பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2012

பழைய சோறு நல்லதா ?


காலை உணவு குறித்து இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை, காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பேன் என்பதை பலர் பெருமையாகச் சொல்கிறார்கள், காரணம் வறுமை இல்லை என்றாலும் காலை உணவைத் தவிர்ப்பது எதோ ஒரு புதிய உடற்பயிற்சி போன்று நம்பப்படுவதுட்ன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் என்றும் நம்புகிறார்கள், உண்மையில் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு குறைபாடு வருவதற்கான வாய்ப்பு மிகுதி. இரவு உணவிற்கும் காலை உணவிற்குமான இடைவெளி ஏற்கனவே குறைந்தது 8 மணி நேரமாக இருக்கும் பொழுது, அதை தவிர்த்துவிடுவதால் அந்த இடைவெளி கூடுதலாகி 12 மணி நேரம் வரையிலும் கூட நீட்டிக்கப்படுகிறது, உடலில் உற்பத்தியாகும் இரத்ததிற்கேற்ற அளவில் தான் கணையம் வேலை செய்து இன்சுலினைச் சுரந்து இரத்தத்தில் உள்ள சர்கரையை எரிக்கிறது, காலை உணவு எடுத்த்துக் கொள்ளாததால் இரத்த உற்பத்திக் குறைந்த நிலையில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதும் இயல்பாகவே குறைய, நாளடைவில் கணையத்தின் இன்சுலின் உற்பத்தித் திறனும் குறைந்துவிடும். இதனால்  இன்சுலின் சுரப்பதில் கட்டுப்பாடு ஏற்பட, வேளை விட்டு சாப்பிடும் போது உண்டாகும் உபரியான இரத்தத்தில்  உபரியாக உற்பத்தியான சர்க்கரையை எரிக்க முடியாமல் அவை இரத்ததில்யே தங்குவதைத் தான் நீரிழிவு குறைபாடு என்கிறார்கள், அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை எரிக்கப்படாமல் இரத்ததுடன் கலந்து இருப்பதைத் தான் நீரிழிவு என்கிறது மருத்துவ்ச உலகம், இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுவிட முடியாது, ஏனெனில் இரத்தத்தில் சேரும் சர்க்கரை இரத்ததின் நீர்மத் தன்மையை கெட்டியாக்குவதுடன் இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

இரத்த சர்க்கரை அளவு கூட உடலில் அனைத்து பாகங்களுக்குமான தேவையான இரத்த ஓட்டம் குறைய இயல்பாகவே உடல் பாகங்கள் சீர்கேடு அடைகின்றன, அதனால் தான் மற்ற நோய்களைவிட நீரிழிவு நோய் மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அரைகூவலாக இருக்கிறது. நீரிழிவு குறைபாடு இதனை நோய் என்று சொல்லமுடியாது) முற்றிலும் குணப்படுத்தப்படாவிட்டாலும் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்பது தான் தற்காலிக மருத்துவத் தீர்வு, அதாவது இரத்தச் சர்க்கரையைக் கூட்டாத வண்ணம் உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதுடன் தேவையான போது அதற்குறிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இதைத் தவிர்த்து மருத்துவ உலகம் நீரிழிவு குறித்து முழுமையான எந்த ஒரு தீர்வையும் இதுவரை கண்டிபிடிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை. மற்றொரு நிரந்தர தீர்வு மாற்று கணையம் பொறுத்துவது தான், ஆனாலும் உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கணையம் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது, கணையம் சிறுநீரகங்களைப் போல் இரண்டாக இல்லாமல் ஒன்றாக இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை, மூளைச் சாவு கண்டவர்களிடம் இருந்து கணையம் பெறப்பட்டாலும் அவை முற்றிலும் பழுதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொறுத்தப்படுவதால் பொதுவான நீரிழிவு குறைபாட்டினருக்கு மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்கான வாய்புகள் கிடையாது. மாற்றுக் கணையம் பொருந்துவதும் மிகக் கடினம், பிழைப்பதற்கான வாய்ப்புகளும் அரிது. இதனால் தான் நீரிழிவுக்கு  இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடும் தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. 

எனக்கெல்லாம் எந்த நோயும் அண்டாது என்று நம்புவர்களும் இருக்கிறார்கள்', இவையெல்லாம் நாற்பது வயதுவரையான நம்பிக்கையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நாற்பது வயதிற்குமேல் இப்படியான நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இதய துடிப்பு, சிறுநீர், கண்கள் ஆகியவற்றை சோதனை செய்து அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறையான சோதனை நோய்களின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுப்பிடிக்கப்படுவதால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள வாய்பாக அமையும் அலட்சியம் காட்டினால் 'நேற்று வரை நன்றாகத் தான் இருந்தார் என்று நாலு பேர் தன்னைப் பற்றிப் பேசும் போது கேட்க முடியாமல் போய்விடும், இதை பயமுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளாமல் பரித்துரை என்ற அளவில் பார்த்தால் தனக்கும் தனக்கும் பின்னால் இருக்கும் குடும்பத்தின் மீதான நன்மை கருதியவை என்று புரிந்து கொள்ளப்படும். சர்கரை நோய் 50 - 60 வயதிற்கு மேல் தான் வரும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உள்ளது, அதன் துவக்க காலம் 30 வயதில் கூட துவங்கி இருக்க இன்றைக்கு வாய்ப்புகள் இருப்பதால் 35 வயதில் நீரிழிவு குறைபாடுகள் வெகு சாதாரணமானவையாக உள்ளது. நீர்ழிவு நோய்களில்  இருவகைப் பிரிவில் ஒன்று (Type 2) பெற்றோர் வழியாக பரம்பரையாக வருவது என்பதால் காலை உணவு எடுத்துக் கொள்ளாதவர்களை அவை 30 வயதிலேயே பற்றிவிடுகிறது. தனக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அறிந்து கொள்ளலாம், நீரிழிவினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் (Symptoms) குறித்து நூற்றுக் கணக்கான இணையத் தளங்கள் தகவல்களைத் தருகின்றன.


