பின்பற்றுபவர்கள்

23 மே, 2007

பிறப்பின் அடிப்படையில் ?

ஒரு சூத்திரன் பிராமணனின் நிலைக்கு உயர்வதும் அதேபோல் ஒரு பிராமணன் சூத்திரனின் நிலைக்குத் தாழ்வதும் சாத்தியம் என்று சொல்கிறது. சத்திரியர், வைசியர் விஷயத்திலும் இது பொருந்தும் என்று அது மேலும் விளக்குகிறது. இதிலிருந்து பிறவியின் பயனாக வர்ணங்கள் அமைவதில்லை.

என்று பதிவர் ஜடாயு போன்றவர்கள் மனு ஸ்மிருதியில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள். இது போல் இதுவரை உயர்ந்துள்ளதாகவோ, அல்லது அவ்வாறு உயர்ந்த நிலைக்குச் சென்ற முன்னாள் சூத்திரன் இதோ இந்த பிராமணரின் சந்ததிகளே...! என்று சொல்வதற்கு எவராவது அல்லது எதாவது வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறதா ? அதையும் அவர்கள் காட்டவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய 'உயர்ந்த தத்துவங்கள்' ஏட்டளவில் பேசப்படும் ஒரு கருத்தாக மட்டுமே தெரிகிறது. ஒரு வேளை சூத்திரர்களின் நிலை இன்னும்... இன்னும் உயரவேண்டும் என்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்களா தெரியவில்லை.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்வது நல்ல செய்திதான். ஆனால் நடைமுறையில் வழிவழி வருவது, பாரம்பரியம், மரபு என்றல்லவா சொல்லப்படுகிறது.

ஜூனியர் விகடன் கட்டுரையை சுட்டிக் காட்டி, சிதம்பரத்தில் குழப்பம் வேண்டுமென்றே விளைவிக்கப்படுகிறது. அங்கு பிரச்சனை தமிழ் அல்ல. சிற்றம்பல மேடையில் சம்ஸ்கிரதமும் பிறரால் (பிராமணர் உட்பட) பாடமுடியாதது என்பது தான் ஆகம விதி என்று சொல்கிறார்கள்.

ஆகமம், விதி இவையெல்லாம் ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்டதா ? கோவில்கள் எதுவும் சுயம்புவாக (தானாகவே) தோன்றிவிடவில்லையே. கோவிலை நிர்வாகிக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கலாம். அதில் சில தீர்மானங்கள் வழி இவர்கள் நிர்வகிப்பார்கள் என்று சொல்லி இருப்பார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் நின்றுபாடுவதற்கு உரிமை இல்லை என்று ஒரு ஆகம விதி இருக்க முடியுமா ? இங்கு தான் பிறவியின் அடிப்படையில் என்ற உரிமையைச் சொல்கிறார்கள். ஆகம விதிப்படி அங்கு இருக்கும் தீட்சிதர்கள் எல்லோருமே சிதம்பரம் கோவிலை நம்பித்தான் இருக்கிறார்களா ? படித்துவிட்டு வெளியுலக பணிகள் எதற்கும் செல்லவில்லையா ? ஆகமம் கூறுகிறதே என்று விதியை மீறக்கூடாது என்று அப்படியே இருந்துவிடுகிறார்களா ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தனியார் வசமிருக்கும் கோவில்களில் எவரும் பிரச்சனை செய்வதில்லை ஏன் சிதம்பரத்தில் மட்டும் ? அங்கும் செய்யலாமே என்று கேட்கிறார்கள். எங்கள் ஊரில் மாரியம்மன் கோவில் இருக்கிறது, அது பிராமணர்களுக்கு சொந்தமானது. அவர்களுடைய முயற்சியில் ஏற்பாட்டில் பொருளுதவியில் அவர்களே கட்டிக் கொண்டது. பிறரும் பொருளுதவி இருக்கிறார்கள். இது எல்லோருக்குமே தெரியும். அது ஒரு தனியாருக்கு சொந்தமான கோவில் என்று உணர்ந்து இருக்கிறார்கள்... தெரிந்துதான் அங்கு சென்று எப்படி இது போல் கேட்க முடியும் ? இதேபோல் சிங்கையில் இருக்கும் தண்டாயுதபாணி முருகன் கோவில் செட்டியார்களால் கட்டப்பட்டது. அதில் உரிமை கோருவது ஏற்புடையதா ? பிடிக்கவில்லை என்றால் போகமல் மட்டுமே இருக்க முடியும். சிதம்பரம் கோவிலைப் பற்றி பேசும் போது தனியாருக்கு சொந்தமான கோவிலிலும் போய் பிரச்சனை வளருங்கள் என்று சொல்வது விதண்டாவாதம். இதுபோல் நாட்டார் தெய்வங்கள் வழிபடும் கோவில்கள் எல்லாம் அவர்களின் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. உரிமையை மற்றவருக்கும் விட்டுக் கொடுத்தால் அது பெரும்தண்மை என்று பாராட்டலாம். ஆனால் அதற்காக போராட முடியாது.

அறநிலைய பொது சொத்தான கோவிலுக்குள் பாட உரிமை கேட்பதும் தனியார் கோவில்களில் அதே உரிமையை எதிர்பார்பதும் ஒன்றா ?

வணங்குபவன், அதில் நம்பிக்கையுடவன் தான் இது போன்று நம்பிக்கைகள் குறித்து கேள்வி கேட்கவேண்டும்... அருகதை அற்றவர்கள் (நாத்திகர்கள் ? ) கேட்கக் கூடாது என்று மிகச் திறமையாக சொல்கிறார்கள். அந்த உரிமைக்குப் போராடும் நம்பிக்கை உடையவர்களுக்கு சொல்வதோ வேறு பதில். அதாவது இறைவன் எங்கு தான் இல்லை ? ஏன் அங்கு பாடவேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்கள்!!! என்று. அதே அடத்தைத்தான் உரிமை குறித்துப் பேசி அதை மறுப்பவர்களும் செய்கிறார்கள் என்று ஏன் இவர்கள் (வசதியாக மறந்து ?) நினைப்பது இல்லை ?

'பிறப்பின் அடிப்படையில்' மரபு என்பதெல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் கூட இருக்கிறது. நமக்கு தெரிந்து கத்தோலிக்கர் என்றாலும் ஆப்பிரிக்க இனத்தில் இருந்து எந்த போப்பாண்டவரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

கடவுள் விசயத்தில் காம்ப்ரமைசுக்கு இடமில்லையா ?

பின்குறிப்பு : டிஸ்கி போடாமல் எதுவுமே எழுத முடியவில்லை. :) இங்கு எவரையும் தாழ்வாகவோ, குறைத்தோ மதிப்பிடவில்லை. கேட்பது மரபுகள் மற்றும் பிறப்பின் அடிப்படையான உரிமைகள் குறித்து...பிறப்பின் அடைப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி உரிமைகள் மறுக்கப்பட்டதைத்தான் பார்த்து வந்திருக்கிறோம்.

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்ட டிஸ்கி :)

ஒரு அன்பர் அவருடய கருத்தை வைத்து இங்கே கதைத்தாக மறைமுகமாக வேறொரு பதி(வி)ல் சொல்லுகிறார். அன்பரைப் போலவே அதே கருத்தை பல தமிழ்ச் சான்றோர் அன்பர்களும் மொழிந்து இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

பதிவில் பலர் உடன்படுகிறார்கள். பின்னூட்ட எண்ணிக்கை சொல்கிறது.

நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்