பின்பற்றுபவர்கள்

28 செப்டம்பர், 2007

அரசியலும் ஆன்மீகமும் !

அரசியலும் ஆன்மிகமும் எதிரெதிரானவை என்பது போலவும், ஆன்மிகவாதிகள் அரசியல் பேசுவதும், அரசியல் வாதிகள் ஆன்மிகம் பேசுவது அபத்தம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஜோசப் ஐயா கூட இதே கருத்தை முன்வைத்து ஒருபதிவு எழுதி இருக்கிறார். அங்கேயே பின்னூட்ட மிடலாம் என்று நினைத்தேன் ஆனால் பின்னூட்டம் நீண்டுவிடும் என்பதற்காக தனிப்பதிவு இடுகிறேன்.

ஆன்மிகம் என்பது இறையியல் மட்டுமே என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் ஆன்மிகம் என்பது கோட்பாடுகளை வைத்துக் கொண்டு மதங்களாக பரிணமித்து நிற்கிறது. குழுவாக அடையாளப்படுத்துவதில் உலக அளவில் மதத்தின் பெயரால் அதை செய்வது எளிது. மனித வாழ்வியலில் இதை யெல்லாம் செய்யலாம், இதையெல்லாம் செய்யக் கூடாது என்று மதமே தீர்மானம் செய்கிறது. சிவில் சட்டங்களில் இந்து சட்டம், இஸ்லாமிய ஷரியத் சட்டம், கிறித்துவ சட்டம் என்று இருப்பவற்றை அரசியல் அரசு என்னும் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகாரம் கிடைத்த மற்றொரு அமைப்பு அவ்வகை சட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்துமதத்தில் பிறந்தவன் அவனுடைய சமூகம் சார்ந்த விருப்புகளில் இதை இதையெல்லாம் செய்யலாம் / கூடாது என்பதை அரசியலமைப்பு சட்டங்களே முடிவு செய்கின்றன ( இங்கே மதம் தொடர்பான சட்டங்கள் தவறு என்று நான் சொல்லவில்லை, மதம் இருப்பதால் அவையும் இருக்கின்றன ) அரசியிலும் ஆன்மிகமும் வேறு என்று சொல்லிக் கொண்டாலும் மக்கள் ஆடுகோழி பலியிடலாமா ? கூடாதா ? என்னும் ஆன்மிகம் சார்ந்த நம்பிக்கைகளை அரசியலே தீர்மானிக்கிறது. எங்கள் மதம் சார்பாக இவரை எம்பி ஆக்குகிறோம் என்று மதத்தின் பெயரால் வளர்ந்த கட்சிகள் அரசியல்வாதி எவர் என்பதை தீர்மாணிக்கின்றன.

பாரதிய ஜனதா பரிவார கட்சிகளும் சரி, இஸ்லாமியா கட்சிகளாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவரும் ஆன்மிக வாதிகளே ஆனாலும் அரசியலை இவர்களே தான் தீர்மானிக்கிறார்கள். (இஸ்லாமிய சமூகம் மக்கள் தொகை விழுக்காட்டு அளவில் குறைவாக இருப்பதால் அவர்களைச் சேர்ந்தவர்களை அவர்கள் முன்னிறுத்துவது இந்திய அரசியலில் தவறல்ல என்பது என்கருத்து. *பிரியாணி கிடைச்சுடுச்சிப்பா :-)* அமெரிக்க அளவில் அதிபர் பதவிக்கு பரிந்துரை செய்பவர்களின் பிரிவுகள் கூட அதாவது கத்தோலிக்கரா ? அல்லது மெதடிஸ்ட் என்னும் பழைய ஏற்பாட்டு பிரிவை சேர்ந்தவாரா ? என்று தேர்தல்காலத்தில் வெளிப்படையாக விபரங்கள் தெரிகிறது. இலங்கை அரசு /அரசியலில் எதையெல்லாம் செய்யலாம் எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை ஆன்மிகமே தீர்மாணிக்கிறது. பகவத் கீதை கர்மயோகம் என்ற பெயரில் பேசுவது முற்றிலும் அரசியலே. மதத்தால் அடையாளப்படுத்திக் கொண்ட நாடுகளின் அனைத்து அரசியலையும் தீர்மாணிப்பது ஆன்மிகமே.

