வன்னியை இலங்கை இராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இவை முன்பே ஒரு முறை கைப்பற்றப்பட்ட பகுதி தான் என்பதை தமிழ் சசி தெளிவாக எழுதி இருக்கிறார். எனவே பட்டாசுக்கு காசைக் கரியாக்கி, வீனாக்குபவர்களின் தற்காலிக மகிழ்ச்சியை நான் கெடுக்க விரும்பவில்லை. இந்த சக்கரவியூகம் தலைப்பு வன்னி தொடர்புடையது அல்ல.
******
உலகெங்கிலும் இலக்கிய ஆர்வலர்கள் என்றால் அது மொழி ஆர்வலர்களாகவும், மொழி சார்ந்த துறையில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள், அதற்கு முற்றிலும் விதிவிலக்கு தமிழர்கள், தமிழர்களில் எந்த துறையில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் இலக்கிய ஆர்வம் என்பது அவர்களது இரண்டாவது திறமையாக பலருக்கு இருக்கிறது. எழுத்து என்பது அனைவருக்கும் பொதுதான். தமிழர்கள் தவிர்த்து ஏனையோர் எழுதும் எழுத்துக்கள் அவர்கள் துறை சார்ந்ததாகவே இருக்கும், மிகச் சிலரே விதிவிலக்காக இருப்பர். ஆனால் தமிழர்களைப் பொருத்து இலக்கிய துறைக்கு பணியாற்றியவர்களில் பலர் குறித்துப் பார்த்தால் அவர்கள் அன்றாட வாழ்வில் வேறு ஒரு தொழிலில் கோலொச்சிக் கொண்டு இருப்பவர்களாகவே இருப்பர்.
மொழிப் பற்று, மொழி ஆர்வம் தமிழர்களை இலக்கியத்துக்குள்ளும் இழுத்து வந்திருக்கும். நம் வலைப்பதிவுகளிலேயே அதனைப் பார்க்கலாம். வெறும் 10 ஆம் வகுப்பு வரை தமிழைக் கற்றோர்கள் பலர் தற்பொழுது மிகச் சிறந்த கட்டுரைகளை தமிழில் எழுதுகிறார்கள். எழுத்து தமிழே அறியாதவர்கள் கூட தன்முயற்சியால் கற்றுக் கொண்டு சிற்சில பிழை இருந்தாலும் சிறப்பாக எழுதுகின்றனர்.
இளைய பல்லவன் என்கிற புதிய பதிவர் 'காஞ்சித் தலைவன்' என்ற வலைப்பதிவு மூலம் ஆகஸ்டு 2008ல் இருந்து பதிகிறார். தனிப்பட்ட வகையில் எனக்கும் அவருக்கும் பழக்கம் இல்லை. பதிவுகள், பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்திருக்கிறேன். அவரது பதிவு விபரப்படி (ப்ரொபைல்) அவர் பட்டயக் கணக்கராக (சார்டட் அக்வண்ட்) பணிபுரிகிறார். பூச்சு இல்லா எழுத்தில் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர் என்பது இவரது ஆரம்ப கால எழுத்துக்கள் உணர்த்தின, நடப்பு மற்றும் சிறுகதைகளை எழுதுபவர் என்று அறிந்து கொண்டு இருந்தேன். அதன் பிறகு சக்கர வியூகம் என்னும் வரலாற்று தொடர் எழுதினார். வலைப்பதிவில் எழுதுபவர்கள் வரலாற்றுத் தொடரெல்லாம் எழுத முடியுமா ? அதற்கான உழைப்பை நினைத்தால் இதெல்லாம் கூறற்றது (சாத்தியமற்றது) என்றே நினைக்க வைத்தது. வரலாற்றுத் தொடர் என்ற பெயரில் 'இம்சை அரசன்' போன்று நகைச்சுவை எதாவது எழுதி இருப்பார் தொடர் கொஞ்ச நாள் தொடரட்டும் பிறகு படிக்கலாம் என்று இருந்தேன். ஏறத்தாழ 12 தொடர் பகுதிகள் முடிந்த நிலையில் நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வியப்பு... வியப்பு !
