சேகரை சென்று பார்க்க வேண்டும். பார்த்து இரண்டு நாளாகிறது. அவன் இரண்டு நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக மோட்டர் பைக் விபத்தில் சிக்க, தற்செயலாக வேறொரு வேலையாக அதே வழியில் சென்ற நான் இரத்த வெள்ளத்தில் துடித்து, சுயநினைவற்றுக் கிடந்த அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது.
சேகரின் நட்பைப் பற்றி நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரி நோக்கி பைக்கை செலுத்தினேன்.
சேகர் என்னுடைய நண்பன், +2 படிக்கும் போது அருகருகே உட்கார்ந்திருந்ததில் நெருக்கமானோம். பாடங்களை ஒன்றாகப் படிப்பது, ஒரே வாத்தியாரிடம் ஸ்டூசன், பக்கத்துத் தெருவில் வீடு என நெருக்கமான விசயங்கள் எங்கள் நட்பை ஆழப்படுத்தியது.
+2 முடித்ததும் இஞ்சினியரிங் சேர்ந்தோம், அவன் எலக்டிரிகலும், நான் எலக்டரானிக்ஸ் பாடமும் எடுத்துப் படிக்க, இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் குறைந்திருந்தது. ஆனாலும் இருவரும் விசேச நாட்களில் கோவிலுக்கு சேர்ந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தோம். +2 படித்து முடித்ததும், கண்ட கண்ட புத்தகங்களைப் படித்து நெற்றி பட்டைக்கு, நான் பட்டை போட்டுவிட்டேன். அதன் பிறகு கோவில் விசயங்களில் ஆர்வம் ஏற்படவில்லை. சேகருடன் பேசிக் கொண்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பாகவும், பெரிய சிவன் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள குளிர்ச்சியையும், அங்கு நிலவும் அமைதியை ரசிக்கவும் அவனுடன் செல்வதுண்டு. சேகர் என்னைப் போல இல்லை, ஆழ்ந்த பக்தி உள்ளவன் பாசுரங்களை மனப்பாடம் செய்து நன்றாக பாடுவான், அர்சகர் கொடுக்கும் விபூதியை பயபக்தியுடன் பூசிக் கொள்வான்.
நான் சாமி விசயத்தில் ஈடுபாடு காட்டாததை எதிர்த்து வாதிடுவான். நானும் பதிலுக்கு
'சாமியே நேரில் வந்து சொன்னால் கோவிலுக்கு வருகிறேன்' என்று சமாளிப்பேன். சில சமயங்களில் என்னுடைய பகுத்தறிவு பேச்சு அவனுக்கு பிடிக்காவிட்டாலும்,
'நீ சொல்வதும் சரிதான், ஆனால் கடவுள் நம்பிகை இல்லை என்றால், யாரும் பாவ புண்ணியங்களுக்கு பயப்பட மாட்டார்கள், எனக்கு .. இதில் திருப்தி கிடைத்திருக்கு நண்பா' என்று சொல்வான்.
'அப்பறம் ?'
'அப்பறம் என்ன அப்பறம், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சிலைகளை உடைப்பவர்களின், செய்கைகளையும் நான் கண்டிக்கிறேன்'
'தாராளமாக, அடுத்தவர் நம்பிக்கையை பாழ்படுத்துபவர்களும் அயோக்கியர்கள் தான், நீ ஒன்றை மறந்தும் பேசுகிறாய்?'
'நீ என்ன சொல்ற புரியல?'
'கடவுள் நம்பிக்கையற்றோர், சாமி சிலைகளை உடைத்திருக்கிறார்கள் அது கண்டிக்கத் தக்கது உடன்படுகிறேன், ஆனால் மசூதிகள், கோவில்கள், சர்ச் இவற்றையெல்லாம் உடைத்துவிட்டு, வெட்டிக் கொண்டு சாகிறவர்கள் யார் ? கடவுள் நம்பிக்கை அற்றவர்களா ?' என்றேன் தொடர்ந்து
'நம்பிக்கை என்பது நம்மீது திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது, நாம் ஏற்றுக் கொண்டதாக மட்டுமே இருக்கவேண்டும், அந்த விதத்தில் என்னால் உணர முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்வதும் என்னால் முடியாது' என்று சொன்னேன்.
'நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் கடவுள்' என்றான்
'நீ சொல்வது சரி என்றாலும், அது எந்த கடவுள் ? அல்லாவா, ஜீசஸ் அல்லது நம்ம சிவன், விஷ்ணு?'
'உன் அளவுக்கெல்லாம் ஆராய முடியாது, எனக்கு நம்பிக்கை இருக்கிறது'
'அப்படி என்னதான் உன் நம்பிக்கை ?'
