பின்பற்றுபவர்கள்

5 மே, 2007

நான் 'கண்ட' பெரியார் !

பெரியார் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றதும், தமிழன் என்ற படம் முறையில் எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் இருந்தேன். இன்று (05-மே-2007) நிறைவேறியது. படத்தின் ஆரம்பமே பெரியார் எதிர்பாளர்கள் முன்வைக்கும் 'பெரியார் குளிக்காதவர்' என்பதைச் சொல்லவரும் காட்சியுடன் நேர்மையாக எடுக்கப்பட்டு இருந்தது. தாழ்த்தப்பட்டவன்,படிக்காதவன், குளிக்காதவன் என்ற சொற்களில் ஒருவருடைய கருத்துக்களை சிதைக்க முனைபவர்களை புறம் தள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பது பின்பு புரிந்தது.

பெரியாரின் தந்தையின் வணிக மண்டியில் ஆரம்பித்து படம் பகுத்தறிவு வெடித்துணுக்குகளுடன் தொடர்கிறது. பின்னர் அவரது தங்கைக்கு நடைபெறும் 'பால்ய விவாகமும்' அவர் தங்கை வயதுக்கு வரும் முன்னே கைம்பெண் ஆவதையும், அதன் பிறகு தங்கைக்கு வேறு ஒரு திருமணம் அவரே ஏற்பாடு செய்து நடத்தி வைப்பதையும் காட்டினார்கள். பின்பு முறைபெண் நாகம்மையுடான காதல்... பெற்றோர் எதிர்ப்பு, நாகம்மையின் தற்கொலை முயற்சி அதன் பிறகு பெரியார் - நாகம்மை திருமணம்... தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் மனைவியின் விருப்பத்துக்கு இணங்க கோவில் வாசலில் அவருக்காக காவல் இருப்பது, பின்பு கோவிலுக்குள் நாகம்மையை சில ரவுடிகள் துரத்த... நாகம்மை வெளியில் ஓடிவருகிறார். .. 'ஆண்டவன் ஆயுதங்களுடன் கோவில் முழுதும் நிறைந்திருந்தாலும் ஆபத்துக்கு உதவுபவன் மனிதன் தான்' என்று பெரியார் நாகம்மையிடம் 'நச்'சென்று சொல்லுவார்.

விரத உணவில் கோழி காலை மறைத்து வைத்து பெரியார் அவருடைய அம்மாவை ஏமாற்றுவது போன்றவை சில நகைச்சுவை காட்சிகள். தலைமறைவாக இருக்கும் ஒரு சாமியாரின் தம்பியை நீதிமன்ற நோட்டீஸ் கொடுப்பதற்காக தபேதாருக்கு பெரியார் பிடித்துக்கொடுக்க, உயர்சாதிக்காரர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். அவர்கள் முறையிட்டதும் பெரியாரின் தந்தை பெரியாரை செருப்பால் அடித்து வீட்டைவிட்டு வெளியேறும் படி சொல்கிறார். அதன் பிறகு பெரியாரின் பயணம் காசி நோக்கிச் செல்கிறது. அங்கு இரண்டு பிராமணர்களுடன் சேர்ந்து கதா கலேட்சேபம் செய்கிறார் ( இராமர் அணிலுக்கு கோடு போட்ட பாடல்) ஒரு நாள் பசிக் கொடுமையில் காசியில் இருக்கும் செட்டியார் சத்திரத்திக்குள் மூவரும் நுழைகின்றனர். அங்கே பிராமணர்களுக்குத் தான் உணவு என்றதும் பசிக் கொடுமையால் எச்சிலையில் எஞ்சியதை தின்கிறார். பின்பு ஒரு சாமியாருக்கு தேவையான பொருள்களைக் கொண்டுவரும் எடுபிடியாக சேருகிறார். அங்கிருந்த பெரிய சாமியாரின் காம லீலைகளை அறிந்து அங்கிருந்து ஊருக்கு திரும்புகிறார்.

