சீனமொழியை கற்றுக் கொள்ளும் எனது ஆர்வத்தில் கொஞ்சமும் தொய்வின்றி தொடர்ந்து கற்றுக் கொண்டுதான் வருகிறேன், சீனர்கள் மாண்டரின் மொழியில் பேசுவதில் ஏறக்குறையை 60 விழுக்காடு அவர்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு சீனமொழித்திறன் என்னுள் வளச்சி பெற்றுள்ளது. பேசுவது மட்டுமின்றி அம்மொழியை படிப்பதற்கும் கற்றுக் கொண்டால் ஒரளவும் முழுமை அடைய முடியும் என்று நினைத்து தற்பொழுது சீன எழுத்துகளையும் மனப்பாடம் செய்து வருகிறேன், சீன எழுத்துகளை மனப்பாடம் தான் செய்யமுடியும், ஏறக்குறையை 80,000 எழுத்துகளில் இன்றைக்கு செய்தித்தாளில் அல்லது அன்றாடம் எழுத்துப் புழக்கத்தில் பயன்படுபவை என்பதாக சுமார் 2000 சீன எழுத்துகள் வரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவை அனைத்தையும் சொல்குறியீடாக மனப்பாடம் செய்து கொண்டால் தான் சீன மொழியைப் படிக்க முடியும். சீன / கொரிய / ஜப்பானிய மொழியின் எழுத்துகள் தான் உலகிலேயே மிகுதியான எழுத்துகளைக் கொண்ட மொழி. கொரிய / ஜப்பானிய எழுத்துகளுக்கு சீனமொழி எழுத்துகளே அடிப்படை. இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பெரிய வேறுபாடு என்னவென்றால் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள வெறும் மூன்று மாதமே போதும் அதன் பிறகு தெரிந்ததை வைத்து நாம் மேலும் மேலும் குறிப்பிட்ட மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும், கூர்ந்த கவனிப்பும் ஆர்வமும் இருந்தால் ஆங்கிலம் உள்ளிட்ட மற்றொமொழிகள் பேச்சுவழக்காகவும் கற்றுக் கொள்ள முடியும், ஆனால் அவை அறிமுக மொழியாக கற்றுக் கொள்ளும் பொழுது ஓரளவு கற்றுக் கொள்ளவே ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகும்.
*****
இன்னிக்கு காலையில் சிங்கப்பூர் சீன வானொலி நிகழ்ச்சியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுவலகம் வந்தேன், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் முதல்வன் படத்தில் சுஷ்மிதா சென் பாடும் பாடலாக வெளிவந்த ஷக்கலாக்க பேபி சைனீஸ் பாடல் வடிவில் ஒலிப்பரப்பானது. ஒரு தமிழன் இசையமைத்தப்பாடல் சீனமொழியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது பெருமையானது. சீனப்பாடலைக் காப்பி அடித்த ரஹ்மானின் இசை என்று யாராவது மாற்றி எழுதி இருக்கிறார்களா ? என்றுத் தேட, இணையத்திலும் அவ்வாறு இல்லை. இப்பொழுது தெரியவருவது போல் ஆண்டு தேதி வழக்குகள் முன்பு இல்லாததால் யாரை யார் காப்பி அடித்தார்கள் என்பதே தெரியாத நிலையில் உரியவருக்கானப் பெருமை என்பவையெல்லாம் வரலாறு எழுதுபவர்களின் கைகளில் தான் இருந்தது, பாட்டும் நானே பாடலும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே - என்கிற திருவிளையாடல் பாடலை இயற்றியவர் ஒரு இஸ்லாமியர் ஆனால் அது கண்ணதாசன் பாடல் என்று சொல்லப்படுகிறது. 'அசையும் பொருளும், இசையும் நானே.....' என்பது அப்பாடல்வரிகளில் ஒன்று இஸ்லாமியர்களின் இணை வைத்தல் பற்றிய கருத்து நாம் அறிந்தவை தான் என்பதால் ஒரு இஸ்லாமியர் கற்பனைக்கும் கூட அசையும் பொருள் எல்லாம் இறைவன் என்ற பொருள் தரும் (இறைவனுக்கு இணை வைக்கும்) வரிகளை எழுதி இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து, எனது கருத்து உண்மை இல்லை என்றாலும் கூட அதை ஒரு இஸ்லாமியர் எழுதினார் என்பதற்காக மற்ற இஸ்லாமிய பெருமைப்படும் வரிகளாக அதில் எதுவும் இல்லை என்பது அது குறித்து பெருமை பேசும் இஸ்லாமியருக்கான செய்தி. ஏ ஆர் ரஹ்மான் சம்பாதித்து போதும் இசை அமைப்பதை நிறுத்தலாம், இஸ்லாத்திற்கு துரோகம் செய்வதை ரஹ்மான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வாஹாபியர்களின் (கண்டனக்) குரலாக சுவனப்பிரியனே குரல் எழுப்பியுள்ளார். இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது என்கிற அடிப்படையில் அவர் ஏ ஆர் ரஹ்மானை ஏற்கனவே நிறைய சம்பாதித்திவிட்டார் இனி இஸ்லாமிய வளர்ச்சி பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துவிட்டு இசைக்க ரஹ்மான் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார் சுபி.
திரும்பவும் சக்கலக்கா பேபிப் பாடலுக்கு வருவோம் இந்தப் பாடல் சிங்கப்பூர் பாப் பாடகி ஒருவரால் பாடப்பட்டு ஆல்பமாக வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. யுடியூபில் இப்பாடல் காணொளியாகக் காணக்கிடைக்கிறது. சிலர் அப்பாடல் குறித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்தப்பாடல் முதல்வன் படத்துப் பாடல் பின்னர் ஏர் ரஹ்மானின் பாம்பே ட்ரீம்ஸ் இசைத் தொகுப்பில் (ஆல்பம்) இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார், விக்கிப்பீடியாவிலும் இந்தத் தகவல் உண்மை என்றே கட்டுகிறது, யூடியூபில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் ஒன்றில் இப்பாடல் கவனமாக ஏர் ரஹ்மான் பேரைத் தவிர்த்துவிட்டு மேற்கத்திய இசையில் பாம்பே ட்ரீம்ஸின் பாடல் பின்னர் முதல்வன் படத்தில் காப்பியடிக்கப்பட்டதாக ஒருவர் கருத்துவிட்டுள்ளார். பாம்பே ட்ரீம்ஸ் இசை அமைத்ததும் அதே தமிழனாக இருந்தாலும் அந்தப் பாடல் தமிழ் படத்தில் இடம் பெரும் முன் இந்திப்பாடலாக வந்ததுதான் என்பதாக மட்டம் தட்டியுள்ளனர். இப்படியெல்லாம் கூட தமிழனக்கு எதிர்ப்பு இருக்குமா ? வெறுப்பாக இருந்தாலும் வியப்பாகவும் இருக்கிறது. ஒரு தகவலை வெளி இடுபவர்கள் குறைந்தப்பட்சம் உண்மைத் தன்மை குறித்த எண்ணமே இல்லாமல் எழுதி-விடுகிறார்கள்.
நமக்கு தெரியும் அண்மைய காலத்திலேயே தமிழர்கள் குறித்த தகவல்கள் வரலாற்றில் திரிக்கப்படும் போது, நமக்கு தெரியாத காலத்தில் நடைபெற்றவற்றின் வரலாறுகளாகக் காட்டப்படுவதிலும் இருக்கும் உண்மைத் தன்மைகளை நாம் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம் என்பவை துரதிஷ்ட வசமானது :(