'கந்தன் என்னும் மந்திரத்தை - என்ற பித்துகுளி முருகதாஸின் பாடலைக் கேட்டுப்பார், அதில் உள்ள உருக்கம், என்னை உருக்குவது, நிஜம். இந்த மாதிரி பக்திப் பாடல்கள் என்னை ஒருவாறு கடவுளை உணர வைக்கிறது. உனக்கு நம்பிக்கையில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை' என்றான் சேகர்
'சேகர், நானும் பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணிப் பாடல்கள் கூட உருக்கமான பாடல்கள் தான், அவை ஏன் உன்னை உருக்கவில்லை?' என்றேன்.
'பித்துக்குளியார் பாடலில் உள்ள நெருக்கம் இந்த பாடல்களில் எனக்கு இல்லை என்பது உண்மைதான்'
இப்படியாக எங்கள் விவாதங்கள் சென்றாலும், நட்பில் நெருக்கம் குறையவில்லை. சேகரின் பெற்றோர்களுக்கு என் பேச்சின் சாமி நம்பிக்கை குறித்த மாற்றம் பிடிக்காமல் போனதும் உண்மை. என் பெற்றோரிடம் பகுத்தறிவு பற்றி நான் பேசுவதில்லை, எங்கு கோவிலுக்கு கூப்பிட்டாலும் முன்பு போல் ஈடுபாடு காட்டாததால், வயசில் இப்படித்தான் இருப்பான் என்று விட்டுவிட்டார்கள்.
சேகரும், நானும் கல்லூரியை முடித்துவிட்டோம், வேலைத் தேடவும் தொடங்கினோம். இனிமேல் சைக்கிள் உனக்கு சரிப்பட்டு வராது என்று யமகா பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர் என் பெற்றோர்.
நல்லதாகப் போயிற்று என்று நானும் சேகரும் வெளியூர்களில் சென்று புதுப்படங்களைப் பார்பதற்கும், ஊர்சுற்றுவதற்கும், அது நல்ல வசதியாகப் போயிற்று.
அன்று ஒரு நாள் புதுப் படம் பார்க்க செல்லும் போது
'என்ன சேகர், பக்திப் பழமாகவும் இருக்க, கவர்ச்சி நடிகைகளையும் ரசிக்கிற... எனக்கு புரியல நண்பா'
'டேய், அது வேற! அது வேற உணர்வு, இது ஒரு உணர்வு, ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே' என்பான்
'அதாவது சாப்பிடும் போது வேற எதாவதையும் நினைக்கக் கூடாது, வேறு எதாவது செய்யும் போது சாப்பிடுவதை நினைக்கக் கூடாது, அதானே' ?
'எப்படி வேண்டுமானலும் வெச்சிக்க'
'சேகர், எனக்கு வேலைக் கிடச்சிடுச்சிடா அடுத்த மாதம் முதல் செல்ல இருக்கிறேன், அனேகமாக நம்ம ஊர் சுற்றுவதற்கு இதோட முற்றுப் புள்ளி வச்சிடலாம்'
'சரிடா, நண்பா எங்க வீட்டில் சொல்லி நானும் புது பைக் வாங்கிக் கொள்கிறேன், இப்பல்லாம், சைக்கிளிலோ, பஸ்ஸில் செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, எல்லாம் உன் பைக்கை ஓட்டி ஓட்டி நானும் அடிக்ட் ஆயிட்டேன்' என்றான்
அடுத்த ஒரு வாரத்தில் ஒரு வெள்ளிக் கிழமை என்னுடைய வண்டி போலவே ஒரு வண்டியை வாங்கப் போவதாக சொன்னான்.
வாங்கியிருக்கிறான். அவன் சொன்ன வெள்ளிக் கிழமை இரவு 8 மணிக்குத் தான் அந்த விபத்தும் நடந்து இருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக சென்ற நான் அவனை விபத்திலிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.
அவனைத் தான் இன்று மீண்டும் பார்க்கச் செல்கிறேன். பைக் ஆஸ்பத்திரியில் நுழைந்ததும், நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
சேகர் கை,கால்கள் மற்றும் தலையில் பலமாக கட்டு போடப்பட்டிருந்தது. அவனுடைய அம்மா வரவேற்றார்கள்.
