பின்பற்றுபவர்கள்

7 செப்டம்பர், 2007

இந்து வழிபாடுகளில் மறுமலர்ச்சி ?

உலகம் சுருங்கி ஊடகங்கள் பெருகியதைத் தொடர்ந்து, சாமியார்களையும், அவதார புருஷர்களையும் தள்ளிவிட்டு பார்த்தால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்துமதம் ஓரளவுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கிறது. பழமை வாதிகளைத் தவிர்த்து கட்டுப்படுத்துபவர் என்று எவரும் இல்லை என்பது வேறு பற்றியம். புதிய சாமிகள், அவற்றிற்கான புராணங்கள் தற்காலத்தில் / அண்மைக்காலத்தில் ஏற்பட்டத்தாக தெரியவில்லை. மாறாக அது புதிய வழிபாட்டு முறைகளை கொண்டுவந்து மக்கள் மத்தியில் கடைவிரித்திருக்கிறது. இதற்கு இரு உதாரணங்களைச் சொல்ல முடியும் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக பெரிய அளவில் தென் மாநிலங்களைத் தழுவிய ஐயப்பன் வழிபாடும் அதற்கான விரத முறைகளும். எதோ சில ஒழுக்கங்களை கட்டுப்பாடுகளாக விதித்திருப்பதால் முயன்று பார்பவர்களுக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கிறது.

48 நாள் விரதம் செருப்பணியக் கூட தடை, விரத காலத்தில் பிரம்மசாரியம் என்பதெல்லாம் ஒரு இந்து பக்தனுக்கு மாறுபட்ட அனுபவமாக இருப்பதால் மனதளவில் பலரையும் ஈர்த்தது என்று சொன்னால் மிகையல்ல. கருப்பு நிற வேட்டி என்றால் கலங்கியவர்களுக்கு மத்தியில் அதே கருப்பு வேட்டியில் மழிக்காத தாடியிடன் ஆத்திக பெரியார்கள் தமிழகம் முழுவதும் காட்சிக் கொடுத்து பெரியார் மீது இருந்த பயம் உயர்வர்கத்தினர் என்று தங்களைக் கூறிக் கொள்வர்களுக்கு நீங்கியது என்று சொல்லலாம். ஏழைப்பணக்கார்ரன் பார்க்காது அனைவரையும் 'சாமி' என்று அழைப்பதாலும், எந்த சாமியின் காலிலும் எந்த சாமியும் வயது, சாதி வேறுபாடு இல்லாமல் விழுவதால்.

ஐயப்ப வழிபாடு இந்து சமயத்துக்குள் சாதி நல்லிணக்கத்துக்கு குறைந்த பட்சம் விரதகாலங்களில் வழி அமைத்தது. நான் 12 வயதில் ஐயப்பனுக்கு மாலை போட்ட போது என் அப்பாவே என் காலில் விழுந்து இருக்கிறார். ஐயப்ப வழிபாடு வைதிக மரபை முற்றிலும் புறந்த தள்ளவில்லை என்றாலும் அதிலிருந்து வெகுவாக விலக்கி இருந்து பிறமதத்து ( இஸ்லாமிய அரசர் வாபர் போன்ற) அன்பரையும் போற்றும் படி அமைந்தது அதன் சிறப்பு. ஆனால் ? ஆனால் ? பெண்களை தள்ளிவைத்து 'தீட்டு' பார்பதால் ஐயப்ப வழிபாடு மாறுபட்ட வழிபாடு என்றாலும் அது வைதிக மரபின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதை அண்மை நிகழ்வுகளைப் நாம் பார்த்து இருப்பதால் ஓரளவுக்கு வைதீக ஐய(ப்ப) வழிபாடு.

மற்றொன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு. வைதீக மரபினரே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழக இந்து சமயத்தில் அதைச் சாராத, மற்றும் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் வைதிக வழிப்பாட்டு முறைகளை முற்றிலும் மாற்றி வேள்விகளையும், பூசைகளையும் பெண்களும் செய்யலாம் என பெண்களை முன்னிறுத்தி ஏற்பட்ட பங்காரு அடிகளாரின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் பெருவாரியான மக்கள் மத்தியில், குறிப்பாக குடும்பத் தலைவிகளான பெண்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. கிட்டதட்ட ஐயப்பன் வழிபாடு போன்றே இருமுடி எடுத்தல், நடைபயணம், தனிப்பட்ட ஆடைகள் என அத்தனை அம்சங்களையும் வைத்தும், அதே போன்று மண்டல விரதங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் பங்காரு அடிகளாரின் சக்தி சமயம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை அங்கு (ஆசை) ஆசிகளுக்கு வரும் மத்திய அமைச்சர்களையும், சந்திரமுகி வெற்றிக்காக வேண்டி படையப்பா படக்குழுவினர் படையெடுத்ததை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.