அவருரைய தந்தையாரின் மறைவுக்குப் பின்பு பல்வேறு பொறுப்புகள் அவருக்கு வந்து சேர... அதுவரை நடிப்பது சத்யராஜ் என்று தெரிந்தது... அதன் பிறகு கண்ணாடி, மீசை என வயதிற்குறிய தோற்றம் ஏற... சத்தியராஜின் உருவம் மறைய பெரியார் தோன்ற ஆரம்பிக்கிறார். இடையிடையே ராஜாஜி அவர்களுடன் ஆழமான நட்பு, காந்திஜியுடன் உரையாடல் என செல்கிறது... ராஜாஜியின் வேண்டுகோளுக்கினங்கி... இட ஒதுக்கீடு கோரிக்கையுடன்... காங்கிரசில் பெரியார் சேர்ந்ததும் அந்த இயக்கத்திற்கு தமிழகத்தில் உரமாகிறார். கதர் புடவையை தன் அம்மாவை உடுத்த வைக்க பெரியார் சொல்லும் சாமியார் காரணம், 'ஸ்ரீலஸ்ரீ காந்திமகான் சொல்லி இருக்கிறார்' என்று காந்திஜி சொன்னதை பெரிய சாமியார் சொல்லியதாக தனது தாயிடம் சொல்லி அவருடைய ஒப்புமை பெற வைப்பதும் நகைச் சுவை வெடி.

வைக்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தும், அங்கு எதிர்ப்பு கிளம்ப... அங்குள்ள நம்புதிரிகள் சத்ரூசம்ஹாரம் என்ற பெயரில் பெரியார் அழிவதற்கு நடத்துகின்றனர். திருவிதாங்கூர் மகாராஜா இறந்து போகிறார். உங்களுக்கு நடத்திய யாகம் மன்னரை காவு கொண்டதாக பெரியாரின் நண்பர் சொல்ல... பெரியார் அவரை 'இது அதைவிட பெரிய மூடநம்பிக்கை' என்று திட்டுகிறார். மன்னரின் மறைவை ஒட்டி எல்லோரும் விடுதலை பெறவே, வைக்கத்தில் தெருநுழைவு போராட்டம் வெற்றி பெருகிறது . சிறைசென்று சாதித்து வைக்கம் வீரராக திரும்புகிறார். பின்பு காஞ்சி காங்கிரஸ் மாநாட்டில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியார் தன் கோரிக்கையை மீண்டும் வலியுருத்த ராஜாஜியும், திலகரும் எதிர்க்க... காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். பின்பு ரஷ்யா சென்று அங்கு மார்கசியத்தின் கொள்கைகள் பிடித்துப் போகவே, மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மார்கசிய கொள்கைகளை ஆதரிக்கிறார். ஒரு நாள் நாகம்மை மறைந்துவிட ... நாகம்மை தன்னிடமிருந்து விடுதலைப் பெற்றதாக சொல்கிறார். தேவதாசி முறையை தடுத்து நிறுத்துவது... தாழ்த்தப்பட்டவர்களுக்கு தண்ணீர்பிடிக்கும் உரிமை, எழுத்து சீர்திருத்தம் என போராட்டமாகவே செல்கிறது நிகழ்வுகள்.

இடையில் மணியம்மை பெரியாரின் கொள்கைப் பித்தினால் அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க ... ஒரு நாள் பெரியாருக்கும் - மணியம்மைக்கும் பதிவு திருமணம் நடக்கிறது. விமர்சனம் செய்துவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா வழி உதயமாகிறது. காமராஜருக்கு ஆலோசனை சொல்லி அவரை காங்கிரசுக்கு தலைமை ஏற்க வைக்கிறார் பெரியார். பின்பு அண்ணா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அண்ணா - பெரியாரின் உணர்சி மயமான சந்திப்பு, மணியம்மையை மேடைகளில் விமர்சித்ததற்காக அண்ணா மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் மிகச் சிறப்பானவை. அனைவரும் கோவிலில் நுழைந்து அர்சனை செய்யும் உரிமை தன் காலத்தில் நிகழவில்லை ... இது தன் நெஞ்சில் குத்திய முள் என்று சொல்லும் போது உண்மையில் நெஞ்சில் முள்தைக்க மாரடைப்பில் இறக்கிறார். காந்திஜியை தேச தந்தையாக ஏற்று எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத ஒருவருக்கு அரசுமரியாதை அடக்கம் செய்ததைக் காட்டி எதிர்ப்புகளை சமாளித்து பெரியாருக்கு கருணாநிதி அரசு, அரசு மரியாதையில் அடக்கம் நடைபெறுகிறது.