நீரிழிவு குறைபாட்டால் ஏற்படும் உடல் மாற்றங்களில் பொதுவானவை

1. சிறுநீர் பையில் தேவையான அழுத்தம் இல்லாவிட்டாலும் குளிர்ந்த நீரில் அல்லது பச்சைத் தண்ணீரில் காலோ கையோ படும் பொழுது  சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் கழிவரை உள்ளிட்ட இடங்களில் எறும்புகளைப் பார்க்க முடியும், சிறுநீரில் இருக்கும் சர்கரையை நுகர எறும்புகள் சேறும்.

2. கணுக்காலிலும் அதற்கும் கீழேயும் கால் பகுதிகளின் தோல் உடல் தோலின் நிறத்தைவிட கருமையாக அல்லது கருமைத் திட்டுகள் காணப்படுதல் மற்றும் காலில் அடி விரல் உள்ளிட்ட சில பகுதிகளில் உணர்வுகள் குறைந்திருத்தல்

3. ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் வெடிப்பு, இவை பாலியல் ரீதியான அல்லது அப்பகுதிகளில் காற்றோட்டம் குறைவானதாக  இருப்பதால் ஏற்படும் வியர்வையினால் உற்பத்தி ஆகும் பாக்டீரியா வகைச் சார்ந்த நோயாக இருக்கும் என்று நினைத்து களிம்புகளை தடவி குணப்படுத்திக் கொள்வர். இவை சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும், காரணம் சிறுநீரில் சேர்ந்திருக்கும் சர்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து தோலின் கடினத் தன்மையைக் குறைக்க வெடிப்பு ஏற்படும். இவற்றைக் மருத்துகளின் மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் மருந்துகளற்ற நிரந்தரத் தீர்வு 'முனைத் தோல் நீக்கம் (சுன்னத்)' இங்கே அடிக்கடி அந்த குறைபாடு கண்டவர்களுக்கான பரிந்துரை என்ற அளவில் சுன்னத் பரிந்துரை உள்ளது மற்றபடி நலமாக இருப்பவர்களுக்கு சுன்னத் செய்வது உறுப்பு சேதம், பல் சொத்தை ஆகமல் தடுக்க அதை எடுத்துவிடுவது தான் நல்லது என்பது போன்ற முட்டாள் தனமான பரிந்துரை.

4. எப்போதும் தாகம் எடுப்பது

5. வழக்கத்துக்கு மாறான சோர்வு மற்றும் உடல் எடை குறைவு

6. உடலில் பல பகுதிகளில் ஏற்படும் அரிப்பு, இரத்த ஓட்டக் குறைவினால் தோல் உலர்ந்து போவதால் ஏற்படும்

7. கண் பார்வை அவ்வபோது மங்குதல்

8. காலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுப்பது.

*********

பசுமாடு பற்றிய தலைப்பில் ஏன் தென்னை மரம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் ? என்று வாசிப்பவர்கள் நினைக்கக் கூடும், பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம்  புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை, பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது, அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும். 

பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன,  மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.

பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம், கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல. பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான்.  பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும். நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும்   படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.

இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.

15 ஜூலை, 2012

கடன் வாங்கிக் களித்தல் !


தலைப்பில் எழுத்துப் பிழையில்லை , நகைக்காமல் முகம் சுளிக்காமல், தொடர்ந்து வாசிக்கலாம், எனது இடுகைகளின் எழுத்துப் பிழைகள் தட்டச்சு வேகத்தினால் வருவது தவிர்த்து தமிழ் சொற்கள் குறித்த அறியாமையினால் குழப்பத்தினால் ஏற்படுவது இல்லை, மறுவாசிப்பு செய்யும் முன் வெளி இட்டுவிட்டு நேரமிருந்தால் திரும்பப் படித்து சரிசெய்வேன், அல்லது யாரேனும் சுட்டிக்காட்டினால் சரி செய்து கொள்வேன். எழுத்துப் பிழையுடன் தமிழில் எழுதுவது குற்றம் இல்லை என்றாலும் குறைத்துக் கொண்டு எழுதினால் நல்லது என்பதே எனது பரிந்துரை. தவிர பதிவு எழுதவும், வெளி இடவும் நான் நேரம் பார்ப்பது கிடையாது, அதிகாலை நான்கு மணிக்கு கூட வெளி இட்டு இருக்கிறேன், எழுதுவதற்கு கிடைக்கும் நேரம் தான் வெளி இடுவதற்கு கிடைக்கும் நேரம், அந்த நேரத்தில் வாசிப்பார்களா ? ஹிட்ஸ் தேறுமா என்பது குறித்த கவலை எனக்கு இல்லை, என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவுகளில் எழுதுவது என்பது திறந்த நாள் குறிப்பில் எழுதுவது போன்றது, வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை கொள்வது கிடையாது, அதே நேரத்தில்  எழுதுவதில் இரண்டு வரியாவது வாசித்தவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் நேரத்தில் சில நிமிடங்களை வாசிக்கும் போது, என்(எழுத்துகளி)னால் விழுங்கப்பட்டுவிடுகிறது என்கிற புரிந்துணர்வும் பொறுப்பும் எனக்கு உண்டு. 

*****

சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் மூலம் கடனட்டை வழங்கும் வங்கிகள் எப்படிமுக நூல் (பேஸ் புக்)  வாடிக்கையாளர்களை பின் தொடர்கிறார்கள் என்பதைக் காட்டி இருந்தார்கள், அந்த நிகழ்ச்சியின் பெயர் குற்றமும் பின்னனியும், துப்பறிந்து மிகுந்த முயற்சியால் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு நிகழ்வு போலவும், இதன் மூலம் பேஸ் புக் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது போன்ற தொனியில் நிகழ்ச்சி படைக்கப்பட்டு இருந்தது, அதாவது முகம் தெரியாத பெண்ணிடம் அசடு வழிந்து தனது தொடர்பு எண்களைக் கொடுத்த ஒரு இளைஞர் எப்படி சிக்க வைக்கப்பட்டார் என்பது தான் நிகழ்சியில் காட்டபட்டது, இதில் சித்தரிக்கப்பட்ட காட்சியில் நடிக்கும் பெண்ணையும், பாதிக்கப்பட்டவர் பற்றியும் அவர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்றும் காட்டினார்கள், இந்த நிகழ்ச்சியைப் பார்பவர்கள் முக நூலில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா ? என்று விழி விறிய வியப்படைந்தாலும் முக நூல் பயன்படுத்தும் நமக்கெல்லாம் அது ஒரு மொக்கை தகவல் தான், ஆனாலும் விஜய் தொலைகாட்சியின் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் நேர்மை கேள்விக் குறி.

கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக் கடன், வளர்த்தக் கடன், நன்றிக் கடன் என ஏகப்பட்ட கடன்களோடு தான் வாழ்கிறோம், அது தவிர மிகவும் தேவையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான், கடன் வாங்குவது கேவலமான, மானக் கேடான பிழைப்பு இல்லை, ஆனால் அவற்றை முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்கிற நேர்மை இருக்க வேண்டும், இந்த நேர்மையை நம்பித்தான் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன, அவ்வாறு நேர்மை தவறியவர்களிடம் வசூலிக்க தான தண்டத்தையெல்லாம் பயன்படுத்துகின்றன, அவர்களின் வழிமுறைகள் தவறாக இருந்தாலும் கொடுத்த கடனை மீட்பதற்கு அவர்கள் நேர்மையற்றவர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நான் இதில் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி தற்காத்து எதுவும் சொல்லவில்லை,  அது போன்றவே கடன் கட்டமுடியாமல் நெருக்குதலுக்கு ஆளாகி தற்கொலை செய்து  கொள்ளும் விவாசாயிகள் குறித்து எதுவும் சொல்லவில்லை, அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள், அரசே மனது வைத்து கடனை தள்ளுபடி செய்தால் தான் உண்டு, அவை வேறு,  இங்கு பேசப்படுவது வங்கிகளில் கடனட்டை மூலம் பெற்றுக் கொள்ளும் கடன் குறித்தது தான்.

குறிப்பிட்ட நிகழ்சியில் கடன் அட்டை மூலமாக செலவு செய்து கடன் வாங்கியதாகக் காட்டப்பட்ட நபர் பணத்தை தண்ணி போல் செலவு செய்துவிட்டு திருப்பிக் கொடுக்க முடியாமல் லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு பெங்களூரை விட்டு விட்டு சென்னைக்கு ஓடி வந்து வேறொரு நிறுவனத்தில் வேலை செய்பவர். வங்கி முகநூல் வழியாக  தன் முகவரை பொறி(ரி)யாக வைத்ததால் அந்த இளைஞர் வசமாக சிக்கினார். இவ்வளவையும் காட்டிய விஜய் தொலைகாட்சி, அந்த இளைஞரிடம் உங்களைப் போன்ற நேர்மை அற்றவர்களால் தான் இது போன்று நடந்து கொள்ளும் சூழலை கடன் வழங்கும் வங்கிக்கு ஏற்படுகிறது என்பதைச் சொல்லவே இல்லை. இது போன்ற நபர்கள் அரசு துறைக்கோ, அல்லது பெரிய நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் உயரும் பொழுது கையாடல், லஞ்சம் என்ற வகையிலெல்லாம் அந்த அமைப்பிற்கே பலத்த சேதம் ஏற்படும் என்பதையும் விஜய் தொலைகாட்சி சுட்டிக் காட்டி இருக்கலாம்.

கடன் அட்டையைப் பெற்றுக் கொண்டு வங்கிகளை எப்படி ஏமாற்றுவது என்பதையும், தான் அவ்வாறு ஏமாற்றி இருக்கிறேன் என்றும் சிலர் வெளிப்படையாகப் பேசும் போது அவர்களது அடிப்படை நேர்மையை போட்டு உடைத்துவிடுகிறார்கள் என்பதை அவர்களில் பலர் நினைப்பது இல்லை, இதை ஒரு சாகச நிகழ்ச்சி போலவும், தன்னை திறமை கொண்டவராகவும் காட்டுவதாக நினைக்கிறார்கள்,நேற்று ஏமாற்றியது வங்கி என்றால் நாளைக்கு ஏமாறப்படுவது யாரோ ?

வங்கிகளை ஏமாற்றுபவர்களை வங்கி தனது இணையத் தளத்தில் நிழல்படத்துடன் வெளி இட்டால் இப்படியான வங்கிக் கொள்ளையர்கள் குறையலாம். ஆனாலும் மனித உரிமை அடிப்படை மற்றும் திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால் இவற்றை நான் பரிந்துரைக்க மாட்டேன்.

13 ஜூலை, 2012

மரண தண்டனையும் இஸ்லாமிய பதிவர்களும் !


மரண தண்டனைக்கு எதிராக வைக்கும் ஞாயங்களில் முதன்மையானது மனிதாபிமானமோ, அனுதாபமோ அல்லது மரணதண்டனைப் பெற்றவர்களின் குடும்பம் பிறகு சந்திக்கும் பாதிப்புகள் குறித்தோ அல்ல, மாறாக கொலை என்பது மரணம் விளைவித்தக் குற்றம் என்ற வகைப்படுத்தப்படும் போது மரண தண்டனை என்பது மற்றுமொரு கொலைக்கான ஒப்புதல் பெற்ற ஆணை என்றே பொருள், கொலையும் அதன் மூலம் பெறும் மரணத்தின் வலியும் அதன் பாதிப்பும் கொடுமையானது என்றே உணரும் எவரும் அதை இன்னொருவருக்கு பரிந்துரைக்க மாட்டார் என்கிற மிக மிக அடிப்படைப் புரிதலில் தான் மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன் தான். பல கொலைகளை செய்துவிட்டு சாட்சியோடு மாட்டிக் கொள்பவன் மட்டுமே தண்டனைப் பெறுகிறான் என்பதால் மரண தண்டனை என்பது சமூகத்தில் குற்றங்களைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, 

