பின்பற்றுபவர்கள்

25 ஜனவரி, 2007

பழமை வாதமும் பழம்பெருமையும் !

பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள், முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள், காலம் காலமாக பின்பற்றுவதால் இதில் ஒருவேளை நன்மை இருந்தாலும் இருக்கும், எல்லாவற்றிற்கும் எந்த காரணமும் இல்லாமல் நம் முன்னோர்கள் எழுதி இருக்கமாட்டார்கள் என்று கூறிக் கொண்டு பழமை வாதம் பேசுகிறோம்.

இவற்றால் எல்லோருக்கும் பொது நன்மை என்று எதாவது இருக்கிறதா ? என்று ஆராய்வதைக் கூட நம் மனம் ஏற்பதில்லை.

திருக்குறள் போற்றத் தக்கதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே வேளையில் பெண்களைப் பற்றி இழிவாக சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை. இதை மாற்றுப் பொருள் சொல்லியும் அந்த கருத்துக்கள் இல்லை என்று மறுப்பவர்களும் உண்டு. ஆனால் என்ன எழுதினோம் என்பது திருவள்ளுவருக்கும் அவருடைய எழுத்தாணிக்கும் தான் தெரியும்.
பகவத் கீதையில் இருப்பதால் அது உயர்ந்தது, பகவான் சொல்லியது என்று கூட சிலர் வருண பேதம் குறித்துச் சொல்கிறார்கள். இருக்கலாம் நான்கு வருணங்கள் தொழில் அடிப்படையில் பிறிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் பின்னாளில் அது பிறவி அடிப்படை என்றல்லவா இன்றலளவிலும் மாற்றப்பட்டு கடைபிடிக்கப் பட்டு வருகிறது. வருண வேறுபாடு என்பது வருண பேதம் என்று மாறிய போது அது ஒரு தோல்வியான கொள்கை அல்லது காலவதியான கொள்கை என்று ஆகிவிட்டது. இது இந்து மதம் மட்டுமல்ல ஏனைய மதங்களிலும் அக்காலத்திற்கு ஏற்பட்ட கருத்துக்கள், ஏற்கப்பட்ட கருத்துகள் என பல நம்பிக்கைகள் உண்டு. வேதம் என்றாலே இறைவன் சொல்லியதென்றும் மற்ற மதங்களிலும், இறைவனும் வேதமும் என்றும் இருப்பது என்று இந்து மதத்தினரும் சொல்லி வருகின்றனர். இறைவனுக்கே காலத்திற்கு, இடத்திற்கு, குறிப்பிட்ட மக்களுக்கு ஏற்ற வகையில் தனித் தனியாக வேதம் ஏற்படுத்த அவசியம் ஏற்பட்டு இருப்பதை ஏனோ தெரிந்தும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். என் இறைவனின், என் மதத்தின் வேதமே உயர்ந்தது என்று சக மனதிரிடம் வேதத்தின் பெயரால பேதமை பாராட்ட்டுகின்றனர்.

நல்நோக்கம் என்ற பெயரில் இரசாயண ஆலைகளை கட்டுவதாக அரசாங்கம் அறிவிக்கிறது. 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று விளம்பரமும் செய்கிறார்கள். அதன் பாதகங்களை பார்த்தால் 1000 பேருக்கு வேலை என்பதை விட பத்து ஆண்டுகளில் ஏற்படப் போகும் சுற்றுச் சூழல் கேடுகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 1000 பேருக்கு வேலை என்ற பயனைவிட பத்துலட்சம் பேருக்கு உடல்நலக் குறை ஏற்படுவதாக அறியப்படும் போது, அல்லது சுற்றியும் உள்ள விளைச்சல் நிலங்கள் சீர்கெடும் என்ற அபாயம் அறியப்படும் போது அதை நல்ல நோக்கம் என்று சொல்ல முடியுமா ? பழமைவாதங்களையும் இப்படித்தான் ஆராய வேண்டி இருக்கிறது சிலருக்கு நன்மையாக இருக்கும் பழமை வாத சிந்தனைகள் பலபேரின் வாழ்வையே கேள்விக் குறி ஆக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அத்தகைய பழமை வாதத்தை புறம் தள்ளினால் எல்லோருக்கும் நன்மையே.

சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பதாலே எந்த கீழான கருத்துக்களும் மேன்மை பெற்றது போன்று சிலர் வாதம் செய்கிறார்கள். தமிழில் சங்க காலத்தில் எழுதியது என்பதால் அது மிகச் சிறந்தது என்று சொல்ல முடியுமா ? காலத்திற்கு ஏற்றார்போல் கருத்துக்கள் ஏற்படுகின்றன, பின்பு இன்றைய காலத்தில் அதன் நடைமுறையில் சிக்கல் இருந்தால் காலாவதி ஆக்கவேண்டும். மொழியில் என்ன இருக்கிறது? அது ஒரு ஊடகம், ஒருவர் மற்றொருவருடன் பேசுவதற்கு மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஊடகம். இருந்தாலும் தாய் மொழிப் பற்று என்பது நாம் உண்ணும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்பட்டது, சிந்தனைகளில் செயலாற்றுகிறது என்பதால் அதன் மீது பற்று வைத்திருக்கிறேம். அவரவர் மொழி மற்ற மொழிகளைவிட உயர்ந்தது என்று தனது மொழிக்குழுவிற்குள் எண்ணுவதில் தவறல்ல. ஆனால் உன்மொழியைவிட என்மொழியே சிறந்தது என்னும் வாதம் ஏற்புடையது அல்ல. உன்னுடைய இறைவனை விட என் இறைவன் உயர்ந்தவன் என்பது ஏற்புடையதல்ல

தேவையற்ற பழமைவாதச் சிந்தனைகள் மற்றும் காழ்புணர்வுகளில் நாம் பழமை வாதங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். இவை கலகம் மூட்டவும் கேடுகள் விளைவிக்கவும் அவ்வப்போது வெளியில் வந்து பின் எவரோ வந்து அடக்க சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு, எல்லாம் அடங்கியபின் திரும்பவம் தலை தூக்குகிறது.

பழமைவாதம் வேறு பழம்பெருமை வேறு. பழமை வாதம் என்பது இன்றைய சூழலுக்கு பெரும்பாலோரின் வாழ்வியலை கேள்விக்குறியாக்குவது அனைவராலும் மறுக்கப்படுவது. பழம்பெருமை என்பது தொன்றுதொட்டுவரும் சிறப்பு அவற்றிலும் நன்மை தீமை அறிந்து மற்றோரை பழிக்காமல் சிறப்பான பெருமைகளை நினைத்துப் பெருமை கொள்வதில் தவறல்ல.

பின்குறிப்பு : அடுத்தவர் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டாமல் தங்கள் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டும் பழமை வாதம் ஒழிவதற்கான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

26 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

கோவியாரே,
ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல கருத்துக்கள்!

Sivabalan சொன்னது…

GK,

நல்ல சிந்தனை..

மாற்றங்கள்தான் வாழ்க்கை என்பதை உங்கள் எழுத்துகளில் நன்றாக விளக்கியுள்ளீர்கள்..

அருமை...

வடுவூர் குமார் சொன்னது…

இன்றைய நிலைக்கு சற்றும் ஒத்துவராத கொள்கைகளை மறு கை அறியும் முன்பு புறந்தள்ளுதல் மிக நல்லது.

வெற்றி சொன்னது…

கோ.வி,
நல்ல பதிவு.

