பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள், முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள், காலம் காலமாக பின்பற்றுவதால் இதில் ஒருவேளை நன்மை இருந்தாலும் இருக்கும், எல்லாவற்றிற்கும் எந்த காரணமும் இல்லாமல் நம் முன்னோர்கள் எழுதி இருக்கமாட்டார்கள் என்று கூறிக் கொண்டு பழமை வாதம் பேசுகிறோம்.
இவற்றால் எல்லோருக்கும் பொது நன்மை என்று எதாவது இருக்கிறதா ? என்று ஆராய்வதைக் கூட நம் மனம் ஏற்பதில்லை.
திருக்குறள் போற்றத் தக்கதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே வேளையில் பெண்களைப் பற்றி இழிவாக சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதாவது பெண்கள் கனவருக்கு கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை. இதை மாற்றுப் பொருள் சொல்லியும் அந்த கருத்துக்கள் இல்லை என்று மறுப்பவர்களும் உண்டு. ஆனால் என்ன எழுதினோம் என்பது திருவள்ளுவருக்கும் அவருடைய எழுத்தாணிக்கும் தான் தெரியும்.
பகவத் கீதையில் இருப்பதால் அது உயர்ந்தது, பகவான் சொல்லியது என்று கூட சிலர் வருண பேதம் குறித்துச் சொல்கிறார்கள். இருக்கலாம் நான்கு வருணங்கள் தொழில் அடிப்படையில் பிறிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் பின்னாளில் அது பிறவி அடிப்படை என்றல்லவா இன்றலளவிலும் மாற்றப்பட்டு கடைபிடிக்கப் பட்டு வருகிறது. வருண வேறுபாடு என்பது வருண பேதம் என்று மாறிய போது அது ஒரு தோல்வியான கொள்கை அல்லது காலவதியான கொள்கை என்று ஆகிவிட்டது. இது இந்து மதம் மட்டுமல்ல ஏனைய மதங்களிலும் அக்காலத்திற்கு ஏற்பட்ட கருத்துக்கள், ஏற்கப்பட்ட கருத்துகள் என பல நம்பிக்கைகள் உண்டு. வேதம் என்றாலே இறைவன் சொல்லியதென்றும் மற்ற மதங்களிலும், இறைவனும் வேதமும் என்றும் இருப்பது என்று இந்து மதத்தினரும் சொல்லி வருகின்றனர். இறைவனுக்கே காலத்திற்கு, இடத்திற்கு, குறிப்பிட்ட மக்களுக்கு ஏற்ற வகையில் தனித் தனியாக வேதம் ஏற்படுத்த அவசியம் ஏற்பட்டு இருப்பதை ஏனோ தெரிந்தும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். என் இறைவனின், என் மதத்தின் வேதமே உயர்ந்தது என்று சக மனதிரிடம் வேதத்தின் பெயரால பேதமை பாராட்ட்டுகின்றனர்.
நல்நோக்கம் என்ற பெயரில் இரசாயண ஆலைகளை கட்டுவதாக அரசாங்கம் அறிவிக்கிறது. 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று விளம்பரமும் செய்கிறார்கள். அதன் பாதகங்களை பார்த்தால் 1000 பேருக்கு வேலை என்பதை விட பத்து ஆண்டுகளில் ஏற்படப் போகும் சுற்றுச் சூழல் கேடுகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 1000 பேருக்கு வேலை என்ற பயனைவிட பத்துலட்சம் பேருக்கு உடல்நலக் குறை ஏற்படுவதாக அறியப்படும் போது, அல்லது சுற்றியும் உள்ள விளைச்சல் நிலங்கள் சீர்கெடும் என்ற அபாயம் அறியப்படும் போது அதை நல்ல நோக்கம் என்று சொல்ல முடியுமா ? பழமைவாதங்களையும் இப்படித்தான் ஆராய வேண்டி இருக்கிறது சிலருக்கு நன்மையாக இருக்கும் பழமை வாத சிந்தனைகள் பலபேரின் வாழ்வையே கேள்விக் குறி ஆக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அத்தகைய பழமை வாதத்தை புறம் தள்ளினால் எல்லோருக்கும் நன்மையே.
சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பதாலே எந்த கீழான கருத்துக்களும் மேன்மை பெற்றது போன்று சிலர் வாதம் செய்கிறார்கள். தமிழில் சங்க காலத்தில் எழுதியது என்பதால் அது மிகச் சிறந்தது என்று சொல்ல முடியுமா ? காலத்திற்கு ஏற்றார்போல் கருத்துக்கள் ஏற்படுகின்றன, பின்பு இன்றைய காலத்தில் அதன் நடைமுறையில் சிக்கல் இருந்தால் காலாவதி ஆக்கவேண்டும். மொழியில் என்ன இருக்கிறது? அது ஒரு ஊடகம், ஒருவர் மற்றொருவருடன் பேசுவதற்கு மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஊடகம். இருந்தாலும் தாய் மொழிப் பற்று என்பது நாம் உண்ணும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்பட்டது, சிந்தனைகளில் செயலாற்றுகிறது என்பதால் அதன் மீது பற்று வைத்திருக்கிறேம். அவரவர் மொழி மற்ற மொழிகளைவிட உயர்ந்தது என்று தனது மொழிக்குழுவிற்குள் எண்ணுவதில் தவறல்ல. ஆனால் உன்மொழியைவிட என்மொழியே சிறந்தது என்னும் வாதம் ஏற்புடையது அல்ல. உன்னுடைய இறைவனை விட என் இறைவன் உயர்ந்தவன் என்பது ஏற்புடையதல்ல
தேவையற்ற பழமைவாதச் சிந்தனைகள் மற்றும் காழ்புணர்வுகளில் நாம் பழமை வாதங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். இவை கலகம் மூட்டவும் கேடுகள் விளைவிக்கவும் அவ்வப்போது வெளியில் வந்து பின் எவரோ வந்து அடக்க சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு, எல்லாம் அடங்கியபின் திரும்பவம் தலை தூக்குகிறது.
பழமைவாதம் வேறு பழம்பெருமை வேறு. பழமை வாதம் என்பது இன்றைய சூழலுக்கு பெரும்பாலோரின் வாழ்வியலை கேள்விக்குறியாக்குவது அனைவராலும் மறுக்கப்படுவது. பழம்பெருமை என்பது தொன்றுதொட்டுவரும் சிறப்பு அவற்றிலும் நன்மை தீமை அறிந்து மற்றோரை பழிக்காமல் சிறப்பான பெருமைகளை நினைத்துப் பெருமை கொள்வதில் தவறல்ல.
பின்குறிப்பு : அடுத்தவர் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டாமல் தங்கள் மதங்களில் / சமூகங்களில் உள்ள குறைகளை சுட்டும் பழமை வாதம் ஒழிவதற்கான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.