சந்திராசாமி போன்ற (ஆ)சாமியார்கள் மத்திய அரசை கவிழ்க்கும் அளவுக்கு அரசியல் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் பிஜேபி அதிமுகவுடன் கூட்டனி சேரலாம ? கூடாதா ? தீர்மானிப்பவர் சங்கராச்சாரியார். ஆன்மிகமும் அரசியலும் சமூகத்தை வேறு வேறு பெயர்களில் தங்கள் கொள்கைகளை நெருக்கினாலும் / வலியிறுத்தினாலும், பெரும்பாலும் அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகத் தான் இருக்கின்றன. மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் காங்கிரஸ் கட்சியின் ஒரு மத்திய அமைச்சர், சேதுசமுத்திரத் திட்டத்தை தற்காக்கும் கருத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்காக டெல்லி முதல்வரை கடிந்து கொண்டதையும், பதவி விலக சொன்னதையும் வெறும் அரசியல் என்றே பார்க்க முடியாது. அரசியல் வாதிகள் ஆன்மிக வாதிகளிடம் வெளிப்படையாகவே ஆதரவு கேட்கின்றனர். அவர்களும் ஆசி வழங்குகிறார்கள்.

சேர, சோழ, பாண்டியர் காலத்திலும், கிருஷ்ண தேவராயர் மற்றும் அனைத்து பழங்கால இந்திய அரசர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக ஆன்மிக வாதிகளாவே உள்ளனர்.

ஆன்மிகம் புனிதத்தன்மை வாய்ந்தது என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளதால், ஆன்மிகம் அரசியலில் கலப்பது கேட்பதற்கு அபத்தம் போல் தெரிவது வெறும் கானல் தான். அது உண்மையல்ல அரசியலும் ஆன்மிகமும் இரட்டை பிறவிகள். சமூகங்கள் சீர்குழைப்பதும், தீர்மாணிப்பதும், முன்பெல்லாம் வழி நடத்துவதும் அதுவே. ஆன்மிக வாதிகள் மட்டுமல்ல அதற்கு மாற்றான நாத்திக கொள்கைகளும் கூட அரசியலை தீர்மாணிப்பதாகத்தான் உள்ளன.

அரசியல் ஆன்மிகத்துக்கும், ஆன்மிகம் அரசியலுக்காவும் தான் உண்டாக்கப் பட்டு / ஏற்படுத்தப்பட்டு இருகிறது என்பது வரலாறுகளைப் படித்தால் தெரியும் வெள்ளிடைமலை. மற்றபடி மதமாக வளர்ந்திருக்கும் ஆன்மிகத்திலிருக்கும் மேல்பூச்சுகளெல்லாம் அது பொதுமக்களிடம் / நம்பிக்கையாளர்களிடம் இருக்கும் தமக்கான செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்கான அலங்காரங்களே.

ஆன்மிகம் என்பது நம்பிக்கை என்ற அளவில் இருந்தால் அரசியலில் அது என்றுமே மூக்கை நுழைக்காது. ஆனால் நாம் சுற்றிலும் பார்க்கும் / கேட்கும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் அப்படி இல்லை.

அரசியலும் ஆன்மிகமும் வேறு வேறு என்பது பழைய வேதாந்தமாக இருக்கவேண்டும். அது தோன்றிய காலத்திலேயே மறைந்திருக்க வேண்டும் :)

பின்குறிப்பு : ஒரு இறை நம்பிக்கையாளன் அரசியல் பேசினால் அவன் மத நம்பிக்கை யாளனே. இங்கு ஆன்மிகம் என்ற குறியீட்டில் சொல்லி இருப்பது மதநம்பிக்கையாளர்களைப் பற்றியும், அதை அரசியலில் பயன்படுத்துவர்கள் குறித்தது. இங்கு குறிப்பிட்டு இருக்கும் 'ஆன்மிகம்' இறைவன் மதத்தைக் கடந்தவன் என்று இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் பற்றியது அல்ல.

21 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

உள்ளேன் ஐயா!
Blogger Postings ல் பதிவைப் பதிந்து பத்திகளை Justify
செய்து சரி செய்தீர்களா?
இப்போது எழுத்துக்கள் பூச்சிகளாகத் தெரிகின்றன
சரி செய்யவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
உள்ளேன் ஐயா!//
உங்கள் நிலை புரிகிறது. :)

//Blogger Postings ல் பதிவைப் பதிந்து பத்திகளை Justify
செய்து சரி செய்தீர்களா?
இப்போது எழுத்துக்கள் பூச்சிகளாகத் தெரிகின்றன
சரி செய்யவும்//

சரி செய்துவிட்டேன் ஐயா !

