பின்பற்றுபவர்கள்

22 ஜூலை, 2013

'சாதி'க்கலாம் வாங்க !

எப்படி இருந்த தமிழ் மணம் எப்படி ஆகிவிட்டது ? சாதி / மதம் சார்ந்த பதிவுகளை எழுதுவது தமிழ்மணம் விதிகளுக்கு முரணானது......ஆனால்.....வஹாபிகள் தங்கள் இடுகைகளில் மதம்சார்ந்து 9ம், 10 ஆவது வேற எதாவது எழுதி விலக்கு பெற்றுவிட்டார்கள், நம்ம 'ப..சுமை பக்கம் அருளாரும் மாற்றி மாற்றி எழுதி நான் சாதி சார்ந்து (மட்டுமே) எழுதுவதில்லைன்னு சத்தியம் செய்துவிடுவார்.

ஆனால் பச்சையாகவே சாதிப் பெயர் தாங்கி பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

வன்னியர்களின் சாதிவெறிக்கு எதிரான வன்னியர்கள் !

இன்னும் ஒரு மாதம் சென்றால் இப்படியெல்லாம் வலைப் பதிவு தலைப்பு வைத்து பதிவு வருமோ ?
சாதிவெறி பார்பனர்களின் சாதிவெறிக்கு எதிரான நல்ல பார்பனர்கள் !
செட்டியாரின் சாதிவெறிக்கு எதிரான செட்டியார்கள் !
தேவர்களின் சாதிவெறிக்கு எதிராக தேவர்கள் !
கவுண்டர்களின் சாதிவெறிக்கு எதிராக கவுண்டர்கள் !
முதலியார்களின் சாதிவெறிக்கு எதிராக முதலியார்கள் !
சாதிவெறி பிள்ளைமார்களுக்கு எதிராக நல்ல பிள்ளைமார்கள் !
.
.
.
இந்துக்களின் மதவெறிக்கு எதிராக இந்துக்கள் !
இஸ்லாமியர்களின் மதவெறிக்கு எதிராக இஸ்லாமியர்கள் !
கிறித்துவர்களின் மதவெறிக்கு எதிராக கிறித்துவர்கள் !

இதையெல்லாம் நாம படிச்சி, அதை சூடான இடுகையாகவும் ஆக்கி எவ்வளவு தமிழ் சேவை செய்கிறோம்..........!

சாதி சங்கம் நடத்தவும், விளம்பரம் செய்யவும், முகநூல் இருக்கு, ஏன் வலைப்பதிவிலேயே கூட செய்யலாம், அதையெல்லாம் நூல்குறி (புக்மார்க்) செய்து விரும்பியவர்கள் படிக்கட்டும், ஆனால் பலரும் எட்டிப் பார்க்கும் திரட்டிகளில் இவை வருவது......எழுதும் ஆசையில் எழுதவருபவர்களுக்கு 'இதைத்தான் வலைப்பதிவில் எழுதுறானுங்களா ?' ன்னு நினைத்து தலை தெறிக்க ஓடமாட்டார்களா ?

20 ஜூலை, 2013

ஆங்கில மோகமும் சமஸ்கிருத தாகமும் !

இந்தியாவில் ஆங்கிலம் நுழைந்ததால் எல்லாம் கெட்டுவிட்டது என்று பழைய பல்லவியை மறுபதிப்பு (ரீமேக்) செய்துள்ளது பாஜக,

"ஆங்கில மொழி இந்தியாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. நாம் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நாட்டில் சமஸ்கிருதத்தில் பேசுபவர்கள் வெறும் 14 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர். ஆங்கிலத்தின் மூலம் நாம் அறிவைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் இளைஞர்களிடம் ஆங்கில கலாச்சார மோகம் ஊடுருவுவது ஆபத்தானது" - ராஜ்நாத்சிங் 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/20/india-row-erupts-over-rajnath-singh-anti-english-remarks-179514.html

ஆங்கிலத்தில் இருந்து அறிவை மட்டும் பெற்றுக் கொள்ளலாமாம், ஆங்கிலம் படிக்காமல் அறிவை மட்டும் எப்படி பெறுவது என்பதை அந்த மேதை விளக்கவில்லை, அவரது கவலையெல்லாம் சமஸ்கிரதம் பேசுவோர் எண்ணிக்கை 14 ஆயிரம் பேர் மட்டும் தான் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், அதற்குக் காரணமாக ஆங்கிலத்தை கூறி உள்ளார்,  இந்த 14 ஆயிரம் என்பது ஆண்டு 2001 கணக்கெடுக்கின்படி வரும் எண்ணிக்கை என்பதை விக்கிப்பீடியா குறிப்பிட்டுள்ளது, இடைப்பட்ட 13 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தான் வாய்ப்பே அன்றி கூடுவதற்கான வாய்ப்பு எப்பொழுதும் இல்லை. மொழி வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் மக்கள் தொகை உயர்வு என்பதைத் தாண்டி, அதை படித்தால் பயனுண்டு என்று படிப்பவர் இருந்தால் மட்டுமே வாய்ப்புள்ளது. 

 எந்த மொழியும் அன்றாடப் பயன்பாட்டில் இல்லை என்றால் அது அழிவதன் துவக்கத்தில் பயணம் செய்யும், இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல் அப்பன் மகன் பேரை ஒன்றாகப் பார்த்தால் மட்டுமே தற்பொழுது ஒருவரை பெயரை வைத்து தமிழர் என்று அறிய முடிகிறது, இன்னும் 40 ஆண்டுகளில் அதுவும் கடினம், கருப்பையா ரமேஷ், தந்தை பெயர் கருப்பையா, மகன் பெயர் ரமேஷ், ரமேஷுக்கு தமிழ் பெயர்கள் பற்றி பெரிதாக ஆர்வம் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளுக்கும் எதோ ஒரு மொழியில் உதாரணத்திற்கு ஞானேஷ் என்று பெயர் வைக்க, முகத்தை பார்க்காமல் 'ரமேஷ் ஞானேஷ் 'என்ற பெயரை நாம் பட்டியலில் படித்தால் எந்த மாநிலத்துக்காரர் என்றும் தெரியாது, ஒருவேளை முகத்தைப் பார்த்தாலும், பேசாவிட்டால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எண்டு கண்டுப்பிடிப்பதும் கடினம். நான் பொதுவாக வழியுறுத்துவது, தமிழிலும் அழகான எளிமையான பெயர்களை உருவாக்கலாம், இருக்கிறது, அவற்றை பயன்படுத்துங்கள், உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டுவதால் தமிழை இன்னும் ஒரு 80 ஆண்டுகளுக்கு (சராசரி வாழ்நாள்) 'பெயரளவில்' ஆவது புழக்கத்தில் வைக்கக்  உங்களால் செய்யப் படக் கூடிய சிறு துரும்பு.