எந்த ஒரு நாட்டிலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் என்ற சட்டம் இருந்தால் அதனை லாவகமாக மீறுகிறவர்களும் இருக்கிறார்கள். மாட்டிக் கொள்ளாதவர்கள் தவிர்த்து மற்றவர்கள் தண்டனைப் பெறுகிறார்கள், கூலிப்படைகளின் செயலும், அவர்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களும், மதவெறியர்களும்ம், தீவிரவாதிகளும் தீட்டும் திட்டங்கள் தவிர்த்து கொலைக்கானக் காரணங்கள் முன்கூட்டியே முடிவு செய்யப்படாத நிலையில் இழைக்கப்படும் கொலைக் குற்றங்கள் யாவும் சற்றே உணர்ச்சி வசப்படுவதால் நடைபெறுவது தான். ஒன்பது கொலை செய்த ஜெயபிரகாசும் கூட திட்டமிட்ட கொலை செய்யவில்லை, உணர்ச்சி வசப்பட்டு தான் கொலை செய்தான், சிறையில் அவனது நன்னடத்தை அவனை விடுதலை செய்ய வைத்தது, எங்கு இருக்கிறான் என்றே தெரியாத நிலையில் அவனும் சமூகத்தில் இருந்து மறைந்தே வாழ்கிறான், வாழ்கிறான் என்றாலும் அவனால் நாள் தோறும் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியுமா ? என்பது கேள்விக் குறி.

கொலைக்கு தீர்ப்பு கொலை - காட்டுமிராண்டித் தனமானது என்கிற என் சிந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
கொலைக்கு தீர்ப்பு கொலை என்பது அடுத்த கொலை.

இறந்தவர்களை மீட்டெடுக்க திறன் அற்ற மனித சமூகத்திற்கு உயிருடன் இருப்பவர்கள் குற்றவாளிகள் என்பதால் கொன்றுவிடும் உரிமை எதை மீட்டுத் தரும் ?

கொலையால் பாதிக்கப்பட்ட சமூத்தின் மன நிலை தெரிந்தால் மரண தண்டனை எதிர்க்க மாட்டீர்கள் ?  என்று கேட்போருக்கு ..... மரண தண்டனையால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தில் ஒருவராகவோ, அவரது மனைவியாகவோ இருந்தால் மரண தண்டனை நியாயம் என்று சொல்ல முடியுமா ?

குற்றவாளிகள் தனிமைபடுத்தப்பட வேண்டியவர்கள், கொத்தடிமையாகக் கூட மாற்றி அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பதில் எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக்காது, நானே பாதிக்கப்பட்டாலும் கூட.

*********

திட்டமிட்ட படுகொலைகள் கூட தன்னுடைய விருப்பமில்லாமல் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் குற்றத்திற்கும்  அதை செய்த குற்றவாளிக்குமான தொடர்ப்பு ஒரு ஆயுதம் என்ற அளவில் தான், ஆனால் தூண்டியவர்களை (ஆதாரமில்லை) என்று விட்டுவிட்டு (ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்டர்ம் முறைகேட்டில் அதன் நிறுவனருக்கு சம்மன் அனுப்பாமல் உயர் அதிகாரிகளை மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து நீதிமன்ற காவலாக சிறையில் வைத்தார்கள்). கொலைக் குற்றத்திற்கான தண்டனை என்ற பெயரில் ஆயுதங்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது இதையெல்லாம் சரியான நீதி என்று எப்படிச் சொல்ல முடியும் ? சிங்கப்பூரினுள் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை என்பது எல்லோருக்கும் தெரியும், அதில் சிறிய மாற்றமாக கூரியர்களாக முதல் முறை குற்றம் செய்பவர்களின் தண்டனைகள் குறித்து பரீசீலிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவித்துள்ளனர், இது ஒரு நல்ல மாற்றம் தான், உதாரணத்திற்கு சென்னையில் இருந்து கிளம்பும் ஒரு அப்பாவி பயணியிடம் இந்த மாத்திரையை எங்க சொந்தக்காரர் ஒருவர் சிங்கை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்வார், அவரிடம் சேர்த்துவிடுகிறீர்களா ? என்று கூறி போதை மாத்திரைகளைக் கொடுக்க, இன்பாமர் மூலம் தெரிந்து கொள்ளும் அரசு கொண்டுவரும் நபரை அப்படியே அள்ளி நீதிமன்றத்தில் கொண்டு சேர்த்து கையில் இருக்கும் பொருளை உறுதி செய்து மரண தண்டனை அளித்துவிடுவார்கள். இங்கு நாம் சிந்திக்க வேண்டியது கொண்டுவரும் நபர் உதவி செய்யும் மனப்பான்மையில் உள்ளவர் என்ற நிலையில் சற்று சுதாரிப்பு இல்லாத நிலையில் அவர் பெரும் சிக்கலுக்கு ஆளாகிறார்,  அந்த குறிப்பிட்ட போதைப் பொருளைக் கொடுக்கச் சொன்னவன் உறவினராகக் கூட இருப்பான், இருந்தாலும் நபர் சிக்கிய பிறகு நான் அவ்வாறு எதையுமே கொடுக்கவில்லை என்று அவனால் சாதித்துக் கொள்ள முடியும். அப்பாவியாக இருந்து ஏமாற்றப்பற்றவர்களை ஏன் தூக்கில் போட வேண்டும் ? ஆனாலும் அவர்கள் இழைத்தது குற்றம், கவனக் குறைவானது என்றாலும் குற்றம் தான் என்பதற்காக சிறை தண்டனைக் கொடுக்கலாம், அதன் மூலம் எச்சரிக்கை கொடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. 

மரண தண்டனைகள் குறித்த சிந்தனைகள் நாட்டுக்கு நாடு மனித உரிமை மற்றும் மனிதாபிமான மன நிலை வளச்சிக்கேற்ப மாறும் போது, இஸ்லாமிய பதிவர்கள் குறிப்பாக வஹாபிகள் மரண தண்டனை தேவை என்றே வாதிடுகிறார்கள்.

