆங்கிலத்தை ஒப்பிடத்தக்க அளவிற்கான ஏறக்குறைய 2 மில்லியன் சொற்கள் தேவை இல்லை என்றாலும் அந்த சொற்களை தமிழின் வேர்ச் சொற்களைக் கொண்டு தேவைப்படும் போது அமைக்க முடியும், இங்கு தேவை என்பது பொதுப் புழக்கத்தில் வருவதைப் பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்க. எடுத்துக்காட்டிற்கு கணிணியின் உருவாக்கக் காலத்தில் அவை பொதுப் பயன்பாட்டில் இல்லை, தற்பொழுது அவை பரவலாகப் பயன்படுகிறது, நாள் தோறும் அவைப் பற்றி பேசுகிறோம் எனவே கணிணி குறித்தச் சொல் என்பது பொதுப்பயன்பாட்டிற்கு மிகத் தேவை என்பதாகிறது, இப்படியாகத்தான் பேருந்து, சிற்றுந்து போன்ற சொற்கள் புழக்கத்திற்கு தேவையாகி பயன்பாட்டிற்கு வந்தன, ஆங்கிலத்தில் இருக்கிறதே என்பதற்காக இரண்டு மில்லியன் சொற்களை தமிழ்படுத்த வேண்டுமென்போதோ அல்லது ஆங்கிலத்தைப் போன்று அப்படியே உள்வாங்கிப் பயன்படுத்தலாம் என்பதோ மொழி பற்றிய அறியாமையால் பிதற்றுவது என்பது தவிர்த்து வேறொன்றுமில்லை.

ஆங்கில எழுத்தில் W என்பது பலுக்குதலில் V என்ற ஒலியைத்தான் தரும் ஆனால் அதன் பெயரோ, டபுள்யூ, இதை 'டபுள் வி' என்று சொல்வது தான் சரி என்றோ, Y என்ற எழுத்து U ஒலியை தருகிறது மற்றும் கையெழுத்தில் எழுதும் போது மேலும் கீழுமான இரண்டு U க்களை ஒத்திருக்கிறது என்பதற்காக "டபுள் U" என்று சொல்லலாம் என்றால் ஆங்கிலப் புலமையாளர்கள் ஏற்கமாட்டார்கள், என்றாலும் நான் சொல்லும் இந்தக் கருத்து தவறே இல்லை. ஆங்கிலத்திற்கு இது போன்ற பரிந்துரைகளைச் செய்யலாம் என்றால் எத்தனை பேர் W மற்றும் U ஆகிய இரு ஆங்கில எழுத்தின் பெயர் ஒலித்தன்மையை மாற்றுவது சரி என்பார்கள் ? ஆனால் தடி எடுத்தவனெல்லாம் தண்டால்காரன் என்பது போல் தமிழ் சீர்திருத்தம் என்பதாக சொல்லப்படும் பிதற்றல்கள் உண்மையிலேயே எரிச்சல் ஏற்படுகிறது என்றாலும் கூட அவை மொழி குறித்த அரைகுறை புரிந்துணர்வின் வெளிப்பாடு என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

1960களில் திராவிட நாளிதழ்களில் தமிழை பண்படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் தமிழ் சொற்களையே பயன்படுத்தி வந்திருக்காவிடில் இன்றைய தமிழ் வடிவம் நமக்கு ஏற்பட்டிருக்காது, எனவே தமிழ் குறித்தச் சொற் பரிந்துரை ஐஸ்கிரீமை, பனிக்குழைவு என்று சொல்லப்பட்டாலும் நாம் அதை பயன்பாட்டில் கொண்டு வரும் போது தமிழ் எழுத்து மற்றும் பேச்சு வடிவம் மேன்மை பெரும். ஆனால் இதையெல்லாம் கிண்டல் கேலி செய்தே வந்தால் தமிழ் எப்படி சீரழியும் என்பதற்கு மேற்கண்ட படத்தைவிட வேறு எடுத்துக் காட்டுகள் சொல்ல முடியுமா ? தமிழ் வலைப்பதிவுகள் தமிழ் வளர்ச்சிக்கு சிறந்ததொரு மாற்றூடகம், முடிந்த அளவுக்கு ஆங்கிலம் உட்பட பிறமொழி கலப்பின்றி எழுதமுடிகிறோ இல்லையோ, அதற்கான முயற்சியை எடுப்பது தான் தமிழில் நாம் எழுதும் சமூக எழுத்தின் ஊடாக மொழிக்கு ஆற்றும் பிரிதொரு மறைமுக பலன் மற்றும் பயன்.