'வாப்பா, உன்னைத் தான் நூறுதடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருந்தான், நீ அலுவலக வேலையில் புதிதாக சேர்ந்திருக்கிறாய், உன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்வில்லை' என்றார் சேகரின் அம்மா
'ஆமாம், அம்மா புதிதாக ஒரு அசைன்மன்ட் கொடுத்துவிட்டார்கள், அதுதான் சனி ஞாயிறில் ஊரில் இருக்க முடியாமல் போயிற்று'
'பராவாயில்லப்பா, நீ மட்டும் அன்னிக்கு சரியான நேரத்துக் கொண்டு வந்து சேகரை சேர்த்து, ப்ளட் கொடுக்காமல் இருந்திருந்தால், நாங்கள் இன்நேரம் சேகரை இழந்திருப்போம்' நெகிழ்ந்தார் சேகரின் அம்மா.
'அம்மா, அது என்னோட கடமை, நண்பனுக்கு இது மாதிரி வேளைகளில் உதவவில்லை என்றால், உடலில் இரத்தம் ஓடியும் என்ன பயன்?' என்றேன்.
'உன்ன மாதிரி, நல்ல ப்ரென்ட் கிடைச்சதுக்கு சேகர் கொடுத்து வச்சிருக்கான்னு நினைக்கிறேன், சரி நீ பேசிக்கிட்டு இரு, நான் போயி வீட்டிற்கு சென்று சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன்' என்று விடைபெற்றார்.
அவர் சென்றதும் சேகரைப் பார்த்தேன். அவன் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்து நா தழுதழுக்க நன்றி சொல்ல வந்தான். அவன் கைகளை பிடித்துக் கொண்டேன்.
'அதான் எல்லாம் சரியாகிடுச்சில்ல, நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம், நண்பா' என்றேன்
'டேய், எனக்கு சாமின்னாலே, இப்ப வெறுப்பு வந்துடுச்சிடா, உனக்குத் தான் தெரியுமே, நான் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உடையவன் என்று' என்றான்
'சரி, அதெல்லாம் இப்ப பேசவேணாம்'
'இல்லடா, புது பைக் வாங்கி ஆசை ஆசையா கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜைப் போட்டுவிட்டுதான், பைக்கையே ஓட்டினேன். நான் இவ்வளவு பக்தியாக இருந்தும் இதெல்லாம் நடந்திருக்குன்னா, சாமி இல்லேன்னுதானே அர்த்தம்?'
'சேகர், உணர்ச்சி வசப்படாதே'
'இல்லடா, எனக்கு ஏண்டா இதெல்லாம் நடக்கனும் ?, கும்புடுறவங்கள கைவிடுறதெல்லாம் சாமியா ?'
'சேகர், நான் ஒன்னு சொல்றேன், தப்பா நெனச்சிக்காதே', விபத்துக்கள் யாரா இருந்தாலும் கவனக்குறைவாக இருந்தால், அது நிச்சயம் நடக்கத்தான் செய்யும், அதையும் நம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது'
'நீ எனக்கு, சமாதானம் சொல்றேன்னு நினைக்கிறேன்'
'சமாதானமெல்லாம், இல்ல சேகர், இது உண்மைதான், ஒரு விபத்தை வைத்து நம் நம்பிக்கையை எடை போடக் கூடாது, உன்னை மாதிரி நானும் கவனக் குறைவாக இருந்து, விபத்து எனக்கு ஏற்பட்டு இருந்தால், நான் சாமி கும்பிடாததால் தான் என்னைக் சாமி தண்டிச்சிடுச்சின்னு நான் நினைக்க முடியுமா ?' அப்படி நினைத்தால் என் நம்பிக்கை வெறும் வெளி வேசம் தானே?'
'இல்லடா, சாமியும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை' என்று எங்கேயோ வெறித்துப் பார்த்தான்
'சேகர், உனக்கு இருக்கிற உடம்பு வலியில் இப்படி பேசுகிறாய் என்று நினைக்கிறேன், ஒன்று ஏன் உனக்கு தோன்றவே இல்லை?'
'நீ என்ன சொல்ற'
'சேகர், கடவுள் நம்பிக்கை உள்ள நீ ஏன் இப்படி நினைத்துப் பார்க்கக் கூடாது ?'
'எப்படி நினைத்துப் பார்ப்பது, அதான் எனக்கு அதெல்லாம் பொய்யின்னு புரியுதே'
'நினைத்துப்பார், விபத்து நடந்தது எதிர்பாராதது என்றாலும், நான் அந்த நேரத்தில் அங்கு இருந்தது'
'நீ என்ன சொல்ல வருகிறாய் ?'
'உனக்கு விபத்து நடந்த நேரம், சரியாக நான் அங்கு வந்தது ஒரு தற்செயலாக இருக்க முடியாது, என்னை ஒரு வேளை சாமி தான் அந்த வழியாக அனுப்பி உன்னை காப்பாற்ற வைத்தது என்று ஏன் உன்னால் நினைக்க முடியவில்லை ?'