சக்கர வியூகம் - 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் முகலாயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கான சூழலைச் சொல்லி (மாலிக் கபூர் வருகை பற்றிய தகவல்) அதைத் தமிழக அரசர்கள் தடுக்க முனைவதாக கதை சென்று கொண்டு இருக்கிறது. வரலாற்றுக் கதைகளுக்கே உரித்தான தகவல்கள், வருணனை, காதல், வீரம், இராஜ தந்திரம், தேவையான புனைவு இவையெல்லாம் அழகுற அத்தியாயங்களில் அழகாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று கதையாசியர்களின் நூல்களில் இருக்கும் தெளிவான நடை இவரது கதையில் இருக்கிறது, அதுவும் இவரது முதல் வரலாற்றத் தொடர் இது என்னும் போது, சாண்டில்யன் போன்றோரை ஒப்பீடு செய்வது தவறென்றாலும் ஓப்பீடுகள் தான் இவரது எழுத்தின் தன்மையையே உணரவைக்கிறது என்ற வகையில், இவர் தொடக்க நிலை வரலாற்று கதையாசிரியர் என்றாலும் அவர்களைப் போல் புகழ் பெரும் தகுதியை இவரால் கண்டிப்பாக வளத்துக் கொள்ள முடியும்.
இவரது கதையின் ஒரு அத்யாயத்தில்
"அரசியல், மதம் ஆகியவை - பாவும், ஊடும் ஒரு துணியில் இருப்பது போல நாட்டில் நிலவுகிறது. அரசனானவன் தன் நாட்டிற்குரிய மதத்தைத் தேர்ந்தெடுப்பதோடு, பிற மதங்களும் இயைந்து வாழப் பாடு பட வேண்டும். அனைத்து மதங்களின் கருத்தும் ஒன்றுதான் என்றாலும், மக்களைப் பிரிக்க மதங்களைக் காலம் காலமாக அரசுகள் பயன் படுத்தி வந்திருக்கின்றன. இறுதியில் அத்தகைய மூடத்தனமான கொள்கைகளாலேயே அவ்வரசுகள் வீழ்ந்திருக்கின்றன."
மதமும் அரசியலும் பின்னிப் பிணைந்து ஒன்றை ஒன்று தற்காத்துக் கொள்கின்றன, அல்லது அவற்றின் அழிவுக்கு அதுவே காரணம் என்பதை இவ்வளவு சுறுக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா ? என்று நினைத்து வியந்தேன்
மற்றொரு பகுதியில்,
"இது அவசரப் படுவதல்ல சுந்தரா, சொல்லி முடிப்பதற்குள் செய்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் என் கொள்கை. காலம் இருக்கிறதே என்று நினைத்தால் மேலும் பல தடங்கல்கள் வரலாம். நாம் இப்போது இங்கு வந்ததே ஒரு தடங்கலாகப் படுகிறது. இதனால் நமது திட்டத்தில் தோல்வி ஏற்படலாம்'
காலம் தாழ்த்துகள் மற்றும் எச்சரிக்கை உணர்வு இவற்றைத் தொடர்ப்பு படுத்தி மிக அழகாக எதையும் குறித்த நேரத்தில் செய்வதில் தான் வெற்றியின் முதல் அத்யாயம் எழுதப்படுவதாக உணர்த்தி இருக்கிறார்
சில குறைகளும் உள்ளன, தொடரில் பேச்சுரையில் (வசனம்) பல இடங்களில் வடமொழி தாக்கம் இருந்தாலும் அது இயல்பு என்று நினைக்கலாம். ஆனால் இந்தி ஆளுமையே இல்லாத காலங்களில் நடக்கும் கதையில் எழுதப்பட்ட பேச்சுரையில் 'ஜாக்கிரதை, அதிகம்' போன்ற இந்தி சொற்களை தவிர்த்திருக்கலாம்.
///அவரிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். //அதிக//
கதையில் ஒட்டவில்லை. ஜாக்கிரதை, அதிகம் இவற்றிற்கு மாற்றான சொல் எச்சரிக்கை மற்றும் மிகுதி ஆகிய சொற்களைப் பயன்படுத்தி இருக்கலாம்
தமிழில் தற்பொழுது புழக்கத்தில் இல்லாத 'போந்த' என்ற சொல் பயன்படுத்தி இருக்கிறார்.
//இருவருமே சற்று நேரம் கழித்தே படுக்கையறையை விட்டு வெளிப்போந்தனர். //
வெளிப்போந்தனர் என்றார் வெளியேறினர், வெளியே வந்தனர் என்றே பொருள், போந்தனர் என்ற சொல் வருவது என்ற பொருளில் மறைமலையடிகளார் காலத்தில் கூட பயன்பட்டு வந்தது. அந்தச் சொல்லை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
தொடர் இன்னும் முடியவில்லை 12 பகுதிகள் வரை எழுதி இருக்கிறார். முழுவதுமாக முடித்து நூலாக வெளியிடவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அப்படி நூலாகவெளி வரும் போது வலைப்பதிவாளர் ஒருவர் எழுதிய முதல் வரலாற்று நாவலாக அது அமையும்.
