பின்பற்றுபவர்கள்

24 ஏப்ரல், 2007

மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எதிரிகளா ?

மாற்றுக் கருத்துச் சொல்பவர்களை எதிர்கருத்துச் சொல்பவர்களாக நினைப்பது மட்டுமின்றி எதிரியாகவே நினைத்து மனம் பிறழ்ந்தவன், மன நிலைபாதிக்கப்பட்டவரின் உளறல்கள் என்பது போன்ற விமர்சனைங்களை முன் வைத்து, இறுதியில் குடும்பம், சாதி என்ற ரீதியில் ஆபாச விமர்சனங்கள் எழுந்து மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது பதிவுலகம்.

இதில் மாறுவேடம், ஆபாசப் பதிவுகள் என்ற ரீதியில், நல்ல பதிவுகளை எழுதியவர்கள்கூட சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இவற்றிற்கெல்லாம் என்ன காரணம் ? நாம் உயர்வு என்று நினைத்துப் சொல்வதை பாதிக்கப்பட்டோர் ஏற்காததுதான். ஏற்கவேண்டும் என்று என்ன இருக்கிறது ? சான்றுகளுடன் சொன்னால் எவரும் மறுக்கப் போவதில்லை. பொதுவாக ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு அடுத்தவர்களிடமும் நாம் கண்டதே உண்மை என்று சொல்ல முயன்று வாதம் தோற்றுப் போவதால் ஏற்படும் காழ்ப்புணர்வுகளின் கோர வெளிப்பாடாக ஆபாசதாக்குதல்கள் நடக்கின்றன. அண்மையில் பாலபாரதி ஒரு நடவடிக்கையின் போது ஒரு பதிவரைப் பற்றிக் குறிப்பிட்டார் என்பதற்காக அவரை ரவுடி என்றும் விரைவில் கம்பி எண்ணுவார் என்றும் அதீத வெறுப்புணர்வுகளில் அவரைப் பற்றி விமர்சனங்களை பதிவுகள்தோறும் திட்டித் தீர்த்தது பத்தாது என்று இதில் தொடர்புடையவர் என்று கருதப்படுபவர் எந்த கருத்தும் சொல்லாத நிலையில் இவர்கள் கற்பனையால் திரட்டியின் மீதும் சேறு வாரிப் பூச முயன்று , இந்து முஸ்லிம் பிரச்சனை ஆக்கி ஆட்டம் போட்டு இருந்தனர் ஒரு சிலபதிவர்கள். திரட்டி நடவடிக்கை எடுத்ததும் தற்பொழுது கண்டிப்பவர்கள் முன்பு விடாது கருப்பை நீக்கிய போது திரட்டியை வாழ்த்தினார்கள். பெறும்பாலோர் கருத்து சுதந்திரம் என்று நினைப்பது தான் சொல்லும் கருத்து மட்டுமே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் ஆகிவிட்டது.

மாசியும் அரவிந்தன் நீலகண்டனும் நேருக்கு நேர் சந்தித்து இருந்து பரஸ்பரம் பழக்கம் இருந்தாலும் மாசி ஆர் எஸ் எஸ் பற்றி எழுதுகிறார் என்றதும், எதிர்வினையாக மாசி பற்றிய தனிமனித தாக்குதலில் ஆரம்பித்து ஒரு பதிவை எழுதி இருந்தார் அரவிந்தன். மாசி தனித் தாக்குதல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதிவர்கள் வெவ்வேறு உணர்வு நிலையில் இருந்து எழுதுகிறார்கள் என்று அவர் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மாசி பதிவிலேயே நண்பர் அசுரன் ஏன் அரவிந்தனை கடல் கன்னி பதிவில் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் ? என்று அன்புடன் (?)) கேட்டார். அதற்கு மிகப்பொறுமையாக தம் நிலை எது என தெளிவாக எடுத்துச் சொன்னார் மாசி. இது அவரிடம் உள்ள ஒரு முதிர்வு நிலையாகப் பார்க்கிறேன். இது போன்று கருத்துக்களை எதிர்க்கலாம்; கருத்துக் கூறுபவரை அல்ல என்று பதிவர்களுக்குள் புரிந்துணர்வு வளரவேண்டும்.