/* திருக்குறள் போற்றத் தக்கதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே வேளையில் பெண்களைப் பற்றி இழிவாக சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் */

திருவள்ளுவர் ,"பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும்" என்று சொன்னார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு முழுக் குறளும் மனப்பாடம் இல்லை. இப்பதான் அம்முயற்சியில் இறங்கியுள்ளேன். அதனால், கோவி, அறிய வேண்டும் எனும் நோக்கில்தான் கேட்கிறேன். வள்ளுவர் எந்தக் குறளில் அப்படிச் சொன்னார்? அக் குறளைத் தயவு செய்து தெரியப்படுத்துவீர்களா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

மிகச் சிறப்பான கருத்துக்கள் கோவி. அறிவியலில் எனக்கு மிக அதிகமான ஈடுபாடு வந்தது இதனால் தான். ஐன்ஸ்டின் General Relativity தத்துவத்தை விளக்கி அதனை சில காலம் உபயோகித்து வந்தாலும். சில காலம் கழித்து Special Relativity என்று அதனை மாற்றி அமைத்தே உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்று உலகில் பலவாயிரம் வருடங்களுக்கு முன்னால் சொல்லப் பட்டதே சரி என்று எல்லோருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

அருமையான பதிவு கண்ணன்.

வாழ்த்துக்கள்:)

VSK சொன்னது…

எப்படீங்க இப்படி எல்லா விஷயங்களைப் பற்றியும் இவ்வளவு சிறப்பா எழுதறீங்க!

ரொம்ப அறிவுங்க உங்களுக்கு!

ஒரு பத்து பதிவுல மத்தவங்க எழுதறதை ஒரே பதிவில் போட்டிருக்கீங்க!

வாழ்த்துகள்!

பழம்பெருமை என்னும் பெயரில் சத்தமின்றி நுழைந்து கொண்டிருக்கும், பழைமைவாதம் பற்றியும் அடுத்து எழுதுங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

// SK said...
எப்படீங்க இப்படி எல்லா விஷயங்களைப் பற்றியும் இவ்வளவு சிறப்பா எழுதறீங்க!

ரொம்ப அறிவுங்க உங்களுக்கு!

ஒரு பத்து பதிவுல மத்தவங்க எழுதறதை ஒரே பதிவில் போட்டிருக்கீங்க!

வாழ்த்துகள்!

பழம்பெருமை என்னும் பெயரில் சத்தமின்றி நுழைந்து கொண்டிருக்கும், பழைமைவாதம் பற்றியும் அடுத்து எழுதுங்க!
//

எஸ்கே ஐயா,

பெரியவங்க அனுபவசாலி சொல்றிங்க ஐயமின்றி ஏற்றுக் கொள்கிறேன் (இது பழமை வாதம் அல்ல)
:)

எனக்கு தெரிஞ்சவரை எழுதிவிட்டேன்... நீங்கள் சொல்லுவதைப் பற்றி எதாவது குறிப்பு இருந்தால் சொல்லுங்கள் எழுதிடுவோம்.

பாராட்டுக்கு நன்றி !

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//,"பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும்" என்று சொன்னார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை//
அப்படிச் சொல்லவில்லை வெற்றி, கணவர் தன்னைப் பார்க்குங்கால், மனைவி அவரை நிமிர்ந்து பார்க்காமல் இருப்பதே அழகு என்கிறார்:

யான்நோக்குங்கால் நிலம் நோக்கும், நோக்காக்கால்,
தான்நோக்கி மெல்ல நகும்.

[பார்க்கிறதே அழகில்லை, அப்பால கணவர் சொன்னதை மறுத்துப் பேசுதல் பெண்மைக்கு அழகா இருக்குமா? இந்தக் குறளில் ஏன் அஃறிணை ஒருமையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் எனக்கொரு சந்தேகம்]

கோவி, நல்ல பதிவு.
//பழம்பெருமை என்பது தொன்றுதொட்டுவரும் சிறப்பு அவற்றிலும் நன்மை தீமை அறிந்து மற்றோரை பழிக்காமல் சிறப்பான பெருமைகளை நினைத்துப் பெருமை கொள்வதில் தவறல்ல. //
நல்ல கருத்து :)

குழலி / Kuzhali சொன்னது…

அருமையான கருத்துகள், மென்மையாக தடவிகொடுத்து தட்டியிருக்கின்றீர்கள்....