இளைய பல்லவன் மென்மேலும் பல இலக்கியங்கள் படைத்துப் பலரால் பாராட்டப் படவேண்டும், அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வலைப் பூங்காவில் பல தரமான விதைகள் ஊன்றப்பட்டு, செழித்து வளர நல்லச் சூழலுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன. அத்தகைய விதைகளாக ஊன்றப்பட்டு துளிர்விடுபவர்களில் ஒருவராக இளைய பல்லவன் இருக்கின்றார்.
இந்த ஆண்டின் முதல் பதிவு சக பதிவர் ஒருவரை பாராட்டித் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
23 கருத்துகள்:
ஆச்சரியமான தகவல்..பகிர்ந்தமைக்கு நன்றி..
நன்றி என்ற ஒரு சொல்லைத் தவிற வேறு ஏதும் கூறவியலாத நிலையில் இருக்கிறேன் !
இது என் பொறுப்பை அதிகமாக்கியிருக்கிறது என்பது உண்மை.
மிக்க நன்றி !
திரு.இளையபல்லவன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வரலாற்றுக் கதைகள் படிப்பதில் அர்வம் இருப்பவன் என்ற முறையில் உங்கள் புத்தகத்தை இப்போதே முன் பதிவு செய்து வைக்கிறேன். :)
கோவியார் சொல்லி இருப்பது போல் விரைவில் புத்தகமாக வெளியிடுங்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.
//கோவியார் சொல்லி இருப்பது போல் விரைவில் புத்தகமாக வெளியிடுங்கள். மீண்டும் வாழ்த்துக்கள்//
எனக்கும் ஒரு காப்பி ரிசர்வ்ட்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் பல்லவன். இனி நீங்களும் பிரபல பதிவர் தான் போங்க..
முழுசா முடிந்தவுடன் சொல்லுங்க..படிச்சிடுவோம்..
இந்த திகில் வைச்சி, பாகம் பாகமா எல்லாம் படிக்க எனக்கு பொறுமை இல்லை..
முயற்சிக்கே வாழ்த்துக்கள் இளைய பல்லவரே..
ஃஃஃஃஃஃஃஃ
31ஆம் தேதி நடந்த மதுரைப் பதிவர் சந்திப்பில் தமிழில் வடமொழி சொற்கள் குறித்தும் காரசாரமாக பேசினோம்..தருமி ஐயா எழுதுவார் என்றியிருக்கேன்.. :))
ஃஃஃஃஃஃஃஃஃஃ
நர்சிமின் வரலாற்று தொடரும் இதேப் போல் எப்ப முடியும் என்று காத்திருக்கிறேன்..
ஃஃஃஃஃஃ
"கண்டதை" பகிர்வதற்கு பதிலாக இப்படி சிறப்பாக கண்டதை பகிர்வது உற்சாகமூட்டும்.. :P
நானும் இளைய பல்லவனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
//"கண்டதை" பகிர்வதற்கு பதிலாக இப்படி சிறப்பாக கண்டதை பகிர்வது உற்சாகமூட்டும்.. :P//
வெளிகுத்து
கோவியாரே!
அறிமுகம் மற்றும் பகிர்வு நன்று!
//டொன்’ லீ said...
ஆச்சரியமான தகவல்..பகிர்ந்தமைக்கு நன்றி..
//
டொன்’ லீ ,
வழிமொழிதலுக்கு நன்றி !
//இளைய பல்லவன் said...
நன்றி என்ற ஒரு சொல்லைத் தவிற வேறு ஏதும் கூறவியலாத நிலையில் இருக்கிறேன் !
இது என் பொறுப்பை அதிகமாக்கியிருக்கிறது என்பது உண்மை.
மிக்க நன்றி !
//
இளைய பல்லவன்,
நட்சத்திர வாரத்திலும் சிறப்பாக எழுதி இருந்தீர்கள், வரலாற்றுத் தொடர் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. வாழ்த்துகள்
சஞ்செய் மற்றும் சிபி,
பதிவர் இளைய பல்லவனை உற்சாகப்படுத்தும் பின்னூட்டங்களுக்கு நன்றி !
//நான் ஆதவன் said...
வாழ்த்துக்கள் பல்லவன். இனி நீங்களும் பிரபல பதிவர் தான் போங்க..
//
நான் ஆதவன்,
அவர் ஏற்கனவே தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்து அறியப்பட்டவர் தான்.
