பின்பற்றுபவர்கள்

16 ஆகஸ்ட், 2011

சென்றவார அறுசுவை உணர்வுகள் !

இனிப்பு : எங்க ஊரு நாகைக்குச் சென்று சென்ற வியாழன் அப்படியே (பாலையூர் - எ - பாலூர்) கிராமத்தில் இருக்கும் வயலுக்குச் சென்றிருந்தேன், கிழக்கு கடற்கரைச் சாலை அந்தப் பகுதியில் புதிதாகச் செல்வதால் இருசக்கர வாகனத்தில் சாலையில் கீழே இறங்கி ஒரு கி.மீ குறுகிய பாதையில் வண்டியை ஓட்டினால் போதும் அடைந்துவிடலாம், கிட்டதட்ட ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகிற்று அப்படிப்பட்ட பச்சைகளைப் பார்க்க. பெரும்பாலும் ஊருக்குச் செல்லும் காலம் மழைக்காலம் அல்லது அறுவடை முடிந்த பிறகு என்பதால் வயல்வெளிகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. முன்பெல்லாம் விவசாயம் துவங்கி அறுவடை வரை ஊருக்குள் மக்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பார்கள், இப்போதெல்லாம் அவ்வாறு பார்க்க முடியவில்லை, வேலைக்கு ஆள் கிடைப்பதே கடினம்.

நகரங்களுக்கு பலர் பெயர்ந்துவிட்டார்கள், சிறுவிவசாயிகளே தங்கள் நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டு பிற விவசாயிகளுக்கும் செய்து தருகிறார்கள், வேலைக்கு ஆள் கிடைக்காத சூழலில், விவசாயம் பார்க்க முடியாததால் பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. கதிர் அறுக்க, நாற்று நட எந்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை இயக்க முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டி இருக்கிறது, கிராமங்களில் மாட்டுவண்டிகளையோ, மாடுகளையோ பார்க்க முடியவில்லை, நெல் அறுத்து குவித்து வைத்த வைக்கோல் போர் விலை போகாமல், யாரும் வாங்காமல் அப்படியே தான் கிடக்கிறது. அம்மா காலம் வரையிலும் எங்க வயலில் தட்டுத்தடுமாறி விவசாயம் நடக்கும், அதன் பிறகு என்ன ஆகும் என்று இப்போது தெரியவில்லை, இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வயலில் இறங்கி நடந்தேன், முன்கூட்டியே அம்மா அங்கு சென்றுவிட்டதால் எதிர்கொண்டார்கள். வயல் வெளி என்ன ஒரு பசுமை, கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு கண் கொள்ளாக் காட்சி. வாய்க்காலுக்கு முதல் மடை என்பதால் வாய்க்காலில் தண்ணீர் வரும் போது தண்ணீர் பாய்ச்ச வசதியான வயல்வெளி தான். சிறுவயதில் படிக்கிற காலத்தில் அங்கு செல்ல விருப்பம் இருக்காது, ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி வேலை செய்யச் சொல்லுவார்கள். பயிர் சுனை பட்டால் கை காலெல்லாம் அரிக்கும், இப்ப பார்க்க குளிர்ச்சியாக இருக்கு, அதுவும் மாலை 5 மணிக்கு மேல் மஞ்சள் வெயிலில் சுற்றிலில் பச்சை வெளிகள்.

அம்மா





களையெடுக்கும் பெண்மணி


புளிப்பு : சென்னையில் நண்பர் வசிக்கும் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன், அது ஒரு 7ஜி ரயின்போ காலனி போல் குடியிருப்பு பகுதிகளுக்கு ச-ரி-க-ம-ப-த-நி- என்று ஏழு ஆங்கில எழுத்தில் பெயர் வைத்திருந்தார்கள், அன்றைய நாள் ஞாயிறு குடியிருப்பு வாசிகள் அனைவரும் சேர்ந்து 'நம் குடும்பம்' என்ற பெயரில் இணைந்து கொண்டாடினார்கள், கோலப் போட்டிகளெல்லாம் நடைபெற்றது, கோலங்களில் மயில் கோலம் முதல் பரிசாகவும், கதகளி முகம் இரண்டாம் பரிசாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது, கோலங்களில் பல மயில் கோலங்கள் இருந்தன.

பல மாநில மக்கள் அந்த குடியிருப்பில் வசித்தாலும் தமிழ் கோலத்திற்கு முதல் பரிசு. தமிழக மக்கள் இன்னும் கலை உணர்வோடு தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இருப்பிடங்களின் சூழல்களை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள இது போன்ற தனிப்பட்ட விழாக்கள் தேவை, அங்கு வசித்த அனைத்து சிறுவர் சிறுமியர்களையும் மேடை ஏற்றி எதோ அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வைத்து, ஒருவரையும் ஏமாற்றாமல் அனைவருக்கும் பரிசுகளைக் கொடுத்தனர். நல்லா தமிழும் ஆங்கிலமும் தெரிந்த எந்த இருவரும் கூட ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது, அங்கே வசித்த இந்திக்காரர்கள் அவர்களுக்குள் இந்தியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தற்போது பேசாமல் விட்ட 'சார் சார்' தமிழகத்தில் வியாதியாகவே பரவி இருக்கிறது.



முதல் பரிசு பெற்றது



இரண்டாம் பரிசு பெற்றது




உப்பு : கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்தேன், இதுவரை பலமுறை அந்த வழியில் சென்றிருந்தாலும் பகலில் சென்றதில்லை, சோழிங்க நல்லூர் தாண்டி 'இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்கரைச் சாலை உங்களை இனிதே வரவேற்கிறது' என்ற வரவேற்பு பலகை இருந்தது. இயற்கை எழில் ஒன்றும் அவ்வளவாக ஈர்க்க வில்லை, உப்பளங்கள் இருக்கின்றன, வீட்டுமனைகள் வருவதற்கான கற்கள் நடப்பட்டு இருக்கின்றன, சாலைகளும் நேரானதாகவோ அகலமாகவே இல்லை, சாலை நடுவே தடுப்புகள் இல்லை, அந்த சாலையில் மணிக்கு 60 கிமி மேல் செல்வது பாதுகாப்பற்றது, நாள் தோறும் நடக்கும் விபத்துகளே கண்கூடு. இரவில் எந்த ஒரு போக்குவரத்து விளக்கும் கிடையாது. ஈசிஆர் சாலை எமன் குடியிருக்கும் சாலை தான்.

