சிறுவயது முதலே உடைக்கட்டுப்பாடு, குறிப்பிட்ட உடை என்ற அளவில் பழக்கப்படுத்தப்படுவதால் இஸ்லாமிய பெண்களைப் பொருத்த அளவில் கைகள், இடுப்பு, கழுத்து பகுதி வெளியே தெரிய உடை அணிவது அவர்களது வளர்ப்பு முறையால் அவர்களை மிகவும் கூச்சப்படுத்தும். விரும்பி பர்தா அணிகிறார்கள் என்பதைவிட அது தான் தங்கள் உடலுக்கும், கூச்ச உணர்விற்கும் பாதுகாப்பு என்பதாக இயல்பாகவே பர்தா அணிந்தே வெளியே செல்வார்கள். பொது இடத்தில் அவர்களால் மற்ற பெண்களைப் போல் பர்தா இல்லாமல் இருப்பது வேட்டி மட்டுமே அணிந்து வந்த ஒருவரை ஒரு நாள் பேண்ட் போடச் சொன்னால் அவர் நெளிவதைப் போன்ற அவஸ்தைதான். என்ன தான் நாம ஆண் என்று மார்பு தட்டினாலும் ஜட்டியுடன் பலர் முன் நிற்பது நம்மால் நினைத்துப் பார்க்கவே கடினமானது தான். ஜட்டி அணிந்திருப்பது அம்மணத்தைவிட மேலானது, கோவணம் அணிந்து பலர் வேலை செய்வதைப் பார்த்து இருக்கிறோம். இருந்தும் நம்மால் பொது இடத்தில் அனுமதி கொடுத்தாலும் ஜட்டியுடன் ஒரு ஆண் தான் நிற்க நேரிட்டால் வெறும் வீம்புக்கு என்பதை விட்டு விட்டு பார்த்தால் அவனுக்கு மிகுந்த கூச்சமான அனுபவமாகவே நேரிடும்.
உடை கைதெரிய அணியலாமா, இடுப்பு தெரிய அணியலாமா தொடை தெரிய அணியலாமா என்கிற விவாதங்களை விட ஒருவர் எந்தவிதமான உடைக்கு பழக்கப்பட்டு இருக்கிறாரோ அதுவே அவருக்கு பொருத்தமான உடை என்பதே உடை குறித்த கேள்விக்கு சரியான விடையாக இருக்கும். சென்னையில் இருக்கும் போது நண்பர்கள் அரை ட்ராயர் போடுவது போல் நானும் போட்டுக் கொள்ள நினைத்துப் பார்த்தால் எனக்கு மிகுந்த கூச்சம் ஏற்பட்டது. ஆனால் சிங்கை வந்த பிறகு வேலை நேரம் தவிர்த்து பலரும் அரை ட்ராயரில் தான் உலாத்துகிறார்கள். நானும் அரை டிராயருக்கு மாறிவிட்டேன். சொந்த ஊருக்குச் சென்றாலும் விமானத்தில் சென்றாலும் அரை ட்ராயர் எடை குறைந்ததாகவும் வசதியாகவும் இருப்பதாக உணர்ந்து அலுவல் தவிர்த்த வேளைகளில் அணிந்து வருகிறேன்.