13 கருத்துகள்:

இராம.கி சொன்னது…

நல்ல செய்திகள், கோவி.

எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் இதை விடாது அழுந்தச் சொல்லிக் கொண்டிருங்கள். கொஞ்சங் கொஞ்சமாய் வலைப்பதிவர் பலருக்கும் இந்தச் செய்தி பரவட்டும்.

எதிர்காலஞ் சிறக்கும்.

அன்புடன்,
இராம.கி.

அண்ணாமலை..!! சொன்னது…

நல்ல கட்டுரை ஐயா!
நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
மிக நன்றிகள்!

priyamudanprabu சொன்னது…

முடிந்த அளவுக்கு ஆங்கிலம் உட்பட பிறமொழி கலப்பின்றி எழுதமுடிகிறோ இல்லையோ, அதற்கான முயற்சியை எடுப்பது தான் தமிழில் நாம் எழுதும் சமூக எழுத்தின் ஊடாக மொழிக்கு ஆற்றும் பிரிதொரு மறைமுக பலன் மற்றும் பயன்.
////////////

முயற்சிப்போம்

Karthick Chidambaram சொன்னது…

மிக நேர்த்தியான பதிவு. வரவேற்கிறேன். தமிழின் இந்த நிலையை நானும் கவனித்துள்ளேன்.
கல்லூரி நாள் ஒன்றில் எனக்கு பரிசாக அளிக்கப்பட்ட பாரதியின் கட்டுரைகளில் இருப்பதா தமிழா என்கிற நிலையில்தான் தமிழ் இருந்தது.

திராவிட இயக்கங்களால் விழைந்த நன்மை தமிழ் மீட்சி. ஆனால் இன்னும் முழுமை பெறவில்லை.
இப்போது கைபேசி என்கிற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்து உள்ளது. கணினி. இன்னும் நிறைய.
தமிழ் மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது.

Ravichandran Somu சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே!

நல்ல கருத்துகள். நானும் முடிந்த அளவில் முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

கல்வெட்டு சொன்னது…

கோவி ,
சிறப்பான பதிவு. அதுவும் அந்த அழைப்பிதழ் இணைப்பு கடந்தகாலத்தை எடுத்துக்காட்டுகிறது.

நன்றி!

முகவை மைந்தன் சொன்னது…

நல்ல பதிவு. தமிழ்ல பேசுறேன்னு சொன்னாலே இவரு செந்தமிழ்ல தான் பேசுவாருன்னு பொதுவா கிண்டல் பண்ணுறோம். தொடர்ந்து எழுதுவதும், பேசுவதும் புழக்கத்தில் நல்ல தமிழின் விழுக்காட்டை உயர்த்தும். நம்புவோம். நடக்கும்.

தமிழ்ல படிச்சா வேலை என்ற பேச்சு அடிபடுகிறது. ஆகட்டும், பாக்கலாம்.

வால்பையன் சொன்னது…

பஞ்சமர்களுக்கு இடம் கிடைக்காதுன்னு இருக்கு!?

பஞ்சமர்ன்னா யாரு?

கோவி.கண்ணன் சொன்னது…

இராமகி ஐயா போட்டிருந்த பின்னூட்டமெல்லாம் எங்கப் போயிற்றுன்னே தெரியல. கூகுள் சொதப்பல்
:(

Padma சொன்னது…

மிக அருமை

Unknown சொன்னது…

I saw that old Notice,No place for Panjamarkal Please explain me who is panjamarkal.

Unknown சொன்னது…

I saw that old Notice,No place for Panjamarkal Please explain me who is panjamarkal.

கோவி.கண்ணன் சொன்னது…

//I saw that old Notice,No place for Panjamarkal Please explain me who is panjamarkal.//

பஞ்சமர் என்றால் தீண்டத்தகாதவர், சிலர் நான்கு வருணத்தில் வராத ஐந்தாம் வருணத்தினர் என்றும் விலக்குவர் (விலக்கு எழுத்து பிழை இல்லை)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்