நான் கண்ட ஒரே இயற்கை எழில் லேசான மழை பெய்ததும் ஏற்பட்ட அழகான வானவில் தான். அதைத் தாண்டி பாண்டிச்சேரி சென்றேன் பாண்டி முதல்வர் இரங்கசாமிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தநாளாம், 'அழகிரி டைப்' மிதமிஞ்சிய புகழ்ச்சி சுவரொட்டிகள் பாண்டி எங்கும் இரங்கசாமியின் பல்வேறு 'போஸ்களில்' சுவரொட்டிகள் முகம் சுளிக்க வைத்தது, அதில் ஒன்று தெய்வத்திருமகன் போஸ்டரின் நடுவே இரங்கசாமியின் படம் இருப்பது போன்றும் அடிக்கப்பட்டு இருந்தது, மனநலம் குன்றிய நாயகனாகக் காட்டப்பட்ட படத்தில் ரங்கசாமி முகம் ஒட்டுதல், வாழ்த்தா, வதையா ? ஒட்டியவர்களுக்கே வெளிச்சம். டிவிஎஸ் பிப்டியில் வரும் முதல்வருக்கு இவ்வளவு ஆடம்பர போஸ்டர்களா ? அடுப்பொடிகள் வேலைகள் தான், பாவம் வாழ்த்துவதற்கு பதில் வசைபாடி, முகம் சுளிப்போர் மிகுதி, எதுக்கு இத்தனை ஆடம்பரம், தேவையா அட போங்க சார். தமிழகம் - பாண்டியின் போஸ்டர் பண்பாடு ரசிக்க முடியவில்லை. இரங்கசாமிக்கு அடுப்பொடிகளே ஆப்பு வைத்துவிடுவார்கள் போல. பாண்டியைச் சேர்ந்த காரைக்காலில் சுவரொட்டிகள் கண்ணில் படவில்லை.






துவர்ப்பு : சென்ற வெள்ளிக்கிழமை சென்னை மெரினா சாலை வழியாக பயணித்தேன், கண்ணகி சிலை மிடுக்காக நின்று கொண்டிருந்தது, இன்னும் அம்மா விசுவாசிகள் கண்ணில் படவில்லையோ, இல்லை அதற்காகவே அந்தப்பகுதி சிலைகள் ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தப்படுமோ யார் கண்டது. பொதுச் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது சென்னையில் கவர்ந்ததில் ஒன்று, அம்மாவுக்கு பிறந்த நாள் வரும் வரையில் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் சென்னையில் மாற்றமே இல்லாத பகுதி பாரிஸ் கார்னர் தான். அங்கே இருக்கும் மொத்த விற்பனைக்கடைகளை சேட்டுகளும் மலையாளிகளும். கொஞ்சம் தெலுங்கர்களும் ஆக்கிரமித்துள்ளனர், அவர்களிடமிருந்து சில்லரை விற்பனைக்காக தமிழர்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனர். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மின்னனு சாதனங்களின் வாயிலாகவே அந்த இடங்கள் இருக்கின்றன, உலக நாடுகள் சீனப் பொருள்களைத் தவிர்த்தாலும் அவர்களுக்கு இந்தியா குறிப்பாக தமிழகம் 'சிவப்பு' கம்பளம் விரித்து வைத்துக் கொண்டுள்ளது.





காரம் : அந்தப் பகுதியில் அமைந்த சரவண பவனுக்குச் சென்றிருந்தேன், குளிர்சாதன அறையில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் சனி / ஞாயிற்றில் தான் உட்கார இடம் கிடைகாது, தற்போதெல்லாம் வெளியே சாப்பிடுவர்கள் மிகுந்துவிட்டார்கள், அல்லது வீட்டுச் சமையல்கள் குறைந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது. சரவணா ஸ்பெசல் மீல்சாம். என்ன வென்று வாங்கினேன். 'அடப்பாவிகளா .........இவ்வளவு சாப்பிட்டுவிட்டு எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் ?' என்று நினைக்கத் தோன்றியது. அதில் அஜினமோட்டோ இல்லாத வகைகளே இல்லை, யாரு கேட்கிறார்கள். சுவை சுவை சுவையோ சுவை என்றே அனைத்து உணவு கடைகளிலும் அஜி(ர்)னமோடோ சேர்கப்படுகிறது.

உணவில் உப்பு அளவு, கொழுப்பு அளவு பற்றியாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 'என்னன்னு தெரியலை சார், நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார், இன்னிக்கு டக்குன்னு போய் சேர்ந்துட்டார்' யாரேனும் சொன்னால் விசாரித்து பாருங்கள், நேற்று அவர் ஏதேனும் புல்மீல்ஸ் கட்டி இருக்கக் கூடும். சென்னையில் அசைவ உணவுக்கடைகள் சைவ உணவு கடைகள் அளவுக்கு பெருகிவிட்டது, முன்பெல்லாம் 'சுத்தமின்மை' (அதாவது அசைவம் நன்றாக தூய்மை செய்து சமைக்கமாட்டார்கள் என்பதாக) காரணமாக வெளியே அசைவம் சாப்பிட மக்கள் தயங்குவார்கள், இப்ப பழகிக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்.

வரும் போது ஏசி பேருந்து பயணம் மிகக் குறைந்த பயணிகள், ஒரு அரைக்கிறுக்கன் செருப்பணியாத தன் காலை யாருமற்ற இருக்கை மீது வைத்திருந்தான். நடத்தினர் சொன்னதும் எடுத்துக் கொண்டான். அவன் அரைக்கிறுக்கன் என்பது அவன் செருப்பே அணிந்து வந்திருக்கவில்லை என்பதால் உறுதிபடுத்திக் கொண்டேன். ஏசி பேருந்தில் செல்பவர்கள் சாதாரணப் பேருந்தில் செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பார்களாமே, அவர்கள் அந்த அரைக்கிறுக்கன் கால் வைத்த இடத்தில் கூட உட்கார நேரிடலாம்.


(இந்தப்படத்திற்கு என்ன செய்தியா ? மேலே இருக்கும் படத்தைப் போன்று தான், எந்த மரியாதையும் கிடைப்பதாகத் தெரியவில்லை, 1000 கோடிகளை விழுங்கிவிட்டு மதிப்பற்று கிடக்கிறது)

அன்று மாலை தி.நகர் அஞ்சு மாடி சென்னை சில்க்ஸ் சென்றேன். உள்ளே இரண்டாம் மாடிக்குச் சென்று 'எங்கப்பா டாய்லெட் ?' 'மூனாம் மாடியில் இருக்கு சார்' நாளுக்கு கோடிகளில் விற்பனை ஆகும் கடையில் மூன்றாம் மாடியில் தான் கழிவறையா ? மக்கள் வீட்டை விட்டு வெளியே போனால் ஒண்ணுக்கு ரண்டுக்கு போகவே மாட்டாங்களா ? ஏனிப்படி ? ஐஞ்சு மாடிக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ?. உள்ளே அவசரத்துக்குச் சென்றால் 'வெஸ்டர்ன் டாய்லெட்' ஒண்ணே ஒண்ணு தான், அதிலும் சீட் கிடையாது, அதில உட்கார முடியுமா ? ஒருவழியாக முடித்து வந்தேன். ஏன் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் இவர்கள் வாடிக்கையாளர்களின் பணத்தில் வைத்திருக்கும் குறியின் கவனம் சிறிதேனும் வருபவர்களுக்கு நல்ல கழிவறை ஏற்படுத்தித் தர வைக்க முடியவில்லை. அரசுகளின் கவனமின்மையும் காரணம், வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகள் இல்லை என்றால் அனுமதிகளை நீக்கலாமே. அப்போது அலறி அடித்து வசதி செய்வார்களோ.




