பின்பற்றுபவர்கள்

30 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் (Top Of The Europe) - 8

பருவகால மாற்றங்களில் ஏற்படும் கடும் குளிரின் சோம்பல்களிலிருந்து உற்சாகப்படுத்திக் கொள்ள பண்டிகைகள், அக்காலங்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதக் குளிரையும் புறந்தள்ள தமிழ் நாட்டில் கார்த்திகை முதல் மார்கழி வரை கோவில் விழாக்கள் நடைபெறும், ஐரோப்பிய நாடுகளில் கடுங்குளிர், பனிப்பொழிவு காலங்களில் கிறிஸ்மஸ் விழா என்னும் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது, கிறிஸ்மஸ் அலங்காரங்களில் பனிப் படர்ந்த கிறிஸ்மஸ் மரங்களைக் காட்சியாக வைக்கிறார்கள். பருவகால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை சூழல் மாறுபாடுகளை தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது மனித இனப் போக்காகக் இருக்கிறது, பிழைப்பு, வாழ்கை என்னும் வாழ்வியலில் அது இயல்பானதும் கூட. ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கிறது, Winter எனப்படும் (கடும்)குளிர் காலமான நவம்பர் - ஜனவரி திங்கள்களில் ஹாலோவின், கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயத்தமாகிவருகின்றன.

*****

23 / அக்/2009 ஐரோப்பிய சுற்றுலாவின் நிறைவு நாளில் இருந்தோம். அன்று முதன்மையானதும் நிறைவாகவும் பார்க்க வேண்டிய இடம் ஐரோப்பாவின் உச்சி என்று அழைக்கப்படும் Jungfraujoch எனப்படும் பனி மலைக்குச் சென்று வருவது தான் திட்டம், அதற்கான பயணச் சீட்டுகள் எல்லாம் ஆயத்தமாக இருந்தது. அன்று காலை 8 மணிக்கு எழுந்து, 9 மணிக்கு ஆயத்தமாகி, விடுதியில் கொடுக்கும் ரொட்டி, பழச்சாறு காலை உணவுகளை முடித்துக் கொண்டு 9.30 மணிக்கு விடுதியை விட்டுக் கிளம்பினோம், அந்த விடுதியில் பல மஞ்சள் இன ஆசியர்களும், ஒரு சில இந்திய இல்லத்தினரும் கூட தங்கி இருந்தனர்.





குளிர்காலம் தொடங்கப் போகும் பருவ மாற்றத்தை உணர்த்த வெளியே லேசான மழைத்தூரல் பெய்து கொண்டிருந்தது, குடையை எடுத்துக் கொண்டு Interlaken OST எனப்படும் கிழக்கு தொடர் வண்டி நிலையத்தை நடந்தே அடைந்தோம். செல்லும் வழியெங்கும் வண்ண இலைகளுடன் காட்சி கொடுத்த மரங்கள், அந்த ஊரும் மிகத் தூய்மையாகவும், குளிருமாக மிக இனிமையாக இருந்தது. சுற்றிலும் மலைகள், அந்த மலைகளில், சில மலைகள் தலையில் வெண் பனி அணிந்திருந்தன. மலைகளின் மீது உரசிக் கொண்டும் , தழுவியும் நின்றபடி மேகக் கூட்டங்கள் பார்க்க கண் கொள்ளாக் காட்சி.

சாலை ஓரத்தில் நாய்களுடன் சிலர் சென்று கொண்டு இருந்தனர். நாய்கள் சிறுநீர் கழிக்க குத்துக் கல்லுடன் தனி இடம் கூட சாலை ஓரத்தில் இருந்தது வேறெந்த நாட்டிலும் பார்க்காத ஒரு காட்சி.
மறுநாள் எடுத்தப்படம்


தொடர்வண்டி நிலையத்தில் விவரம் கேட்க மாறி மாறி மூன்று தொடர்வண்டிகள் மூலம் பயணிக்க வேண்டிய விவரம் சொல்லி, கூடவே தொடர்வண்டி புறப்படும் நேரம் தொடர்பான கையேடு ஒன்றையும், குறிப்புகளையும் கொடுத்தனர்.