நான் சமஸ்கிரத்திற்கோ வேறெந்த மொழிக்கோ எதிரானவன் இல்லை, எனக்கு எல்லா மொழிகளும் பிடித்தமானவையே, நான் மொழிகளை விரும்பிப் படிப்பதை பொழுதுபோக்காகவும் வைத்துள்ளேன், ஒரு மொழியை அறிவதன் மூலம் அம்மொழி பேசுபவர்களைப் பற்றி அவர்களது பண்பாடுகளை அறிய முடியும் என்பது நான் மொழிகளை படிப்பதன் மூலம் நேரிடையாக அறிந்து கொண்ட ஒன்று. மொழி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் என்று கூறுபவர்களை நான் எப்போதும் புறம் தள்ளுவேன், முடிந்தால் அது அவ்வாறு இல்லை என்றே கொஞ்சம் விளக்கிச் சொல்வேன், மொழிகள் என்பது அறிவுக் கருவூலங்கள், அவை பண்பாடுகளை தலைமுறை தாண்டி எடுத்துச் செல்லும், ஒரு மொழி அழியும் பொழுது அவற்றை பேசியவர்களின் பண்பாடு மற்றும் கலை ஆகியவையும் சேர்ந்தே அழியும், ஒரு மொழியின் ஆளுமை மற்றொரு மொழியினரின் பண்பாடுகளை எவ்வாறு அழிக்கும் ? 

நாம் வேட்டிக் கட்டுவதை கைவிட்டு பேண்டுக்கு மாறி ஒரு 50 ஆண்டு காலம் ஆகி இருக்குமா ? நாம் தமிழ் நாட்டில் பேண்ட் அணிவதன் தேவை என்ன ? ஒன்றுமே இல்லை, ஆனால் படித்தவனின் ஆடை, அலுவலக ஆடை என்ற அடையாளத்தில் நம் உடை முற்றிலும் மாறிவிட்டது அல்லவா ? இப்போது பண்டிக்கைக்கும், திருமணத்திற்கும் வேட்டிக்கட்டும் பழக்கம் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் நீடித்தாலே பெரிது, என்னுடைய நண்பர் ஒருவர் வேட்டிக்கட்ட வெட்கப்பட்டு,  அதை வேட்டிக்கட்டத் தெரியாது என்று காரணமாகக் கூறி மணமேடையில் பேண்ட் அணிந்தே தாலி கட்டினார், பண்பாடு கலாச்சாரம் குறிப்பாக அதிக விலையிலானது என்பதால் பெண்கள் விடப்பிடியாக பட்டுப்புடவை கட்டிவருவது ஆறுதல். அதுவும் இல்லம் சார்ந்த விழாக்களில் மட்டும் தான், எப்போதாவது அலுவலகத்திற்கும் கட்டிச் செல்கிறார்கள், ஆனால் இன்றைய சூழலில் நாம் வேட்டிக்கட்டி பொது நிறுவனம் எதற்குள்ளும் வேலைபார்க்க சென்றுவிட முடியாது. வேட்டிப் போச்சு. ஆங்கிலம் அலுவலக மொழியாகும் பொழுது அதற்கான ஆடைகளும் மாறிவிடுகிறது, நமது அடையாளம் பிட்சா, பர்கர்னு கொஞ்சம் கொஞ்சமாக பிறவற்றிலும் இப்படித்தான் மாறிப் போகும்.

இன்றைய கல்வி மற்றும் பொருளாதார சூழலில் ஆங்கிலம் படிப்பதை நம்மால் தவிர்க்கவே முடியாது, எல்லாவற்றையும் தமிழிலேயே படித்தால் நமக்கு வேலையும் கிடைக்காது, குறைந்த அளவாக தமிழர்களிடையே தொடர்பு மொழியாக தொடர்ந்து பேச ஒரு வாய்ப்பு என்ற அளவில் 10 ஆம் வகுப்பவரையிலாவது தமிழை படிப்பது மொழி அழிவை தடுக்க நாம் செய்யும் கைமாறு, அதைத் தவிர்த்து தமிழை தொடர்ந்து படித்தால் நமக்கு எந்த பயனும் இல்லை, ஒரு வேளை எழுத்தாளன் ஆகலாம், அதற்கும் தமிழை கல்லூரிப்படிப்பாகத்தான் படிக்க வேண்டும் என்பதுமில்லை. ஏனென்றால் நமது வேலை வாய்ப்புகள் என்பவை தமிழ் சார்ந்தவை இல்லை, இதை புரிந்து கொள்ள மறுப்பவர் வைக்கும் வாதங்கள் எவையும் ஏட்டுச் சுரைக்காய் போன்றதே.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பவை அவற்றை பேசுபவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கி வெளிநாட்டினருக்கும் அந்த வாய்ப்புகளை வசதியாக்கி தந்தால் அந்த மொழியின் மீது பிற மொழிப் பேசுபவர்களுக்கு நாட்டம் ஏற்படும், உதாரணத்திற்கும் சீனாவில் 80 விழுக்காட்டிற்கும் மேல் பொது மொழியான மேன்டரின் பேசப்படுகிறது, சீனா தற்பொழுது பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கதவையும் திறந்து விட்டுள்ளது, சீனாவில் வர்தக தொடர்பு அல்லது  தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் என்று நினைக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள் சீனாவிற்கு செல்லும் தனது அலுவலர்களை சீன மொழியை படிக்கக் கோறும், அவ்வாறு இல்லை என்றால் அங்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பேச வாய் இருந்தாலும் சொல் இருக்காது, சீனாவில் வேலை செய்யும் பெரும்பாலான ஐரோப்பியர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள், சீனா இன்னும் வல்லரசாகி அண்டை நாடுகளை ஆளுமைக்குள் கொண்டு வந்து அந்த அந்த பகுதிகளின் அலுவல் மொழியாக சீனமொழியை அறிவித்துவிட்டால் வேறு வழியின்றி சீன மொழியை அடிமைபட்ட நாடுகளும் அரசிடம் வேலை செய்ய கற்றுக் கொள்வர், இதைத் தான் வெள்ளைக்காரன் அன்று செய்தான் ஆங்கிலம் காமன்வெல்த் நாடுகளின் தொடர்பு மொழியானது, ஒருவேளை உலகப் போரில் ஜப்பான் காரன் வெற்றிபெற்றிருந்தால் நாம் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஜப்பான் மொழியில் படித்து வேலைபார்ப்போம், மொழி பரவுவதற்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.