சென்னையில் ஆட்டோக்கள் குறைந்து அந்த இடத்தை மாருதி வேன் போன்ற கூட்டுப் பயண வாகனங்கள் நிறைய ஓடுகின்றன, 8 பேர் வரை பயணம் செய்ய ஏற்ற வகையிலும், 5 கிமிதொலைவு வரை 10 ரூபாய்க்கு அழைத்துச் செல்கிறார்கள். இவை ஓரளவு போக்கு வரத்து நெருக்கத்தை குறைத்து இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

சாலை குண்டு குழிகள், தண்ணீர் இன்மை, மின்சார துண்டிப்பு, கொசுக்கடி இவற்றில் எதையும் பற்றி கவலைப்படாமல் ஆடி வெள்ளி கூழ் ஊற்றும் நிகழ்ச்சி சென்னையில் அங்காங்கே சென்னையின் காலம்காலமாக வாழ்பவர்கள் நடத்திவருகிறார்கள், 'ஆத்தாள கும்புட்டு துண்ணூறு இட்டுனு போ....பாசாயிடுவ' எந்திரன் வசனம் நினைவுக்கு வந்தது.

கசப்பு : ஞாயிற்றுக் கிழமை மதியம் 1:15 விமானம், எல்லாம் முடித்து விமானத்திற்கு செல்லும் முன் காத்திருக்கும் அறைக்குச் சென்றேன், அந்த கூடத்தில் நடுப்பகுதிக்கு சற்று தள்ளி 'ஸ்மோக்கிங் அறைக்கு' எதிரே ஒரு நடுத்தரம் கடந்த பெண் மணி கிடத்தப்பட்டு இருந்தார், அவர் இறந்து விட்டார் என்பது அவரது அசைவற்ற உடலே சொன்னது. அவரது உடலில் இருந்த நகைகளை கழட்டி பாதுக்காப்பிற்காக கணக்கு வைத்துக் கொண்டிருந்தனர் ஒரு கடைநிலை ஊழிய பெண் மணி மூலமாக காவலர்கள், அங்கு நடப்பதைப் பார்த்தால் சென்ற அரைமணிக்குள் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றே தோன்றியது. இலங்கையில் இருந்து தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்தவராம், திரும்பப் போகும் முன் இதய வலியால் உயிர் துறந்திருக்கிறார், அவர் தமிழர் , 55 வயது என்று காவலர்களின் உரையாடலில் இருந்து தெர்ந்தது, பெயர் ஊரைக் கூட யாருக்கு அலைபேசி வழியாக தெரிவித்து ஆணை யிட்டுக் கொண்டிருந்தனர், எனக்கு பெயரும் ஊரும் நினைவுக்கு வர இயலவில்லை.

கிட்டதட்ட 1.30 மணி நேரம் அவ்வாரே கிடத்தப்பட்டு இருந்தார், காவல் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தோர் அருகில் நின்று கொண்டிருந்தனர், அங்கு வந்த பயணிகள் ஒருவருக்கும் அந்தப் பகுதியை தாண்டி செல்ல மனம் செல்லவில்லை. இறந்தவர் தெரிந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்றே தவிர்த்தனர், வழக்கமாக 'புகைப்பிடிக்கும் அறைக்கு' செல்லும் ஒருசிலர் கூட பயத்தின் காரணமாக அங்கு செல்லவில்லை. நான் தொலைவில் இருந்து கூட உடலை படம் எடுக்க விரும்பவில்லை. எதிர்பாராவிதமாக மரண மடைந்த ஒருவரை காவல் துறை முறைப்படியான நடவடிக்கை ('புரோசிஜர்') என்ற பெயரில் அங்கேயே கிடத்தி இருந்தது முகம் சுளிக்க வைக்காவிட்டாலும் வருத்தம் ஏற்படச் செய்யதது, உறவினர்கள் யாரும் அற்ற ஒருவராக அவர் கிடத்தி இருந்தது ஏற்கத்தக்கதே அல்ல, அவர் உடலுக்கு கொஞ்சமேனும் மரியாதைக் கொடுத்து, புரொசிஜர் படி உடனே அவரை அப்புறப்படுத்தாவிட்டாலும் சுற்றிலும் தற்காலிக திரையாவது அமைத்திருக்கலாம்.

அவருக்கும் மரியதை கொடுக்காவிட்டாலும் கூட விமானத்தில் ஏறக்காத்திருந்தவர்களுக்கு ஒருவித அச்சம் இருந்தது ஏனெனில் அவர்களில் பலர் வயதான பெற்றோர்களை பிரிந்து வந்திருக்கக் கூடும், அவர்களை நினைத்தாவது உடலை மறைத்திருக்கலாம். மற்றும் வயதானவர்களே கூட இருக்கக் கூடும். வழக்கமாக விமானத்திற்கு காத்திருக்கும் போது பயணத்தின் போது அசைப்போட்டபடியும், சில நண்பர்களுக்கு அலைபேசிக் கொண்டு இருப்பேன், ஆனால் இந்த முறை 'பாவம் அந்த பெண்மணி, அவரது உயிருக்கு தெரிந்திருக்கிறது நாடுகள் என்பது பெயர்களால் பிரிக்கப்பட்ட ஒரே மண், எங்கு பிரிந்தால் என்ன ?' ஆனால் அருகில் உறவினர்கள் இல்லையே' என்பது தான்.

15 ஆகஸ்ட், 2011

அண்மைய நாட் குறிப்புகள் !

சென்ற ஞாயிறு (07 - 14 ஆகஸ்ட்) முதல் நேற்றைய ஞாயிறு வரை தமிழகத்தில் இருந்தேன், மிக மிக தனிப்பட்ட பயணம் என்பதால் நண்பர்கள் யாருக்கும் முன்கூட்டித் தகவல் அளிக்கவில்லை, யாரையும் சந்திக்க முயற்சிக்கவும் இல்லை. எதிர்பாராமால ஏற்பட்ட சந்திப்புகளில் என்னுடன் முன்பு வேலைப்பார்த்தவர்கள், படித்தவர்கள் என 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு விட்டு இருந்தவர்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்பினேன்.