நானும் நண்பர் [வீ]எஸ்கேவும் எப்பொழுதும் சர்சைக்களுக்கு குறிய செய்திகளையே கூகுள் சாட்டில் பேசுவோம். பல சமயங்களில் விவாதம் காரசாரமாகச் செல்லும். ஆனாலும் ஒருவர் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு வைத்திருப்பதில்லை. பாபா, பார்பனீயம், பெரியார் மற்றும் அனைத்து சர்சைக்குரிய விசயங்களைப் பற்றியும் விவாதிப்போம் மாற்றுக் கருத்துக்கள் சூடானதாக இருந்தாலும் மனதைப் பொசுக்கும் அளவுக்கு நட்பையும், கருத்தையும் ஒன்றாக நினைப்பதில்லை. மாற்றுக் கருத்து சொல்வதாலேயே எதிரி என்று நினைக்க வேண்டியதில்லை என்று இதுவரை பழகிய பழக்கங்கள் அவற்றை உறுதிப்படுத்தியது. அதற்காக தம் சொந்த கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் நட்பிற்காக அடகு வைப்பதும் இல்லை.

விவாதம் என்பதே இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்களாக இருப்பதால் செய்யமுடிகிறது. இவ்வாறு இல்லாமல் விவாதத்தின் போது முகம் முறிய பேசிவிட்டால் நாம் கருத்துக்களை எவரிடம் பேசமுடியும் ? ஒத்த கருத்துள்ளவர்களிடம் விவாதம் செய்ய முடியுமா ? நடைமுறைகளில் கருத்தும் எதிர்க்கருத்தும் தேவையே. இரவு இல்லை என்றால் பகலுக்கு ஓய்வேது ? காழ்ப்புணர்வுகளை விட்டுவிட்டு கருத்துணர்வோடு விவாதங்கள் செல்வது பதிவுலகிற்கு நல்லது. எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது அவற்றை கருத்துரிமையோடு மறுக்க அணுகலாம், தேவையற்ற தனிமனித வெறுப்புகளால் நம் உள்ளத்தில் பொதிந்து இருக்கும் கருத்துக் குவியலுக்கு நாமே சமாதி கட்டிவிட்டு தனிமையில் செல்வதால் எந்த பயனும் இல்லை.

14 கருத்துகள்:

SurveySan சொன்னது…

நல்ல மேட்டரு சொல்லிருக்கீங்க.

திருந்துவாங்களா?

Subbiah Veerappan சொன்னது…

///மாற்றுக் கருத்து சொல்வதாலேயே எதிரி என்று நினைக்க வேண்டியதில்லை என்று இதுவரை பழகிய பழக்கங்கள் அவற்றை உறுதிப்படுத்தியது. அதற்காக தம் சொந்த கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் நட்பிற்காக அடகு வைப்பதும் இல்லை.

விவாதம் என்பதே இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்களாக இருப்பதால் செய்யமுடிகிறது. இவ்வாறு இல்லாமல் விவாதத்தின் போது முகம் முறிய பேசிவிட்டால் நாம் கருத்துக்களை எவரிடம் பேசமுடியும் ? ஒத்த கருத்துள்ளவர்களிடம் விவாதம் செய்ய முடியுமா ? நடைமுறைகளில் கருத்தும் எதிர்க்கருத்தும் தேவையே. இரவு இல்லை என்றால் பகலுக்கு ஓய்வேது ? காழ்ப்புணர்வுகளை விட்டுவிட்டு கருத்துணர்வோடு விவாதங்கள் செல்வது பதிவுலகிற்கு நல்லது. எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது அவற்றை கருத்துரிமையோடு மறுக்க அணுகலாம், தேவையற்ற தனிமனித வெறுப்புகளால் நம் உள்ளத்தில் பொதிந்து இருக்கும் கருத்துக் குவியலுக்கு நாமே சமாதி கட்டிவிட்டு தனிமையில் செல்வதால் எந்த பயனும் இல்லை. ///

நிதர்சனமான உண்மை!
அனைவரும் இதை உணர்ந்தால் நல்லது!

நந்தா சொன்னது…

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க. ஆனா யார் கேப்பாங்க? நான்தான் தாசில்தான் ங்கிற நினைப்பு இருக்கிற வரைக்கும் இவங்க திருந்துவாங்கன்னு எனக்கு தோணலை.

எனக்கென்னமோ இதுக்கு பதிலா செவிடன் காதில சங்கு எடுத்து ஊதலாம்னு தோணுது......

சென்ஷி சொன்னது…

உண்மைதாங்க... ஆனா புரிஞ்சுக்கற சக்தி இருக்கற எல்லோருமே நடிக்கறதுதான் வேதனையா இருக்குது.

நடுநிலைமையாளர்கள் இல்லையா என்று யோசிக்கறப்ப கருத்து சொல்றவங்களையும் ஒரு குழுவுல சேத்துடுவாங்கன்னு பயந்து பேசாம இருக்கறா மாதிரி இருக்கு.