சதுக்க பூதம் சொன்னது…

It is true in international politics also. catholic pope indirectly controlled most of the europe in mediavel time.Still in US, religious leaders are power center and they are decision makers.In Middle east,Pak etc, religious leaders play a powerful role.In Srilanka, buddhist monk plays a powefule role. You can keep on add examples

Thamizhan சொன்னது…

"பக்தி" என்பது தனி மனிதப் பிரச்சினை.
"ஒழுக்கம்" என்பது பொது.மற்றவர்களைப் பாதிப்பது,அதனால் பொதுப் பிரச்சினை ஆகி விடுகிறது என்றார் பெரியார்.
அவருடைய எடுத்துக்காட்டாக பக்தி என்பது பாத்ரூம் சங்கதி.உன்னை மட்டும் பொறுத்தது.அங்கே செய்வதை நீ வெளியேயும் செய்வேன் என்பதில்தான் பிரச்சினையே என்றார்.

திரு.வி.க.மிக்க ஆச்சாராமானவர்.அவர் பெரியார் வீட்டு விருந்தினராக இருந்த போது,காலையில் திரு நீறு சகிதம் அறைக்கு வெளியே பெரியார் நின்று கொண்டிருந்தாராம்.

அது நயத்தக்க நாகரீகம்.

இன்று ஆன்மிகமும் அரசியலும் அகப்பட்டுக் கொள்ளாதவரை நல்லவன் என்ற நிலைக்கு உலகெங்கும் தள்ளப் பட்டு விட்டது.இதிலே தமிழகத்தில் மிகவும் மோசமாக பெரிய ஏமாற்று வேலையாக"மக்களை ஏமாற்றுவதில் சிறந்து விளங்குவது அரசியல்வாதியா,ஆன்மீக வாதியா?"என்று பட்டி மன்றமே நடத்தலாமே!

TBR. JOSPEH சொன்னது…

கண்ணன்,

உங்களுடைய வாதம் சரியா தவறா என்பதில் நுழையாமல் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை மட்டும் கூறுகிறேன்.

அரசியல்வாதியும் மனிதன்தான். அவனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. அதில் ஒரு அங்கம்தான் மதம், இறை நம்பிக்கை. அது சில அரசியல்வாதிகளுக்கு அதாவது மு.க போன்றவர்களுக்கு, இருப்பதில்லை.

அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயமாக இருக்கும் வரையிலும் பிரச்சினையில்லை. ஆனால் மதத்தை தனக்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொள்வது எத்தனை தவறோ அது போலவே தன்னுடைய நம்பிக்கையின்மையை பிரகடனப்படுத்தி சர்ச்சைகளை கிளப்புவதும் தவறுதான்.

என்னுடைய இறை நம்பிக்கை எப்படி என்னுடைய தனிப்பட்ட விஷயமோ அதுபோலவே மு.க போன்றவர்களின் நம்பிக்கையின்மையும் தனிப்பட்ட விஷயம்தான்.

நம்பிக்கையில்லாதவர்கள் நம்பிக்கையுள்ளவர்களை குறை கூறுவதோ அல்லது அவர்களுடைய நம்பிக்கையை எள்ளி நகையாடுவதோ நாகரீகமற்ற செயல் என்பது மட்டுமே என்னுடைய நிலைப்பாடு.

மற்றும் ஒன்று. மதம், இறை நம்பிக்கையை என்பது நம்முடைய மனம் சம்பந்தப்பட்ட விஷயம். அதை ஆராய்ந்து உண்டு, இல்லை என தெளிவு படுத்த முனைவதும் கூட தேவையில்லை என்றும் கருதுகிறேன்.

இதை உங்களுடைய இந்த பதிவுக்கோ அல்லது முந்தைய பதிவுக்கோ எதிர்மறையான பதில் என்று கருதிவிடாதீர்கள்.

உங்களுடைய வாதத்தை ஏற்றுக்கொள்கிறேனோ இல்லையோ உங்களுடைய வாதத் திறமையை நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன்.

உங்களுடைய நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்தில் மிக நன்றாகவே தெரிகிறது.

G.Ragavan சொன்னது…

கோவி, உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நீங்கள் சொல்வதும் ஜோசப் சார் சொல்வதும் நான் நினைப்பதும் ஒன்றுதான். ஆனால் சொல்லும் முறை வேறு விதமாக இருக்கிறது.

அரசியல் பேசுகிறவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. மதவாதிகள். உலகம் முழுவதும் அதுதான் நடக்கிறது. குன்றக்குடி அடிகளாரோ வாரியாரோ அரசியல் பேசியிருக்கின்றார்களா என்ன? அவர்கள் ஆன்மீகவாதிகள். உண்மையான ஆன்மீகவாதிகள் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் நல்வழி சொல்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இந்த எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறாது என்பதுதான் உண்மை. அரசியல் செய்கிறவர்களுக்கு மதம், மொழி, இனம், நிறம் ஆகியவை நன்றாகவே உதவும். இன்றைக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
"பக்தி" என்பது தனி மனிதப் பிரச்சினை.
"ஒழுக்கம்" என்பது பொது.மற்றவர்களைப் பாதிப்பது,அதனால் பொதுப் பிரச்சினை ஆகி விடுகிறது என்றார் பெரியார்.
அவருடைய எடுத்துக்காட்டாக பக்தி என்பது பாத்ரூம் சங்கதி.உன்னை மட்டும் பொறுத்தது.அங்கே செய்வதை நீ வெளியேயும் செய்வேன் என்பதில்தான் பிரச்சினையே என்றார்.//