நாம பார்த்து 10 ஆண்டு ஆச்சு, நாம பார்த்து 23 ஆண்டுகள் ஆயிற்று என்று அவர்கள் குறிப்பிடும் முன்பே அவர்களுடைய தோற்றங்கள் அது உண்மை தான் என்றது. பேச்சிலர்களாக இருந்தவர்களுக்கு மகனோ மகளோ படித்துக் கொண்டிருந்தார்கள், சைக்கிள் வைத்திருந்தவர்கள் மோட்டார் வாகனங்களுக்கும், பைக் வைத்திருந்தவர்கள் கார்களுக்கும் மாறி இருந்தார்கள், வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள், வங்கிக் கடன்களையெல்லாம் மீறி சொந்தவீட்டில் இருக்கும் அவர்களது முகத்தில் தெளிவு இருந்தது, பேச்சிலர் வாழ்கை , இல்ல வாழ்க்கையென மாறி இருந்தாலும் வரட்டு வேதந்தமாக அப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக யாரும் குறிப்பிடத் தவறவில்லை. இவர்களில் தற்போது 38 முதல் 48 வயதினரும் அடக்கம், சிலருக்கு முன் தலை வழுக்கையும், சிலரது மிகவும் கருமையான தலைமுடி அது 'டை' என்றே சொல்லியது. நான் 'டை' அடிப்பதில்லை என்றாலும் சொன்னால் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. தலைமுடி தனிமனித தோற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன்.

என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்தவர்களில் ஐவரை ஒன்றாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஒருவர் சிங்கப்பூரில் குடிமகனாகவும் மற்ற ஒருவர் வளைகுடாவில் தற்காலிகப் பணியிலும் இருப்பவர், மற்ற மூவரில் ஒருவர் என்னுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர், இன்னொருவர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும் நகரினுள் குடிபெயர்ந்து படகு கட்டித்தந்து பெரும் பொருளீட்டி வருகிறார், மற்றொருவர் பத்தாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை தொடர பொருளியல் வசதி இன்மையால் கட்டிட நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் கம்பி கட்டி வேலை பார்த்துவருகிறார், இவர்களில் ஒருவரை அவ்வப்போதும் மற்றவர்களில் சிலரை எப்போதாவது வாய்பில் சந்திப்பதும், கட்டிட வேலை பார்த்து வருபவரை 23 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்க நேரிட்டது, அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பெயர் சொல்லி அழைத்தார், எனக்கு அவரை அடையாளம் தெரிந்தாலும் பெயரை நினைவு கூறத் திணறினேன், பின்னர் அவரே தெளிவு படுத்தினார், இது ஒருவகையான மூளைச் சிக்கல், பெயரும் உருவமும் மூளையில் தனித்தனியாக சேமிக்கப்படுமாம், நாட்கள் கடந்துவிட்டால் ஒன்று சேர்ந்து சட்டென நினைவுக்கு வராது, சிறிது நினைவூட்டல் தேவை என்று எங்கோ படித்தது அறிவியல் / உயிரியல் உண்மை ஒன்றை தெளிவு படுத்தியது. இரவு 7 மணிக்கு பிறகு நாகை கடற்கரையில் அமர்ந்தும்,





(நண்பர்கள் இரவி, ஆறுமுகம், சக்திவேல், இராமனாதன் (எ) இராமு மற்றும் நான்)


பின்னர் பேருந்து நிலையத்திலும் பேசிக் கொண்டிருந்தோம், அவர்களிடையே இயல்பாகவே 'நீ வா.....போ' தொடர்ந்தது, எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம்மைப் எப்போது பார்த்தாலும் மகிழ்பவர்கள் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும். ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கி இருந்ததால் அவர்களின் இல்லம் வரையிலெல்லாம் சென்று வர இயல வில்லை. 10 ஆம் வகுப்பில் படித்த பலரை மற்றும் வகுப்பாசிரியர்கள் பலரை நினைவு கூர்ந்தார்கள். இரை தேடிய பறவைகளாக அவர்களெல்லாம் எங்கெங்கோ இருப்பதாக அறிய நேரிட்டது. எங்களுடைய ஆசிரியர்கள் அனைவருமே பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்றும் தெரிந்தது. காலம் நம்மை கடந்து வேகமாக செல்வது நமக்கு தண்டனையா ? நல் மகிழ்ச்சியா ? அவையெல்லாம் தற்போதைய நிலையைப் பொருத்ததே. நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகள், சொந்த வீடு பிற வசதிகள் என்பது காலம் நமக்கு கொடுத்த நற்கொடையாகத் தானே கொள்ள முடியும்.

அதற்கு முன்பே சென்ற ஞாயிற்றில் சென்னையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் வேலைப் பார்த்தவர்களில் இருவரை சந்தித்தேன். நேற்று அலுவலகத்தில் எப்படிப் பேசிக் கொண்டு இருந்தார்களோ அதே போல் தான் இன்றும் பேசுகிறார்கள் என்று நினைக்க வைத்தது, அவர்களுடைய இன்றைய குடும்ப பொறுப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் 14 ஆண்டுகள் கடந்தது கூட நேற்று என்ற அளவில் தான் அவர்களிடையே இருந்தது. 'தண்ணி அடிக்காதவன், தம் அடிக்காதவன் நீ, உனக்கு என்ன குடும்பத்தில் பெரிய பிரச்சனை இருக்கப் போகிறது, தங்கம் தங்கம்னு தாங்குவாங்களே மனைவி' ன்னு நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

(நண்பர்கள் திருச்செல்வன் மற்றும் தமிழ்செல்வன்)

'குடும்பத்தில் தாங்குறாங்களா இல்லையாங்கிறதெல்லாம் வேற விசயம், ஆனா தண்ணி அடிக்காதவன், தம் அடிக்காதவன் நல்லவனாக இருப்பான் என்று யார் சொன்னது, தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேன், ஆனா நல்லவன் என்று நினைக்க ஒன்றும் இல்லை, தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிய உதவிகளெல்லாம் செய்வதில்லை, எதை வச்சு என்னை நல்லவன் என்று சொல்கிறீர்கள் ?' என்றார் நண்பர் தமிழ்செல்வன். பொதுப்புத்தி பற்றி பாடம் படித்த நமக்கு அவர் சொன்னது 'பொளேர் என்று அறைபட்ட உணர்வை ஏற்படுத்தியது ?' நாம தனிமனித ஒழுக்கத்தை குடி, பீடி களில் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறோம். அதை தொடர்பவர்களில் நல்லவர்களும் உண்டு அதைத் தொடராதவர்கள், தொடாதவர்களை ஒழுக்கமானவர்களின் சான்றிதழகாகவும் கொள்ளத் தேவை இல்லை, இவை முதலில் உடல் நலத்தையும் பிறகு குடும்ப நலத்தையும் சார்ந்து பிறகு மிதமிஞ்சிப் போனால் மட்டுமே ஒழுங்கீனத்திற்குள் வரும் என்று அவர் சொல்லியதில் இருந்து அறிந்து கொண்டேன்.