இந்த புரிதலின்றி பலர் ஆங்கிலம் போல் தமிழும் பல மொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டால் தமிழ் வளர்ச்சி பெரும் என்று அறியாமையால் நம்புகிறார்கள், பல மொழியில் கடன் வாங்கி தமிழில் வைத்துக் கொள்வதற்கு மாற்றாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு ? குறைந்தது தமிழ் மொழியாவது தன்மை மாறாமல் இருக்கும், நான் எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ பயணித்துவிட்டேன்.

ஆங்கிலத்தின் வளர்ச்சி ஆங்கிலத்தில் போதிய சொற்கள் இல்லாததால் பிறமொழியில் அவை கடன்வாங்கி அகராதியை நிரப்பிக் கொண்டே வரும், ஏனென்றால் ஆங்கிலத்தின் மூலம் பரவலான அறிவை கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்கள், 2 மில்லியன் சொற்கள் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவருக்கு அவற்றில் பாதி அளவு அகராதியை புரட்டாமல் தெரியுமா என்பதே ஐயம், குறிப்பாக மருத்துவம் சார்ந்த சொற்களுக்கு ஆங்கிலம் நிறையவே கடன்வாங்கியுள்ளது. ஒரு நூல் ஆங்கிலத்தில் முழுமையடைய ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை கடன் வாங்காமல் முடியாது என்பதால் ஆங்கிலத்திற்கு பிறமொழியின் சொற்களை கடன் பெறுவது இயல்பு. ஆங்கிலத்தின் முழுவளர்ச்சி இந்த நூற்றாண்டாடில் ஏற்பட்டு மிகுதியாகவும் மாற்றம் கண்டுள்ளது, இன்றைய கணிணி உலகில் ஆங்கிலம் 1000க் கணகான புது சொற்களை இணைத்துக் கொண்டது. இவை பெரும்பாலும் லத்தீன், கிரேக்கம், ரோமன் மொழிகளின் கலவையே.

இந்த நூற்றாண்டில் ஆங்கில உருவாக்கம் வளர்ச்சி என்பது போல் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மொழிகளை கடன் பெற்று பண்பட்ட மொழி என்ற புதிய மொழி உருவாக்கமாக சமஸ்கிரதம் உருவானது, ஆனால் அதை எழுதுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தினார்களேயன்றி அன்றாட பேச்சு மொழியாக இருந்திருக்கவில்லை, இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றையும், இலக்கிய நூல்களை எழுதவும் அதை பிறமொழிப் பேசுபவற்களிடம் பரப்பவும் ஒரு கருவியாக சமஸ்கிரதம் இருந்துவந்தது, அந்த நூலின் புழக்கம், அவற்றை சொற்பொழிவு செய்பவர்களின் (பிரசங்கம்)  செய்பவர்களால் புழக்கத்தில் விடப்பட்டு வட்டார மொழிகளில் கலக்க பல்வேறு மொழிகளாக அவை உருவானது, தென்னிந்திய மொழிகள் ஒருகாலத்தில் வட்டார மொழிகளாக (நெல்லை, கோவை தமிழ் போல்) இருந்து பின்னர் சமஸ்கிரத கலப்பு விழுக்காட்டு வேறுபாடுகளில்  தென்னிந்திய மொழிகள் தனித்தனி வடிவம் பெற்றன. மற்றபடி சமஸ்கிரத்தில் இருந்து எந்த தென்னிந்திய மொழியும் வேர் சொற்களை பெற்றிருக்கவில்லை, தோன்றவில்லை, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் பொதுவான தென்னிந்திய மொழியின் சிதைந்த வடிவம் என்று சொல்லலாம்.

சமஸ்கிரதம் படிப்பதால் இன்றைய தேதியில் என்ன பலன் ? ஒன்றும் இல்லை இராமயணம் உள்ளிட்ட வடமொழி நூல்களின் மொழிப் பெயர்ப்பு எல்லா மொழிகளிலும் வந்துவிட்டன. வேதம் உபநிசத் ஆகியவற்றை கோவில் கருவறைக்குள் வைத்து பார்பனர்கள் பூட்டிக் கொண்டுள்ளனர், சமஸ்கிரதத்தை முழுமையாக கற்று தேர்ந்தாலும் பார்பனர் அல்லாதவர்களுக்கு கோவிலில் அர்சகர் வேலையும் கிடைக்காது என்ற நிலையில் அதைப் படிப்பதனால் என்ன பயன் ? அர்சகர் அர்சனையின் போது கருமாதி மந்திரம் சொல்லாமல் இருக்காரா என்று தெரிந்து கொள்ளலாம், வேறு பயன் எதுவும் இல்லை,  சமஸ்கிரதம் பேசும் போது அதிரும் புதிரும் என்றால் எச்சிலும் தெறிக்கும் என்பதையும், பல கோவில்கள் பாழடைந்து சாய்ந்ததற்கு அர்சகர் ஓதிய மந்திரத்தின் அதிர்வு தான் காரணமாக இருக்குமோ என்று கேட்கத் தோன்றுகிறது.