பொன்ஸ் திருக்குறளையும் நாம் மீள் வாசிப்பு செய்யவேண்டியிருக்கின்றது, அதில் பெண்ணடிமைத்தனம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் நாம் பரிமேலழகர் உரையோடு நின்று பொருள்கொண்டிருப்பது சமீப காலங்களில் தான் தெரியவருகின்றது, அதில் நிறைய நாம் மேம்போக்காக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டிருக்கிறோம், சிங்கையில் பேராசிரியர் இரத்தினக்குமார் அவர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வரை இது எனக்கு தெரியாது. ஆனால் நெடுஞ்செழியன் அவர்கள் இதற்கு முன்பே சிறப்பாக திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், முடிந்தால் பேராசிரியர் இரத்தினக்குமார் உரையையும் கொடுக்க முயல்கிறேன்.

நன்றி

வெற்றி சொன்னது…

கோ.க,
மன்னிக்கவும். உங்கள் பதிவிற்குத் துளியும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம். உங்களின் பதிவின் நோக்கைத் திசை திருப்பும் நோக்கமல்ல. :)) மன்னித்த்ருள்க.

/* அப்படிச் சொல்லவில்லை வெற்றி, கணவர் தன்னைப் பார்க்குங்கால், மனைவி அவரை நிமிர்ந்து பார்க்காமல் இருப்பதே அழகு என்கிறார்:
யான்நோக்குங்கால் நிலம் நோக்கும், நோக்காக்கால்,
தான்நோக்கி மெல்ல நகும். */

மன்னிக்கவும். உங்களின் விளக்கத்தோடு எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வள்ளுவர் இக் குறளில் சொன்னது ஒரு பெண்ணும் ஆணும் காதல் வசப்பட்டு [காதலின் ஆரம்பக் கட்டத்தில் - கணவன் மனைவியை அல்ல] ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவள் நாணித் தலை குனிகிறாள் என்று. ஆக கணவன்மாருக்கு பெண் அடங்கிப் போக வேண்டும் என்று சொல்லவில்லை என நினைக்கிறேன். இது வள்ளுவர் மட்டுமல்ல, இங்கே அமெரிக்காவில் உள்ள ஒரு மனோதத்துவ நிபுணரே இக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது இது தான், முன் பின் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் பேருந்திலோ எங்காவது எதேச்சையாகச் சந்திக்கும் போது ஒருவரை ஒருவருக்குப் பிடித்து விட்டால் தம்மை அறியாது 15 - 30 வினாடிகள் கண் இமைக்காது பார்த்துவிட்டு, பின் சுதாகரித்துக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்புவார்களாம். அதன் பின் அவள் நோக்காத போது அவன் நோக்குதலும் அவன் நோக்காத போது அவன் நோக்குதலும் நடக்குமாம். அவர் எதிர்பாலினருக்கு [opposite sex] இடையிலான eye contact ஐப் பற்றி ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். அக் கட்டுரைக்கான சுட்டியைத் தேடிப் பிடித்து பின்னர் தருகிறேன். ஏன் நாம்[ஆண்கள்] கூட ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் அவள் எம்மைப் பாராத போது அவளின் அழகை இரசிப்பதும், அவள் எம் பக்கம் திரும்பினால் நாம் எமது பார்வையை வேறுபக்கம் திருப்புவதும் அடிக்கடி நடப்பதுதானே. :))

ஆக வள்ளுவர் ஆணாதிக்க சிந்தனையின் அடிப்படையில் இக் குறளைச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.:))

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி said... திருவள்ளுவர் ,"பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும்" என்று சொன்னார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு முழுக் குறளும் மனப்பாடம் இல்லை. இப்பதான் அம்முயற்சியில் இறங்கியுள்ளேன். அதனால், கோவி, அறிய வேண்டும் எனும் நோக்கில்தான் கேட்கிறேன். வள்ளுவர் எந்தக் குறளில் அப்படிச் சொன்னார்? அக் குறளைத் தயவு செய்து தெரியப்படுத்துவீர்களா? //
வெற்றி, இதில்
பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் சொல்லப்பட்ட கருத்து இன்றைய காலத்துக்கு ஏற்புடையது அல்ல, ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்லும் இன்றைய காலத்தில் மனைவி சொல்படி கேட்கக் கூடாது என்பது நடைமுறைக்கு உதவாதது. கணவன் மனைவி என்ற உறவில் இருவர் கருத்துக்களையும் பரிசீலனை செய்து சரியானதை முடிவெடுக்க வேண்டும்.