(நண்பர் ஜெ.கண்ணன் மற்றும் அவருடன் சுரபி - Surabi நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்)

நேற்றைக்கு முந்தைய நாள், நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்தக மையம் (சென்னை டிரேட் செண்டர்) நண்பர் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன், அவரும் அங்கு காட்சிக் கடை (ஸ்டால்) வைத்திருந்தார். சென்னை பல துறைகளில் நன்கு வளர்ந்துள்ளது, சர்வதேசத் தரத்துடன் காட்சிக் கூடம் அமைந்திருந்தது, கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கி இருந்தது, மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய காட்சிகள் என்பதால் பல்வேறு நிறுவனங்கள் ஏறத்தாழ 200 ஸ்டால்கள் வரை அமைத்திருந்தார்கள்.





மிகவும் புதிய (அதி நவீன) உத்திகளில் அமைந்த மின்னனு சாதனங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள், நான் முன்பு வேலை பார்த்த நிறுவனங்களில் ஒன்று மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வது, அதில் எனக்கு உயர் மேலாளராக பணி புரிந்தவர் பின்னர் தனியாக நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இல்லை. எனது நண்பரிடம் குறிப்பிட்டு கேட்டேன் 'எங்க சார் ஸ்டால் போட்டிருக்கிறாரா ?' நண்பரும் அதே துறை சார்ந்தவர் என்பதால் அவர் உடனேயே சொன்னார். 'அவரை நன்கு தெரியும் ஸ்டால் எண் இது' என்றார். உடனேயே சென்று பார்த்தேன். 'வாங்க கண்ணன்...' என்று உற்சாகமாக அழைத்து சிறிது நேரம் பேசி பின்னர் அவருடைய அலுவகலத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி 'ஹி ஈஸ் மிஸ்டர் கண்ணன், வெர்ரி ஹார்ட் ஒர்கிங்க் பர்சன்' (அதெல்லாம் அந்த காலம் சார், இப்போதெல்லாம் வேலை பார்ப்பதே இல்லை.......என்று சொல்ல நினைத்தேன்), கிளம்பும் முன் இனிப்புகளை கொடுத்தார் வாங்கி வந்தேன்.






(எனது முன்னாள் மேலாளர் திரு எல் நாரயணன் மற்றும் அவரது சிலிகான் லேப்ஸ் காட்சி)


நான் இதுவரை 9 நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன், அதில் ஓராண்டுக்கு கீழ் மற்றும் மிகுதியாக 3 ஆண்டுகள் வரை வேலை பார்த்த நிறுவனங்கள் உண்டு, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களில் பலர் இன்றும் அன்போடுதான் பழகுகிறார்கள், நம் நிறுவனத்தை விட்டுச் சென்றவன் என்று நினைப்பது கிடையாது. இதில் சிங்கப்பூர் சீன நிறுவன உரிமையாளர்களும் கூட உண்டு. ஊதியத்திற்கான வேலை செய்வதைத் தாண்டி ஏதோ கொஞ்சமேனும் அவர்களை நாம் நினைவு கூற வைக்கும் படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்க எனக்கும் என் நடவடிக்கைகள் பெருமையைத் தருகின்றன.

நேற்றைய முந்தைய நாள் சனிக்கிழமை, பதிவர்களில் பதிவர் என்பதைத் தாண்டி தவிர்க்க முடியாதவர்களில் ஒருவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன், அவர் வேறு யாரும் இல்லை, நம்ம 'தமிழா தமிழா' டிவி இராதாகிருஷ்ணன் ஐயா தான். அவரது மனைவி காஞ்சனா அம்மாவும்வீட்டில் இருந்தார்கள், ஒருவேளை அவர்கள் இருவரையும் பார்க்காமல் திரும்பி இருந்தால் மிகவும் ஏமாற்றமாக அமைந்திருக்கும், குறிப்பாக டிவிஆர் ஐயா எனது அழைப்புக்காக காத்திருந்ததாகச் சொன்னார். நான் குறிப்பிட்ட நேரத்தில் வருவதாகச் சொல்லி இருந்தேன், மேல் தள வராண்டாவில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார், கிளம்பும் போதும் அப்படியே. என்ன ஒரு பந்தம் ? நினைத்தாலும் பிடிபடவில்லை. உணர்வுகளால் உள்ளத்தில் நுழைந்தவர்கள் எப்போதும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நண்பர் என்று சொல்லிக் கொள்ள ஆண்டுக்கணக்கில் அவரிடம் பழகி இருக்கவும் இல்லை, உறவுக்காரரும் இல்லை, இருந்தாலும் இவரைப் பார்க்க ஏதோ ஒரு ஈர்ப்பு தூண்டிக் கொண்டு தான் இருக்கிறது. நட்பு, உறவு இவற்றையெல்லாம் தாண்டி, நாம்/நம்மை விரும்புவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். அவற்றை என்னவென்று சொல்ல ? நம்பிக்கைகளைத் தாண்டிய 'முற்பிறவி தொடர்போ ?' இருக்கலாம். :)

அடுத்த பதிவில் நண்பர்கள் அல்லாத பிற தகவல்கள் எழுதுகிறேன்

2 ஆகஸ்ட், 2011

நட்பு நாளில் கிடைத்த நண்பர் - முக நூலுக்கு நன்றி !

80களின் இறுதியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அலுவலகம் மூலமாக கிடைத்த நட்பு, அலுவலகம் மாறிய பின் தொடர்வது அரிதாகவே நிகழ்ந்தது, காரணம் அப்போதெல்லாம் இன்றைய அலைபேசிகள் போன்ற இணைப்புகள் இல்லை, அதையும் மீறி நட்புகள் தொடர குறிப்பிட்ட நண்பர் நமக்கு நன்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும், அவர் வாடகை வீடு அல்லாத தன்னுடைய வீட்டில் வசித்துவருபவராகவும், அவரது பெற்றோர்கள் மற்றும் இல்லத்தினர் வரை நாம் நட்பு பாராட்டி இருக்க வேண்டும், அப்படியான சூழலில் மட்டும் தான் தொடர்புகளை அவ்வப்போது மீண்டும் இணைத்துக் கொண்டிருக்கவே முடியும். மற்றபடி நன்கு பழகி இருந்தும் தொடர்பு விட்டுப் போனால் அதன் பிறகு அவர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனையோ நண்பர்களை பின்னாளில் தேடிப் போக அவர்கள் வாடகை வீட்டை காலி செய்து கொண்டு எப்போதே சென்றிருப்பார்கள், சொந்த வீட்டில் வசிப்பவர்களை மட்டுமே தேடிப்பிடிக்க முடிந்தது.