இந்த இடத்தில் பெரியார் மறைவை ஒட்டி எடுக்கப்பட்ட உண்மை காட்சிகளை காட்டினார்கள். படம் முடிந்துவிட்டதா ? என்று நினைக்க வைத்துவிட்டது.

பெரியாரே தமிழக கட்சிகள் (பிஜேபி தவிர) அனைத்திற்கும் சொந்தமானவராக இருக்கிறார். என்பதை படம் சொல்லாமல் சொல்லி இருந்தது. உண்மை தமிழர்கள் தந்தை பெரியார் என்று அழைப்பது ஏன் என்பதை உணரவைத்தது.

படத்தில் எம்ஜிஆருக்கு 1 காட்சி, கலைஞருக்கு 2 காட்சி, வீரமணிக்கு 2 காட்சி என ரொம்பவே சுருக்கி இருந்தார்கள். பெரியாரே படம் முழுவது நிறைந்து இருந்தார்... இன்றைய தலைவர்கள் படத்தை ஆக்கிரமிக்காததற்கு இயக்குனருக்கு பாராட்டுச் சொல்லவேண்டும். இடையில் பெரியார் - அம்பேத்கார் சந்திப்பு. அம்பேத்கார் பெரியாரை புத்தமததை தழுவ சொன்னதும்... இந்து மதத்தில் இருப்பதால் என்னால் அதில் களையெடுக்க முடிகிறது. ..என்று பளிச் பதில் சொல்வார்.

படத்தில் பிராமணர்களின் பங்களிப்பும் மிகுதியாகவே இருக்கிறது.

மதன் பாப் (மார்வாடி?), ஒய்ஜி மகேந்திரன், சொர்ணமால்யா, மற்றும் பல நிஜ பிராமணர்கள் நடித்து இருந்தனர். பெரியார் துவேசம் தமிழ்நாட்டில் ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதாக நான் அவர்கள் மூலம் கருத்துகிறேன். வரலாற்று நிகழ்வை அழகாக படம் ஆக்கி தொய்வில்லாமல் எடுத்துச் சென்றதில் இயக்குனர் இராஜசேகரன் வெற்றி பெற்றி இருக்கிறார். பெரியார் பற்றி அறியாமையில் எதிர்பவர்கள் (வேண்டுமென்று எதிர்பவர்கள் அல்ல) அவர்களுக்கு பிற்காலத்தில் பெரியாரின் வாழ்வு, போராட்டுக் குறித்து அறிய செய்ய திரைப்பட குறுந்தகடை (வி.சி.டி) வாங்கி பரிசளிக்கலாம்.

வித்யாசகர் திறன் முழுவதையும் இசையிலும், பின்னனி இசையிலும் கையாண்டு இருக்கிறார். தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் தன் திறனை மேலும் மெய்பித்து இருக்கிறார்.


படம் வெற்றியா தோல்வியா ?