வெற்றி சொன்னது…

கோ.க,
மன்னிக்கவும். மேலே உள்ள எனது பின்னூட்டம் சகோதரி பொன்ஸ் அவர்களுக்கு. நீங்கள் போட்ட பின்னூட்டமென நினைத்து பொன்ஸுக்குப் பதிலாக அப் பின்னூட்டத்தில் உங்களை விளித்து விட்டேன்.

பொன்ஸ், நீங்களும் மன்னிக்க வேண்டும். இங்கே இப்போது அதிகாலை 2 மணி. அதனால் இக் குழப்பம். மேலுள்ள பின்னூட்டம் உங்களின் விளக்கத்திற்கான என் பதில்.
அத்துடன் வள்ளுவரைப் பற்றிப் பேசுவதால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன், O.K:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//கோ.க,
மன்னிக்கவும். மேலே உள்ள எனது பின்னூட்டம் சகோதரி பொன்ஸ் அவர்களுக்கு. நீங்கள் போட்ட பின்னூட்டமென நினைத்து பொன்ஸுக்குப் பதிலாக அப் பின்னூட்டத்தில் உங்களை விளித்து விட்டேன். //

வெற்றி அவர்களே,

விளித்தல் பரவாயில்லை... விழிக்க வேண்டாம். :)

நேரம் செலவளித்து படித்து, கருத்தும் சொல்கிறீர்கள் மன்னிப்பு என்ற வார்த்தை தேவையில்லை. நம் எல்லோருக்கும் புரிந்துணர்வு உள்ளது. மேலே நீங்கள் கேட்ட குறளின் சுட்டி இணைத்துள்ளேன். அது பற்றிய உங்கள் விளக்கம் அறிய ஆவல்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

பொன்ஸ் நான் திருக்குறள் Expert கிடையாது இருந்தாலும் இந்தக் குறளைப் பத்தி எனக்கு தெரிஞ்சதை சொல்லறேன்.

இன்னைக்கு சினிமாவில ஹீரோயின் ஹீரோவைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்போ ஹீரோ திரும்பி அவளைப் பார்த்தால் ஹீரோயின் என்ன செய்வாள்? உடனே பார்வையைத் தாழ்த்திக் கொள்வாள் இல்லையா? அதைத்தான் இங்கே வள்ளுவர்.

யான்நோக்குங்கால் நிலம் நோக்கும்

இதை நோக்கும் என்ற சொல் அஃறிணையை குறிப்பது போல எண்ணுகிறீர்கள்.

ஆனால் நிலத்தை எது நோக்கும் கண்கள் இல்லையா அதைத்தான் சொல்லி இருக்கார் இங்கே. அதாவது நான் அவளைப் பார்க்கும் சமயம் அவள் கண்கள் நிலத்தை நோக்கும்.

நோக்காக்கால்,
தான்நோக்கி மெல்ல நகும்.

சரி சினிமால அடுத்த சீன் என்ன ஹீரோ மறுபடியும் பார்வையை திருப்பிக் கொள்ள ஹீரோயின் மறுபடியும் அவனைப் பார்த்து சிரிப்பாள் இல்லையா? அதே தான் இங்கே சொல்லி இருக்கார். ஆனால் கவிஞருக்கு உரிய கற்பனையுடன்.