முகநூலில் பதிவு செய்த பிறகு எனக்கு நினைவு தெரிந்த நண்பர்களை தொடர்ந்து அதில் தேடிவருகிறேன், அப்படியாக தேடிய போது என்னுடன் 90 களில் பணி புரிந்து பின் காணாமல் போனவர் சிக்கினார், இருந்தும் அவரது படிப்பு குறித்த விவரங்கள் என்னைக் குழப்பியது, எனவே நான் பணிபுரிந்த ஆண்டு விவரம், நிறுவனப் பெயர் ஆகியவற்றையும், அவர் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டு சென்ற மார்ச் மாதம் குறிப்பு அனுப்பினேன். சரியாக நட்பு நாளில் நேற்று குறிப்பு அனுப்பி அவர் தான் அது என்று தெரிவித்திருந்தார், பின்னர் அலைபேசி எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்லி இருந்தேன், அவரும் சிங்கப்பூரிலேயே பணி புரிவதால் உடனடியாக அழைத்துப் பேசினார், தொடர்ச்சியாக 25 நிமிடங்கள், பழைய கதை, தற்போதைய இல்ல நிலவரம் குறித்தெல்லாம் பேசினோம், நேரில் சந்திக்க இந்த வாரம் வாய்ப்பிருக்கிறது. அவர் மூலமாக இணைப்பு துண்டிக்கப்பெற்ற பிற நண்பர்களின் விவரங்களும் என் மூலமாக அவருக்கும் சில நண்பர்கள் பற்றிய விவரங்களும் தெரிய வந்தது.

பழைய நண்பர்களை முகநூலில் தேடும் போது சிக்கல் என்னவென்றால் அவர்கள் முகங்கள் மாறி இருக்கும், அதைக் கூட கண்டுபிடித்துவிடலாம், ஆனால் அவர்களது முகப்(பு) படத்தில் (ப்ரொபைல்) வேறு ஏதாவது படம் போட்டிருந்தால் கண்டுபிடிக்க இயலாது. எனவே உங்கள் முகப்பு படங்களை அமைக்கும் போது அதில் உங்களது முகப்பு படங்களையே போடுங்கள், குழந்தைகள் அல்லது வேறு ஏதாவது படம் போட்டிருந்தால் தேடிவருபவர்கள் கண்டுகொள்வது கடினம் தான்.

உங்களுக்கு பழைய நண்பர்கள் தொடர்பு குறித்த ஆர்வம் இருந்தால்,

* உங்கள் புரொபைல் படம் உங்களுடையதாக இருக்கட்டும், அதில் 20 வயதிற்குப் பிறகான பல்வேறு புரொபைல் படங்கள் இருந்தால் இணைத்து வையுங்கள், நண்பருக்கு ஒரு வேளை உங்கள் பழைய முகமே நினைவு இருக்கக் கூடும்.
* பிறந்த ஊர் பற்றிய விவரங்கள்

* படித்த பள்ளிகள், கல்லூரிகள் பற்றிய விவரங்கள் ஆண்டுகள் உள்பட தெரிவியுங்கள்

* வேலை பார்த்த நிறுவனங்களின் பெயர் மற்றும் வேலை பார்த்த ஆண்டுகளை குறிப்பிடுங்கள்
இவையெல்லாம் இருந்தால் உங்கள் நண்பர் முகநூல் வைத்திருந்தால் உங்களை தேடி அடைவது எளிது. ஒரு சில குறிப்புகளை வைத்து அவர்கள் முகநூலில் உங்களைப் பற்றிய குறிப்பு அனுப்பி விவரம் கேட்டால், அவர் ஒருவேளை உங்களை அறிந்து கொள்ளும் தெரிந்தவராக இருந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்வார்.

என்னுடைய நண்பர் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடை பணிபுரிந்தவர், அதன் பிறகு நானும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, சிங்கப்பூர் என மாறி மாறி வேலையை மாற்றிக் கொள்ள முற்றிலும் தொடர்பு அறுந்து போனது.

பழைய நண்பர் ஒருவரைத் தேடித் தந்த முக நூலுக்கு நன்றி.

1 ஆகஸ்ட், 2011

மஜுலா சிங்கப்பூரா....!

20 நூற்றாண்டுக்கு பிறகு உருவான அல்லது மறுமலர்ச்சி / விடுதலைப் பெற்ற நாடுகள் அனைத்துமே மதச் சார்பற்ற அல்லது பல இன சமூகங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவ்வாறான நாடுகளில் இனம் அல்லது மதம் சார்ந்த செயல்பாடுகளைத் தவிர்த்து அவை நிலம் சார்ந்த நலனை முன்னிறுத்தி செயல்படும் போது அங்கு வாழும் மக்கள் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, நாட்டின் செல்ல வளத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றி ஒட்டு மொத்த நாடே பொருளியல் மற்றும் சமூக வளர்ச்சியில் வெற்றிபெருகிறது. அப்படி ஒரு வெற்றிகரமான நாடாக உருவாகியுள்ளது தான் சிங்கப்பூர். இதே சிங்கப்பூர் 46 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் காரணங்களால் மலேசியாவின் அரசியல் ஆளுமைகளிலிருந்து தனித்து விடப்பட்டதாகும், எந்த ஒரு இயற்கை வளமும் இல்லாமல் தனியாக நாம் எப்படி உலகவாழ்கையை எதிர்கொண்டு முன்னேறப் போகிறோம் ?

சிங்கப்பூர் பொதும்க்களிடம் கேள்வியாக வைத்து அதற்கு விடையாக பல இனசமூகமாக இருந்தாலும் ஒற்றுமையாக நாம் நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி தலைமை ஏற்று, மூத்தவர், சிங்கப்பூரின் தந்தை என்று சிங்கப்பூரார்களால் அழைத்துப் போற்றப்பட்ட திரு லீக்வான்யூ அவர்களின் வழிகாட்டுதலும் கடந்த 46 ஆண்டுகளாக சிங்கப்பூர் சிங்க நடைபோட்டு வருகிறது. ஆசியாவின் பொது முகம் என்பது போல் பல்வேறு இன, மொழி மற்றும் மத அடையாளங்களுடன் இருக்கும் சிங்கப்பூரை காணும் ஆசியர் அல்லாத ஒருவர் ஆசியாவின் அனைத்து பண்புகளையும் கண்டு செல்வர். ஆசியாவின் நுழைவாயிலாகவும், ஆசியாவின் வர்தக மையமாகவும் சிங்கப்பூர் தொடர்ந்து இருந்துவருவதும் அதற்கேற்ற வசதிகளைக் கொண்டிருப்பதும் சிங்கப்பூரின் பலம்.