இதையெல்லாம் வீட 'நாசாவுக்கு தண்ணீர் காட்டிய திருநள்ளாறு' என்று எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் ஒரு கட்டுரை எழுதி இன்னும் கூட அவை முக நூல்களில் பரிந்துரைக்கப்பட்டு பல்வேறு அப்பாவிகளால் அப்படியா என்று கேட்க வைக்கப்பட்டு லைக்கப் படுகிறது, அது போல் நாசா சமஸ்கிரத ஒலியை விண்வெளிக்கு அனுப்பி அதன் எதிரொலியை பதிவு செய்கிறது, என்று ஒரு தகவலை பரப்பிவிட்டு இருக்கிறார்கள், முதலில் அவ்வாறு செய்வதால் என்ன பலன் என்பதை கட்டுரை எங்கும் விளக்கவில்லை, அதைவிட நாசா அவ்வாறு செய்ததற்கு ஆதாரணமான எந்த சுட்டியும் அதில் காணும். நானும் நாசா வலைத்தளத்தையும் வலைபோட்டேன் அப்படி எதுவும் அகப்படவில்லை. இன்னும் கூட பலரால் கணிணிக்கு ஏற்ற மொழி சமஸ்கிரதம் என்று பரப்பப்படுகிறது ஆனால் எந்த விதத்தில் ?  8 Bit ஆக இருந்த ASCII code இன்றைக்கு 64 Bit ஆக மாறியுள்ளது ஏலியன் மொழியைக் கூட அதில் ஏற்றி வைத்து கணிணியை இயக்க முடியும். கணிணியை இயக்க எந்த மொழியாக இருந்தாலும் உள்ளுக்கு இயங்குவது இரண்டடிமானம் (Binary) தான், சமஸ்கிரத்தை கணிணி மொழியாக மாற்றி பயன்படுத்துவதால் என்ன பலன் ? ஆங்கிலத்தில் 26 எழுத்து, அதை வைத்து தமிங்கிலத்தில் கூட விரைவாகவே தட்டச்சுவிடுகிறோம், சமஸ்கிரத அறிவியல் பேசுபவர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.

இப்போதே ஆங்கிலம் பல்வேறு வட்டார ஆங்கிலமாகத்தான் இருக்கின்றது,  3000 ஆண்டு பழமையான சமஸ்கிரதம் புழக்கம் முற்றிலும் குறைந்து போய் வெறும் 14,000 பேர் தான் பேசுகிறார்கள் என்றால் ஆங்கிலத்திற்கு அந்த நிலை வர 200 ஆண்டுகள் ஆகலாம், ஏனெனில் இன்றைய தகவல் தொடர்பும் மக்கள் பரவலாக்கமும் மொழிகளில் மாற்றத்தை வெகுவிரைவாகவே ஏற்படுத்திவிடும். உலகமொங்கும் எளிமையான ஆங்கிலம் பரவலாகவும் வாய்ப்புள்ளது.

ஆங்கில மோகம் தான் சமஸ்கிரதம் அழிந்ததற்கு காரணம் என்பது பொய்யான முதிர்ச்சி அற்ற வாதம், சமஸ்கிரதம் ஆங்கிலேயார்கள் உள்ளே நுழையாத காலத்திலும் கூட பெரிதாக மக்களால் பேசப்படவில்லை, அது ஒரு பூசை மொழி என்று பரிந்துரைக்கப்பட்டு பொதுப் புழக்கத்தில் இருந்து உள்நோக்கத்துடன் தடுக்கப்பட்டே வந்தது, இந்தியை வலுகட்டாயமாக நுழைக்க முயற்சிப்பதும், முதலில் ஹிந்தி ஒட்டகத்தின் கழுத்தை நுழைத்து சமஸ்கிரத்த்தை மீட்டு எடுக்கலாம் என்பதன் முயற்சியே, அதுவெற்றி பெறாது ஏனெனில் ஹிந்திபடிப்பதனால் வேலை வாய்ப்பு கூடும் என்ற அளவில் எந்த வேலை வாய்ப்பும் கிடையாது., ஹிந்தி தெரிந்தவனும் பிறமாநிலங்களில் பாம்பே மிட்டாய் தான் விற்கிறான் என்பதை நினைக்க ஹிந்தி வாங்கிதரும் வேலை வாய்ப்புகள் பூஜ்ஜியம்.

18 ஜூலை, 2013

வாலி வாலி லாலி !

உன்னைப் படித்ததும் தான் அறிந்தேன்
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?

கம்ப ராயமயணத்தை சொல்லால்
வளைத்த கொம்பன் நீ !

தனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்
நீ, நினைந்து மறை தந்த மற்றோர்
ஆன்றோர் நேயன் !

நீ எழுதியவை
துட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா ?
விட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை
எம் செவி மொட்டில்
விழுந்த தேன் சொட்டு !

நீ தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு
வாழ்ந்த காலங்களிலேயே
வாழ்த்தப்பட்டவன்
நீ !

புதுமைக்கவிஞன் இவன் என்று
போற்றப்பட்டவன் நீ !

விந்தை நீ, புதுக்கவிதைகளின்
தந்தை நீ.

உன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,
அவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை !

உன்னிடத்தில் சொற்கள் அடைந்தன
நிறம், அவை பெற்றன
சாகா வரம் !

தமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்
தாடி நீ,
இன்றைய கவிஞர்களின்
டாடி நீ !

மாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,
வேண்டும் இவன் வேண்டும் இவன்
மன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்
சான்றோன் நீ,
தமிழ் சான்றோர்களின் சான்று நீ !