முதலில் பயணம் செய்யப் போகும் தொடர்வண்டி Interlaken லிருந்து Grinde Wald என்ற நிலையத்துக் செல்லும், அங்கிருந்து பேருந்து ஒன்றில் ஏறி 1 கிமி தொலைவில் இருக்கும் அடுத்த நிலையத்துக்கு மாறவேண்டும். ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு தொடர்வண்டி என அப்போது 10:30 மணிக்கு புறப்படும் Grindel Wald தொடர்வண்டி புறப்பட காத்திருந்தது, ஏறி உட்கார்ந்தோம். இரண்டு நிமிடத்தில் புறப்பட்டது. மேல் கீழ் என இரண்டு தளங்கள் இருந்தன. வேடிக்கைப் பார்க்க வசதியாக மேல் தளத்தில் உட்கார்ந்தோம். அகலமான கண்ணாடி சன்னல்கள் வழியாக நன்றாக பார்க்கும் படி அமைத்திருந்தார்கள். சுற்றிலும் சற்று தொலைவில் மரங்களுடன் கூடிய மலைகள், அருகே புல்வெளிகள் அதில் பசுமாடுகள், ஆடுகள் மேய்வது, சிற்றோடைகள் வழியெங்குமான காட்சிகளாக இருந்தன. அங்காங்கே பள்ளத்தாக்குகள் அதன் சரிவில் தனித்தனி வீடுகள் இருந்தன.






விரைவான, சற்று நீளமான தொடர்வண்டி தான் 35 நிமிட பயணத்தில் Grindel Wald அடைந்தோம். அங்கே அருகே பேருந்து நிற்கும் இடத்திற்கு பயணிகள் சென்றனர், அடுத்த தொடர்வண்டி இணைப்புகாக இயக்கப்படும் தனிப்பட்ட பேருந்து, அதில் ஒரு மூன்று நிமிடப் பயணம் Grund என்ற இடத்தில் இருந்து அடுத்து மேலே அழைத்துச் செல்லும் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றது, மூன்று பெட்டிகளுடன் தொடர்வண்டி அங்கே ஆயத்தமாக நிற்க அதில் ஏறினோம், புறப்பட்டது, இந்த முறை மலையில் தொடர்வண்டி மேலே ஏறுவது உணரும்படி இருப்புப் பாதைத் தடம் ஏற்றத்தில் செல்வது நன்கு
தெரிந்தது, அதே லேசான மழை இங்கும் தொடர்ந்து பெய்து கொண்டு தான் இருந்தது.





மலைச் சரிவில் நிறைய வீடுகள், மாடுகள் தெரிந்தன. சிறிது நேரப் பயணத்திற்கு பிற வீடுகள் இல்லை, குறைவான உயர மரங்களும், நடந்து மேலே செல்லுவோருக்கான வழிகளும், கம்பித் தடத்தில் தொங்கிக் கொண்டு செல்லும் கயிறுந்து (Rope Car) மேலும் கீழுமாக சென்று கொண்டிருந்தன. சுமார் 20 நிமிட பயணத்திற்கு பிறகு அங்கங்கே வெளியில் உறைபனித் திட்டுகள் காணப்பட்டன, தொலைவில் தெரிந்த மலைகள் யாவும் பனிப்படந்து காணப்பட்டன. அடுத்த ஐந்து நிமிடப் பயணத்தில் தொடர்வண்டிக்கு வெளியே எங்கும் பனி வெளிகள்...காணப்பட்டன, அங்கே ஒரு நிறுத்தம் அதன் பெயர் KL.Scheidegg அத்துடன் அந்த தொடர்வண்டியில் இருந்து மலை உச்சிக்கு செல்லும் மற்றொரு தொடர் வண்டிக்கு மாற வேண்டு அனைவரும் இறங்கிக் கொண்டனர்.


அங்கு இறங்கியதும் இதுவரை தண்ணீர் துளிகாக மேலே விழுந்த மழைத்துளிகள் அந்த இடத்தில் பூப்போன்ற பனித் துளிச் சாரல்களாக கீழே விழுந்து கொண்டிருந்தன. அவை நம் உடல் மீது பட்டதும் உடல் சூட்டில் தண்ணீர் துளிகாக மாறிவிடுகிறது. இருப்புப் பாதைத் தவிர்த்து அனைத்து இடங்களும் உறைப் பனித்துளிகளால் மூடப்பட்டு இருந்தன. அதன் மீது நடக்க மென்மையாக இருந்தது, இரண்டு நிமிடம் அந்த பனிமழையில் நினைந்து மகிழ்ந்து அடுத்து மழை உச்சிக்குச் செல்லும் தொடர் வண்டியில் ஏறினோம். அதில் இரண்டே பெட்டிகள் இருந்தன.