இதைப்பத்தி தைரியமா முதல் பதிவு போட்டது நீங்கதான்.

நான் எழுத நினைச்ச மேட்டர் இங்கயே போட்டுடறேன்.

தினம் ஒரு திருக்குறள் மாதிரி வாரம் ஒரு பிரசினைய தமிழ்மணத்துல கிளப்பி விடுறது வாடிக்கையா போச்சு..

வழக்கமா எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் போடுற என்னை மாதிரி ஆளுங்க இதுல பின்னூட்டம் போடுறதுக்கு யோசிக்க வேண்டியிருக்கு.

இதுவரைக்கும் வந்த பிரசினையை விட இது கொஞ்சம் பெருசா பேசப்படுது. சம்பந்தப்பட்ட பதிவரே குற்றம் சாட்டப்பட்டவரை மன்னித்துவிட்டப்பிறகும் இதன் தீவிரத்தை உணராமல் மற்றவர்கள் பதிவென்ற பெயரிலும் பின்னூட்டங்களிலும் தங்களின் வன்முறையை காட்டுவது நல்லதா..?

நடுநிலைமைவாதிகள் என்று கருதப்படுவோர் தங்களின் கருத்துக்களை கூறாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் மேலும் ஒரு சார்பு குழுமவாதிகள் என்ற முத்திரை விழுமோ என்ற அச்சம் காரணம் என்றுதான் நினைக்கின்றேன்.

இவர்களால் பாதிக்கப்படுவது தமிழ்மணம் மட்டுமல்ல, தமிழ்மணத்தின் வாசகர் வட்டமும்தான்..

முதலில் பிராமணியத்தில் ஆரம்பித்த பிரசினை, இப்போது தனிமனித தாக்குதலாக மாறி, அதிலும் குறிப்பிட்ட சிலரின் மேல் காழ்ப்பு வருமாறு மாற்றி விட்டனர்.

முன்பொரு முறை ஒரு பெண்பதிவருக்கு ஆபாச ஈ-மெயில் வந்ததற்காய் பொங்கி எழுந்தவர்கள் இந்த விஷயத்தில் ஏன் மௌனம் காக்கின்றார்கள் என்று புரியவில்லை.

இதைப்பற்றி ஆரம்பித்து வைத்தவர்களுக்கும், தற்போது இந்த பிரசினையை தலைமேல் வைத்து நடத்திச்செல்கிறவர்களுக்கும் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்..

தமிழனின் வரலாற்றில் மன்னிப்பிற்கு தனி இடம் இன்னும் இருக்கின்றது.

புரட்சித்தலைவரின் பாடலில் வருவது போல் தவறு செய்தவன் திருந்தியாகணும்.. தப்பு செய்தவன் வருந்தியாகணும்.. ஒருவர் வருந்தி, திருந்தி விட்டார் என்று தெரிந்த பிறகு இதை குத்திக்கிளறுவது சைக்கோத்தனமானது.

மன்னிப்பை விட பெரிய தண்டனை எதுவும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று...

"ஆப்பசைத்த குரங்கு கதை" போல் யாருடைய நிலையும் ஆகிவிடக்கூடாது என்பது என் விருப்பம்..


வேதனைகளுடன்

சென்ஷி

மருதநாயகம் சொன்னது…

எதிர்மறையான கருத்து கொண்டவர்களை எதிரிகளாக பார்ப்பவர்களை தான் தீவிரவாதி என்கிறோம்

Unknown சொன்னது…

//கருத்துக்களை எதிர்க்கலாம்; கருத்துக் கூறுபவரை அல்ல என்று பதிவர்களுக்குள் புரிந்துணர்வு வளரவேண்டும்//
//மாற்றுக் கருத்துக்கள் சூடானதாக இருந்தாலும் மனதைப் பொசுக்கும் அளவுக்கு நட்பையும், கருத்தையும் ஒன்றாக நினைப்பதில்லை. மாற்றுக் கருத்து சொல்வதாலேயே எதிரி என்று நினைக்க வேண்டியதில்லை ... ... ... அதற்காக தம் சொந்த கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் நட்பிற்காக அடகு வைப்பதும் இல்லை.//
//காழ்ப்புணர்வுகளை விட்டு விட்டு கருத்துணர்வோடு விவாதங்கள் செல்வது பதிவுலகிற்கு நல்லது. எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது அவற்றை கருத்துரிமையோடு மறுக்க அணுகலாம், தேவையற்ற தனிமனித வெறுப்புகளால் நம் உள்ளத்தில் பொதிந்து இருக்கும் கருத்துக் குவியலுக்கு நாமே சமாதி கட்டிவிட்டு தனிமையில் செல்வதால் எந்த பயனும் இல்லை.//