சூத்திரன் நுழையக்கூடாது, பெண்கள் கருவறைக்கு வரக்கூடாது என்ற நெறி(முறை)யற்ற வைதீக கட்டுப்பாட்டுக்களை உடைத்தெறிந்து மாதவிலக்கு நேரத்திலும் உடல் தூய்மையும், மனத்தூய்மையும் இருந்தால் இறைவி (சக்தி)யை தொட்டு பூஜை செய்யமுடியும் என்ற அதிரடி அறிவிப்பில், இதுகாறும் பெண்களில் மாதவிலக்கு என்பது சாபக் கேடு என்றும் பெண்களின் கறை என்று சொன்னவர்கள் எல்லாம் பேச்சற்று போனார்கள். கல்லையும் மண்ணையும் கடவுளின் அம்சம் என்றே மக்களை ஏமாற்றி வந்ததால் பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தியை தூற்ற முடியாமல் ஊமையானார்கள். ஆனால் கல்கி சாமியாரையும், சாயிபாபாவையும், லோக குருக்களையும் கடவுளாக பார்பவர்கள் எவரோ அவர்களே அதை மறைத்துவிட்டு சொல்லடிகளாக பங்காரு அடிகளார் மீதான தனிமனித விமர்சனம்,தூற்றல் என்று போனது நகைமுரண். உயிரோடு இருக்கும் ஒரு மனிதர் தம்மை கடவுள் படத்துடன் இணைத்துக் கொள்வது பாவம் என்றும், அவர் சாமியார் அல்ல ஆசாமி என்று பல்வேறு கதைகளை கட்டவிழ்த்தார்கள். கவனிக்க ! நான் எனது தனிப்பட்ட கணிப்பாக பங்காரு சொக்கத்தங்கம் என்று சொல்ல முயற்சிக்க வில்லை :)))

கடவுள் எது, எவர் முன்னிறுத்தும் கடவுள் உண்மையானவை என்பதெல்லாம் முன்பு போல் உயர் சமூகத்தினாரால் மட்டுமே தீர்மாணிக்க முடியாது என்பதை பங்காரு அடிகளாரின் வழிபாட்டு மன்றத்தின் வெற்றி உணர்த்துவதால், தமிழக பக்தர்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள், வைதிக / ஆகம வழிபாட்டு முறைகளில் பெரிதாக ஒன்றும் பற்றுதல் கொண்டிருக்க வில்லை. பக்தியில் தேவையற்ற கட்டுப்பாடுகள் களையப்படவேண்டும் என்றும் விரும்பி இருக்கிறார்கள் என்றும் கொள்ள முடிகிறது.


குறிப்பு உதவி நூல் : தமிழர் பண்பாட்டு வெளிகள் - ஆசிரியர் க சு நடராசன்.

3 கருத்துகள்:

அரை பிளேடு சொன்னது…

ஒரு பேச்சாளரின் பேச்சில் கேட்டது...

"சுயமரியாதையோடு கருப்புசட்டை போட்டவர்கள் அதே கருப்பு சட்டையோடு இன்று சபரி மலையில் காணாமல் போனார்கள்.

செஞ்சட்டை தோழர்கள் இன்று அதே சட்டையுடன் மருவத்தூரில்...."


இந்துமதம் பல்வேறு காலகட்டத்தில் கலகக் குரல்களை சந்தித்துவருகிறது.


கலகக்குரல் எழுப்பிய புத்தனை மகாவிஷ்ணுவின் 9வது அவதாரமாக்கி விழுங்கியது.

தன்னைத்தானே புணரமைத்துக்கொள்வதன் மூலமே இது காலங்களை கடந்து நீடிக்கிறது...

ஐயப்ப வழிபாட்டின் சமரசமும் இத்தகைய ஒன்றா என்ற கேள்விஎழுவது தவிர்க்க முடியவில்லை...

சாலிசம்பர் சொன்னது…

//வைதீக கட்டுப்பாட்டுக்களை உடைத்தெறிந்து மாதவிலக்கு நேரத்திலும் உடல் தூய்மையும், மனத்தூய்மையும் இருந்தால் இறைவி (சக்தி)யை தொட்டு பூஜை செய்யமுடியும்//

இந்த ஒன்றுக்காகவே அவரை வணங்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

அரைபிளேடு சார்,

எந்த ஒரு புரட்சி சிந்தனையாளரின் கருத்துக்கள் அனைத்துமே அவர் வாழும் காலத்தில் புரிந்து கொள்ளப்படாது.

குறிப்பிட்ட விழுக்காடு கருத்துக்கள் மட்டுமே சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றம் ஏற்படுத்தும்.

புரட்சி சிந்தனையாளர்கள் பலரும் பெரியார், பாரதி போன்று எழுச்சிக்கு என்று பேசினால் கடைசியில் எழுச்சி உடனே ஏற்படாது, விழிப்புணர்வு மட்டுமே ஏற்படும். அதன் பிறகு சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும். அதாவது பழமை வாதங்கள் அழியாது மாறாக சிதைக்கப்படும்.

பழமைவாத அழிவை ஏற்படுத்த பல்வேறு காலகட்டங்களிலும் எதிர்காலத்திலும் கூட தேவையான சமயத்தில் அதற்கெனவே சிலர் வருவார்கள் போவார்கள். அவர்கள் கொள்கை வெற்றியா, தோல்வியா என்பதைவிட அதன் தாக்கம் என்று பார்த்தால் எல்லாமும் வெற்றிதான்.

இது போன்று கொள்கை வெற்றிபெற்றவர்களில் பலர் இராமலிங்க சுவாமிகள், விவேகனந்தர், பெரியார் போன்றவர்களெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிபெற்றவர்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்