மரண தண்டனைக் குறித்த வஹாபிகளின் பிடிவாதங்களுக்கு காரணம் ? கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்,. கைக்கு கை மற்றும் பாலியல் குற்றத்திற்காக பெண்களை கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனைகள் சவுதியில் / ஈரானில் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் இன்னும் நடைபெறுகிறது. இஸ்லாம் சொல்வதெல்லாம் சரி என்னும் போது மரண தண்டனைக் குறித்த இஸ்லாம் பார்வையும் சரியானதே என்று சாதிப்பதற்காக வஹாபிகள் மரண தண்டனை கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

சரி, 
கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்டவை நடத்திய பாட்சா, மதானி உள்ளிட்டோருக்கு இதுவரை எத்தனை முறை நீங்கள் மரண தண்டனை தரவேண்டும் என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறீர்கள் ? என்று கேட்டால் மட்டும் அவர்கள் 'ஆர் எஸ் எஸ் சிந்தனை வெளிப்பாடு இவ்வாறு உங்களைக் கேட்கத் தூண்டுகிறது பாட்சாவின் குண்டுவெடிப்பு குற்றம் நிறுபனம் ஆகும் போது பார்க்கலாம் என்கிறார்கள், ஆனால் மோடி வகையறா நீதிமன்றத்தால் தண்டனை பெறாத நிலையில் இவர்கள் அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதிவிடுகிறார்கள்.

மதானி குற்றவாளி இல்லை, நீதிமன்றம் விடுவித்துவிட்டது, அவரை குற்றவாளி என்று சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்கிறார்கள், சாட்சி அடிப்படையில், ஆதாரம் / ஆதாரமில்லா அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது நமக்கு தெரியாதா என்ன ? ஆனாலும் மதானிக்கு பொறுத்திப் பார்க்கும் ஞாயத்தை இவர்கள் கொலைக் குற்றத்தில் விடுதலையாகும் காவிக் கும்பலுக்கும் பொறுத்திப் பார்ப்பார்களா ? உதட்டைத்தான் பிதுக்க வேண்டும்,


இன்னும் சிலர் நேர்மையாக பதில் சொல்வதாக, ஞாயம் பேசுவதாக நினைத்து, 'கோவை வெடிகுண்டு வெடிப்பின் மூல காரணம் அதற்கு முன் பத்தொன்பது பேரை காவிக் கும்பல் வெட்டி தீர்த்தது தான்......என்று சொல்லிவிட்டு அவர்களை தண்டித்தால் (பாட்சா என்று பெயரைக் குறிப்பிட்டு சொல்லாமல்) கோவை வெடிகுண்டு குற்றவாளிகளையும் தண்டிக்கலாம் என்கிறார்கள்

ஹலோ.......எவனோ 19 பேரை படுகொலை செய்ததற்கு கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்றது எந்த விதத்தில் ஞாயம் ? 40 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணியில் கொலைகாரனைத் (இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயிடுவை) தானே  தலையை வெட்டினார்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். மாறாக கொலைகாரனின் சாதிக்காரர்களை கொல்லவில்லையே ?  ஊரையே கொளுத்தவில்லையே, பழிக்கு பழி கொலைகளை ஏன் பொது மக்கள் மீது செயல்படுத்த வேண்டும் என்ற எனது கேள்விக்கு........ஒருவரும் பொறுப்பாக பதில் சொல்ல முனையவில்லை.

இவர்கள் மட்டுமல்ல காவிக் கும்பல் கூட சங்கர ராமன் படுகொலைக்கு பெரியவாளுக்கு மரண தண்டனைக் கேட்டு இருக்கிறதா ? கோர்ட் தண்டிக்கட்டும், குற்றவாளியாக நிறுபனம் ஆகட்டும் அப்பறம் (மேல் கோர்டில்) பார்க்கலாம் :) என்று தானே சொல்கிறார்கள்.

மரண தண்டனைக்கு ஆதரவான குறிப்பிட்ட மதரீதியிலான, அரசியல் ரீதியிலான நியாங்கள் எப்போதும் சமூகத்தின் மீதும் பொது மக்களின் மீதும் மிகுந்த அக்கறை உள்ளது போலவும், குற்றமற்ற சமூகத்தை உருவாக்குவது போலவும், நீதி நிலை நாட்டப்பட்டே ஆகவேண்டும் என்பது போலவும் நீட்டி முழக்கப்படுகிறது, அவர்களின் பின் புலன்களைப் பார்த்தால் அவர்கள் ஒருதலைப் பட்சமானவர்கள், அவர்கள் வழங்கும் பரிந்துரைகள் அவர்கள் சமூக / அரசியல் சார்ந்த குற்றவாளிக்கு பொருந்ததாது என்ற நிலையில் தான் வாதிடுகிறார்கள்.

பின்லேடன் தூண்டுதலில் அமெரிக்க ரெட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்படவில்லை, அதெல்லாம் அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என்றே இதே மரண தண்டனை ஆதரவு நியாயவாதிகளில் பலர் வெளிப்படையாக பின்லேடனை புனிதனாக, இஸ்லாமிய போர்வீரனாக, மாவீரனாக, மாசற்றவனாக முன் நிறுத்துகிறார்கள், அதன் தொடர்பில் தான் பின்லேடனுக்கு சென்னை மசூதியில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

உன்னைப் போல் ஒருவன் படத்தையும் விருமாண்டி படத்தையும் ஒப்பிட்டு மரண தண்டனைக் குறித்த கருத்துகளில் கமலஹாசன் தடுமாறுகிறார், தடம் மாறுகிறார், சினிமாவுக்காக எதைவேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறார்கள் என்று கண்டனமாகவே நான் எழுதினேன், உன்னைப் போல் ஒருவன் படத்தின் தண்டனைகளை இவர்கள் ஞாயம் என்றும், குற்றவாளிகள் குற்ற முகாந்திரம் இருப்பதாக காட்சி இருப்பதால் அதில் தரும் மரண தண்டனை தவறு அல்ல என்றும் சொல்லுவார்களா ?

இணைப்பு :

தற்கொலை தாக்குதல்களும் மரண தண்டனைகளும் !