பெரிய பெரிய சர்கஸ் கூடாரங்கள் வெண்ணிற ஐஸ்கிரிமை உடலெங்கும் பூசிக் கொண்டது போன்று சுற்றிலும் மலைகள் அதன் சரிவில் வெண்ணிற பனிப் பள்ளத்தாக்குகள், உறைப் பனி தலையில் தாங்கி நின்று கொண்டு இருந்த மிகக் குறைந்த மரங்கள் தென்பட்டன, வெண்பனி மூடிய சிறிய சமவெளி மீது அந்த சிறிய தொடர் வண்டி ஊர்ந்து சென்றது., சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த க்காட்சிகள் கண்ணுக்கு முன் சாட்சியாக வந்து கொண்டு இருந்தன, அதன் பின் பனிமலையின் குடைந்த குகைப்பாதை வழியாக வண்டி சென்றது.



குகைப்பாதையின் இடையிடையே பார்வையாளர்கள் மலைத் தொடரை ரசிப்பதற்காக நிறுத்தங்கள் வைத்திருந்தனர். அங்கே ஐந்து நிமிடங்கள் நின்றன, இப்படியாக Eigergletscher, Alpiglen, , Eismeer என்ற மலை ஏற்ற இடங்களில் நின்றது, அன்று கடும் பனிப்பொழிவு ஆகையால் அங்கே அமைந்திருந்த கண்ணாடி வழியாக பார்க்க முடியவில்லை, கண்ணாடிகளின் வெளிப்பக்கம் முழுவதுமே வெண்புகை போன்று பனிப் படர்ந்திருந்தால் அந்த உயரக் காட்சிகள் காணமுடியாமல் போனது.

நிறைவாக Jungfraujoch எனப்படும் மலை உச்சியில் அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் பார்பதற்காக அமைக்கப்பட்ட கட்டி இடத்தின் அடித்தள நிலையத்தை அடைந்தது.
இணையப் படம்

(இணையத்தில் தேடி எடுத்தப் படம்)


அந்த இடம் முழுவதும் உச்சி மலையை குடைந்து அமைக்கப்பட்ட இடம், மேல் தளமாக பெரிய பார்வையாளர் கட்டிடம், அதில் நான்கு தளங்கள். மேல் தளத்திற்கு சென்றோம், அங்கே திறந்த வெளியில் நிற்பதற்கு பாதுகாப்பு கம்பிகளுடன் ஒரு தளம் அமைத்திருந்தார்கள், கதவை திறந்து கொண்டு அங்கு செல்ல.......லேசான பனிப்புயல் அதாவது கடுமையான காற்று.....பனித்துளிகளுடன் முகத்தில் அறையும் காற்று, நடுங்க வைக்கும் கடுமையான குளிர், ஒரு நிமிடம் அங்கு நின்றால் கைகள் விரைத்துப் போகும் அளவுக்கு கடும் குளிர். அங்கே நிற்க முடியவில்லை, இருந்தாலும் ஒரிரு முறைகள் உள்ளே சென்றுவிட்டு விட்டு அங்கு நின்று வந்தோம். வெளியே வெப்ப நிலை அளவு போட்டு இருந்தார்கள் - 8 டிகிரி.






அடுத்த தளத்தில் ஐஸ் பேலஸ் எனப்படும் பனி மாளிகை அமைக்கப்பட்டு இருந்தது, ஒரே சமயத்தில் இருவர் நடந்து போகும் அளவுக்கு குறுகலாக குகை போன்ற நுழைவாயில், அதனுள் பல இடங்களில் காட்சியாக வலப்பக்கமும் இடப்பக்கமும் பனிச் சிற்பங்கள் செய்து வைத்திருந்தனர்.






10 நிமிடம் ப்ரீசருள் இருந்தது போன்று இருந்தது அங்கிருந்து திரும்பிய பிறகு. போகும் போதே தேவையான அளவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குளிராடைகள் அணிந்திருந்தால் அந்த கடும்குளிரை எதிர்கொண்டோம்.