நான் பார்க்காத சமயம் அந்தக் கண்கள் என்னைப் பார்த்து சிரிக்கும் அப்படீங்கறார். அவள் என்னைப் பார்த்து சிரிக்கிறாள் என்று சொல்லவில்லை நிலத்தை நோக்கிய கண்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறது என்கிறார். ஆகவே அஃறிணை போல சொல்லி இருப்பது கண்களை குறிக்க வேண்டும் என்பதற்காகவே என்று நினைக்கிறேன்.

இது எனக்கு தெரிந்த விளக்கம்.

அப்புறம் இது குறிப்பறிதல் அதிகாரத்துக்கு கீழே வருது.

மனைவி இப்படி செய்யணும் அப்படி செய்யணும் என்று இந்த அதிகாரம் சொல்லவில்லை. தலைவன் தலைவிகளுக்கு இடையே நிகழும் பாவனைகளில் குறிப்புகளைப் பற்றி சொல்லி இருக்கார்.

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.

இந்தக் குறளும் இதே அதிகாரத்தில் தான் வருகிறது.

கண்னோடு கண் இணையும் சமயம் வாய் சொற்களுக்கு என்ன பயன் என்று கேட்கிறார். ஆக இது மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல சொல்லப் பட்ட அதிகாரம் இல்லை.

எதோ எனக்கு தெரிந்த குறள் விளக்கம் சொல்லி இருக்கேன் சரியான்னு தெரிந்தவங்க சொன்ன நல்லா இருக்கும்.

வெற்றி சொன்னது…

கோ.க,
நீங்கள் சொல்லியுள்ள அதிகாரத்தைப் படித்து விட்டு மீண்டும் வருவேன்[நாளை] :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//

ஜோ / Joe said...
கோவியாரே,
ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல கருத்துக்கள்!

//
பாராட்டுக்கு நன்றி ஜோ !

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
GK,
நல்ல சிந்தனை..
மாற்றங்கள்தான் வாழ்க்கை என்பதை உங்கள் எழுத்துகளில் நன்றாக விளக்கியுள்ளீர்கள்..
அருமை...
//

சிபா,
பாராட்டுக்கு நன்றி சிபா !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இன்றைய நிலைக்கு சற்றும் ஒத்துவராத கொள்கைகளை மறு கை அறியும் முன்பு புறந்தள்ளுதல் மிக நல்லது.
//

சரியா சொன்னிங்க வடுவூராரே.
எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டும்
நல்ல கருத்துக்கள் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தில் குமரன் said...
மிகச் சிறப்பான கருத்துக்கள் கோவி. அறிவியலில் எனக்கு மிக அதிகமான ஈடுபாடு வந்தது இதனால் தான். ஐன்ஸ்டின் General Relativity தத்துவத்தை விளக்கி அதனை சில காலம் உபயோகித்து வந்தாலும். சில காலம் கழித்து Special Relativity என்று அதனை மாற்றி அமைத்தே உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்று உலகில் பலவாயிரம் வருடங்களுக்கு முன்னால் சொல்லப் பட்டதே சரி என்று எல்லோருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
//

ஓவ்வொரு சமூகமும், மதமும் பழமை வாதங்களையும் காலாவதியான நடைமுறைக்கு ஒத்துவராத கொள்கைகளையும் விட்டொழிக்கனும், மதங்களை வாழவைக்க மனிதர்கள் அல்ல ... மனிதர்களை வாழவைக்க மதங்கள் என்று மாற்றி பயன்பட்டால் வரவேற்கலாம்

G.Ragavan சொன்னது…

நல்ல கருத்துள்ள பதிவு. ஏற்க வேண்டிய கருத்து.

திருக்குறளை ஆழ்ந்து படித்தவர் குறைவு. வெறும் சொல்லை வைத்துப் பொருள் சொல்லக் கூடாது. பரிமேலழகர் உரையைக் காட்டிலும் நாமே கொஞ்சம் முயன்றால் நமக்கே புரியும். திருக்குறள் படிக்கக் கடிதானதல்ல.

