
'நல்லோர் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' - நம் அரசியல் வாதிகள் அதையே சற்று மாற்றி நல்லவர் கலாம் ஒருவரே உள்ளாரே அவர் பெயரைச் முன்மொழிவோருக்கெல்லாம் ஓட்டு கிடைக்கலாம் என்று நினைத்தார்கள் போலும். ஐந்தாண்டு பதவியில் இருக்கும் போது இதுவரை எவருமே மீண்டும் கலாம் தான் அதிபராக வரவேண்டும் என்று சொன்னது போல் தெரியவில்லை. தன்னலமற்ற கலாம் கூட அவ்வாறுதான் நினைத்திருப்பார்.
இழந்த செல்வாக்கை எப்படி தூக்கி நிறுத்த முடியும் என்று கணக்கு போட்ட பாஜாகவும், மூடங்கிய தலைவர்கள் சேர்ந்து உருவாக்கிய மூன்றாவது அணிக்கும் அருள்பாலிக்கும் கடவுளாக கலாம் தெரிந்திருப்பார் போலும். தமிழர் நலன், தமிழருக்கு பெருமை, நல்லவர் நீடிக்கலாம் என்ற இனிப்புகளை தூவி தூவி கலாமை வரவேற்பது போல அறிக்கைகளை வெளியிட்டனர். இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று கலாம் கூட நினைத்திருக்கலாம் ஏனென்றால் அவர் அரசியல்வாதிகளை மனிதர்களாக பார்த்திருப்பார் போலும்.
நல்ல உள்ளங்களுக்குத்தான் தெரியுமே, இதன் படி லட்சக்கணக்கான ஈமெயில்கள் அரசியல் வாதிகளின் ஓட்டுப் பொறுக்கும் பேராசையை அம்பலப்படுத்தி கலாமுக்கு செல்ல, சுதாரித்துக் கொண்டு நல்ல முடிவெடுத்துவிட்டார். அதிபர் கலாமின் தீர்கமான முடிவுக்கு வாழ்த்துக்கள். அவர் பதவியில் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன அவர் இந்திய நலன் குறித்து தெரிவுக்கும் யோசனைகளை எந்த அரசியல் வாதியும்,புதிய அதிபரும் கூட நிராகரிக்க முடியாது. அவருடைய கவுரவம் இனி எந்த நிலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
கருணாநிதி தமிழர் அதிபராக வருவதை தடுத்துவிட்டார் என கலாமின் பெயரைச் சொல்லி ஓட்டுப் பொறுக்கலாம் என்ற பேராசையில் செங்கல்லே விழுந்தவர்கள் அடக்க முடியாத கோபத்தை கருணாநிதி மீது காட்டுகிறார்கள். கருணாநிதியும் அரசியல் தெரிந்தவர்தானே. ஏன் மூத்த அரசியல் வாதியும் கூட.
பேராசைக்காரர்களின் பிணைய கைதியாக வீழ்ந்துவிடாமல் தேசிய நலன் காத்து தமிழன் சுதாரித்துக் கொண்டான்.
ஐயா கலாம் வாழ்க !