அங்கே பிற தளங்களில் கண்ணாடி சன்னல் அமைக்கப்பட்டு வெளிக்காட்சிகள் தெரிந்தன. சுற்றுலா பொருள் விற்கும் கடைகளும், பானங்கள், உணவுகள் விற்கும் கடைகளும், ஒரு உணவு விடுதியும் இருந்தன, இரண்டு தளங்களில் கழிவரை வசதிகள் இருந்தன.
ஐரோப்பாவின் மலை உச்சியான அந்த இடத்தில் சுமார் 1 மணி நேரம் சுற்றிப் பார்த்து திரும்பினோம்.



வரும் வழியில் உறைபனி முடியும் தொடர் வண்டி மாறும் இடத்தில் சிறிது நேரம் பனிபொழிவில் பனியை உருண்டை உருட்டி வீசி எறிந்து விளையாடி கழித்துவிட்டு, பிறகு மாறுபட்ட வழி இருந்தும் சென்ற வழியிலேயே திரும்பினோம், மாற்று வழியை விட 30 நிமிடம் விரைவாக அழைத்துச் சென்றுவிடும் என்கிற தகவல் தெரிந்தது. மேலும் மலைக்காட்சிகள் இரண்டிலும் பெரிய மாறுதல் இருக்காது என்பதால் விரைவாக திரும்பும் வழியைத் தேர்ந்தெடுத்தோம்.






Interlaken OST திரும்ப மலை 6 ஆகி இருந்தது. அந்த ஊரை கொஞ்சம் நடந்தே சுற்றினோம்.


பிறகு விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு, இரவு உணவுக்கு அங்கே சற்று தொலைவில் Interlaken West நிலையத்திற்கு அருகே இருந்த தாஜ் இந்திய உணவகத்திற்குச் சென்று இரவு உணவை முடித்தோம். மூன்று பேருக்கும் சேர்த்து இரவு உணவாக ஒரு புலாவ், நான்கு வட இந்திய ரொட்டி(Nan), உருளை கிழங்குடன் காலிப்ளவர் மசாலா 40 ஸ்விஸ் ப்ராங்க், மிகுதிதான். ஆனால் அந்த ஊரில் இந்திய உணவு கிடைப்பதற்கு கொடுக்கலாம். பனிப் பொழிவு மழை பெய்யும் போது தான் ஏற்படுகிறது, அன்று மழை தூறியதால் அதே போன்ற பருவ நிலையால் மலை உச்சியிலும் மழைக்குக்கு பதிலாக பனிப் பூப்பொழிவாக இருந்தது அன்றைய பருவ நிலையால் ஏற்பட்ட ஒன்று, இல்லை என்றால் உறைபனியை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி இருப்போம். ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த பனித் தூறல், பனிப்பூக்கள் கண்களில் காட்சியாகவும், உடலிலும் பட்டதும் மகிழ்வானதொரு துய்பு.

பயணக்குறிப்புகள் : Jungfraujoch பனி மலைக்கு தொடர்வண்டி மற்றும் கயிறுந்து (Rope Car) தடவழிகள் இருக்கின்றன, நமக்கு விருப்பமானவற்றில் செல்லலாம். கடும் குளிர்காலத்தில் செல்லும் போது தேவையான குளிராடைகள், கையுறைகள், பொருத்தமான காலணிகள் (ஷூ) அணிந்து செல்ல வேண்டும். Interlaken லிருந்து சென்று, ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு, திரும்ப 6 மணி நேரங்கள் தான் ஆகிறது, Interlaken -ல் மற்ற விடுமுறை தளங்களைவிட குறைவான வாடகைக்கு விடுதிகள் கிடைக்கும். மற்ற கடைகளும், இந்திய உணவகங்களும் அமைந்திருக்கின்றன. Jungfraujoch மலை உச்சியில் உணவு மற்றும் சுற்றுலா நினைவு பொருள்கள் விலை மிகுதி, முடிந்த வரை உணவு பொருள்களையும் குடிநீர் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வது செலவைக் குறைக்கும்.
மலை உச்சியில் பனிச்சறுக்கு, நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டியில் மூன்று நிமிடப் பயணம் போன்ற விளையாட்டுகள் இருக்கின்றன. இருந்தும் பருவ நிலையைப் பொருட்டே இவைகள் நடக்கும், நாங்கள் சென்ற அன்று மோசமான பருவ நிலை. விளையாட்டுகள் எதுவும் நடைபெற வில்லை.