இன்னொரு முறை இவனே பிறப்பானா ? என்று எம்
தமிழ்தாய் இழந்து ஏங்கும்
குழந்தைகளில் இன்னொருவன் நீ !


இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?

ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.............

14 ஜூலை, 2013

"நச்" !

நடக்கூடியது,மிகவும் ஆபத்தானது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.......என்றெல்லாம் நாம எது நடக்கூடாதுன்னு நினைக்கிறமோ, எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் அது நமக்கே நடக்கும் பொழுது....நடந்த பிறகு ஏற்பட்ட வலியை மீறி......நாம நினைச்சது போல் நடந்துவிட்டது என்று முன்கூட்டிய உள்ளுணர்வை நாமே மெச்சிக் கொண்டு, நம்மை தீர்க்க தரிசியாக நினைப்பது வலிகளை மீறிய ஒரு பெருமிதமான உணர்வு, ஆனால் அது அசட்டுத்தனமானது என்று நமக்கே அது தெரியும்.

************

இங்கே எல்லாம் காப்பீட்டு திட்ட முகவர்கள் காப்பிட்டுக்காக பேசும் பொழுது தன்னை குறிப்பிட்டு ஒருவேளை நான் விபத்தில் போய் சேர்ந்தால் இன்ன இன்ன நன்மைகள் காப்பீட்டு திட்டத்தால் கிடைக்கும் தன்மை விளக்கமாக விளக்குவார்கள், 'நீங்க போய்டிங்கன்னா' என்று முன்னிலை விளக்கினால் முகவரை செருப்பால் அடிக்காத குறையாக துறத்திவிடுவார்கள், காப்பீடுகள் விபத்தின்பிறகு பயனிளிக்கக் கூடியவை என்று நமக்கு நன்கு தெரிந்து தான் வாங்குகிறோம், இதில் அபசகுணம், ஆபாசகுணம் என்று எதுவும் இல்லை என்றால் 'இன்சூரன்ஸ் வாங்கி வைத்துவிட்டால் விபத்து எதுவுமே நடக்காது.....' என்பது பெருவானவர்களின் நம்பிக்கை. மற்றபடி விபத்து நடந்தாலும் நட்டமில்லை, குடும்பத்திற்கு உதவும் என்றே காப்பீடுகளுக்கு ஒப்புக் கொண்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர், 

ஒருமுறை 'கேக்ரான், மேக்ரான்' கொம்பேனியில் இருந்து ஒருவர் காப்பீட்டுக்காக அழைத்துப் பேசினார், ஒரு நாளைக்கு இத்தனை அழைப்புக் கணக்கில் அவர்களுக்கு ஏதேனும் கமிசன் கிடைக்கலாம், என்பதால் 'காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்' என்றதும், நாம விரும்பி தலையைக் கொடுக்காவிட்டால் இவர்களிடம் பேசுவதில் எதுவும் நட்டமில்லை என்றே 'சரி சொல்லுங்க; என்றேன், எல்லாம் விசாரித்துவிட்டு, உங்க வீட்டில் குழந்தை இருக்கிறது என்கிறீர்கள், உங்க குழந்தை கை கதவில் சிக்கிக் கொண்டால் கூட எங்க காப்பீட்டு திட்டம் பயன்கொடுக்கும் என்றார், நெருப்புன்னா வாய் வெந்திடுமா ? என்று கேட்பவரிடம் செருப்பு பிய்ந்துவிடும் என்று சொன்னால் கன்னம் பழுத்துவிடுமா ? என்று கேட்டுப்பாருங்கள் பதில் வராது, அப்பறம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடுவார். இது போன்று தான் குழந்தை கை நசுங்குவதைப் பற்றிப் பேசுகிறானே என்று எனக்கு 'திக்' என ஆகியது. 'தயவு செய்து நான் திட்டுவதற்குள் போனை வைத்துவிடுங்கள்" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன், காப்பீட்டு முகவர்களில் 'இங்கிதம்' தெரியாதவர்களும் உண்டு, என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன், குழந்தைகளுக்கு கையில் அடிபடுவது ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வு என்றாலும் அதற்கு குழந்தைகளின்  வலியை மீறி பெற்றோர்களுக்குத்தான் வலி மிகுதி, முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பவைத் தவிர்த்து குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் விபத்துகள் பெற்றோர்களின் கவனக் குறைவும் பெறுப்பின்மையும்  தான் காரணம், அந்த அளவுக்கு அசட்டையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொண்டு பெருமைப்பட்டு சீராட்டுவதில்  என்ன பயன், அதற்கெல்லாம் காப்பீடு எடுத்து அதை வாங்க நேரிடும் கொடுமையைப் பற்றி நினைக்க விரும்பாததால் அந்த முகவரிடம் என்னால் தொடர்ந்து பேசவிருப்பமில்லை.

எங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 6 ஆம் தளத்தில் இருக்கிறது, மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் படுக்க அறைக் கதவுகள் திறந்திருக்கும் பொழுது அதை சுவற்றுடன் கூடிய காந்த பொருத்தியில் அணைத்து வைக்காவிட்டால் படுக்கை அறை சன்னல்களையும், வீட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தால் அறைக்குள் காற்று நுழைந்து வெளியேறும் காற்று சுழற்சியின் அழுத்ததால் படுக்கையறைக் கதவு 'மடிரென்று பெரும் ஓசையுடன் சாத்திக் கொள்ளும்' நானும் பலமுறை சன்னல் கதவை திறந்து வைத்தால் படுக்கை அறைக் கதவை மூடி வையுங்கள், என்று சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டேன், நான் கவனித்து இருந்தால் காற்று மிகுதியாக உள்ளே வராத அளவுக்கு கொஞ்சமாகத்தான் திறந்து வைப்பேன், வீட்டில் உள்ள மற்றவர்கள் கேட்கனுமே, எதுவும் நடக்காத என்ற நம்பிக்கையில் கதவு அறைந்து சாத்திக் கொள்ளும் சத்தத்தை அப்போது மட்டும் பொருட்படுத்தி பிறகு மறந்துவிடுவார்கள். வீட்டில் குழந்தை இருக்கிறது, நாம பெரியவங்க கை நசுங்கினால் தாங்கிக் கொள்வோம், குழந்தைக்கு ஏதேனும் ஆச்சுன்னா ? என்றெல்லாம் கூட சொல்லிப் பார்த்தேன்.