//TBCD said...
"கண்டதை" பகிர்வதற்கு பதிலாக இப்படி சிறப்பாக கண்டதை பகிர்வது உற்சாகமூட்டும்.. :P
//
TBCD ஐயர்,
நானும் பதிவுகளில் பதிக்கப்பட வேண்டியவை மட்டுமே எழுத முடிவெடுத்துள்ளேன். :) புத்தாண்டு தீர்மானம் !
// புருனோ Bruno said...
நானும் இளைய பல்லவனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
9:34 PM, January 03, 2009//
Bruno சார், பாராட்டில் இணைவதற்கு நன்றி !
// புருனோ Bruno said...
//"கண்டதை" பகிர்வதற்கு பதிலாக இப்படி சிறப்பாக கண்டதை பகிர்வது உற்சாகமூட்டும்.. :P//
வெளிகுத்து
//
எந்த குத்தாக இருந்தாலும் சரிசெய்ய மருத்துவர் நீங்கள் இருக்கிறீர்களே !
:)
// ஜோதிபாரதி said...
கோவியாரே!
அறிமுகம் மற்றும் பகிர்வு நன்று!
//
வெளிச்ச பதிவரே,
அறிமுகம் என்று சொல்ல முடியாது, வெளிச்சமிடுதல் என்று சொல்லலாம். அவர் ஏற்கனவே நட்சத்திரமாக மின்னியவர் தான். இந்தப் விமர்சனப் பதிவு சக்கர வியூகத்தைப் படித்ததால் ஏற்பட்ட எண்ணங்கள்
\\இந்த ஆண்டின் முதல் பதிவு சக பதிவர் ஒருவரை பாராட்டித் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\\
அருமையான முயற்சி.
அவர் எழுத்துக்களை மேலும் வெளிச்சமிட்டு காட்டியதற்கு நன்றி - என்னை போன்ற தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல உற்சாகம் அவர் எழுத்துக்களும்.
புருனோ ஒருமுறை கோடி காட்டியிருந்தார்.அதிலிருந்து நான் படித்து வருகிறேன்.
இந்த இடுகையின் மூலம் மேலும் பல வாசகர்கள் கிடைப்பார்கள் என்பது உறுதி.
கோவி,
ஒரு நல்ல செயலைப் பாராட்டுவதற்கு நல்ல மனம் வேண்டும். நன்கு விமர்சனம் செய்து சக்கர வியூகத்தினையும் அதன் ஆசிரியரையும் பாராட்டிய விதம் சாலச் சிறந்தது.
படிக்க வேண்டிய தொடர், அருமையான நடையில் எழுதுகிறார்
வரலாறு.காம் (www.varalaaru.com)இல் சே.கோகுல் என்பவர் (இவரும் சார்டர்ட் அக்கவுன்டன்ட் தான் !) ஏற்கனவே இரு வரலாற்றுத் தொடர்கள் எழுதியுள்ளார். தற்போது சேரர் கோட்டை எனும் தொடரை எழுதி வருகிறார். நீங்களும் படித்துப் பாருங்கள். தொடர் எழுதவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது அவர்தான்.
இந்த வகையில் நான் இரண்டாவது வலையுலக எழுத்தாளன். ஆனால் பதிவுலகில் முதல் என்று சொல்லலாம். நர்சிமும் எழுதி வருகிறார்.
வாழ்த்திய டொன் 'லீ', சஞ்சய் காந்தி, நாமக்கல் சிபி, ஆதவன், டிபிசிடி, ப்ரூனோ, ஜோதிபாரதி, ஜமால், சுரேஷ், சீனா மற்றும் நசரேயன் மற்றும் அனைவருக்கும் நன்றி.
திரு. சே. கோகுல் அவர்களின் ராஜகேசரி புத்தகமாக பழனியப்பா பிரதர்ஸ் சார்பில் இந்த புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப் படுகிறது என்பது மகிழ்ச்சியானதும், நம்பிக்கையூட்டுவதுமான செய்தி !!
நேக்கும் வரலாற்று நாவல்கள் நெம்ப புடிக்கும். நம்மப் பதிவர் வரலாற்றுத் தொடர் எழுதுறாருன்னா அது மிகவும் பாராட்டப்படவேண்டியதுண்ணா.
நன்னா எழுதட்டும், கட்டாயம் புத்தகமா வெளியிடட்டும். நம்ம வழக்கப்படி எல்லாரும் கூட்டா ஆதரவு குடுத்து நம்மாள முடிஞ்சத செஞ்சுடுவோம்.
கருத்துரையிடுக