(படத்தின் மீது அழுத்து பெரிதாகப் பார்க்கவும்)



கடைசி மூன்றும் இணையத்தில் இருந்து எடுத்தப் படங்கள்)



நாய்களுக்கு ஏன் மூச்சா போகக் கூட இட வசதி செய்து தருகிறார்கள் என்பது இப்பதான் புரிகிறது :) பயணிகளை ஈர்பதில் அவைகளும், மாடுகளும் ஸ்விசர்லாந்தில் தன்னுடைய பங்கையாற்றுகின்றன :) மாட்டு மணி மாதிரிகள் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் பயண நினைவுப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது.

இங்கே எழுதி இருப்பவை அனைத்தும் சென்ற வாரம் இதே வெள்ளிக் கிழமை முழுவதும் நடந்த நிகழ்வு, எழுதும் போதே ... மீண்டும் அங்கெல்லாம் செல்ல மனம் ஏங்குகிறது.

21 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அருமை! அப்பரம் வந்து படிக்கிறேன்!

yrskbalu சொன்னது…

for me last europe visit only best.

balance not too good. nothing special.

always natural wins .

anyway you not furnised needed expenses approximately./

yrskbalu சொன்னது…

photo are coming good.

can you give camera uesd detail?

கோவி.கண்ணன் சொன்னது…

// yrskbalu said...
for me last europe visit only best.

balance not too good. nothing special.

always natural wins .//

:)

//anyway you not furnised needed expenses approximately./
//

தொடர் அடுத்த இடுகையுடன் முடியும், அப்போது செலவு விவரங்களை எழுதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// yrskbalu said...
photo are coming good.

can you give camera uesd detail?

3:01 PM, October 30, 2009
//

Canon IXUS80IS 8mpx

இருந்தும் நான் எடுத்த படங்கள் அனைத்தும் குறைந்த அளவு 640 x 480 Resolution படங்கள் தான். செட்டிங் மாற்ற மறந்துவிட்டேன். இல்லை என்றால் இன்னும் துல்லியமாக எடுத்திருக்க முடியும்.

அப்பாவி முரு சொன்னது…

அழகான படங்களை இணைத்து போறாமையை உண்டாக்காதீங்க.

எங்க பாபம் சும்மா விடாது.

:((

Siva சொன்னது…

Super...did u travelled in golden pass train which takes thro' longest cave...highest train route etc..How much that cost?

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivakumar said...
Super...did u travelled in golden pass train which takes thro' longest cave...highest train route etc..How much that cost?
//

நான் போனது கோல்டன் பாஸ் வழிப்பாதை தான்.

சூரிக்-லிருந்து பனிமலைக்கு(Jungfraujoch) செல்வதற்கான பயணச்சீட்டு ... மற்றும் ஸ்விஸ் ஹாஃப் ப்ரைஸ் பாஸுடன் இடையில் தங்கி ... தங்கி (தங்கும் விடுதி செலவு தவிர்த்து) விருப்பம் போல் மூன்று நாட்களுக்குள் சென்று திரும்ப ஒருவருக்கு 210CHF (ஸ்விஸ் ப்ராங்) ஆனது. 15 வயது வரை உள்ள சிறுவர்கள் பெற்றோருடன் சென்றால் இலவம் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அருமை! அப்பரம் வந்து படிக்கிறேன்!
//

நன்றி ஜோதி

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
அழகான படங்களை இணைத்து போறாமையை உண்டாக்காதீங்க.

எங்க பாபம் சும்மா விடாது.

:((
//

வாங்க சேர்ந்து போவோம் !
:)

மணிகண்டன் சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க கோவி. முதல் snow எப்பவுமே ஒரு சூப்பர் அனுபவம் தான் :)-

jungfrau மலைவுச்சியில் பனிச்சறுக்கு விளையாடினால் நேராக வைகுண்டம் தான் போகவேண்டும் :)-

Mahesh சொன்னது…

Read all the 8 parts. A detailed note on the visit. Excellant !!

While coming down from Jungfrau you couldàve taken the other route via Lauterbrunnen. You would've enjoyed some awesome views.

Do write about the Mystery Park also.

