உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு -
இந்த குறளுக்கு பொருள் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாத போது அம்மணத்தை மறைக்க உதவும் கை போன்றதே தக்க சமயத்தில் உதவக் கூடியது நட்பும். பருவ அகவையை கடந்தவர்களின் உடலில் பலர் முன்பு ஆடையற்ற நிலை என்பது ஒரு இக்கட்டான சூழல், வெட்கத்தையும் கூச்சத்தையும் ஏற்படத்தும் நிலை, அப்படியான நிலையை திருவள்ளுவர் மற்றும் சங்க காலத்திலும் யாரும் விரும்பியதில்லை, சபை முன்னிலையில் ஆடை அவிழ்பது ஒருவரை அவமானப்படுத்தும் முயற்சி என்றெல்லாம் மகாபாரதக் கதைகளில் பதிய வைக்கப்பட்டுள்ள ஆடையின் தேவை குறித்த தனிமனித தன்மானம் பற்றிய குறிப்புகள்.
ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ வெட்க்கம் கொள்ளத் தேவை இல்லை என்பது பொதுவான பரிந்துரைகள் மற்றும் புரிந்துணர்வு தான், இந்தியாவிலும் தமிழகத்தில் இவை ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், நமது ஆடையற்ற உடலை ஒரு சில நிமிடங்கள் மருத்துவர்கள் தவிர்த்து வேறு எவருக்கும் காட்டுவது வழக்கம் இல்லை, பெண்களுக்கு மகப்பேற்றின் போது அந்த சூழலில் உதவி செய்பவர்கள் முன்னிலை தவிர்த்து எந்த பெண்ணும் தனது ஆடையற்ற உடலை தனது துணை தவிர்த்து எவருக்கும் காட்ட மாட்டார்கள்.
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுக் குளத்தில் குளியல் இருந்தது, இன்னும் கூட கிராமங்களில் படித்துறைகளுடன் சேர்ந்த குளத்தில் குளிக்கிறார்கள், இன்னும் குற்றலாம், மலை அருவிகள், கடற்கரை தவிர்த்து வெறெங்கும் பொதுக் குளியல்களுக்கு வாய்ப்பற்ற நிலை உள்ளது. எனக்கு தெரிந்து ஆசிய நாடுகளில் நான் பயணம் செய்தவரையில் குளியல் என்பது பொழுது போக்கு, அதற்காகவே சீனா, தைவான், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் பலவித வசதிகளுடன் கூடிய பொதுக் குளியல் அறைகள் உண்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன தலைநகரில் Beijing Bath Houses மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தது, தற்பொழுது அவைகள் மூடப்பட்டு, முற்றிலும் புதிய வடிவமாக SPA எனப்படும் பல்வேறு குளியல் வசதிகளுடன், சூட்டு அறை (Sauna) மற்றும் நீராவி அறைகள் (Steam Room) கூடிய பொழுது போக்கு இடங்கள் உண்டு. ஐரோப்பிய நாடுகளில் Russian Banya மற்றும் Turky Hammam புகழ்பெற்றவை. SPA இதைத் தமிழில் பொருளுடன் 'புத்துணர்வு கூடம்' என்று வேண்டுமானால் சொல்லலாம்,
![]() |
(Pic Courtesy : China Daily) |
வார இறுதிகளில் நண்பர்களுடன் அல்லது இல்லத்தினருடன் சென்று ஒரு மூன்று மணி நேரம் செலவு செய்துவிட்டு உடலை மனதையும் புத்துணர்வு செய்து திரும்பும் ஒரு பொழுது போக்கிடமாக அவற்றை அமைத்துள்ளனர். முழுவதுமாக உள்ளுக்குள் (Indoor) சுடுநீர் தண்ணீர் குளங்கள், குளிர் நீர் குளங்கள் மற்றும் சுடுகல் சூட்டு அறை (Sauna) உடல் வியர்க்க, நீராவி அறை இவற்றை முடித்துவிட்டு, ஓய்வெடுக்க தொலைகாட்சி அறை, அங்கு அருகே பாணங்கள் சிற்றுண்டிகள், மென்மது (Beer) எல்லாம் கிடைக்கக் கூடிய Bar வசதி மற்றும் விரும்பியவர்களுக்கு கட்டணம் செலுத்தினால் தசைப்பிடித்துவிடுவது (Massage) ஆகிய வசதிகள் இருக்கும். சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் பெண்களுக்கான SPA குறைவு, ஆனால் ஆண்களுக்கு நிறையவே உள்ளது. இவற்றிற்கும் சீனா, தைவான்,கொரியா மற்றும் ஜப்பான் SPA க்குளுக்கும் பெரிய வேறுபாடு அங்கு ஆடை தான். சிங்கப்பூர் மலேசிய ஆண்களுக்கான SPA க்களில் சிறிய வகை நீச்சல் கால்சட்டைக அணிந்திருப்பார்கள். மற்ற ஆசிய நாடுகளில் ஏதுமற்ற (Nude/Naked) ஏகாந்த ஜென் (ஜைன) நிலை தான்.
40ஐ கடந்த எனது அகவை மற்றும் துய்ப்புகளை கருத்தில் கொண்டு கீழ்கண்டவற்றை எழுதுவதற்கு எனக்கு சற்றும் கூச்சம் எதுவுமில்லை.
******

*****
சென்ற வாரம் ஜப்பான் செல்லும் வாய்ப்பு, மூன்று மாதம் முன்பு திட்டமிட்ட ஒன்று தான், அங்கு வேறு சில வேலைகள் இருந்தாலும், ஏற்கனவே ஜப்பான் SPAக்கள் புகழ்பெற்றவை என்று அறிந்திருந்ததால், அங்கு சென்று வரவிரும்பி சிறந்த SPAக்களில் ஒன்றான SPA World அதன் மிகச் சிறந்த வசதிகளுக்காக தேர்ந்தெடுத்து சென்றேன்.

![]() |
Ganban Yoku |
மூன்றாம் தளத்தில் ஆண்கள் பெண்களுக்கு பொதுவான சுடுகல் Stone SPA அதனை Ganban's Yoku என்ற ஜப்பானிய பெயரில் அழைக்கிறார்கள், அதற்கான தனிப்பட்ட ஆடையை அணிந்து அங்கு செல்ல வேண்டும், அதில் பல நாடுகளில் உள்ள சுடுகல் SPA அமைப்பும் அதற்கான தனித் தனி அறைகளும் அதற்கான வெப்ப நிலைகள் மற்றும் அலங்கார அமைப்புகளுடன் உள்ளது, ஒரு அறையில் 20 பேர் வரை ஓய்வெடுக்கும் அளவில் உள்ளது, மெல்லிய இசையும், இதமான மணமும், படுத்துக் கொள்ள அல்லது அமர்ந்து கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தது, மையப்பகுதியில் படுத்துக் கொண்டு ஒய்வெடுக்கும் மிக அற்புதமான வான் கூறையில் நட்சத்திரங்கள் அமைக்கப்பட்ட நடுக்கூடமும் இருந்தது, அருகில் உணவு மற்றும் குளிர்பான கடைகள் இருந்தன. அந்த பகுதியில் ஒவ்வொரு அறைக்கும் 5 - 10 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு ஒரு மணி நேரம் களி(ழி)த்து நான்காம் தளத்தில் இருக்கும் ஆண்களுக்கான Onsen - japan hotspring spa பகுதிக்குள் மீண்டும் வந்தேன். Onsen என்றால் ஜப்பானிய மொழியில் வெந்நீர் ஊற்று அல்லது ஆங்கிலத்தில் Hot Springs எனப்படும்.
அங்கு உடைகளையும் களைந்து அங்கு பூட்டி வைத்து விட்டு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் இருந்து இரண்டு கைக்குட்டையை சேர்த்தால் இருக்கும் நீளத்தில் இருக்கும் ஒரு மஞ்சள் துண்டு அதை எடுத்துக் கொண்டு குளியல் பகுதிக்குச் செல்லவேண்டும், அந்த துண்டு இடுப்பு சுற்றளவுக்குக் கூட வராது, உடுக்கை இழந்தவன் கை அளவுக்கு வேண்டுமென்றால் மறைத்துக் கொள்ளலாம், வெப்ப அறையில் இருக்கும் பொழுது தண்ணீரில் நனைத்து அந்த துண்டை போட்டுக் கொள்ளலாம், தலையில் சூடு ஏறாது. மற்றபடி அந்த துண்டு சுருட்டினால் அம்மண உடலை மறைக்கும் கை அளவு கூட இல்லை,
Onsen - Hotspring பகுதிக்கு செல்லும் முன் உடலும் தலையும் நனைய குளித்துவிட்டு செல்ல வேண்டும், பொதுவாகவே ஆசிய நாடுகளின் நீச்சல் குளத்திற்கு இறங்கும் முன் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அறிவுறுத்தல், உடலில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை போக்கிவிட்டு பொதுக் குளத்தில் இறங்கினால் அங்கு குளிக்கும் மற்றவர்களுக்கு அருவெறுப்பு வராது என்பதால் இந்த ஏற்பாடு.
முதலில் சென்ற குளம் பழங்கால ரோமா புரி அமைப்பில் அமைக்கப்பட்ட பகுதியின் Hotspring, அங்கு இடுப்பளவு சுடுநீர் அதில் 15 பேர் வரை அமர்ந்திருந்தனர், அதில் சில அப்பாக்களும் அவர்களுடைய மகன்களும் ஆறுவயதிற்கு குட்பட்ட பெண் குழந்தைகளும் அடக்கம், ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடையற்ற பருவ வயதினரின் உடல் எந்த கவர்ச்சியையும் ஏற்படுத்தாது என்பதால் ஆசிய நாடுகளின் குளியல் அறைகளில் ஆண்கள் பெண்கள் பகுதிக்கு அவர்களால் கட்டுபாடின்றி சென்றுவர முடியும். ஆசிய நாடுகளில் குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து குளிப்பது வழக்கம். ஒரு சில விடுமுறை நாட்களில் மகனுடன் சேர்ந்து நானும் குளிப்பது உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் அறியாதவர் மட்டுமின்றி, அவர்கள் வளர்ந்தாலும் பெற்றோரின் நிர்வாண உடல் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை, படுத்த படுக்கையாக பெற்றோர் இருக்கும் பொழுது அவர்களுக்கு உடைமாற்றிவிட எந்த கூச்சமும் இல்லாமல், முகம் சுளிக்காமல், அருவெறுப்பு இல்லாமல் அன்புடன் செய்ய முடியும், பாலியல் உறுப்பு அனைவருக்கும் இருக்கும் என்று குழந்தை பருவத்திலேயே தெரியவருவதாலும் பார்த்து வருவதாலும் வளர்ந்த பிறகும் ஆண் - ஆண் அல்லது பெண் - பெண் ஓரின இனக்கவர்ச்சி அக்குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அவை குறைக்கிறது.
![]() |
SPA World - Onsen European Zone |
ஒருமுறை நீரில் மூழ்கிவிட்டு இடுப்பளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டேன், ஆடைகளுக்கு மாற்றாக நீந்தும் செதில் முளைத்த மீனின் புத்துணர்வை உணர்ந்தேன். யாரும் யாரையும் இடுப்புக் கீழ் வெறித்துப் பார்க்கவும் இல்லை, அளவு ஆய்வும் செய்யவில்லை, அம்மணமே என்றாலும் எல்லோரும் வெகு இயல்பாகவே இருந்தனர். இந்தியாவில் ஏன் இது போன்ற இடங்கள் இல்லை, அம்மணம் என்பதே துறவிகளுக்கானது என்று மட்டுமே நம்புகிறார்களோ ? என்றெல்லாம் நினைத்தேன், அங்கு பல்வேறு குளங்களில் கிட்டதட்ட 150 ஆண்கள் அதில் குழந்தைகளும் அடக்கம். வெப்பம் 40 Deg, Hotspring குளியல் பரிந்துரைபடி 10 நிமிடம் வரையில் அந்த தண்ணீரில் இருக்கலாம், பின்னர் வெப்ப அறையிலோ, நீராவி அறையிலோ ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேறு ஒரு Hotspring பகுதிக்குச் செல்லலாம். ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு நாடுகளின் Hotspring குளியல் முறைபடி அமைக்கபட்டிருக்கும் குளங்களும், மிகவும் குளிர்ந்த நீர் (19 Deg) குளங்களும் உண்டு.
Hotspring தண்ணீரில் உட்கார்ந்து ஓய்வெடுப்பது, படுத்து ஓய்வெடுப்பது, தனிப்பட்ட சிறிய தொட்டியில் அமர்ந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு அளவும் உயரமும் உள்ள அமைப்புகள் அங்கிருந்தன. ஒவ்வொன்றிலும் உப்புத் தண்ணீர், கந்தக தண்ணீர் மருந்து தண்ணீர் உள்ளிட்ட பல வகை குளங்கள், அவற்றில் வழியும் நீராக (Flowing / Over Flow Water) வந்து கொண்டே இருக்கும், எனவே யாரும் சிறுநீர் கழித்து இருப்பார்களா தண்ணீர் கெட்டு இருக்குமோ என்று ஐயப்படத் தேவை இல்லை. Hotspring க்கு செல்ல உடல் நிலை பரிந்துரைகள் உண்டு, எனவே நோயாளிகள் வந்திருப்பார்கள், தொற்று நோய் ஏற்படும் என்கிற அச்சமும் தேவை இல்லை.
விருப்பட்டவர்களுக்கு கட்டண உடல் பிடிப்பு சேவைகளும் இருந்தன, அனைத்து சேவையாளர்களும் பெண்கள் அவர்கள் ஆண்களின் அம்மண உடலுடன் அப்பகுதிக்குச் செல்வதை பொருட்படுத்துவதும் இல்லை, மருத்துவ சேவை போன்று இதையும் செய்கிறார்கள். உள்ளுக்குள் செயற்கை சுடுநீர் அருவி உண்டு, அங்கு சுற்றிலும் சுவர் அமைப்பு வானத்தைப் பார்க்கலாம், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு தெரியாதபடி சுவர் அமைப்பு, ஆனால் வெளி உலகில் (Open / outdoor) இருப்பது போன்று நமக்கு உணர்வை ஏற்படுத்தும். சுடுநீர் கொட்டும் அருவியில் நின்றால் அதன் விழும் வேகத்தில் உடல் வலி போய்விடும், அங்கும் 10 நிமிடம் வரை குளிக்கலாம். தளத்தின் நடுவே குளிர்பானங்கள் மற்றும் பியர் விற்கும் கடை, மேசைகள் போட்டு இருப்பார்கள், மேசைக்குக் கீழே கால் நனையும் அளவுக்கு வெது வெதுப்பான தண்ணீர், நனைத்துக் கொண்டே குளிர்பானத்தை ரசித்து குடித்து ஓய்வெடுக்கலாம், எல்லாம் அம்மண நிலையில் தான். உள்ளே எதுவும் வாங்குவதற்கு பணம் தேவை இல்லை, எல்லாம் கையில் அணிந்துள்ள Locker Tag Scan வழியாகத்தான், வெளியேறும் போதனது காட்டும் செலவை கட்டிச் செல்லவேண்டும், தனிமனித உணர்வு (ப்ரைவசி) மதிக்கப்படுவதால் உள்ளுக்குள் படம் எடுக்கவும் அனுமதி கிடையாது
வெப்ப அறையிலோ (Sauna), நீராவி (Steam) அறையிலோ ஓய்வெடுக்க அமரக்கூடிய நீள மரமேசை அமைத்திருந்தார்கள், அதில் வெள்ளை பூ டவல் (ட்ர்கி டவல்) போடப்பட்டிருந்தது, அதன் மீது நேரடியாக அமராமல் உட்காருவதற்கு மெல்லிய ரப்பர் சீட்டுகளை (Silicon Seat) பயன்படுத்திக் கொள்ள வேண்டும், Hygenic அல்லது தூய்மை பேன அத்தகைய ஏற்பாடு. தலை
![]() |
Sauna |
அந்த Onsen - Hotspring இரண்டு மூன்று மணி நேரம் செலவிட்டாலும் நேரம் செல்வது தெரியாது, இறுதியாக ஜப்பானிய பாணி குளியல், அதில் சிறிய ஸ்டூலில் உட்கார்ந்து தண்ணீர் பிடித்து, சோப்பு தேய்த்து குளித்துவிட்டு, சிலர் அங்கேயே முகச் சவரம் செய்து கொள்கிறார்கள், நான் அங்கிருந்த மூன்று மணிநேரம் இந்திய ஆண்கள் எவரையும் காணவில்லை, (ஒசாகா சென்று திரும்பும் வரையில் கூட வெளியேயும் இந்தியர் எவரையும் பார்க்கவில்லை) பின்னர் அப்படியே ஒப்பனை அறைக்கு வந்து நன்றாக துவட்டிவிட்டு, தலைவாரிக் கொண்டு, உடல் எடையை பார்த்துவிட்டு, ஆடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று ஆடைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு வெளியே வந்தேன். அப்பாடா....என்ன புத்துணர்வு...என்ன சுகம். எந்த செயற்கையும் சுற்றாத அம்மண உடல்களும் அழகானது, புனிதமானது தான்.
*****
நாட்டுக்கு நாடு உடலில் ஆடையின்மை குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு, குடிகாரன் விழுந்து கிடக்கும் பொழுதும், தன் நினைவற்று சுருண்டு கிடக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களிடம் துணி விலகி இருக்கிறதா என்று ஒருமுறையேனும் பார்க்கும் மனநிலை நம்மில் பலருக்கும் உண்டு, பொதுவாகவே வீட்டுக்குள்ளோ, விடுதியிலோ தனியாக இருக்கும் பொழுது ஆடையின்றி இருக்க விரும்பும் ஆண்களின் மனநிலை. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் குறைவே. நீலப்படங்களையும் நிர்வாண உடல்களையும், ஆடையையும் ஊடுறுவி பார்த்து மிகுதியாக ரசிப்பதெல்லாம் உடைக்காட்டுப்பாடு மிக்கதாகவும் கூறிக் கொண்டே, உடை நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசி பேசியும், பண்பாடுகள் பாரம்பரியம் பற்றி பெருமையாக பேசும் நாடுகளில் உள்ளோரே மிகுதி.
*******
ஜப்பானிய Hotspring குளியல் எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம், . ஒரு சில மணித்துளிகள் அங்கே அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்து பறந்து செல்லும் மன நிலையில் இருந்தேன், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய ஒன்று, எனக்கு அந்த நல்லூழ் வாய்த்தது.
இணைப்பு : ஸ்பா (தமிழில்) - தமிழ் விக்கிபீடியா
இணைப்பு : ஸ்பா (தமிழில்) - தமிழ் விக்கிபீடியா