பழைய இலக்கியங்களைப் பொருத்த வரையில் நிறைய தவறான தகவல்களும் நம்பிக்கைகளும் போய்ச் சேர்ந்துள்ளன. குறிப்பாக ஐம்பெருங்காப்பியங்கள். இவைகளில் நான்கு காப்பியங்கள் மதம் பரப்பும் காப்பியங்கள். சிலப்பதிகாரம் ஒன்றைத் தவிர. ஆனால் சிலர் அதையும் பௌத்தக் காப்பியம் என்பார்கள். ஆனால் நமக்குக் கிடைத்த அரும்பதவுரையோ நச்சினார்க்கு இனியார் உரையோ அப்படிச் சொல்வதில்லை. மேலும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் பற்றியும் பலர் பல கருத்துகள் சொல்வார்கள். பாவம். பூம்புகார், கண்ணகி போன்ற திரைப்படங்களை மட்டும் பார்த்தவர்கள். உண்மையிலேயே சிலப்பதிகாரம் படித்தவர்களுக்குத்தான் அது சொல்வது தெரியும். பொழுது வருகையில் நானும் தெரிய வைப்பேன்.

இன்னும் நிறைய சொல்லலாம். மாற்றம் என்பது மனித தத்துவம். நாம் மட்டும் நல்லவர்கள். சரியானவர்கள் என்று நினைத்தால் அது மடத்தனம். அடுத்த வீட்டு ஆப்பத்திலும் சுவையிருக்கும் என்பதே உண்மை.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

செந்தில் குமரன்,
உங்கள் விளக்கம் ரொம்பத் தெளிவாகவே இருக்கிறது.

குறிப்பறிதல் அதிகாரம் என்பதால், ஆண்பாலிலிருந்தும் இதே விளக்கம் பொருந்துகிறது.

//அத்துடன் வள்ளுவரைப் பற்றிப் பேசுவதால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன், O.K:)))) //
வெற்றி :)))

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

முன்பு என் பதிவில் திருக்குறளைப் பற்றிய சந்தேகங்களை பட்டியலிட்டுள்ளேன். அதை இங்கும் இடுகிறேன்.

இறை வேதங்கள் பலவும் மனிதக் கரங்களால் மாசு படுத்தப் பட்டுள்ளன என்று விளங்க முடிகிறது. ஆது போன்று நான் நினைக்கும் ஒரு சில குறள்களை பட்டியலிடுகிறேன். குறளை புரிந்து கொண்ட விதத்தில் ஏதும் தவறுகள் என்னிடம் தென் பட்டு நண்பர்கள் சுட்டிக் காட்டினால் தவறை திருத்திக் கொள்கிறேன்.

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.
இது பெண்ணடிமையை வலியுறுத்துகிறது. கணவன் அவன் எவ்வளவு அரக்கனாக இருந்தாலும் அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கூறுவதை நடை முறைப் படுத்த இயலாது. இத்தகைய பெண்களால் மழை பெய்விக்க முடியும் என்றால் உலகில் வறட்சி நிலவும் இடங்களில் இவர்களை பயன் படுத்திக் கொள்ளலாம் அல்லவா! இறைவனை வணங்க வேண்டும் என்று பல குறள்களில் சொல்லும் அறிவுறுத்தும் வள்ளுவர் இந்த குறளில் கணவனை வணங்கினாலே போதும் என்று தன் கருத்திலேயே மாறு படுகிறார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.
சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.
விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.
posted by சுவனப்பிரியன் @ 7:54 AM

கப்பி | Kappi சொன்னது…

நல்ல பதிவு GK!

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிரா...மொழிந்தது

இன்னும் நிறைய சொல்லலாம். மாற்றம் என்பது மனித தத்துவம். நாம் மட்டும் நல்லவர்கள். சரியானவர்கள் என்று நினைத்தால் அது மடத்தனம். அடுத்த வீட்டு ஆப்பத்திலும் சுவையிருக்கும் என்பதே உண்மை.//

ஜிரா
அருமையாகச் சொன்னீர்கள். நல்ல கருத்துக்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்