மங்களூர் சிவா சொன்னது…

/
சாலை ஓரத்தில் நாய்களுடன் சிலர் சென்று கொண்டு இருந்தனர். நாய்கள் சிறுநீர் கழிக்க குத்துக் கல்லுடன் தனி இடம் கூட சாலை ஓரத்தில் இருந்தது வேறெந்த நாட்டிலும் பார்க்காத ஒரு காட்சி.
/

என்ன இருந்தாலும் ஃபாரின்காரன் ஃபாரின்காரன்தான் இல்லையா
:))))))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//எழுதும் போதே ... மீண்டும் அங்கெல்லாம் செல்ல மனம் ஏங்குகிறது. //

எங்களுக்கும் தான்.

நீங்கள் விவரித்தவிதம் நேரில் சென்று பார்த்த உணர்வை தந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
//எழுதும் போதே ... மீண்டும் அங்கெல்லாம் செல்ல மனம் ஏங்குகிறது. //

எங்களுக்கும் தான்.

நீங்கள் விவரித்தவிதம் நேரில் சென்று பார்த்த உணர்வை தந்தது.
//

ஊருக்கு போய் வந்து இருக்கிறீர்கள். மகிழ்வும் ஏக்கமும் உங்களுக்கும் இருக்கும்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

புகைப்படங்கள் அனைத்தும் அழகு அருமை

Test சொன்னது…

தங்களின் எட்டு பதிவுகளையும் ஒரு சேர படித்தேன், சிறந்த பயண/புகைப்பட கட்டுரை,

// என்னைப் போன்ற நடுத்தரவர்க்கத்தில் பிறந்து, வளர்ந்து படித்தவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கையும், வேலையும் தற்பொழுது மிகவும் இயல்பான ஒன்று என்றாலும் படிக்கிற காலத்தில், சிறுவனாக இருந்த காலத்திலும், ஏழ்மையின் பிடியில் வளர்ந்த இல்லச் சூழலில் முற்றிலும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பயணம் தான் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலாவிற்காகச் செல்வது என்பதை விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த போது நினைக்காமல் இருக்க முடியவில்லை. //

மீ டூ. ( நான் இன்னும் சுற்றுலாவிற்காகச் சென்றதில்லை, பணிநிமித்தம் லண்டன் சென்றதோட சரி )

//'கிரீச்....கிரீச்' சத்தமிட்டது//

இது கொஞ்சம் ஓவர், 'கிரீச்....கிரீச்' சத்தமிட்டால் வேறு ஒன்றை எடுக்க வேண்டியதுதானே? :)

பாரிஸ் புறநகர் வெளி, சிங்கப்பூர் புறநகர் வெளி ஒரே மாதிரி தான் இருக்கு :)

புகைப்படங்கள் அருமை, குறிப்பாக பகுதி 8ல் வெளியான ஸ்விஸ் புகைப்படங்கள் (ஸோ ஸ்வீட்)
//சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்தக்காட்சிகள் கண்ணுக்கு முன் சாட்சியாக வந்து கொண்டு இருந்தன//

ப்ரியாமணி நடித்த கண்களால் கைது செய் திரைப்படமா? :)

Unknown சொன்னது…

நல்ல பதிவு, அருமையான படங்கள், இப்பவே எனக்கும் போகனும் ஆசை வருகின்றது. நடுவுல அது என்ன சர்ச் பாதர் மாதிரி கைகளை விரித்துக்கொண்டு ஒரு போஸ்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SUDHAKAR said...
நல்ல பதிவு, அருமையான படங்கள், இப்பவே எனக்கும் போகனும் ஆசை வருகின்றது. நடுவுல அது என்ன சர்ச் பாதர் மாதிரி கைகளை விரித்துக்கொண்டு ஒரு போஸ்.
//

:)

Snow Falling open area - இடத்தைக் குறிக்கும் இடங்களைச் சுட்டி கைகளை விரித்தபடி மனிதன் நிற்பது போன்று படம் போட்டு இருப்பார்கார்கள். Toilet Symbol போன்று Open Snow Area படம். அங்கு செல்பவர்கல் கைகளை விரித்தபடி பனியில் நினைந்து மகிழ்வார்கள்.

கையேடு சொன்னது…

அனைத்து பயணக் கட்டுரைகளும் சிறப்பா இருந்துதுங்க..

cheena (சீனா) சொன்னது…

அருமை அருமை - அத்தனையும் அருமை - படங்கள் குறிப்புகல் மறுமொழிகள் அவைகளுக்குப் பதில்கள்
அடடா கோவியாரின் திறமையே திறமை.

வாழ்க கோவி

நல்வாழ்த்துகள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்