சேகர் என்னை வினோதமாக பார்தான், கண்கள் பனித்தன, மெய்சிலிர்ப்பு அவன் தேகத்தில் தெரிந்தது.
உடனே அவன் என் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டான்.
'நான் அவசரப்பட்டு, சாமி மேல் சந்தேகப் பட்டுவிட்டேன், அதே போல் நாத்திகம் பேசுகிறவர்கள் இறை நம்பிக்கையை கேலி மட்டுமே பேசுவார்கள், அதன் உணர்வுகள் அவர்களுக்குத் தெரியாது என்றும் தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன்'
'நம் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அந்த நம்பிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம், அவைகள் அடுத்தவர்களிடம் நம்மை உயர்த்திக் காட்டுவதாக இருக்கவேண்டும், மாறாக அவைகள் அடுத்தவர் நம்பிக்கையை கெடுப்பதாக இருக்கக் கூடாது' மேலும் தொடர்ந்து,
'அடுத்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் நம்பிக்கைகள் எல்லாமுமே அவநம்பிக்கைகள் தான்' என்றேன்
'உன்னிடம் பலநாள் பழகியும், எனக்கு புரியாத விசயம் உன் நாத்திக நிலைப்பாடுதான், அது இப்ப தெளிவாகிவிட்டது' என்றான்
'சரி சரி, ரொம்ப உணர்ச்சி வசப்படாதே, அம்மா கொண்டுவந்த சிவன் கோவில், திரு நீறு அங்கே இருக்கிறது, அதை எடுத்துத் தருகிறேன், நம்பிக்கையுடன் பூசிக் கொள், சீக்கிரமே குணமாகிவிடுவாய்' என்றேன்
நான் எடுத்துக் கொடுக்கவும், அதை பயபக்தியுடன் எடுத்துப் பூசிக்கொண்டான்.
'சேகர், டாக்டரிடம் விசாரித்தேன் மூன்று வாரத்தில் டிஸ்ஜார்ஜ் பண்ணிடுவாங்களாம், உனக்கு பிடிச்ச நடிகையோட புதுப் படம் வருது, மூன்று வாரம் கழித்து போகலாம் தானே' என்று கண் அடித்தேன்.
காலால் எட்டி உதைக்க முயன்று வலி பொருக்க முடியாமல் 'அம்மா' என்றான்.
பின்பற்றுபவர்கள்
24 ஜூலை, 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
17 கருத்துகள்:
சோதனைகளே ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டுவது பைத்திக்காரத்தனம்.
நல்லா இருக்கு கண்ணன்.
உண்மை நிகழ்வா?
கோவி. இது மாதிரி கதைகள் நிறைய படிச்சிருக்கிறேன். இது உண்மை கதையா என்று தெரியவில்லை உண்மைக் கதை என்றால் இதன் மதிப்பே அதிகம் தான். இன்னும் கதை சொல்லும் விதத்தை வர்ணணைகளில் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. இதை சொல்றியே உனக்கு இதைப் பத்தி எவ்வளவு தெரியும் என்று கேட்டு விடாதீர்கள். எதோ எனக்கு படிக்கும் போது தோணிணதை சொல்லுதேன்.
நன்றாக வந்துள்ளது கோவியாரே. சற்றே நீளத்தைக் குறைக்க முயன்றிருக்கலாம்.
//நாகை சிவா said...
சோதனைகளே ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டுவது பைத்திக்காரத்தனம்.
நல்லா இருக்கு கண்ணன்.
உண்மை நிகழ்வா? //
சிவா, பாராட்டுக்கு நன்றி,
சில உண்மைகள் உண்டு :)))
//குமரன் எண்ணம் said...
கோவி. இது மாதிரி கதைகள் நிறைய படிச்சிருக்கிறேன். இது உண்மை கதையா என்று தெரியவில்லை உண்மைக் கதை என்றால் இதன் மதிப்பே அதிகம் தான். இன்னும் கதை சொல்லும் விதத்தை வர்ணணைகளில் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. இதை சொல்றியே உனக்கு இதைப் பத்தி எவ்வளவு தெரியும் என்று கேட்டு விடாதீர்கள். எதோ எனக்கு படிக்கும் போது தோணிணதை சொல்லுதேன்.
//
குமரன் கதை எழுதுதல் என்ற முயற்சியில் தான் உள்ளேன். நீளம் குறைக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிறுகதைகள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் வடிவம் சரியாக தெரியவில்லை. கதையின் நீளம் குறைக்க இனி முயற்சிக்க வேண்டும். கதையில் உண்மை உள்ளது :))
//இலவசக்கொத்தனார் said...