12 ஜூலை, 2012

Kiasu என்றால் என்ன ?


சிங்கப்பூரில் சீனர்களிடமும் அவர்கள் மூலமாக பிறரிடமும் வழங்கும் சொல்வழக்கு 'Kiasu' இதன் பொருளும், இதன் விளக்கமும் விக்கிப்பீடியாவில் தனிப்பக்கமாக இடம் பெரும் அளவுக்கு இந்த சொல் புகழ்பெற்றது.  'fear of losing' என்பதே அதன் பொருளாகும். அதாவது தனக்கு உடைமை உடைய ஒன்றை இழந்துவிடுவோமே என்ற அச்சம் எப்போதும் உடையவர்களை இந்த க்யாசூ என்ற சொல்பதத்தில் அழைப்பார்கள்.

போற்றிப் பயன்படுத்தும் அவரவர் உடலே மண்ணுக்குள்ளோ, நெருப்பிலோ போகக் கூடியது தான் என்கிற ஆள்மன உணர்வுகள் இருந்தும் ஒப்புக் கொள்ள மனதின்றி தனக்கு உடைமையான பொருள் மீது தீவிர காதல் கொண்டர்வளே இந்த க்யாசு வகையினர். எங்க வீட்டில் வீட்டை ஒழுங்கு செய்வது என்கிற எண்ணத்தில் தேவையற்ற பொருள்கள் என்று என் மனைவி அள்ளிப் போட்டு குவித்து வைத்திருப்பதை கிளறிப் பார்த்துவிட்டு தூக்கிப்  போடுவோம் என்கிற எண்ணம் ஏற்படும் போது 'மிகவும் தேவையானது என்றால் அலட்சியமாக வைத்திருக்க மாட்டோம்' என்கிற நினைப்பில் கிளறிப் பார்க்காமல் விட்டுவிடுவேன், அப்போது எனக்கு தோன்றும் எண்ணம் 'அப்படியே ஒருவேளை இருந்தால் போனால் போகட்டுமே... மனுச உடம்பே மண்ணுக்குள் போகக் கூடியது தானே' வாங்க முடியாத பொருள்கள் எதுவும் இருக்காது என்று தேற்றிக் கொண்டுவிடுவேன், கொஞ்சம் பதைப்பாகத்தான் இருக்கும், காரணம் சில தடவைகள் கவனக் குறைவினால் வங்கி அட்டைகள் கூட குப்பைக்குள் சென்றிருக்கிறது. 

நம் வீட்டுக்குள் வந்த சாக்கில் அங்கேயே தங்கிவிடும் பயனற்ற பொருள்கள் நிறைய உண்டு, இருந்தாலும் எதற்காவது பயன்படும் என்றே அதனை  தூக்கிப் போட மனதின்றி ஆண்டுக் கணக்காக அதற்கு ஒரு இடம் கொடுத்து வைத்திருப்பார்கள், எப்போதோ பயன்படுத்திய பழைய 14" கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி பழுதாகி பயன்படாமல் இருந்தாலும் எங்கம்மா அதை இன்னும் பத்திரமாக பிரோவில் பூட்டி வைத்திருக்கிறார்கள், 'இந்த கருமத்தை தூக்கிப் போட்டால் தான் என்ன ?' என்று எத்தனையோ முறை கேட்டு இருக்கிறேன், அப்போதெல்லாம் வரும் ஒரே பதில், 'உனக்கு தேவை இல்லாமல் இருக்கலாம், யாராவது வந்து ஆராய்ச்சிக்கு என்று கேட்டாலும் கேட்பார்கள்' என்பது அம்மா சொல்லும் பதில், 14" பழைய டிவியில் ஆராய்ச்சி நடத்தப் போகிறவர் எப்பொழுது வருவார் எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' எப்போதும் வரும் என்கிற எதிர்ப்பார்ப்பு போல் நானும் காத்திருக்கிறேன். அம்மா மட்டுமல்ல அண்ணன் வீட்டில்  கூட அப்படித்தான், எதையும் தூக்கிப் போட மனமின்றி காலியான சின்ன சின்ன மருந்து பாட்டிலைக் கூட தூக்கிப் போடாமல் வைத்திருப்பார்கள். சிறுவர்களாக இருந்த போது தீபாவளிக்கு வாங்கிய மத்தாப்பு, வெடிகளை நாங்களெல்லாம் வெடித்து முடித்துவிடுவோம், அண்ணன் மட்டும் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என்று எடுத்து தனியாக வைத்திருப்பார், கார்திகைக்கும் வெடிக்கப்பட்டு இருக்காது. 

திருமணம் ஆன புதிதில் பெங்களூரில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன், நண்பர் ஆறுமாதம் முன்பே எனக்கு  முன் திருமணம் முடித்தவர், ஓரளவு வசதியான வாடகை வீட்டில் மனைவியுடன் (தனிக்குடித்தனமாக) வசித்தார், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், பெங்களூரில் ஓட்டல் எடுத்து தங்கி இருந்த நிலையில் நான் அங்கு சென்ற போது, எங்கள் வீடு இருக்கும் போது எதற்கு ஓட்டலில் தங்கவேண்டும் என்று செல்லமாக கோவித்துக் கொண்டு, அன்று காலையில் நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்து அறையைக் காலி செய்யச் சொல்லிவிட்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர் இருவரும். நாங்களும் பகல் பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி ஊர் சுற்றிவிட்டு, மாலை வீட்டுக்கு வந்ததும், அவர்கள் சிறப்பாக சமைத்திருந்த இரவு உணவை முடித்துவிட்டு பேசிக் கொண்டு இருந்து படுக்கச் செல்லும் நேரம் ஆக, எங்கள் படுக்கை அறையில் படுத்துக் கொள்ளுங்கள், அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு வசதியாக இருக்கும், நாங்கள் அடுத்த அறையில் படுத்துக் கொள்கிறோம் என்று நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால் எங்களுக்கு அவர்களது படுக்கை அறையை விட்டுக் கொடுத்தனர். 

ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் உட்கார 'மொட மொட' என்ற சத்தம், மாமனார் சீராகக் கொடுத்த படுக்கையின் பாலித்தீன் கவர்கள் பிரிக்கப்படாமல் அதன் மீது மெல்லிய படுக்கை விரிப்பு போடப்பட்டு இருந்தது, அதில் படுக்கலாம், ஆனால் உருண்டு பிரளவோ, வேறெதுவும் செய்ய முடியாது, பிரண்டாலே அடுத்த அறைக்கு 'மொட மொட' சத்தம் கேட்கும் நிலையில் நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த நிலையில் தூங்கி எழ விடிந்திருந்தது. காலையில் நண்பர் 'வீடு வசதியாக இருந்ததா ?' நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம், 'இருந்தது.....ஆனா பெட்டில் சத்தம் தான்...ஏன்பா மாமனார் வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக பாலித்தீன் கவரைக் கூட கழட்டாமல் வைத்திருக்கிறாயே ? என்று கிண்டல் அடிக்க நினைத்து அவர் மனைவியும் உடன் இருப்பதால் நிறுத்திக் கொண்டேன், ஏழ்மை நிலையில் இருந்து மேலே வந்தவர்கள் வசதி வாய்ப்புகள் பெற்றதும் அதில் இருந்து இறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பர். நண்பர் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், 20 ஆயிரம் பொறுமானமான படுக்கை எப்போதும் புதிதாகவே இருக்க வேண்டும், படுக்கையில் தண்ணீர் பட்டால் உள்ளே இறங்கிவிடக் கூடாது என்பதற்காக பாலித்தின் கவரை எடுக்காமலேயே வைத்திருந்தார், ஆனாலும் படுக்கையின் மென்மையை அவர்கள் அனுபவித்தார்களா ?  இல்லை என்று தான் சொல்ல வேண்டும், பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அந்த படுக்கை அறை பாலித்தீன் கவர் பற்றி அவரை கிண்டல் அடிப்பது உண்டு.

அவர் மட்டுமல்ல பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் படுக்கைகள் இன்னும் கூட பாலித்தின் கவரால் தான் சுற்றப்பட்டு இருக்கும், புதிதாக வெளிநாடு சென்று வந்தவர்கள் மட்டுமின்றி பல முறை சென்றுவந்தவர்கள் கூட ஏர்போர்ட் பட்டி(டேக்) சுழற்றாமல் பெட்டியை வைத்திருப்பார்கள், தனது கவுரவே அதில் தான் அடங்கி இருக்கிறது என்பதால் அதனை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

இப்போதெல்லாம் எல்சிடி டிவிகள் வாங்கிப் பலர் வைத்திருக்கிறார்கள், அதில் மூளையில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிகர் (ஒட்டி) அப்படியே தான் இருக்கும், திரையில் படம் கொஞ்சம் மறைக்கப்பட்டால் கூட கவலைப்படமாட்டார்கள், காரணம் வீட்டுக்கு வருபவர்கள் பார்க்கும் போது அது 'புதிய டிவி' என்று தெரியனுமாம். அந்த மாதிரியான க்யாசுகளிடம் நான் சொல்வது, 'இப்ப அந்த ஸ்டிக்கரை பிய்த்துப் போடாமல் விட்டால் தொலைகாட்சியின் வெப்பத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளும், நாள் ஆக ஆக வெளுத்துவிடும், எடுக்கவும் வராது, பார்த்து செய்ங்க' என்பது தான்.

எங்க அண்ணன் வீட்டில் கூட கணிணி திரையும், கீ போர்டும் மேலே மெல்லிய ஊடுறவக் கூடிய ஸ்கிரீன் போட்டு தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அது இல்லாவிட்டால் 'ஸ்க்ராட்ச்' விழுந்துடும் என்று அண்ணன் சொல்லுவார். 

ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து வகையான பொருள்கள் உண்டு

1. மிகவும் பாதுகாக்க வேண்டியவை
2. அடிக்கடி பயன்படுத்த வேண்டியவை
3. எப்போதாவது பயன்படத்தக் கூடியவை
4. என்றுமே பயன்பாட்டுக்கு வராதவை
5. யாருக்குமே பயனற்றவை

இந்த நான்காவது, ஐந்தாவது வகைப் பொருள்கள் எவை எவை என்று பார்த்து தனக்கு பயன்படாதவை என்றால் பயன்படுத்தக் கூடியது என்ற நிலையில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் விரும்பினால் கொடுக்கலாம், உதாரணத்திற்கு காபி மேக்கர் யாரோ எப்போதோ பரிசு பொருளாகக் கொடுத்தது, நமக்கு அதைப் பயன்படுத்துவது கூடுதல் நேரம் பிடிக்கும் என்பது மட்டுமின்றி அதனை கழுவி வைப்பது அறைகூவல் என்ற நிலையில் அவற்றை விரும்புவர்களுக்கு அதனை கொடுத்துவிடலாம், ஆனால் நல்ல பொருள் என்று பாதுகாப்பாக வைத்திருப்பதால் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் என்பது தவிர்த்து வேற என்ன பயன் ? ஐந்தாவது சொல்லி இருப்பதில்  உதாரணத்திற்கு பழைய பாய் அல்லது நசுங்கிய சொம்பு, ஒரு கால் உடைந்த ஒரு இருக்கை,  அதனை சரி செய்து வைத்திருந்தாலும் கவுரவக் குறைச்சல் என்ற நிலையில் அதைத் தூக்கிப் போட்டால் என்ன ? அதனை பயன்படுத்திய பொருள் என்பதற்காக இடத்தை அடைத்துக் கொண்டிருக்க விடலாமா ?