இணையம் சிறப்பாக இயங்க இவை மிக அவசியம். புரிந்துணர்வின் அவசியத்தை வலியுறுத்தும் மிக நல்ல கருத்துக் குவியல்கள் ஜிகே.
இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி விரல்களை விரித்து ஆட்ட வேண்டும் போல் உணர்வு. (மொழி பாதிப்பு)

இலவசக்கொத்தனார் சொன்னது…

இன்று நம் பதிவர்கள் இடையே ஒரு ஆரோக்கியமான விவாதம் இருப்பதில்லை. மாற்றுக் கருத்து இருப்பவர்களிடம் கருத்தைப் பற்றி விவாதிக்காமல் நீ மட்டும் யோக்கியமா என்பது போன்ற தனிமனிதத் தாக்குதலோ அல்லது உங்க குல புத்தி வேறு எப்படி யோசிக்கும் என்பது போன்ற கருத்துக்களோதான் உடனே முன் வருகிறது.

இது பற்றி நான் இட்ட பதிவு இது . ஆனால் பின்னூட்டங்களில் திசை மாறிப் போய்விட்டது.

Unknown சொன்னது…

//சம்பந்தப்பட்ட பதிவரே குற்றம் சாட்டப்பட்டவரை மன்னித்துவிட்டப்பிறகும் இதன் தீவிரத்தை உணராமல் மற்றவர்கள் பதிவென்ற பெயரிலும் பின்னூட்டங்களிலும்//
இந்த கருத்து உங்கள் பதிவை பொதுவான பார்வையிலிருந்து குறிப்பான ஒரு விடயத்திற்கு தடம் மாற்றுகிறது ஜிகே.

சென்ஷி அவர்களது பார்வையில் பாதிக்கப்பட்டவர் ஒருவர். ஆனால் பலர் பாதிக்கப்பட்டார்கள். ஆபாசமாக தாக்கப்பட்டதாக அவர்களால் உணர முடிந்தது. அதனால் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குரலெழுப்புவதை தவறென்று கொள்ள முடியாது என்பது என் கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த கருத்து உங்கள் பதிவை பொதுவான பார்வையிலிருந்து குறிப்பான ஒரு விடயத்திற்கு தடம் மாற்றுகிறது ஜிகே. //

சுல்தான் ஐயா,

இது சென்ஷி அவர்களின் கருத்து.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//

SurveySan said...
நல்ல மேட்டரு சொல்லிருக்கீங்க.

திருந்துவாங்களா?
//

சர்வேசன் தலைப்பை ஒட்டி ஒரு வாக்கெடுப்பு நடத்த மாட்டிங்களா ?
:))

கோவி.கண்ணன் சொன்னது…

வாத்தியார் ஐயா,

ஒத்தக் கருத்துரை மறுமொழிக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Nandha said...
சரியாத்தான் சொல்லி இருக்கீங்க. ஆனா யார் கேப்பாங்க? நான்தான் தாசில்தான் ங்கிற நினைப்பு இருக்கிற வரைக்கும் இவங்க திருந்துவாங்கன்னு எனக்கு தோணலை.

எனக்கென்னமோ இதுக்கு பதிலா செவிடன் காதில சங்கு எடுத்து ஊதலாம்னு தோணுது......
//

நல்ல கருத்து... ஆனால் உடல்குறையுற்றோர் (ஊனமுற்றவர்) களை பழமொழிகளில் சேர்த்து பழிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்கலாம் நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

சென்ஷி,

ரொம்பவே அடிபட்டு நூடுல்ஸ் ஆக ஆகி இருக்கிங்க போல இருக்கு.

நீளமான பின்னூட்டம் ... நல்ல கருத்துக்கள். பாகச ஆளுங்க மனம் நோகலாமோ !
:))

மங்கை சொன்னது…

பாலபாரதி பதிவுல பின்னூட்டம் போட்ட அடுத்த நாளே அநாகரீகமா ஒரு பின்னூட்டம்... இதற்கும் நான் அதிகம் பின்னூட்டம் போடாதவள்.. ஏதொ என் கருத்தை சொல்லப்போக அப்படி ஒரு பின்னூட்டம் வந்தது எனக்கு..
இது மாதிரி எத்தன பேர் சொல்லியாச்சு.
இலவசமா ஒரு ஊடகம்... நம்ம எழுத்தையும் மதிச்சு நாலு பேரு படிக்கிற இடம்...இத நல்ல விதமா உபயோகப் படுத்தறத விட்டுட்டு.. ஹ்ம்ம்ம் என்ன சொல்ல..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்