பிப்ரவரி மாதம் இங்கே நன்றாக காற்று சுழன்று அடிக்கும், ஒரு நாள் காலையில் 10 மணி இருக்கும் வசிப்பறையில் தொலைகாட்சிப் பார்த்துவிட்டு, படுக்க அறை குளியல் அறைக்கு செல்லலாம் என்று உள்ளே சென்று சட்டையை கழட்டி கதவின் பின் இருக்கும் ஹாங்கரில் மாட்ட கதவை கொஞ்சம் கைவைத்து விலக்க, ஏற்கனவே சுவற்றுடன் பொருத்தியில் சரியாக பொருந்தி இல்லாததால், அடித்த காற்றுக்கு வேகாமாக சாத்திக் கொள்ள கதவு துவங்கியது, 'மடீர்' சத்தத்தையாவது தடுக்கலாமே என்று மிக அவசரமாக, செயல்பட ஆள்காட்டிவிரல் மட்டும் முந்திக் கொள்ள, காற்றுவிசையுடன் கூடிய கதவின் (இங்கெல்லாம் தீ தடுப்பு உலோககலவையுடன் கதவு செய்திருப்பார்கள், ஒரு கதவு ஐம்பது கிலோவுக்கு குறையாது) மொத்த எடையும் கதவு தாழ்பாள் போடும் இடத்தில் ஆள்கட்டி விரலில் சரியாக நகக்கண்ணில் 'நச்ச்.......'  மிகவும் வேகமாக மோத,   மரண வலி

'நான் எவ்வளவு தலைப்பாடாக அடித்துக் கொண்டேன் கேட்டீர்களா ?' இன்னேரம் குழந்தை விரலாக இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? என்றெல்லாம் சொல்ல சொல்ல அதன் பிறகு கவனமாக இருக்கிறார்கள், விரல் கதவில் நசுங்கிய பிறகு தாங்க முடியாத வலி, உடனேயே இரத்தம் நகத்திற்குள் கட்டிக் கொண்டது, வெளிக்காயம் எதுவுமில்லை,  விரலில் தொடர்ந்து சுத்தியால் அடிப்பது போன்று 'விண் விண்' ஒரு மாதிரி தெறிப்பான வலி மறுநாள் காலைவரை நீடித்தது, முதல் நாள் இளம் சிவப்பாக உள்ளுக்குள் தெரிந்த நகம் நாள் ஆக ஆக கருமைக்கு மாறியது, அவ்வளவு தான் இனி ஆள்காட்டி விரலில் நகமே இருக்காது, தேவை இல்லாத பங்கம், எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்றெல்லாம் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது,  மூன்றாம் நாளில் இருந்து விரல் வலி முற்றிலும் குறைந்தது

கிட்டதட்ட இரண்டு மாதங்களாக  நகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாளுக்கு நாள் கருப்படைய கொஞ்சமும் வளர்ச்சி இன்றி இருந்ததால், ஆள்காட்டிவிரலில் கதை முடிந்தது என்றே நினைக்கத் துவங்கினேன், இரண்டு மாதம் ஆன பிறகு நகக்கண்ணில் இருந்து நகம் பிரியத் துவங்கி விரலுக்கும் நகத்திற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்படத் துவங்கியது, அவ்வளவு தான் நகம் நகம்..........போச்சு என்றே நினைத்தேன், சட்டை மாட்டும் பொழுது அல்லது ஏதோ நூலிலோ, கம்பியிலோ விபத்தாக பிய்ந்துவரும் நகம் சிக்கிக் கொண்டு பெயர்த்து கொண்டால் மீண்டும் மரண வலி எடுக்குமே.... என்பதால் பேண்ட் எய்டை விரல் மீது சுற்றிக் கொண்டேன், நாள் தோறும் அதை மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டு வர நகக்கண்ணில் இருந்து மேலும் மேலும் நகம் வளரும் திசைக்கு பெரிய இடைவெளி விட்டு விலகிக் கொண்டே சென்றது, பின்னர் இரண்டு வாரம் கழித்து  அடிபட்ட நகத்திற்கும் நகக்கண்ணிற்குமான இடத்தை வலது விரல் நகத்தால் அழுத்திப் பார்த்தேன்.

 'அப்பாடா' நக்கண்ணில் இருந்து புதிய நகம் வளரும் அழுத்தத்தை அதில் உணர்ந்தேன், அப்போதும் முழு நகமும் நசிங்கிய பிறகு அடிச் சதை காய்ந்து போய் இருக்குமே அதன் மீது வளர்ந்து வரும் நகம் படர்ந்து வளருமா ? என்ற ஐயம் இருந்தது, நானும் தொடர்ந்து ஒரு மாதம் நாள் தோறும் பேண்ட் எய்டுகளை சுற்றி சுற்றி காத்துவந்தேன், வெள்ளைக்கரு மீது முட்டை ஓடு உருவாகுவதைப் போல் அடிபட்ட நகத்தை முட்டித் தள்ளிக் கொண்டே புதிய நகம் முன்னேற விரல் நுணியில் பாதி அளவுக்கு பழைய நகம் தள்ளப்பட்டு அதற்கு மேல் அதற்கு தாங்கிப் பிடிக்க உறுதி இல்லாததால் ஒரு நாள் பையினுள் கைவிட்டு எதோ தேட பழைய நகம் முற்றிலும் பிய்ந்து தொங்கிவிட , ஆனால் வலி இல்லை. விரல் நுணியில் பாதி வளர்ந்த நகம், மீதம் சற்று மென்மையான சதைப் பகுதியாக தெரிந்தது, இதற்கு மேல் நகம் வளராதோ ? மீண்டும் ஐயம். ஆனாலும் தொடர்ந்து விரல் நுணியை ஓரளவு ஈரப்பதத்துடன், பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற முடிவு செய்து பேண்ட் எய்டு சுற்றியே வைத்திருந்தேன், அதன் பிறகு 15 நாள் ஆகி இருக்கும், விரலில் நகம் விழுந்த அடையாளமே தெரியாத அளவுக்கு  வளர்ந்திருந்தது, அடுத்த அடுத்தவாரம் நகம் வெட்டும் அளவுக்கு வளர்ந்துவிடும். மீண்டும் நகம் பழையபடி வளர்ந்து ஆள்காட்டி விரலை வடிவத்திற்கு கொண்டுவந்த பிறகும், அதன் வளர்ச்சியின் போதும் எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் என்னால் மட்டும் தான் உணரமுடியும். 