நல்ல தரமான ஓட்டலில் மூக்குப் பிடிக்க நாலு பேர் 500 ரூபாய்க்கு சாப்பிடும் குடும்பங்களிலும் கூட பாக்கெட்டுக்கு 10 காசு கிடைக்கும் என்ற அடிப்படையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காலி பால் பாக்கெட்டுகளை சேர்த்து வைப்பவர்களும் உண்டு, நான் இங்கே சிக்கனத்தைக் குறைச் சொல்லவில்லை, ஆனால் நாம் எல்லா விதத்திலும் சிக்கனமாக இருக்கிறோமோ, அல்லது உப்புக்கு பெறாத பொருள்களில் மட்டும் சிக்கனத்தை பார்க்கிறோமோ என்பது தான் பிரச்சனை, தவிர அம்மா தாயே, ஐயா கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்பவர்களை திரும்பிக் கூடப் பார்காமல் அர்சனைத் தட்டில் ஒற்றை ரூபாயாக 500 ரூபாய் போட்டுவருபவர்களை சிக்கனவாதிகள் என்றும் 'பிச்சைக்காரர்களை ஊக்கப்படுத்த விரும்பாதவர்கள்' என்றும் சொல்ல முடியுமா ?

ஒரு பொருளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அதன் முழுப் பயன்பாட்டை அனுபவிக்காமல் இருப்பதனால் என்ன பயன் ? கஷ்டப்பட்டு சேமித்து ஈட்டும் பணம் செலவழிக்கப்படாமல் இருந்தால் சேமிப்பின் பயன் தான் என்ன ?

கியாசுவாக இருப்பதால் எந்த ஒரு பொருளின் முழுப் பலனையும் அவர்கள் என்றுமே அனுபவிப்பது இல்லை, மற்றவர்களையும் அதை அனுபவிக்க அனுமதிப்பது இல்லை.

5 ஜூலை, 2012

'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் !


பூனையார் மதம் பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருப்பீர்கள், பூனையார் மதத்தின் அதிகாரபூர்வ தலைமை பூசாரி நான் தான், இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க, தமிழ் கூறும் நல்லுலகிற்கு பூனையாரை அறிமுகம் செய்தவன் என்கிற முறையில் 'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் மதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளது என்பதை எல்லா மதவாதிகளுக்கும் முன்பாக எடுத்துக் கூறுவதில் பெருமை அடைகிறேன், மத்த மதவாதிகள் 'ஹிக்ஸ் போஸானை' சொந்தக் கொண்டாடினால் செல்லாது, காப்பிக் கேட் என்று தூற்றப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஹிக்ஸ் போஸான் என்றால் என்ன ? அணுக்களுக்கு எடை தரும் ஒரு துகள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்,  இதன் மூலம் போட்டான்(ஒளித் துகள்) தவிர்த்த அணுத்துகள் வடிவமும் எடையும் கொண்டிருப்பதற்கு ஹிக்ஸ் போஸானே காரணம் என்கிறார்கள், அணுக்கருவில் உள்ள துகள்களின் எண்ணிக்கை மற்றும் அதற்குக் ஹிக்ஸ் போஸான் மூலம் கிடைக்கும் எடை ஆகியவற்றின் மூலம் தான் உலகில் உள்ள அண்டங்கள் முதல் அனைத்தும் எடைகளை பெருகின்றன. இதைப் பற்றி பூனையார் மார்க்கத்தில் ஏதேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க, பூனையாரை நாடினேன், பூனையார் ஒரே போடாக போட்டார்.

"உலகில் உள்ளது அனைத்தையும் படைத்தது பூனையார்" என்று சொல்லிய பூனையார், அனைத்தும் என்றால் அதில் ஹிக்ஸ் போஸானும் தானே உள்ளது, இதை ஏன் உறுதி செய்யும் மனப்பான்மையுடன் மடத்தனமான கேள்வி எழுப்பினாய் என்று கேட்க. 'அட ஆமாம்லே' என்று வியப்படைந்தேன்.

மேலும் பூனையார், "சிக்ஸ் பேக்குக்கும் ஹிக்ஸ் போஸானுக்கும் உள்ள தொடர்ப்பு தெரியுமா ?" என்று கேட்டார். "அதிகமாக அதிகமாக உடற்பயிற்சி செய்ய உடலின் அணுத்துகள்கள் இறுக சிக்ஸ் பேக் கிடைக்கிறது, உடற்பயிற்சியின் ஆற்றலின் போது உண்டாகும் ஹிக்ஸ் போஸானின் சக்தி சிக்ஸ் பேக்காக மாறுகிறது" என்றார்

ஹிக்ஸ் போஸான் மற்றும் பூனையார் கடவுளுக்குமான தொடர்பின் இணைப்புகள்.


ஹிக்ஸ் போஸான் பற்றி வேறென்ன சொல்கிறீர்கள் பூனையாரே ?

நான் என்னத்தச் சொல்வது, வைரமுத்து முதல் கார்கி வரை 'ஹிக்ஸ் போஸானை' திரைப்பட பாடல் வரிகளாக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள், உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லட்டமா ?

"என் இதயத்தில் மையம் கொண்டு வெடித்த பெருவெடிப்பு நீ தானோ ?"
"என் இமைகளுக்கு எடை தந்த ஹிக்ஸ் போஸான் நீ தானோ நீ தானோ"

- கவிஞர் கரடி வாயன்

"என் மனதில் உன் அழுத்தம் எப்பொழுது வெடிக்குமோ பெருவெடிப்பாக"
"உன் இல்லாத இடைக்கு எடையாக நான் இருப்பேன் ஹிக்ஸ் போஸானாக"

- கவிஞர் சொந்த குமார்

"என் காதல் போஸாக்கே"
"உன் மோதல் போஸானே"

- கவிஞர் குணேகன்


ஸ்ப்பா முடியல, அறிவியல் அவியல்களை தனதாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டுபவர்கள் மதவாதிகளா ? கவிஞர்களான்னு பட்டிமன்றமே நடத்தலாம்.

எது எப்படியோ, ஹிக்ஸ் போஸான் பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்பே பூனையார் சொல்லிவிட்டார், பூனையார் சொல்லிவிட்டார்...............பூனையார் சொல்லிவிட்டார்.


பின்குறிப்பு : 2 வாரமாக வலைப்பதிவு எழுதாமல் காத்துவாங்குது, காலாட்டிக் கொண்டு இருந்தால் தானே இருப்பு தெரியும், அதற்கு உதவிய பூனையாருக்கு நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்