ம்.... படம் வெற்றிப் பெற்றால் வருத்தப்படுபவர்களைப் பார்த்தும், தோல்வியானால் துள்ளிக் குதிப்போரையும்ம் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி ! அவர்களுக்கு இருக்க வேண்டிய கவலை !
:)))

அன்புடன்,
- கோவி.கண்ணன்

18 கருத்துகள்:

பங்காளி... சொன்னது…

//படம் வெற்றிப் பெற்றால் வருத்தப்படுபவர்களைப் பார்த்தும், தோல்வியானால் துள்ளிக் குதிப்போரையும்ம் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி//

:-)))))

dondu(#11168674346665545885) சொன்னது…

//பின்பு மணியம்மை மறைந்துவிட மணியம்மை தன்னிடமிருந்து விடுதலைப் பெற்றதாக சொல்கிறார்.//

நாகம்மை என்று கூற வந்தீர்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

கோவி,

//பின்பு மணியம்மை மறைந்துவிட மணியம்மை தன்னிடமிருந்து விடுதலைப் பெற்றதாக சொல்கிறார். //

நாகம்மை என்பது தவறி மணியம்மையாக வந்துவிட்டதென நினைக்கிறேன். இது உங்கள் கவனத்திற்கு மட்டுமே வெளியிடத் தேவையில்லை.

ஜோ/Joe சொன்னது…

கோவியாரே,
சிங்கையில் வந்து விட்டதா? தயவு செய்து விவரம் கொடுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

திரு சுந்தரமூர்த்தி மற்றும் டோண்டு ராகவன் பிழையை சுட்டியதற்கு நன்றி. நாகம்மை இடத்தை மணியம்மை நிரப்பினார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

பங்காளி

சிரிப்பானுக்கு நன்றி !

சிவபாலன் சொன்னது…

GK,

நல்ல விமர்சனம். நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
ப்ளாக்கரில் ரொம்பவே சொதப்பல் பதிவிடவே மிகந்த சிரமத்துக்கு ஆளானேன். அதானால் எழுத்துப்பிழைகளையும், சொற்பிழைகளையும் சரியாக திருத்த முடியவில்லை.
ப்ளாகர் சரியானதும் திருத்தி படத்துடன் போடுகிறேன்.

நண்பர்களே ! பொறுமை காக்க வேண்டுகிறேன் !
:)

VSK சொன்னது…

படக்கதையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கோவியாரே!

படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டது.

நன்றி.

வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படுபவர்கல் படட்டும்!

இதுபோன்ற வரலாறுகள் திரைப்படமாக வருதல் மிகவும் முக்கியம்.

அந்தவகையில் இதனை வரவேற்கிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
GK,

நல்ல விமர்சனம். நன்றி
//

நன்றி சிபா !

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
படக்கதையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கோவியாரே!

//

எஸ்கே ஐயா,

படத்திலிருந்து நான் எழுதியிருப்பது 1 விழுக்காட்டிற்கும் குறைவு, அங்கு திரையரங்கிற்கு வந்தால் நேரடியாக கண்டு மகிழுங்கள். அல்லது விசிடி யில் வந்தால் பார்த்து மகிழுங்கள்.

பார்க்க வேண்டிய படம் !

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//உங்களுக்கு நடத்திய யாகம் மன்னரை காவு கொண்டதாக பெரியாரின் நண்பர் சொல்ல... பெரியார் அவரை 'இது அதைவிட பெரிய மூடநம்பிக்கை' என்று திட்டுகிறார்//

நண்பர்கள், எதிரிகள் என்று பார்க்காது
கருத்தும், கொள்கையும் மட்டுமே பார்ப்பது தான் தலைமைக்கு அழகு!
தன்னளவில் நடக்கும் பட்சத்திலும் கொள்கைக்கே முதலிடம் கொடுக்க, சான்றோரால் மட்டுமே முடியும்.

இதை அழகாச் சொல்லி இருக்காங்க படத்தில்!

நன்றி GK!
நல்ல விமர்சனம்!
வரிக்கு வரி, காட்சிகளைக் காட்டி விட்டீர்கள்!
இருந்தாலும் நாங்களும் வாங்கிக் காண்போம்-ல! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//படம் வெற்றியா தோல்வியா ?//

இது என்னங்க கேள்வி!
ஒரு வெற்றியைத் தானே படம் ஆக்கி உள்ளார்கள்!
அப்புறம் நீங்க இரண்டாவது சொன்னது எங்கே வந்தது?