பல்வேறு சமூக இன மக்கள் வசிக்கும் எந்த ஒரு நாடாக இருந்தாலும் அவர்களுக்குள் அல்லது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் பொதுவான ஒரே விழா அந்நாட்டின் தேசிய நாளாகத்தான் இருக்கும், இவை சிலநாடுகளில் விடுதலை பெற்ற நாளாகவோ, குடியரசு நாளாகவோ, நாட்டின் பிறந்த நாளாகவோ இருக்கும்

******

இந்த ஆண்டு சிங்கப்பூர் வரும் ஆகஸ்ட் 9 ஆம் நாள் தனது 46 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது, சிங்கப்பூர் தனித்த நாடு என்று அடையாளம் கிடைத்த நாடே சிங்கப்பூரின் பிறந்த நாளாகும், சிங்கப்பூரின் பிறந்த நாள் கொண்டாட்டாம் ஒரு திங்கள் (மாதம்) முன்பாக தொடங்கி இரு திங்கள்களுக்கு தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும், அரசு அலுவலகங்கள், வீடுகள் அனைத்திலும் சிங்கப்பூரின் தேசிய கொடி முகப்பில் வைக்கப்பட்டிருக்கும், நகரெங்கிலும் கொடிகளும் தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆகஸ்ட் 9 நாள் சிங்கப்பூரின் தேசிய நாள், அன்று பொது விடுமுறை, விழாவிற்காக அமைக்கப் பெற்ற வளாகத்தில், மாலையில் பிரதமர், ஆளுனர், அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பார்வையாளராக அமர்ந்திருக்க இராணுவ, உள்நாட்டு பாதுகாப்பினர் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெரும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிகழ்ச்சிகான ஒத்திகை ஒரு திங்களுக்கு முன்பாகவே வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடைபெரும், ஒத்திகையும், விழா நாள் நிகழ்விற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, நாட்டின் தலைவர்கள் தவிர்த்து பொதுமக்கள் முன்னிலையில் ஒத்திகைகள் நடைபெரும், இதற்குக்காரணம் பல்வேறு தரப்பினருக்கு விழாவைக் காணுவதற்கு நல்வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது மற்றும் விழா முன்னோட்டத்திலேயே நன்கு பயிற்சி பெற்று விழா நடைபெறும் அன்று மேலும் சிறப்பாக நிகழ்ச்சியை அமைப்பதும் தான். ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு முன்பே பலமுறை தனித்தனிக் குழுக்களாக ஒத்திகைகளை செய்தே படைப்பார்கள் என்பதால் ஒத்திகை நிகழ்சிகள் விழாநாளை ஒத்த நிகழ்ச்சியாக அமைந்துவிடுகிறது.

சிங்கப்பூரில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்துவருகிறேன், சிங்கப்பூர் தேசிய நாள் கொண்டாட்டத்தை ஆண்டு தவறாமல் தொலைகாட்சிகளில் கண்டு களிப்பது உண்டு, நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை, இருந்தாலும் நிழல் காட்சியாக தொலைகாட்சியின் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே, விழா நிகழ்ச்சிகளில் விழா மைதானத்திற்கு மேலே பறந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடுத்த சில வினாடிகளில் நம் வசிக்கும் வீட்டை கடந்து சென்று கொண்டிருக்கும், வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் அவற்றின் ஒலியோ உருவமோ கூட தெண்படும், கடந்து செல்லும். அடுத்தடுத்த வினாடிகளில் 'இப்ப டீ வில பார்த்த ஹெலிகாப்டர்....தோ வருது பாரு....' என்று இல்லத்தினரை வெளியே பார்க்கச் சொல்லிக் காட்ட அக்காட்சி இன்பம், அவை விவரிக்க முடியாத உணரத்தக்க ஒன்று. அன்றாட வாழ்க்கையை சிங்கப்பூர் வாழ்க்கையாகவே வாழப்பழகி, சிங்கப்பூரைப் பிரிய மனமின்றிய வாழ்க்கை தான் என்னுடையது, காரணம் மகனும் மகளும் இங்கேயே பிறந்து வாழ்க்கிறார்கள், அவர்களுக்கு இந்திய வாழ்க்கைச் சுழலை எதிர்கொள்ளும் மன நிலையை நான் ஏற்படுத்தித்தரவும் இல்லை. வாழும் எந்த ஒரு நாட்டையும் நேசித்தால் மட்டுமே அந்த நாட்டில் நாம் மனம் ஒன்றி வாழ முடியும். இதுவரை எனது வாழ்வில் கால்பங்கு சிங்கப்பூரில் கழிந்துவிட்டது. அடுத்தும் குழந்தைகளின் எதிர்கால நலனின் நாட்டமாக இப்படியே தொடரும். இதுவரை நேரடியாக கண்டு களித்திருக்காத தேசிய நாள் கொண்டாட்டத்தை இந்த ஆண்டு ஒத்திகை நிகழ்வாக கண்டு களிக்கும் வாய்ப்பு சென்ற சனிக்கிழமை கிடைத்தது.

விழா மைதானம், சிங்கப்பூரின் புதிய அடையளங்களுல் ஒன்றான மெரினா சான்ட்ஸ் முன்பாக மெரினா பே எனப்படும் கடல் தளத்தில் தெப்ப மேடையில் அமைக்கப்பட்டிருக்கிறது, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு தான் நிகழ்சிகளை நடத்துகிறார்கள், பார்முலா எப் 1 கார் பந்தயங்களும் அந்தப்பகுதியில் தான் நடந்துவர ஏற்பாடுகள் செய்யப்படும், விழா மைதானத்திற்கு இரண்டு மணிகள் முன்பாக அதாவது மாலை நான்கு மணி முதலாக அனுமதிக்கிறார்கள், கைபைகள் மற்றும் உடைமைகள் எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறது, விழாவின் பார்வையாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு பை இலவசமாக வழங்கப்படுகிறது, அதனுள் தொப்பி, மின் ஒளி கைவிளக்கு, குடிநீர் பாட்டில்கள், திண்பண்டங்கள் பல்வேறு பொருள்கள் மற்றும் விழா குறித்த முக ஒட்டிகள் (Face Tattoo) இருந்தது. ஏறத்தாழ 25 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் அரங்கம், அனைவரும் வந்து அமர இரண்டு மணி நேரம் ஆகிறது, நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஏற்கனவே அதுவரை அமர்ந்து வருபவர்களுக்கு அலுப்பு ஏற்படாமல் இருக்க நிகழ்ச்சி அட்டைகளைக் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை முக நூலில் (பேஸ் புக்) வெளியிட இருப்பதாகச் சொல்லி சுட்டி குறித்த சீட்டு கொடுக்கிறார்கள், மேலும் குழந்தைகளுக்கு பலூன் உருவங்களைச் செய்து தருகிறார்கள், அரங்கத்தின் முன்பாக அமைக்கப்பட்ட மிகப் பெரிய திரையில் ஒலி / ஒளிக்காட்சிகளை ஓடவிடுகிறார்கள், நானும் மகளும் இரண்டு மணி நேரம் முன்பாகச் சென்றிருந்தாலும் நிகழ்ச்சி எப்போது துவங்குமோ என்று எங்களுக்கு அலுப்பு ஏற்படவில்லை.