இதிலிருந்து நான் அறிந்து கொண்டது, விபத்தில் விரல் பகுதி சேதமடையாமல்  நகம் முற்றிலும் சிதைந்தால் கூட மூன்று மாத இடைவெளியில் மீண்டும் வளர்ந்துவிடும். நாம் அதுவரை அப்பகுதியை தூய்மையாக பாதுகாத்து வரவேண்டும், கலவரம் / கவலை அடையத்தேவையில்லை.

ஏற்கனவே வேறொரு விபத்து, அதுவும்  இது போல்உள்ளுணர்வு சொன்னது நடந்திருக்கிறது

9 ஜூலை, 2013

குடுமி - 2

இது தொடர் இடுகை இல்லை, ஏற்கனவே குடுமி பற்றி ஒண்ணு எழுதியதால், அடுத்து இது இரண்டாவது ஆனா இது வேற தகவல். முன்பு எழுதிய குடுமிக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் சிண்டு முடிதலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கிறேன். வேண்டுமென்றால் சிங்கம் -2 மாதிரின்னு வைத்துக் கொள்ளுங்கள்

***********

எங்க ஊருல (சிங்கப்பூர்காரவுக தமிழ்நாட்டில் இருந்து வந்தவகளை ஊருக்காரவகன்னு 'செல்லமா' சொல்லுவாக, அவங்களுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து ஒருவர் சிங்கப்பூர் வந்தாலும் அவுகளும் ஊருக்காரவுக தான், சென்னை வாசிகளே சென்னைக்கு வருபவர்களை ஊரான் என்று சொல்லும் முன் உங்களையும் 'நாங்க' ஊருக்காரவங்கேன்னு தான் சொல்லுதோம் என்பதை நினைவில் கொள்க)  ஜெகநாத் ரத யாத்ரைன்னு பல இடங்களில் அறிவிப்பு சுவரொட்டிகள் இருந்ததன,  வீட்டுக்காரம்மாவின் தெரிஞ்சவங்க கொஞ்சபேர் ஹ(அ)ரே இராமா ஹ(அ)ரே கிருஷ்ணா  இயக்கத்தினர், ரதயாத்ரையில் நேரடியாக பங்கெடுப்பவர்கள், அதனால் நாமும் போய் பார்த்து வருவோம் என்று அழைத்தார். அரே இராமா அரே கிருஷ்ணா குழுதான் ரதயாத்ரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

புள்ளைக் குட்டியோடு குடும்பமாக இரத யாத்ரை பார்க்கக் கிளம்பினோம், ரதயாத்ரை எங்கே நடந்தது என்றால் ? அது தோபாயா என்னும் இடத்தில் அமைந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் தான் நடந்தது. சிங்கப்பூரில் ரதயாத்ரையா ? இதுக்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள்,. இந்தியாவில் நடக்கும் ரதயாத்ரை குறித்து சிங்கப்பூருக்கு தெரிந்திருக்காதா ? 1988ல் இருந்து நடக்கிறதாம். இதற்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

அ.ரா.அ.கி: எங்களுக்கு இரத யாத்ரை நடத்த அனுமதி வேண்டும்......நாங்க ரதத்தை ஊர்வலமாக கொண்டு போவோம்

சிங்கப்பூர்.அரசு : சிங்கப்பூரில் ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது

அ.ரா.அ.கி: இது எங்க பண்பாடு, நாங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வோம், ஆடிக் கொண்டே செல்வோம், பல சமயங்களை மதிக்கிற நீங்கள் இதையும் அனுமதிக்கனும்.

சிங்கப்பூர்.அரசு :  சிங்கப்பூரில் சாலைகளில் எந்த ஒரு மதம் சார்ந்த / நம்பிக்கை சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை....உங்களுக்கு சிறப்பு அனுமதி தருகிறோம், ஆனா நாங்க சொல்ற இடத்தில் தான் நடத்திக்கனும், அங்க நீங்க ஊர்வலம் போவிங்களோ, ஆடுவிங்களோ,,,,,,,வேற வாய்பில்லை

அ.ரா.அ.கி:  முடியாது...............ஆனா முடியும் - 

என்று ஒருவழியாக அனுமதிபெற்று 25 ஆண்டுகளாக இரத யாத்ரை நடத்திவருகிறார்களாம்.  விழாவில் ஒருவர் 1988ல் இருந்து நடப்பதாக அறிவித்தார்