//படம் வெற்றிப் பெற்றால் வருத்தப்படுபவர்களைப் பார்த்தும், தோல்வியானால் துள்ளிக் குதிப்போரையும்ம்//

ஆகா...இது தான் விடயமா?
சரி சரி :-)

மூட நம்பிக்கையாவே இதுக்குப் பதில் சொன்னா இன்னும் நல்லாப் புரியுமே!
சீப்பை ஒளிச்சி வைச்சா
கல்லாணம் நின்னுடுமா என்ன? :-)
வெற்றி/தோல்வி கணக்கெடுப்பால்
சகாப்தங்கள் சரிந்துடுமா என்ன?

பெயரில்லா சொன்னது…

ஞானராஜசகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பெரியார் படம் சரியான குப்பை. எந்தக் கோர்வையும் இல்லாமல் வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வந்திருக்கும் இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய பாராட்டு! அட்டன்பரோ என்ற வெளிநாட்டுக்காரர் காந்தியைப் பற்றி எடுத்த படத்தைப் பார்த்தாவது ஆளுமைகளைப் பற்றி படம் எடுக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரியார் படத்தை விமர்சிப்பது பெரியாரை விமர்சிப்பது ஆகாது. இவர்தான் இப்படி மோசமாக விமர்சனம் எழுதுகிறார் என்றால், அதற்கு இத்தனை பாராட்டு வேறு. வலைபதிவர்களே, இப்படி பரஸ்பரம் சொறிந்துகொள்வதை முதலில் நிறுத்துங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
ஞானராஜசகரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பெரியார் படம் சரியான குப்பை. எந்தக் கோர்வையும் இல்லாமல் வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வந்திருக்கும் இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய பாராட்டு! அட்டன்பரோ என்ற வெளிநாட்டுக்காரர் காந்தியைப் பற்றி எடுத்த படத்தைப் பார்த்தாவது ஆளுமைகளைப் பற்றி படம் எடுக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரியார் படத்தை விமர்சிப்பது பெரியாரை விமர்சிப்பது ஆகாது. இவர்தான் இப்படி மோசமாக விமர்சனம் எழுதுகிறார் என்றால், அதற்கு இத்தனை பாராட்டு வேறு. வலைபதிவர்களே, இப்படி பரஸ்பரம் சொறிந்துகொள்வதை முதலில் நிறுத்துங்கள்.

//
அனானி அன்பரே...!

பெரியார் படம் பெரியாரை தற்கால இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி என்று பலரும் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. பெயரைக் கூட குறிப்பிடாமல் விமர்சனம் என்ற பெயரில் காழ்புணர்வு கொட்டும் தாங்கள் பெரியார் படத்தை விமர்சிக்குமுன் பெரியாரைப் பற்றி எதாவது கருத்து சொல்ல வந்தால் அதையும் சொல்லி இருக்கலாம். முயற்சி என்ற எதுவும் இல்லாமல் முயல்பவர்களை குற்றம் சொல்லும் சமூக ஆர்வலர்கள் உங்களைப் போல் ஆயிரம் இருக்கின்றனர். நீர் அதில் ஒன்று அவ்வளவுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ESMN சொன்னது…

பெரியார் படத்தின் முதற்காட்சியில் பெரியாரின் நிழற்படம் காண்பிக்கின்றனர்.
அதில் பெரியாரின் பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.

ESMN சொன்னது…

பெரியார் படத்தின் முதற்காட்சியில் பெரியாரின் நிழற்படம் காண்பிக்கின்றனர்.
அதில் பெரியாரின் பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.

ESMN சொன்னது…

ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

- தந்தை பெரியார்

ஐயா,
தங்களுடைய பதிவிற்கு கருத்து கூற உங்களின் அனுமதி தேவையாம்.
மேலே சொன்ன கருத்துக்கள் உங்களுக்கு பொருந்தும்.......

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்