நிகழ்ச்சி குறித்த நேரத்தில் சரியாக மாலை ஆறுமணிக்கு துவங்கியது, உள்ளூர் கலைஞர்கள் பங்குபெற்ற டிரம் மற்றும் இசை நிகழ்ச்சி அதனை வழி நடத்தியவர்கள் சிங்கப்பூர் தொலைகாட்சியில் புகழ்பெற்றவர்கள். அதன் பிறகு எல்லோரையும் மேலே பார்க்கச் சொன்னார்கள், கண்ணுக்கு எட்டிய தொலைவில் வெள்ளை எள்ளு அளவில் விமானம் பறந்து சென்று கொண்டிருந்தது, கிட்டதட்ட 10 ஆயிரம் அடி உயரமாம், அதிலிருந்து 5 வான்குடை வீரர்கள் குதித்திருக்கிறார்கள் என்பது சில வினாடிகளில் தென்பட்டது, பின்னர் அவர்கள் வானில் வட்டமடித்து இரண்டு நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொருவராக விழா மேடையின் முன்பாக சரியாக இறங்கினார்கள். அவர்களில் சிலர் பலமுறை பயிற்சி பெற்றவர்களாகவும், ஒரு சிலர் இம்முறை தேசிய நிகழ்ச்சிகளுக்காக முதன்முறையாக குதிப்பவராகவும் இருந்தனர், மேலிருந்து பார்க்கும் போது சிவப்பு வண்ணக் மக்கள் கூட்டத்தையும் அவர்களின் ஆரவாரமும் கண்டு மெய்சிலிர்த்தாகக் குறிப்பிட்டார்கள், அவர்கள் மேலிருந்து இறங்கும் காட்சி மெய்சிலிர்பாக இருந்தது, கரணம் தப்பினால் மரணம் தான், ஆனால் இவர்கள் குடைச் சிறகு விரியாவிட்டால் சிதறல் தான், நினைத்தாலே அச்சமூட்டுகிறது.




அதன் பின்னர் ஆபத்தான வேளைகளில் உள்நாட்டு பாதுகாப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது காட்டப்பட்டது, இந்நிகழ்ச்சியில் வெடிகுண்டுகளை செயல் இழக்க வைப்பது, மற்றும் இயந்திர உருவங்கள் (ரோபோ) செயல்பாடு மற்றும், இராணுவ வண்டிகள், ஹெலிகாப்டர் ஆகியவை மேடைக்கு அருகேயே சாகசங்கள் செய்து காட்டின. உயர உயர கட்டிடங்களுக்கு இடையே அவை வந்தது மிகப் பெரிய பறவை ஒன்று அங்கு இரையெடுக்க வந்து வட்டமடித்தது போன்று இருந்தது. அதிலிருந்து சில வீரர்கள் கடலுக்குள் குதித்து தீவிரவாத செயல்குறித்து ஆய்வு நடத்தினார்கள். பின்னர் சிங்கப்பூரின் தேசிய கொடியைத் தாங்கிய ஹெலிகாப்டர்கள் விழா மைதானத்தின் மேலாக பறந்தது. பின்னர் தேசிய கொடியேற்றம் என வழக்காமாக சுற்றுலாவாக பார்கும் அந்த மெரினா பே பகுதியில் இவ்வகைக்காட்சிகள் வியப்பூட்டின. அனைத்து காட்சிகளும் நேரிடையாகவும் அங்கே அமைக்கப்பட்ட அகலத் திரையிலும் மிகப் பெரிதாகப் பார்க்கும்படியும் அமைந்திருந்தன.




பிறகு இராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு, பின்னர் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகை, பின்னர் இராணுவ உயர் அலுவலரால் அரசு தலைவரின் அனுமதி பெற்று நிகழ்ச்சி துவங்குவதற்கான ஒப்பம், அரசு தலைவர் அணிவகுப்பை பார்வை இடுதல் (பொதுவாக நாட்டின் ஆளுனர் தான் அணிவகுப்பை அருகில் சென்று பார்வை இடுவார்) , அங்கே கடல் பகுதியில் மிதவை மேடையில் வைக்கப்பட்ட பீரங்கிகள் தொடர்ந்து இடைவெளி விட்டு முழங்கிக் கொண்டு இருந்தன.

'உங்களுக்கு முன்பாக எதிரே வானத்தைப் பாருங்கள்' என்றார்கள், பார்க்க.........தொலைவில் சிறிதாகத் தெரிந்து பின்னர் சீறிப்பாய்ந்து காற்றைக் கிழித்தபடி 'எப்' வகை போர் விமானங்கள் ஐந்து ஒன்றாகப் பறந்து பின்னர் விரிந்து சென்றது.











பின்னர் சிங்கப்பூரின் பல்வேறு உணவு வகைகள் குறித்த உருவங்களை தாங்கியவர்களின் கலை நிகழ்ச்சிகள், மேடைப்பாடல்கள், இசை மற்றும் சிங்கப்பூர் எவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்பது குறித்த பொருளில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின.












இறுதியாக கண்கவர் பல வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் கண் கொள்ளக்காட்சியாக அமைந்தன, கூடவே லேசர் ஒளிகற்றைகள், அந்த இடமே ஒளி வண்ணங்களால் ஒலிகளாலும் ஒளிர்ந்தது, பொறிந்தது. சரியாக 8. 20க்கு நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்து தேசிய பாடல் ஒலிக்கப்பெற்று ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு பெற்றது. எத்தனை பெரிய திரைகளில் எந்த வித ஒலி அமைப்புகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை நிழலாகக் தொலைக்காட்சியில் நேரடி காட்சியாகக் (லைவ் டெலிகாஸ்ட்) கண்டாலும், சாட்சியாக அமர்ந்து நேரடியாக காண்பதும் அதன் துய்ப்பும் விவரிக்க முடியாத ஒன்று.





சிங்கப்பூரின் தேசிய நாள் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறுகிறது, அதன் நேரடி ஒளிபரப்பும் இணையங்களில் காணக்கிடைக்கும், அதன் இணைப்பு பின்னர் தருகிறேன்.

மஜுலா சிங்கப்பூரா மலாய் மொழி சொற்றொடர், இதன் பொருள் முன்னேறட்டும் சிங்கப்பூர்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்