சென்னை: இலங்கை அரசின் பயங்கரவாதம் மற்றும்இனவெறியை கண்டிக்கும் வகையில், இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். இல்லையேல், வரும் காலங்களில் சென்னையில் நடக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் நிலை வரலாம்' என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இந்திய இராணுவத்தின் மறைமுக உதவியுடனும், இந்திய போர்தளவாடங்களானாலும் இலங்கையில் தமிழின ஓழிப்பு நடந்தேறுகிறது என்றே தமிழக கட்சிகள் நடுவன் அரசை குற்றம் சொல்கின்றன. அதை நடுவன் அரசும் அரசின் அறிக்கையாக மறுக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் மட்டுமே, இலங்கைக்கு உதவி செய்யவில்லை என்று வாய்ச் சொல்லாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் ஐயா இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்கிறார். கட்டுச் சோத்துக்கு பெருச்சாளியை காவல் வைத்தார் போல யார் இலங்கை அரசுக்கு நண்பனாக இருக்கிறார்களோ அவர்களிடமே சென்று முறையிட்டால் எதுவும் நடக்குமா ? வெறும் எதிர்ப்பை பதிய வைப்பதற்காக மட்டுமே அறிக்கை, கோரிக்கை, வேண்டுகோள் நடைமுறைகள் நடந்தேறுகிறது.
நடுவன் அமைச்சர் அன்பு மணியை மீட்டுக் கொள்கிறேன் என்று ஏன் சொல்ல முடியவில்லை ? அன்பு மணி நடுவன் அரசில் அங்கம் வகிப்பத்தால் இலங்கை தொடர்பாக இந்திய அரசு சார்பில் எதுவும் பேச்சு நடத்துகிறாரா ? எதற்கு இந்த நாடகமெல்லாம் ?

கலைஞருக்குத்தான் வயதாகிவிட்டது, கட்சியை வாரிசு உரிமையாக்கும் கட்டாயத்தில் இருக்கிறார், அதனால் நிதியைத்திரட்டி போர் நிவாரணம் அனுப்பி வைத்ததுடன் கடமையை முடித்துக் கொண்டு மங்களம் பாடிவிட்டு, திருமங்கலத்தில் முழுவீச்சாக ஈடுபடுத்திக் கொண்டார், மருத்துவருக்கு என்ன ஆச்சு ? மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்தால் இந்திய தண்டனை சட்டப்படி சிறை என்றால், அத்தனை பாமக உறுப்பினர்களையும் அழைத்து ஈழப்போரை ஆதரிப்பதாக அறிவிப்பு விட்டால், எத்தனை பேரை இந்திய அரசு சிறையில் அடைத்து சோறுபோடும் ? இதை செய்வதற்கு மருத்துவருக்கு ஏன் துணிவில்லை ?
சீமானோ, அமீரோ பேசினால் மட்டும் தான் சிறையில் அடைப்பார்களா ? சாதாரண தொண்டர்கள் அனைவரையும் பேச வைத்து ஆதரவு தெரிவிக்க வைத்தால் அவர்களை அடைப்பதற்கு சிறைகள் போதுமா ? தொண்டர்கள் சிறைக்குச் சென்றால் அவர்கள் குடும்பத்தை யார் பார்ப்பது என்னும் அக்கரையோ? தொண்டர்களை தேர்தலுக்கு சுவரொட்டி ஒட்டவும், வரவேற்பு தோரணங்களைக் கட்டவும் பயன்படுத்திக் கொண்டு மாதக் கணக்கில் அவர்கள் தேர்தலுக்கு வேலை செய்யும் போதும் குடும்பம் ஒன்று இருப்பதை நினைத்துப் பார்க்கிறார்களா ? அல்லது கட்சித்தலைமை நினைக்க விடுமா ? மருத்துவருக்கு வயதாகிவிட்டது, அன்பு மணி அமைச்சர் அதனால் சிறைச் செல்ல முடியாது, காடுவெட்டி குரு போன்றவர்களை போராட அனுப்பலாமே ? காங்கிரஸ் கட்சி கண்டித்தால் பாமகவிலிருந்து சிலரை விலக்கி அவர்களை போராட அனுப்பலாமே, கட்சியில் இருந்து கண் துடைப்புக்காக நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் வரலாற்றில் புதிதா என்ன ? இதை திமுகவும் செய்யலாம்.
தன்னை தமிழர் போராளி என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், 'தமிழ் குடிதாங்கி' என்று மருத்துவருக்கு பட்டம் சூட்டிய திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் என்று செயலில் இறங்கிவிட்டார், தொண்டர் பலமிக்க மருத்துவர் ஐயா வெறும் அறிக்கை, கண்டனம், வேண்டுக்கோள் என்று செய்தி தாள்களில் இடம் பிடித்து, 'இருப்பை' உணர்த்துகிறார். இராமதாஸ் ஐயா, கிரிக்கெட் விளையாட்டை நிறுத்துவதால் பிரச்சனை தீராது, இலங்கை அரசுக்கு உதவிசெய்வதையாவது இந்தியா நிறுத்தனும், அதைச் செய்யச் சொல்லி நெருக்குதல் கொடுத்து, செய்யவில்லை என்றால் அன்பு மணியை பதவி விலகச் சொன்னால், ஈழத்தமிழர் குறித்த மருத்துவர் அக்கரையை ஈழமக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் கூட புரிந்து கொள்வார்கள்.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதாக நடந்து கொண்டு, கிரிக்கெட்டை தவிர்க்கச் சொல்வது காமடியாக இல்லை ?
Read more...