நன்றாக வந்துள்ளது கோவியாரே. சற்றே நீளத்தைக் குறைக்க முயன்றிருக்கலாம். //
கொத்ஸ்... பாராட்டுக்கு நன்றி...
நிகழ்வுகள் ப்ளாஸ் பேக் மாதிரி சொல்வதால் கொஞ்சம் நீளமாக தோன்றுகிறது என்றும் நினைக்கிறேன். நீங்கள் சொன்னதை கருத்திலும் வைக்கிறேன்.
அடுத்தவரை மதிக்கும் பண்பு உங்கள் கதையில் தெரிகிறது.
நல்ல கதை.
அவரவர் நம்பிக்கையைக் குலைக்காமல் வாழத்தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
என் தந்தை சொல்லுவார்:
"புத்திமதி அடுத்தவருக்கு இரண்டு நேரங்களில் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஒன்று, உன்னைக் கேட்டால்!
இரண்டாவதாக, உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளில். [புகை பிடித்தல், தற்கொலை போன்றவை].
மற்றபடி உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் மட்டும் ஒருபோதும் புத்தி சொல்லாதே!"
உங்கள் கதையில் இரண்டையும் பார்த்தேன்.
தந்தையின் நினைவு வந்தது.
நன்றி.
// SK said... உங்கள் கதையில் இரண்டையும் பார்த்தேன்.
தந்தையின் நினைவு வந்தது.
நன்றி. //
எஸ்கே ஐயா, அப்படியா சொல்கிறீர்கள் நெகிழ்சியாக இருக்கிறது.
நேற்று இரவு தூக்கம் வராமால் நாளைக்கு என்ன எழுதுவது என்று யேசித்துக் கொண்டிருந்தேன். பித்துக்குளி முருகதாஸ் பாடல் நினைவு வந்தது எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், அப்படியே நினைவுகளை அசைப்போட்டு நிறுத்தியிருந்தேன். அலுவலக ஓய்வு நேரத்தில் இதை எழுதினேன்.
பாராட்டுக்களுக்கு மீண்டும் நன்றி !
கோவி.கண்ணன் said...
// SK said... உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் மட்டும் ஒருபோதும் புத்தி சொல்லாதே!"//
SK ஐயா,
இந்த வரிகள் மிகவும் பிடித்து இருக்கு.
அப்படி நான் நடந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.
நல்ல கதை கோவி.கண்ணன் ஐயா. பல உண்மைகள் இந்தக் கதையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
//குமரன் (Kumaran) said...
நல்ல கதை கோவி.கண்ணன் ஐயா. பல உண்மைகள் இந்தக் கதையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
//
குமரன் அவர்களே, உங்கள் பாராட்டு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த கதையை பலரும் படித்து நீங்கள் கண்டு கொண்ட உண்மையை பலரும் கண்டு உணரவேண்டும் என்பதே என் விருப்பம் !
கருத்துக்கு கருத்து கதைக்கு கதை-ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கதை படித்த நிறைவு.
//வடுவூர் குமார் said...
கருத்துக்கு கருத்து கதைக்கு கதை-ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கதை படித்த நிறைவு.
//
வாங்க குமார், நம்ப பக்கம் வந்து மிக நல்லா பாராட்டியிருக்கிறீர்கள். நன்றிகள்
கதை நன்றாக வந்திருக்கிறது கண்ணன்.
//விடாதுகருப்பு said...
கதை நன்றாக வந்திருக்கிறது கண்ணன்.
//
கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன் கருத்து சொல்வது கருப்பா ? :))
எல்லோருக்கும் பிடித்த கதை ! மத்தவங்களுக்கும் இந்த கதையை சொல்லுங்க :))
கோவியாரே,
கதை அல்ல நிஜம், நன்றாகவே வந்திருக்கிறது. நேதைக்கே படித்துவிட்டேன் ஆனால் பின்னூட்டமிட்டு செல்ல வில்லை.
//*இயற்கை நேசி* said...
கோவியாரே,
கதை அல்ல நிஜம், நன்றாகவே வந்திருக்கிறது. நேதைக்கே படித்துவிட்டேன் ஆனால் பின்னூட்டமிட்டு செல்ல வில்லை.
//
இயற்கை நேசியாரே... நம்ப கதையும் நேசித்ததற்கு நன்றி... ஓரளவு நிஜமான கதைத் தான் சம்பவங்களை மட்டும் மாற்றினேன்.
கருத்துரையிடுக