எப்போதும் புடவை அணியும் அம்மாவை வெளி நாட்டிலாவது கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம் சுடிதார் அணியச் சொன்னால் அவங்க வெட்கப்பட்டுக் கொண்டு மறுத்துவிடுவார்கள். அவர்களைப் பொருத்த அளவில் அவர்களின் வளர்ப்பு முறையில் அவர்களுக்கு ஏற்ற கண்ணியமான ஆடையாக புடவை அணிவதை நினைக்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதும் கூட வளர்ப்பு முறையினால் தான். பர்தா அணிந்தே வளர்க்கப்பட்டவர்களால் பர்தா இன்றி வெளியே செல்வதை அவர்கள் கண்ணியம் குறைவாக நினைப்பார்கள், அவ்வாறு அவர்களால் செல்லவும் முடியாது. இப்படியான வளர்ப்பு முறைகளை அவரவர் நற்குடி வளர்பு என்று நினைத்துக் கொள்வதைத் தவிர்த்து இதில் ஒன்றும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் கவிஞர் பர்வின் சுல்தான புடவையுடன் தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள் ப்ர்வின் சுல்தானா வீட்டில் குழுக்கலாச்சாரம் வேண்டாம், ஒரு குழுவிற்குள் முடக்கவேண்டாம் என்று ஏனைய பெண்களைப் போல் உடை அணியட்டம் என்று அனுமதிக்கப்பட்டு அதன் படி அவர்கள் வளர்க்கப்பட்டு இருக்கலாம். அவர்களைப் பொருத்த அளவில் மற்ற பெண்கள் பொதுவாக அணியும் உடை அவர்களுக்கு கண்ணியமானது. அவர்கள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவர்கள் நற்குடி, இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தார்களா என்ற ஆராய்ச்சிகளெல்லாம் நடத்தினால் நமது பார்வை மிகக் குறுகியதே. இந்து மதத்திற்குள் பெண்களுக்கு புடவை கட்டுவதிலே கூட பல்வேறு வகைகள் இருக்கின்றன. நகரத்து பெண்களும், கிராமத்து பெண்களும் ஒரே துணி என்றாலும் புடவை கட்டும் விதம் வேறு, கிராமத்தினர் போல் நகரத்தினர் அணிவது அவர்களுக்குள் கூச்சமாகவே இருக்கும். மடிசார் எனப்படும் புடவைக் கட்டை பார்பன பெண்கள் மட்டுமே அணிகிறார்கள். மற்ற பெண்களுக்கு அதைக் கட்டினால் அவர்கள் தடுக்கி விழுந்தாலும் விழுவார்கள். புடவை கட்டுகள் ஒரு பெண்ணின் நற்குடி பற்றி எதுவும் சொல்லாதோ, அதே போன்று தான் நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்.


அதே சமயத்தில் பெண்ணிய காவலாளிகள் போல் பர்தா பெண்ணை முடக்குகிறது என்று கூச்சலிடுபவர்கள் தம் இனப் பெண்களுக்கு என்ன விதமான உடை சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் என் கண் முன்னே இன்னும் கூட பல இடங்களில் வெள்ளை உடை அணிந்த விதவைகளும், இன்னும் சில இடங்களின் அக்ரஹாரங்களில் காவி உடை அணிந்து தலையில் முக்காடு அணிந்து, தலை மொட்டையான பார்பான பெண்களும் கூடத் தெரிகிறார்கள். முக்காடு அணிந்த இஸ்லாமியர்கள் பார்பதற்கு இந்து விதவைகள் போல் இருக்கிறார்கள் என்று நினைப்பதுடன் சகிக்காமல், தாழ்வுணர்வில் 'இஸ்லாம் பெண்களின் மீது ஆடைக் கட்டுபாடு விதித்திருக்கிறது' என்று கூச்சல் இடுகிறார்கள் என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பர்தா பற்றி ஒரு இஸ்லாம் இணைய தளம் சொல்லும் கருத்து,
ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!
*****
பெண்களுக்கான கண்ணிய உடைகள் இவை என்பவை ஆண்களின் பார்வையில் தப்ப ஆண்களே வடிவமைத்து செய்த ஏற்பாடு என்பதைத் தவிர்த்து, எந்த ஒரு சமயத்தைச் சேர்ந்த பெண்களின் உடையையும் அப்பெண்களே முடிவு செய்துவிடவில்லை. பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெண்கள், எந்த உடை பாரம்பரியமானது, எதை அணியலாம் என்று கருத்து சொல்லும் உரிமை அந்த பெண்களுக்கு உண்டு, ஆனால் அதையும் 'பெண்களுக்கான' உடை என்று பன்மையில் பொதுப்படுத்துவது தவறு தான்.
*****
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !