பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2007

ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா (2) ?

எனது முந்தைய இடுகைக்கான பின்னூட்டமாக அனானி ஒருவர் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு

//பல நல்லுரைகளும், நல்லெண்ணங்களுமே ஒருவனை பக்திமான் ஆக்குகிறது. அப்படிபட்டவன் எதற்காக தவறுகள் செய்வான். அப்படியே அவன் தவறான பாதையை பார்க்கும் போதே, அவன் நம்பும் சக்தியே அவனை தடுத்தாட்கொண்டுவிடும். உண்மையான பக்திமான் மனமறிந்து ஒருபோதும் தவறு செய்ய மாட்டான். //

நல்லது. நாத்திகன் என்பவன் யார் ? சமூக விரோதியா ? அறை'குறை'களாக சொல்லும் அறை'குறை' பக்திமான்கள் கூட எதையும் ஆராயாமல் நாத்திகம் என்பது ஒரு ஒழுங்கீனமான குறியீட்டுச் சொல் என்பது போலவே 'இறை நம்பிக்கை' அற்றவர்களைப் பார்த்து செய்யும் அவதூறே பாவ-புண்ணியத்துக்கு பயந்தவர்கள் பக்தியாளர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம். நம்பிக்கையாளர்களே பாவ-புண்ணியத்திற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வது தான் சரி. அதை விடுத்து நம்பிக்கையாளர்கள் பாவ-புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள் என்பது எவ்விதத்தில் ஏற்புடையது. கேடுகளான பல நிகழ்வுகள் அதை உறுதிப்ப்டுத்திக் கொண்டிருக்கிறது. எவன் நாத்திகன் என்று முன்பு ஆத்திகர்களால் பழிக்கப்பட்டானோ அவனையே வணங்கும் நிலைக்குத் தான் ஆத்திகர்கள் ஆனார்கள் என்ற பேருண்மை புத்தர் மற்றும் சமணர் வாழ்க்கை வரலாறுகள் மூலம் தெரிவது கண்கூடு. நாளைக்கு பெரியார் ஈ.வெ.ரா க்கும் அதே போல் மரியாதை அவரே விரும்பாவிட்டாலும் அவருக்கு கிடைகலாம். :) அவர் வாழ்த்த காலங்களிலேயே ராஜாஜி அவர்களால் 'பெரியாழ்வார்' என்று அழைக்கமுற்பட்டார் என்பது இங்கே நினைவு கொள்ளத் தக்கது.

குரு என்று சொல்லிக் கொள்பவர்களே கூலிப்படையை நாடும் போது. -என்று சொல்லி இருந்தேன்//
அதற்கு திருவாளர் அனானி இட்ட மறுமொழி...

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்று நம்புகிறேம். ஆசான் சொல்வதை அப்பால் தள்ளுகிறேம்.நல்லார் ஒருவருக்காக பெய்யும் மழையில் தானே நாமும் நர்த்தனமாடுகிறேம்.

இதுவும் நல்ல கருத்தே.... ஆனால் தீரவிசாரித்து குற்றவாளிகள் என்று நிருபித்துவிட்டால் மட்டும் போதுமா ? உடனே சொல்லிவிடுவார்கள் 'தவறு செய்வது மனித இயல்பு' என்ற ஒற்றை வரியை பதிலாக. இங்கு கண்ணால் கண்டது காதால் கேட்டது எல்லாவற்றையும் தாண்டி மெய்பொருளால் கண்ட அறிவையும் கூட அந்த ஒற்றை வரி பதிலால் முடக்கிவிடமுடியுமா ? அதாவது மனிதன் தவறு செய்வது என்பது இயல்பு என்றால் நல்லது செய்வது மட்டும் இறைநம்பிக்கை என்ற ஒன்றால் கிடைப்பது என்றாகிவிடுமா ?

பழிபாவாத்துக்கு அஞ்சவேண்டும் என்ற அறிவுரைகள் அரைகுறை பக்தியாளர்களுக்குத் தான் சொல்லப்பட வேண்டுமேயன்றி எல்லோருக்கும் அல்ல. சமூக அக்கரை ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன ? அனைவருக்குமே இருக்கிறது. மேலும் சொல்ல விரும்பியது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்துக்கு அஞ்சுபவர்களாம் ? என்ன ஒரு அபத்தமான செய்தி !!! நாம் அனைவரும் தகவல் தொடர்பு சாதனங்களைப் அறியாதவர்களா ? பி.சி சோர்கார் ஒரு ரயிலையே மேஜிக் வித்தையினால் மறைத்தாராம்...இங்கு சாவர்காரின் பக்தர்கள் கோத்ரா ரயிலையே மறைக்கிறார்கள். அந்த திட்டமிட்ட சதியும் அதன் பின்னால் பல இஸ்லாமிய குடும்பங்கள் சிதைந்ததையும், ஒரிசாவில் பாதிரியார் அன்பு மகன்களுடன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களையெல்லாம் சாவர்கார் வித்தையால் மறைந்துவிட்டது என நினைக்கிறார் போலும். இந்த சம்பவத்தில் கோர தாண்டவமாடியவர்கள் எல்லோரும் நாத்திகர்களா ? அல்லது அந்த சம்பவம் வரலாற்று சிறப்புமிக்க இன்பமான ஒரு நிகழ்வு எனவே அதை பாவ-புண்ணியம் என்ற வகைப்படுத்தலுக்கே இட்டுச் செல்லக் கூடாதா ?

அந்த ஆர்.எஸ்.எஸ் அனானி மேலும் பின்னூட்டத்தில் சொல்கிறார்,

//நீங்க ஒரு நாத்திகராக இருப்பதால் இதுபற்றி உங்களுக்கு பேச அருகதையும் இல்லை. இனி பதில் தரும் எண்ணமும் எனக்கில்லை. //

அதாவது இவர்களைப் பொறுத்தவரையில் தொடர்பு உடையவர்கள் மட்டுமே ஒரு செய்தியைப் பற்றி பேசவேண்டுமாம். ஆத்திகவாதிகள் சாதிகளைப் பிரித்து ஒருபிரிவினர் அள்ளுவதே சரி என்பார்களாம் அதை நாத்திகன் ஏன் என்று கேட்கக்கூடாதாம். நண்பரே பெரியார் என்ற நாத்திகன் கேள்வி கேட்டதால் தான் கோட்டை கதவுகள் போல் பலமாக திறக்காத கோவில் கதவுகள் இன்று அனைவருக்காகவும் திறக்கிறது. முதலில் நீங்கள் ஆத்திகனாக இருந்தாலும் அதற்கு உள்ள உரிமையைப் பெற்று தந்தவன் ஒரு நாத்திகனே என்று நினைவு கொள்க. அநியாயம், அக்கிரமம் நடக்காவிட்டால் தொடர்பு இல்லாதவர்கள் மட்டுமல்ல தொடர்பு உள்ளவர்கள் கூட அது பற்றிப்பேசப்போவதில்லை. சாலையில் ஒருவன் உயிருக்குப் போராடினால் உனக்கு தொடர்பு இல்லையென்றால் கண்டும் காணாதது போல் ஓடிவிடு என்பது போன்ற பொறுப்பற்ற பேச்சு எனவே அதை தள்ளுகிறேன்.

27 ஏப்ரல், 2007

ஆப்புக்கு வவாச... சிறப்பு பதிவு

ஆப்பத்துக்கு பாயா என்பது போல் ஆப்புக்கு வவாசங்கிற புதுமொழியோட ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்கப் போகிறேன்.

வறுத்து எடுக்கும் பதிவர்களும் பதிவுகளும் ஆரம்பத்தில் படிக்க சுவையார்வமாக இருக்கும்... நாளைடைவில் அதே போன்று பதிவுகளைப் படித்து படித்து விவாதங்கள் என்ற பெயரில் இனிமா குடித்த ஆயாசத்தில் இருக்கும் பதிவர்களை... பாயசம் குடிக்க வைத்து கலகலப்பாக்கும் ஒரு குழுவாக ... வம்பு வாதம் சற்றுமில்லாத (வவாச) பதிவுகளைப் அளிக்கும் பதிவுக் குழுக்களில் நம் வருத்தப்படாத வாலிபர்களின் பதிவுகள் முதன்மையானவை.

கு'பீர்' கு'பீர்' னு வயிறு கலங்க சிரிக்க வைக்கும் சிபி, ஸ்டெடியாக பின்னூட்ட கட்டிடத்தை வேகமாக எழுப்பும் கொத்தனார், ஊறுகாய்க்குக்கூட நக்கலில் சிக்கல் வைக்காத நாகை சிவா, எவ்வளவு 'அடித்தாலும்' நின்னு சமாளிக்கும் கைப்பு, பேதையில் மயங்காத ஜொள்ளுபாண்டி, 'காய்த்து' எடுக்கும் விவசாயி, 'தண்ணி' இல்லாக்காட்டில் தாக சாந்திக்கு வேண்டும் தேவ் என தள்ளாடமல் லொள்ளித் திரிபவர்களின் எகத்தாளமில்லாத நக்கல்கள், நையாண்டிகள்.. ஆப்புரேசன் (அளவோடு ஆப்பு வைப்பது) ... மட்டின்றி அவ்வபோது வந்து இளமையை புதுப்பித்து செல்லும் பதிவர்களின் பதிவுகளும் குறிப்பாக திரும்பிப் பார்க்கும் ஜோசப் ஐயா என நகைச்சுவையில் வகைகளை பரிமாறும் பதிவுகளை வவாசவில் படித்து வயிற்றுவலியயல் துடித்து இருக்கிறேன்.

இவிங்கெல்லாம் யாருன்னு கூகுளாண்டவரை வேண்டிக் கேட்டுக் கிட்டதில்... எனக்கு மட்டும் அந்த வரலாற்று ரகசியத்தைச் சொல்லி மறைந்தார்.
*********

ஒரு முறை 100 கைகளுடன் ஒரு கடவுள் ஒரு பெண்மணியின் கனவில் தோன்றினார்.

'பொன்மணி இந்த பதிவுலகில் சதாகாலமும் சாதிச் சண்டைகளும், மதச்சண்டையும் நடந்து வருகிறது இவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி எனக்கில்லை ... எனவே நீ பதிவுலகில் அவதரித்து ... யானை மீது அமர்ந்து சண்டைகளிலிருந்து பதிவர்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உனக்கு கொடுக்கிறேன்' என்று கூறி மறைந்துவிட்டார்...'

அதன்படி வ.வா.சங்கம் தோன்றியதாக வரலாற்று குறிப்புகளை வைத்து ஆய்வாளர்கள் குறி சொல்லி இருக்கின்றனர். அகழ்வாராய்ச்சி மேலும் செய்து பார்க்கையில் இரும்பினால் ஆன ஆயுதம் கைப்பற்ற பெற்றதாகவும் அந்த ஆயுதமே உலகில் தோன்றிய முதல் இரும்பு ஆயுதமாக இருக்க முடியும் என்று தெரிகிறது. ஆம் நண்பர்களே 'ஆப்பு' ஆயுதம் ஹராப்பா காலத்திற்கு பிறகு தோன்றியதாக அறியப்படுகிறது. ஆப்பு என்ற சொல் இருந்தே தகப்பன்மார்கள் அடிக்கடி தாய்மார்களிடம் ஆப்பு வாங்குவதாலேயே ஆப்பா என்று அழைக்கப்பட்டதாகவும் அந்த ஆப்பா மறுவி தற்பொழுது அப்பா, அப்பு என்று அழைக்கப் படுகின்றதாம். இங்கு அபிஅப்பாவை நினைத்தால் நான் பொறுப்பல்ல :) அப்படிபட்ட பெருமைக் குறிய ஆப்புக்கு மேலும் பெருமை சேர்த்த வவாசவின் செயல்பாடுகள் மாபெரும் ஆப்பார்வமாக நினைக்க முடிகிறது.

********

நானும் தேடி தேடிப் பார்த்ததில் பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. பதிவுகளில் இருக்கிற ஆப்புகள் அதிகமா ? பின்னூட்ட ஆப்புகள் அதிகமாக என்று எண்ணி எண்ணிப் பார்த்து பெரும் குழப்பமே அடைந்திருக்கிறேன். பற்றாக்குறைக்கு அங்காங்கே காலில் இரத்தம் வழியும் அளவுக்கு வெட்டிப்பயல், சிவா, இராம் போன்றவர்களால் பிடுங்கப்பட்ட ஆனிகளும் பெரும் அளவுக்கு பதிவும், பின்னூட்டமாக இரைந்து கிடக்கிறது.

எல்லா ஆப்பும் ஆப்பல்ல; சொல்லாமல்
கொல்லாமல் வைப்பதே ஆப்பு !

அதாகப்பட்டது சொல்லி வைக்காமல் ஆப்பு வைக்க வேண்டும் எவர் மனதையும் கொல்லாமல் வைக்க வேண்டும் என்ற ஆப்பு அதிகாரம் 7 ஆவது குறளில் திருவாப்பார் எழுதியுள்ள நல்லொழுக்க நெறிபடி சங்கத்தை நடத்தி செல்கிறார்கள் இளம் சிங்கங்கங்கள்

நீங்களும் கொடுங்க, வாங்குங்க ஆப்புகள் இலவசம். ஓராண்டு நிறைவை ஒட்டி வாவச வில் மேடையேறி வெற்றிகரமாக ஆப்புவாங்கிக் கொண்ட
சங்கத்தின் சிங்கங்களும்,
போட்டு வாங்கிய சிறப்பு எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இரண்டு பதிவுகளான கோவியாரின் நாடக சபா 1, மற்றும் 2 ஐ ஏற்றுக் கொண்டு என்னை பாராட்டி மகிழ்வித்தற்கு வவாச க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேடை ஏறி வாலிபர்களாக மாறிய பெரிய சிங்கள், தல கைப்புள்ளை மற்றும் இளம் சிங்கக்குட்டிகளான இளா, இராம், வெட்டிப்பயல், மற்றும் அனைத்து சிங்கங்களுக்கும் பாராட்டுக்கள்.

பின்குறிப்பு : பதிவே எழுத தெரியாவதர்களுக்கு முப்பது நாட்களில் 300 மொக்கை பதிவுகள் போடுவது எப்படி ? 40 வது பதிப்பு - என்ற நாமக்கல்லாரின் எழுதி வடித்த இலவச கையேடுகளை (ஈபுக் வடிவத்தில்) பின்னூட்டம் போடுபவர்களுக்கு இலவசக் கொத்தனார் உபயத்தில் .... வழங்கப் போவதாக இளா என்னிடம் தெரிவித்தார்.
:)))))))

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

26 ஏப்ரல், 2007

ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா ?

கடவுள் நம்பிக்கை இருப்பதால் மனிதர்கள் தப்பு செய்வது குறையும் என்று பொதுவாக சொல்லி வைக்கிறார்கள். மாசி பதிவில் ஒரு அனானி குறிப்பிட்டு இருந்தார். அதாவது //-- ஆர் எஸ் எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்திற்கு பயப்படுவதால் நீங்க இந்தமாதிரி ஜெல்லியடிக்க முடிகிறது// ( அதாவது மாற்று மததினர் எல்லோரும் நாத்திகர்கள் ? இதைப்பற்றி சொல்லப் போவதில்லை)

பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறவர்கள் என்பதால் தப்பு செய்வது இல்லையாம். நாம் அன்றாடம் படிக்கும் செய்திகளில் திருட்டு, கொலை கொள்ளை ஆகியவைகளில் ஈடுபடுபவர்கள் எவருக்கும் கடவுள் நம்பிக்கைகள் இல்லையா ? மக்களை ஏமாற்றி கையும் களவுமாக பிடிபடும், அல்லது பிடியில் நழுவிக் கொண்டிருக்கும் போலி சாமியார்களெல்லாம் கடவுள் நம்பிக்கை அற்றவர்களா ?

நான் கடவுள் நம்பிக்கை சரியா ? தவறா என்று எதும் சொல்ல வரவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சாதுக்கள் போலவும், பாவ புண்ணியத்திற்கு பயப்பாடுபவர்கள் போலவும் சொல்வதை ஏற்கமுடியவில்லை. திருப்பதி கோவில் உண்டியலில் நாள் தோறும் நிறையும் முக்கால் பங்கு செல்வங்களெல்லாம் பாவ மூட்டையில் இருந்து எடுத்துப் போடப்பட்டது தான். ஆபரகாமிய மதங்களில் மனப் பூர்வமாக பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று வேதப்புத்தகத்தில் எழுதியிருப்பதாக சொல்கிறார்கள். பாவம் செய்தது உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்துவதை விட மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை திமிரில் செய்யப்படும் பாவங்களே அதிகம்.

இப்பொழுதெல்லாம் திரைப்பட வில்லன் கூட கழுத்தில் கொட்டையும், நெற்றியில் பட்டை குங்கும பொட்டு சகிதமாகத்தான் வருகிறார்கள். கோவில் சிலையை கடத்துபவன், கோவில் சொத்தை டிரஸ்டி என்ற பெயரில் அபகரிப்பவன், கோவில் நகைகளை கொள்ளை அடிப்பவன் போன்ற எல்லோரும் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். இதில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டவர்களில் எவரும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் தான் திருவடுவது பாவம் இல்லை என்று நினைப்பதால் அப்படி செய்துவிட்டேன் என்று சொல்லும் ஒருவர் கூட இருந்ததே இல்லை. ஆனாலும் பொதுவாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பாவ புண்ணியத்துக்கு பயந்தவங்களாகவே சொல்லிக் கொண்டு எல்லோர் காதிலும் பூ சுற்றியே வருகின்றனர் நம்பிக்கையாளர்கள்.

காஞ்சியில் நடந்த கொலையில் தொடர்பு உடையவர்கள் என்று பத்திரிக்கை மற்றும் காவல் துறையால் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் முதல் குற்றவாளி முதல் கடைசி ஆள் வரை எவரும் நாத்திகர் இல்லையே. அதே போல் கடத்தல் தொழில்களில் பிடிப்பட்டதாக அறிவிக்கப்படுபவர்களில் எவரும் நாத்திகர்கள் இல்லை. நாத்திகர்கள் நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்தினால் கேடு செய்யலாம் என்று நினைப்பர் எவரும் இல்லை.

கடவுளை கண்டுபிடித்தவுடனே கடவுளை எப்படி(யும்) ஏமாற்ற முடியும் என்று கண்டுபிடித்தனர் ஆத்திகர்கள், பாவ மன்னிப்பு, பரிகாரம் என்ற பெயரில் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பதைவிட, மன்னிப்புக் கேட்டுக் கொள்ளல்லாம் என்று செய்யும் பாவங்களே மிகுதியானது. கடவுள் நம்பிக்கை இருப்பதால் பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறார்கள் என்று சொல்கிறார்களே. அது நாத்திகர்களை பழித்து அவர்கள் செய்யும் பாவம். நிவர்த்தி கிடையாது. :) அந்த கருத்தினால் ஆத்திகம் மேன்மை அடைவதாக தெரியவில்லை. ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் அன்றி அவன் ஆத்திகனாக இருப்பதால் யோக்கியன் என்றும் இவன் நாத்திகன் என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம்.

25 ஏப்ரல், 2007

மொக்கை நன்றே! மொக்கை நன்றே !!

சர்சையை விட மொக்கைப் பதிவுகளே சிறந்தது எனவே நண்பர் நாமக்கல்லாரை மொக்கப் பதிவு ஒன்றை போட்டு அதன் பின் அவர் ஆவிகளை அழைத்து மொக்கைப் பதிவுகளை போடச் சொல்லவேண்டும் ...
மேலும் மொக்கை பதிவுகளின் புகழை பதிவு பின்னூட்டம் தோறும் பரப்பி ஆவன செய்ய வேண்டும்.

பதிவர் சந்திப்புக்கு சென்ற ஆவிகளில் சில நடேசன் பூங்காவின் மரத்தில் தங்கிவிட்டதாகவும் இன்று வரை கோவை திரும்பவில்லை என கேள்விப்பட்டேன். எதாவது ஒரு ஆவி தான் சந்திப்பு பற்றி பதிவு எழுதி எனது ஐயத்தை நீக்க வேண்டும்.

பட்டை போடச் சொல்கிறார்கள். நானும் போட்டு இருக்கிறேன். பட்டை போடவில்லை தமிழ் மணத்திற்கு பட்டைப் போட்டதாக சக பதிவர்கள் தவறாக நினைப்பார்கள் என யாரும் நினைக்க வேண்டாம். காலையில் நன்றாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று போட்டுக் கொள்ளுங்கள்.

பொன்ஸ் கூட பட்டை போட்டு இருக்காங்களாம்,

படம் இதோ !

24 ஏப்ரல், 2007

மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எதிரிகளா ?

மாற்றுக் கருத்துச் சொல்பவர்களை எதிர்கருத்துச் சொல்பவர்களாக நினைப்பது மட்டுமின்றி எதிரியாகவே நினைத்து மனம் பிறழ்ந்தவன், மன நிலைபாதிக்கப்பட்டவரின் உளறல்கள் என்பது போன்ற விமர்சனைங்களை முன் வைத்து, இறுதியில் குடும்பம், சாதி என்ற ரீதியில் ஆபாச விமர்சனங்கள் எழுந்து மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது பதிவுலகம்.

இதில் மாறுவேடம், ஆபாசப் பதிவுகள் என்ற ரீதியில், நல்ல பதிவுகளை எழுதியவர்கள்கூட சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம் ? நாம் உயர்வு என்று நினைத்துப் சொல்வதை பாதிக்கப்பட்டோர் ஏற்காததுதான். ஏற்கவேண்டும் என்று என்ன இருக்கிறது ? சான்றுகளுடன் சொன்னால் எவரும் மறுக்கப் போவதில்லை. பொதுவாக ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு அடுத்தவர்களிடமும் நாம் கண்டதே உண்மை என்று சொல்ல முயன்று வாதம் தோற்றுப் போவதால் ஏற்படும் காழ்ப்புணர்வுகளின் கோர வெளிப்பாடாக ஆபாசதாக்குதல்கள் நடக்கின்றன. அண்மையில் பாலபாரதி ஒரு நடவடிக்கையின் போது ஒரு பதிவரைப் பற்றிக் குறிப்பிட்டார் என்பதற்காக அவரை ரவுடி என்றும் விரைவில் கம்பி எண்ணுவார் என்றும் அதீத வெறுப்புணர்வுகளில் அவரைப் பற்றி விமர்சனங்களை பதிவுகள்தோறும் திட்டித் தீர்த்தது பத்தாது என்று இதில் தொடர்புடையவர் என்று கருதப்படுபவர் எந்த கருத்தும் சொல்லாத நிலையில் இவர்கள் கற்பனையால் திரட்டியின் மீதும் சேறு வாரிப் பூச முயன்று , இந்து முஸ்லிம் பிரச்சனை ஆக்கி ஆட்டம் போட்டு இருந்தனர் ஒரு சிலபதிவர்கள். திரட்டி நடவடிக்கை எடுத்ததும் தற்பொழுது கண்டிப்பவர்கள் முன்பு விடாது கருப்பை நீக்கிய போது திரட்டியை வாழ்த்தினார்கள். பெறும்பாலோர் கருத்து சுதந்திரம் என்று நினைப்பது தான் சொல்லும் கருத்து மட்டுமே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் ஆகிவிட்டது.

மாசியும் அரவிந்தன் நீலகண்டனும் நேருக்கு நேர் சந்தித்து இருந்து பரஸ்பரம் பழக்கம் இருந்தாலும் மாசி ஆர் எஸ் எஸ் பற்றி எழுதுகிறார் என்றதும், எதிர்வினையாக மாசி பற்றிய தனிமனித தாக்குதலில் ஆரம்பித்து ஒரு பதிவை எழுதி இருந்தார் அரவிந்தன். மாசி தனித் தாக்குதல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதிவர்கள் வெவ்வேறு உணர்வு நிலையில் இருந்து எழுதுகிறார்கள் என்று அவர் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மாசி பதிவிலேயே நண்பர் அசுரன் ஏன் அரவிந்தனை கடல் கன்னி பதிவில் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் ? என்று அன்புடன் (?)) கேட்டார். அதற்கு மிகப்பொறுமையாக தம் நிலை எது என தெளிவாக எடுத்துச் சொன்னார் மாசி. இது அவரிடம் உள்ள ஒரு முதிர்வு நிலையாகப் பார்க்கிறேன். இது போன்று கருத்துக்களை எதிர்க்கலாம்; கருத்துக் கூறுபவரை அல்ல என்று பதிவர்களுக்குள் புரிந்துணர்வு வளரவேண்டும்.

நானும் நண்பர் [வீ]எஸ்கேவும் எப்பொழுதும் சர்சைக்களுக்கு குறிய செய்திகளையே கூகுள் சாட்டில் பேசுவோம். பல சமயங்களில் விவாதம் காரசாரமாகச் செல்லும். ஆனாலும் ஒருவர் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு வைத்திருப்பதில்லை. பாபா, பார்பனீயம், பெரியார் மற்றும் அனைத்து சர்சைக்குரிய விசயங்களைப் பற்றியும் விவாதிப்போம் மாற்றுக் கருத்துக்கள் சூடானதாக இருந்தாலும் மனதைப் பொசுக்கும் அளவுக்கு நட்பையும், கருத்தையும் ஒன்றாக நினைப்பதில்லை. மாற்றுக் கருத்து சொல்வதாலேயே எதிரி என்று நினைக்க வேண்டியதில்லை என்று இதுவரை பழகிய பழக்கங்கள் அவற்றை உறுதிப்படுத்தியது. அதற்காக தம் சொந்த கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் நட்பிற்காக அடகு வைப்பதும் இல்லை.

விவாதம் என்பதே இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்களாக இருப்பதால் செய்யமுடிகிறது. இவ்வாறு இல்லாமல் விவாதத்தின் போது முகம் முறிய பேசிவிட்டால் நாம் கருத்துக்களை எவரிடம் பேசமுடியும் ? ஒத்த கருத்துள்ளவர்களிடம் விவாதம் செய்ய முடியுமா ? நடைமுறைகளில் கருத்தும் எதிர்க்கருத்தும் தேவையே. இரவு இல்லை என்றால் பகலுக்கு ஓய்வேது ? காழ்ப்புணர்வுகளை விட்டுவிட்டு கருத்துணர்வோடு விவாதங்கள் செல்வது பதிவுலகிற்கு நல்லது. எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது அவற்றை கருத்துரிமையோடு மறுக்க அணுகலாம், தேவையற்ற தனிமனித வெறுப்புகளால் நம் உள்ளத்தில் பொதிந்து இருக்கும் கருத்துக் குவியலுக்கு நாமே சமாதி கட்டிவிட்டு தனிமையில் செல்வதால் எந்த பயனும் இல்லை.

16 ஏப்ரல், 2007

ஷங்கர் - ரஜினி கூட்டணியின் தில்லு முல்லு !

சந்திரசாமியின் தயவால் வெங்காய மூட்டைகள் பதுக்கப்பட்டு வெங்காயவிலை வெள்ளிக் கிரகம் வரை உயர்ந்தது என்றும் அதுவே காரணமாக அமைந்து வடமாநிலங்களில் அன்றைய வாஜ்பாய் அரசு செல்வாக்கு இழந்து ஆட்சி கவிழ்ந்ததாக சொல்கிறார்கள்.

மக்கள் விரும்பும் அல்லது பயன்படுத்தும் பொருள்களின் விலையை ஏற்ற வேண்டுமென்றால் உடனடியாக ஏற்ற முடியாது அப்படி செய்தால் பல்வேறு தரப்பு மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் அந்த பொருள்களை பதுக்கி வைத்துவிட்டு கொஞ்ச கொஞ்சமாக விலை ஏற்றினால் ஒரு மாதத்திற்குள்ளேயே அந்த பொருள்களின் விலை கிடுகிடுகென உயர்ந்துவிடும். அதாவது அந்த பொருளுக்கு ஒரு டிமாண்ட் ஏற்படுத்த வேண்டும்.

நடிகர் ரஜினி விசயத்தில் இப்படித்தான் நடக்கிறது. வருடத்துக்கு 3 படம் நடித்தால் அவருக்கு ஊதியமாக அல்லது 3 அல்லது 4 கோடி படத்துக்கு கிடைக்கும். அதே சமயத்தில் எல்லா படங்களும் வெற்றி அடைகிறதா என்று சொல்ல முடியாது. ஆனால் 2 வருடத்துக்கு ஒரு படம் என்னும் போது ரஜினி படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தயாரிப்பாளர்களும் 10 கோடி 20 கோடி என கொட்டிக் கொடுக்க காத்திருக்கின்றனர். 2 ஆண்டுக்கு ஒரு படம் என்பது ரஜினியைப் பொறு்த்து 2 பங்கு லாபமே தவிர நட்டம் இல்லை.

நடிப்புக் கடவுளின்(?) திட்டம் அதுதான். மற்றபடி சங்கர் படம் என்பதால் பிரமாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது. அர்ஜுனை ஒரு நாள் முதல்வராக்கி தமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் 3 மணி நேரத்தில் தீர்த்து வைத்த ஷங்கர். கையில் ரஜினி இருக்கும் போது இந்தியா என்ன ஈராக் பிரச்சனையை தீர்ப்பதற்கு கூட படத்தில் தீர்வு இருக்கும்.

இந்த படத்துக்கு பிரச்சனை வரக்கூடாது. படம் தோல்வி என்றால் வாங்கிய விநியோகஸ்தர்கள் தான் கையை சுட்டுக் கொள்வார்கள். இல்லாவிடில் தோல்விக்கான காரணம் பிரச்சனையால் தான் என்று பாபா ஆருடம் சொல்லிவிடக்கூடாது. எதிர்பார்புகளை ஏற்படுத்திவிட்டதால் திருட்டு விசிடியில் படத்தை பார்த்துவிடலாம் என்று மக்கள் நினைப்பார்கள். படத்திற்கான பட்ஜெட்டை பார்க்கும் போது 100 நாள் ஹவுஸ் புல் காட்சியாக ஓட்டினால் தான் விநியோகஸ்தர்களுக்கு கையைக் கடிக்காமல் இருக்கும் என்று சொல்கிறார்க்கள். முன்பு ரஜினி படம் என்றால் முன்று வேலை சோற்றின் காசைக் கொடுத்து படம் பார்த்த ரசிகன், சிவாஜி ஸ்பெசல் மசாலா என்பதால் 3 நாள் சோற்றுக்கான காசைக் கொடுக்க வேண்டி இருக்கும். நமக்கு அதுவா முக்கியம் நடிப்புக்கடவுள் மூன்று வருடம் கழித்து ஒரு படம் கொடுக்கிறாரே, பார்க்க நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும் ?

மேலும் சில சுட்டிகள் :

ரஜினியை ஏன் தமிழர்கள் விரும்புகிறார்கள் ?

சிவாஜி படம் தாமதம் ஆவதற்கு காரணம் என்ன ? (நகைச்சுவை)

பிகு : தலைப்பில் 'தில்லு முல்லு' - ரஜினி நடித்த நல்ல நகைச்சுவை திரைப்படம் அது போல சிவாஜியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். :)

12 ஏப்ரல், 2007

அழகெல்லாம் அழகா ?

அழகு என்றால் மனதிற்கினிமை, கண்ணிற்கினிமை, உணர்வுக்கினிமை என ஐம்புலன்களுக்கு இனிமைசேர்க்கும் எதுவும் அழகு. அழகின் அளவீடுகள் மனத்திற்கு மனம் வேறுபடும், எனக்கு அழகாகத் தெரிவது மற்றவருக்கும் அப்படியே தெரியும் என்பதற்கில்லை. அழகிருக்கும் இடத்தில் ஆணவமும் இருக்கும் என்கிறார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாத மெளனமே எனக்கு அழகாகத் தெரிகிறது.

எதையுமே கூட்டமாக பார்பது எனக்கு மிக அழகாகத் தெரியும்.

1. திருவிழா கூட்டம். எங்கள் ஊரில் எட்டுக் குடி முருகன் கோவில், நாகை மாரியம்மன் கோவில், நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில் என திருவிழாக்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். திருவிழா வென்றாலே எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கி இருக்கும். ஒரு மகிழ்வுகரமான சூழல் இருக்கும், தற்காலிக கடைத் தொகுதி, கொடை ராட்டினம், திருமண அரங்கு, அங்கு பட்டுப்பாவடையில் சுட்டியாக ஓடி ஆடும் குழந்தகள், மாறுவேடமிட்ட சிறுவர் சிறுமியர்... இன்னும் பலபல எங்கும் மக்கள் வெள்ளம் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பார்ப்பதற்கு அழகு.

2. மாலை நேர பயணம் ... சன்னல் ஓர இருக்கை ... அந்தி சாயும் பொழுது தெளிந்த நீரோடையாக அந்த நேரத்தில் அதை ரசித்துக் கொண்டே செய்யும் பயணம் ... புளிய மரங்களின் அணிவகுப்பு... வளைந்து செல்லும் சாலைகள் ...

பேருந்தில் / புகைவண்டியில் தொலைவாக செல்லும் பயணம் மனதிற்கு அழகு

3. பூக்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன் வண்ணத்தினால் பூக்களுக்கு அழகா ? அல்லது பூக்களினால் வண்ணங்களுக்கு அழகா ? இரண்டும் சேர்ந்து ஒரு வடிவாகி விரல்களுக்கு மென்மையாகவும் தொடுதல், பார்த்தல், நுகர்த்தல் என முன்று புலன்களுக்கு ஒரு சேர இன்பம் அளிக்கும் பூக்கள்... பூந்தோட்டம் .. பச்சைக் காய்கனித் தோட்டம் ... தாமரை / அல்லி பூக்கள் நிறைந்த குளங்கள் இவையெல்லாம் அழகோ அழகு

4. உச்சி வெயில் ... வேப்பமர நிழல் ... கயிற்றுக் கட்டில் ... மென்மையாக வரும் தென்றல் ... லேசாக உறங்க தீண்டும் அமைதியான அந்த சூழல் உணர்வுக்கு அழகு. அப்பொழுது பறித்து வெட்டிய இளநீர் நாவுக்கு அழகு.

5. கேட்பதற்கினிய இசைகள் ... காலை நேரத்தில் பறவைகள் கண்விழித்து எழுப்பும் கூட்டு ஒலி ... மாலை நேரத்து... குயிலோசை ... மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ... வானி ஜெயராமின் ரீங்கார குரல் ...
பொன் மாலை பொழுது எஸ்பிபாலசுப்ரமணியனின் ஐஸ்கிரீம் குரலும்... சுகிசிவத்தின் சொற்பொழிவு அருவிகள் கேட்பதற்கு அழகு.

6. கருநிலா இரவில் வின்மீன்கள் நிறைந்த வானம் ... காலை எழும் சூரியன்...மலை சிவந்த சூரியன் ... வெண்ணிலா என .... ஆகாயம், ஆட்டுக் குட்டிகள், குட்டி விலங்குகள் நான் பார்த்து வியக்கும் அழகு.




அழகை ஆராதனை செய்ய நான் அழைப்பவர்கள்

கூடல் குமரன்
செந்தழல் ரவி
விழிப்பு

7 ஏப்ரல், 2007

அமுக முதல் உலக (சிங்கை) மாநாட்டு வெள்ளை அறிக்கை !

சீரியஸ் பதிவுகளுக்கு மொக்கை பின்னூட்டம் போடும் அனானிகள் முன்னேற்றக் கழகத்தின் முதல் வெளிநாட்டு மாநாடு சிங்கையில் நடந்தேறியது.

அமுக வெளிநாட்டு அமைப்புத் தலைவர் திரு பொட்டீக்கடையாரின் வருகையை ஒட்டி முதல் அமுக வெளிநாட்டு மாநாட்டை சிங்கையில் நடத்த திட்டமிட்டு இருந்தார்களாம். இதனடிப்படையில் எனக்கும் அழைப்பு வந்தது. மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று திடீர் அமைப்பாளார் குழலி என்னிடம் ஆலோசனை கேட்க சிம்லிம்ஸ்கொயர் உணவு அங்கடியைக் குறிப்பிட்டேன். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு சந்திப்புக் குறித்து அனைத்து பதிவர்களுக்கும் தொலைபேசி வழி செய்தி அனுப்பிவிட்டு சரியான நேரத்துக்கு தலைவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்தார் நண்பர் குழலி.

நான் மாநாட்டுக்குச் செல்ல சற்று காலதாமதம் ஆகியது, நான் அங்கு சென்றபோது பதிவர்கள் ஒரு குடையின் கீழ் குழுமி இருந்தனர்( உண்மையான கடற்கரை குடைதான் :) ) . நண்பர் குழலி ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தினார். திரு ஜோ மில்டன், எல் எல் தாஸ், வடுவூர் குமார், மற்றும் பதிவு நண்பர்களின் நண்பர்கள், பிறகு விழா நாயகர் பொட்டிக்கடை சத்தியா. அறிமுகம் முடிந்ததும் தெரிந்தது ஏற்கனவே மாநாடு கலைகட்டி இருந்த விசயம். அனானி பின்னூட்டங்களில் வரும் சிரிப்புப் பின்னூட்டங்களை சொல்லி சொல்லி சிரித்தனர். அனானி பின்னூட்டம் போடுவது எப்படி என்று சிறப்பு பாடம் நடத்தினார் சத்தியா, ஒவ்வொன்றாகப் போடுவதைவிட நோட் பேடில் மொத்தமாக எழுதி ஒவ்வொன்றாக கட் அண்ட் பேஸ்ட் செய்ய 1 நிமிடத்திலேயே 10 பின்னூட்டங்களைப் போட்டுவிட முடியும் என்று அனானி பின்னூட்ட ரகசியங்களை கசிய விட்டார்.

ஆரம்பத்தில் பலர் பொட்டீக்கடையாரை போலி என்று சந்தேகப் பட்டதாக சொன்னார். அதன் பிறகு தீர்மானம் எதுவுமின்றி திடீர் அறிவிப்பாக 'பின்நவீனத்துவ பதிவர்' என்று பொட்டீக்கடையாருக்கு பதிவர் குழலி பட்டம் வழங்கினார். நானும் பொட்டிக்கடைக்காரர் 'குறி'களைக் குறிப்பிட்டு எழுதும் குறிப்பிட்ட பதிவர் என்பதால் அவருக்கு இந்தப் பட்டம் பொருத்தமானது என்று வழி மொழிந்தேன். பிறகு வடுவூர் குமாரின் சமீபத்திய மனவருத்தம் பற்றிப் பேசும் போது 'இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள்' என்று அவரை அனைவரும் உற்சாகப்படுத்தினார்கள். பிறகு பதிவர் தாஸ் விடைபெற அடுத்து ஒரு சிறப்பு பதிவர் வர இருப்பதாக குழலி போனுக்கு தகவல் வந்தது. இடைப்பட்ட நேரத்தில் சிங்கை நாதன் என்கிற பதிவு கண்காணிப்பு குழு செயல்வீரர் அதிரடியாக கலந்து கொண்டு பதிவர்களின் பதிவுகளைப் பற்றி விமர்சனம் செய்தார்.

மாலை 6.45 ஐத்தாண்டி மாநாடு நடந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் காஃபி வழங்கி அன்பாக கவணித்துக் கொண்டார் பதிவர் சத்தியா. சத்தியாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் பதிவில் எழுதும் சீரியஸ் விசயங்களுக்கும் இவருக்கும் தொடர்பே இல்லாதது போல் முற்றிலும் கலகலப்பானர். கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவரைப் போல் உற்சாகப் பேச்சு, நல்ல துடிப்பான இளைஞர். பதிவர் ஜோ பார்பதற்கு நடிகர் அருண்பாண்டியனை சிறிது ஞாபகப்படுத்தினார். பேச்சில் குறைவாக கன்யாகுமரி மாவட்ட வாசம், இனிமையான பேச்சு கனிவானவராக இருந்தார். இவர் சிங்கையில் இருந்தாலும் இன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன்.

மாலை 6.45 க்கு வலைப்பதிவில் லக்கியாருடன் இணைந்து எழுதும் 'உடன்பிறப்பு' என்ற பதிவர் வந்து சேர்ந்தார். அவரும் முப்பதுக்குள் உள்ள இளைஞர். ஆரம்பத்தில் சற்று மிரண்டவர் இரண்டு மடக்கு உள்ளே சென்றதும் ( தேநீர்) கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார். இன்னும் சில மொக்கைப் பேச்சுக்களுடன் மாலை 7.30க்கு தலைவர் அடுத்த அப்பாய்ன்மெண்டுக்கு செல்ல இருப்பதால் மாநாடு அடுத்து இரு காஃபியுடன் முடிவடைந்துவிட்டது.

பிறகு நான் குழலி, ஜோ, உடன்பிறப்பு மற்றும் குழலியின் நண்பர் கண்ணன் ஆகியோர் இட்டலி கடைக்குச் சென்று 2 மணி நேரம் மொக்கைப் போட்டோம். திமுக - பாமக - இந்தி திணிப்பு என அரசியல்விவாதங்கள் அனல் பறந்தது. இரவு 9.30 மணிக்கு அனைவரும் விடைபெற்றோம்

5 ஏப்ரல், 2007

பதிமூன்றே நாளில் பணக்காரர் ஆகலாம் முயலுங்களேன் !

வலைப்பதிவில் இல்லாத என் நண்பர் ஒருவர் மின் அஞ்சல் செய்து இருந்தார். அது தொடர்பில் தான் இதை எழுதுகிறேன்.. எல்லோருமே பணக்காரர் ஆக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது நேர்மையான வழியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நல்லவர்கள் திடீர் பணக்காரர் ஆவதற்கு வாய்ப்பே இல்லையே ? இதோ அருமையான வழி இருக்கிறது. ஆங்கிலத்தில் அழகாக வழிமுறை கூறி உள்ளனர். நான் 13 மூன்றே நாளில் பணக்காரன் ஆகப் போறேன். நீங்க ?
:))))))))))))))

கீழே படமும் அதனுடன் வந்த வழிமுறைகளும் ...


The President of Argentina received this letter and called it "junk mail", 8 days later his son died. A man received this letter and immediately sent out copies...his surprise was winning the lottery.
Alberto Martinez received this letter, gave it to his secretary to make copies but they forgot to distribute: she lost her job and he lost his family.
This letter is miraculous and sacred, don't forget to forward this within 13 days to at least 20 people. Do Not Forget to forward and you will receive a huge surprise!!

4 ஏப்ரல், 2007

எனக்கு ஒரு வயசு ஆகுது !

வலைப்பதிவில் விபத்தாக வழுக்கி விழுந்து இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியாகிறது. இதில் கற்றதும், பெற்றதும் பெரும்பாலும் நல்ல விசயங்களே.

நிறைய நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. நிறைய நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். என்னை வந்து சந்தித்தும் இருக்கிறார்கள். இதில் முதன்மையாக நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளது திரு (வி) எஸ்கே ஐயா அவர்கள். என்மீது அன்பு கொண்ட பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

அறிமுகப் பதிவில் குறிப்பிட்டது போலவே அரசியல்,கதை, கவிதை, கட்டுரை என எல்லா பிரிவுகளிலும் என் அறிவுக்கு எட்டியவற்றை எழுதி தள்ளி இருக்கிறேன். காலம் மற்றும் காலங்களிலும், சொல் ஒரு சொல், சற்றுமுன் மற்றும் வ.வா.ச வுக்கு 2 பதிவுகள் என 300 ++ பதிவுகள் எழுதி இருக்கிறேன். மொக்கை பதிவுகளின் விழுக்காடு அதிக அளவில் இருக்கிறது :)). 5,000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றும் 15,000க்கு அதிகமான பின்னூட்டங்களைப் நண்பர்களின் வலைப்பதிவுகளுக்கு போட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறேன்.

எனது பதிவுகளில் எந்த தனிமனித தாக்குதல்களும் இருந்ததாக தெரியவில்லை.

ஒரு வயசு இன்னிக்கு பூர்த்தி ஆகிவிட்டது.



-- அன்புடன்,
கோவி.கண்ணன்
Blogger Sites :
http://kaalangkal.blogspot.com

http://govikannan.blogspot.com


குருமா (கூட்டு) பதிவுகள் :
http://solorusol.blogspot.com

http://satrumun.blogspot.com





3 ஏப்ரல், 2007

வம்பை வாடைக்கு விடுவது எப்படி ?

மொக்கை பதிவு போடுவது பற்றி செந்தழலாரும், நாமக்கல்லாரும் பி.எச்.டி பாடம் நடத்த நான் பாட்டுக்கு சும்மா இருந்தால் என்னவாம் ?

முதலில் பிரச்சனைக்கு உரிய பதிவுகளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அங்கு அனானிக்கு வழி இருக்கான்னு பாருங்க. இருந்தது என்றால் ப்ளாக்கர் அல்லாத கணக்குக்கும் ( அதர் ஆப்சன்) வழி இருக்கும், உங்களுக்கு பிடிக்காத பதிவரின் பெயரில் அவரு போடுவது போல ஒரு அதர் ஆப்சன் பின்னூட்டம் போடுங்க. அவ்வளவுதான்.

அவருக்கும் பதிவு எழுதிய அவருக்கும் ஆகவில்லையென்றால் காழ்புணர்வுகள் மறுமொழியில் எகிறும். யாருக்கு யாரைப் பிடிக்கவில்லை என்பது பின்னூட்டம் வெட்ட வெட்ட ... வெட்ட வெளிச்சமாகிவிடும். சில அவசர குடுக்கைகள் பின்னூட்டம் சம்பந்தப்பட்ட நபர்தான் போட்டு இருக்கிறாரா என்று ஆராயமலே போட்டு தாக்க ஆரம்பிச்சிடுவாங்க.

இப்படி செய்தால் நீங்களே கருப்பு, நீங்க தான் சிவப்பு, நீங்கதான் 'பாலா' என பல அவதாரம் எடுக்கலாம். சண்டை மூட்டிவிட்ட மாதிரியும் இருக்கும்.அரிப்புக்கு சொறிஞ்சிகிட்ட மாதிரி இருக்கும். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டுவதை விட வம்பை வாடகைக்கு விடுவது சாலச் சிறந்தது. நாம சொந்த காழ்பை (வம்பை) தீர்த்துக் கொள்ள ... இந்த கிறுக்கு வழியில் கிடைக்கும் குறுகுறுப்புதான் இதில் வாடகை.


பிகு : அனானி, அதர் ஆப்சன் வைத்திருக்கும் பதிவர்களின் எச்சரிக்கைக்காக எழுதப்பட்டது !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்