********

ரத யாத்ரை நடந்த இடம் ஓட்டப்பந்தயம் நடத்தக் கூடிய பெரிய கோள வடிவிலான ஓட்ட மைதானம். விழாவிற்கு வருபவர்களை 'ஹரே இராமா' சொல்லி வரவேற்க இரண்டு இளைஞர்கள், அவர்களிடம் சிறப்பு குடுமி எதுவும் இல்லை, அதைத் தாண்டி உள்ளே சென்றால்  பஞ்சு மிட்டாய், அப்பறம் நூல்கள் விற்பனை, இன்னும் வெஜ்டேரியன் பிஸ்ஸா உள்ளிட்ட சில ஸ்டால்கள் இருந்தன, மைதானத்தின் நடுவில் நான்கு பலூன் சிலைகள், இரண்டு பக்கமும் நீலம் மற்றும் காவி உடை அணிந்த கைகளை தூக்கியபடி பால கிருஷ்ணன், நடுவில் ஏதோ அசுர உருவங்கள், விளையாட்டு மைதானத்தில் ஓட்டம் துவங்கும் இடத்தில் மூன்று இரதம், துவாரக கோவில் அமைப்பில் செய்யப்பட்ட ரதம், சுமார் இருபது அடி இருக்கும், அவற்றின் ஒவ்வொன்றிலும் மழுங்க சிரைத்த தலையில் பின்மண்டையில் மட்டும் கேள்விக்குறி மற்றும் ஆச்சரிய குறி அமைப்புகளில் குடுமியுடன் பூசாரிகள் நின்று கொண்டிருந்தனர், 


ஒவ்வொரு ரதத்தின் முன்பு திரளான அ.ரா.அ.கி இயக்கத்தினர் ஜிங்கச்சா மாதிரி எதையோ தட்டி தட்டி பாட்டுப் பாடிக் கொண்டே உற்சாகத்துடன் துள்ளி ஆடிக் கொண்டு இருந்தனர். ஓ இது தான் கிருஷ்ணர் அன்பில் அன்பர்கள் திளைத்திருத்தலா ? அதிலும் வெள்ளைக்காரர்கள் குடுமியோடு துள்ளிக் கொண்டு இருந்தது பரவசமூட்டியது. என்னதான் நீங்களெல்லாம் செவ்வாயில் ஆராய்ச்சி நடத்தினாலும் எங்காளுங்க உங்களையும் மொட்ட போட்டு வெறுவாயால் பாட வச்சு துள்ள வச்சிருக்காங்களேன்னு நினைக்க பரவசம்.

திரைப்பட நடிகர்கள் படத்துக்கு படம் 'கெட்டப்' மாற்ற தலையிலும், மீசையிலும், தாடியிலும் .......மொத்தத்தில் முடியில் கைவைப்பது போல்.....எந்த ஒரு மத அடையாளமும் தனக்கான கட்டிங்க் ஷேவிங்க் வைத்திருக்கிறது, அ.ரா.அ.கி இயக்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள் இராமனுஜர் போன்று மொட்டை அடித்துக் கொண்டு பின்பக்(ங்)கம் கொஞ்சம் குஞ்சம் போன்று சிறு குடுமி வைத்திருக்கிறார்கள், அதிலும் மேல்சாதியினர் விடாப்படியாக பூணூல் அணிந்திருக்கின்றனர் (வெள்ளைக்காரன் பூணூல் போடவில்லை), அதில் ஓரளவு ஈடுபாட்டில் உள்ளவர்கள் முழுக்க மொட்டை அடிக்காமல் பின்பக்கம் ஒரு சிண்டு முடிந்து கொள்கிறார்கள். நெற்றியில் கீற்று போன்று சந்தனம் வைத்துக் கொள்கிறார்கள், 

விழாவில் சுமார் 500 பேர்கள் வரை கலந்து கொண்டு இருப்பார்கள் என்றே நினைக்கிறேன், கலந்து கொண்ட தமிழ் முகங்கள் மிகக் குறைவு, அவர்களுடைய வழிபாட்டு முறைகளும்,ரத அமைப்பும், அந்த பாடல்களும் தமிழ் பண்பாட்டிற்கும் அதற்கும் வெகு தொலைவு போல், நாம் எதோ அழைக்காத திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றது போல் வெகு அன்னியமாக இருந்தது (ஏன்யா போனே ? ன்னு கேட்காதிங்க........நான் பக்தி என்ற அடிப்படை இல்லாமல் நாகையில் கோவில் திருவிழாக்களுக்கு சென்றிருக்கிறேன், வேளாங்கன்னி திருவிழாவிற்குக் கூட சென்றிருக்கிறேன், அங்கெயெல்லாம் அந்த அந்நிய உணர்வு வந்ததே இல்லை) 

*****


இதோ யாத்திரை துவங்குகிறது..என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள், இரதம் ஒவ்வொன்றாக கிளம்பி ஓட்டப்பந்தைய பாதையில் சுற்றத் துவங்க திரளான பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் விளையாட்டு மைதானத்தை சுற்றி வருவதால் என்ன நன்மையோ ? எத்தனை முறை சுற்றினார்கள் என்று தெரியாது, நான் ஒரு சுற்று முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டேன், இன்னும் சில நூறு ஆண்டுகள் சென்றால் கிருஷ்ணன் சிங்கப்பூர் ப்ளே க்ராவுண்டில் தான் பிறந்தார் என்ற கதைகள் கூட எழுதப்படலாம், ஆனால் இதன் பிற நன்மைகள் பார்தோமேயன்றால் பொது சனத்துக்கு எந்த இடையூறும் இல்லை, இந்த இரத யாத்திரையினால் மதக்கலவரம் இல்லை. இதையே ஏன் இந்தியாவிலும் பின்பற்றக் கூடாது ? இந்தியாவில் இரத யாத்திரை என்றாலே இரத்த யாத்திரையா என்று கேட்கும் அளவுக்கு அல்லவா இருக்கிறது.

இதே இயக்கத்தினர் ஒரு முறை தெப்பம் விடுவதாக, நீச்சல் குளத்தில் தெப்பம் விட்டு விழா நடத்தினார்கள். விழாவில் ஹைலைட் எனக்கு பிடித்தது அவர்கள் வைத்திருந்த குடுமி தான்.

ம் நிரந்தர சொர்கத்தின் ஆள் பற்றக் குறையை நீக்கனும் என்றால் இந்த சிலை வணங்களும், இணை வைப்பவர்களும் திருந்தனும் இதையெல்லாம் அல்லா எப்போ செய்து முடிக்கப் போறாரோ............? நோன்பு திறக்கும் நேரத்தில் இதை எழுதிவிட்டு எனக்கு கவலையோ கவலை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்