பாத்ரூம் சங்கதி சரியான எடுத்துக்காட்டுதான். பக்தியை புகழுபவர்கள் எல்லோருமே, நாத்திகனை குறை சொல்லி, தாங்கள் கிடைக்கதற்கரிய ஒன்றை பெற்றுவிட்டது போலவும், அதை புரிந்து கொள்ளாதவர்கள் அதளபாதாளாத்தில் இருந்து கொண்டு நரக வாழ்க்கை வாழ்வதாகவும் இகழ்கின்றனர். பக்தி 'பிரச்சாரங்களில்' தொன்னூறு விழுக்காடு கடவுளின் கருணையை / புகழை செல்வதைவிட நம்பாதவர்களை 'நாய்' என்று கூட சொல்லலாம் என்றெல்லாம் கருத்து வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தான் விளக்கினாலும் ம்தம் என்பது 'வெறும் நம்பிக்கை' என்று எவராலும் புரிய வைக்க முடியாது. நம்புவது மதமா ? கடவுளா ? என்று கூட தெளிவில்லாதவர்கள் நாத்திகம் பொல்லாதது போல் பிரச்சாரம் செய்வதும், ஆத்திக உயர்வை காட்ட இவர்கள் காட்டும் உதாரணங்கள் நாத்திகனை பழிப்பதாகவே உள்ளது.
நம்பும் கடவுள் அவர்களுக்கு தெளிவு கொடுக்கட்டும் ! :))

//திரு.வி.க.மிக்க ஆச்சாராமானவர்.அவர் பெரியார் வீட்டு விருந்தினராக இருந்த போது,காலையில் திரு நீறு சகிதம் அறைக்கு வெளியே பெரியார் நின்று கொண்டிருந்தாராம்.
//
இந்த பகுதியில் திருவிகாவை மகிழ்விக்க பெரியார் திருநீறு சகிதம் நின்றார் என்ற கருத்தை...பெரியார் வீட்டுக்குள் சாமி கும்பிட்டு திருவிகவிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார் என்றும் திரிப்பர்.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
It is true in international politics also. catholic pope indirectly controlled most of the europe in mediavel time.Still in US, religious leaders are power center and they are decision makers.In Middle east,Pak etc, religious leaders play a powerful role.In Srilanka, buddhist monk plays a powefule role. You can keep on add examples
//

சதுக்கபூதம் அவர்களே,

அடுத்த திபெத்தின் அடுத்த தலாய்லாமாவை சீன அரசாங்கம் தீர்மானிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. உலக நடப்புகெலெள்ளாம் ஆன்மிகமும் அரசியலும் கலந்ததாகவே இருக்கிறது.
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். பின்னூட்ட கருத்திற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
கோவி, உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நீங்கள் சொல்வதும் ஜோசப் சார் சொல்வதும் நான் நினைப்பதும் ஒன்றுதான். ஆனால் சொல்லும் முறை வேறு விதமாக இருக்கிறது.

அரசியல் பேசுகிறவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. மதவாதிகள். உலகம் முழுவதும் அதுதான் நடக்கிறது. குன்றக்குடி அடிகளாரோ வாரியாரோ அரசியல் பேசியிருக்கின்றார்களா என்ன? அவர்கள் ஆன்மீகவாதிகள். உண்மையான ஆன்மீகவாதிகள் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் நல்வழி சொல்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இந்த எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறாது என்பதுதான் உண்மை. அரசியல் செய்கிறவர்களுக்கு மதம், மொழி, இனம், நிறம் ஆகியவை நன்றாகவே உதவும். இன்றைக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறது.
//

ஜிரா,
மதவாதிகள் வேறு ஆன்மிக வாதிகள் வேறா ? என்றுமே அப்படி இருந்ததில்லை. மதவாதிகள் எல்லோரும் ஆன்மிக வாதிகளே. ஆன்மிக வாதிகள் அனைவரும் மதவாதிகள் அல்ல என்று சொல்வதற்கு மிகச் சிலரே எம்மதமும் சம்மதம் என்று சொல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆன்மிக நம்பிக்கையென்பது மதம் சார்ந்தவையாகவே இருக்கிறது. எனவே மதவாதிகள் / ஆன்மிகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று எந்த காலத்திலுமே எதிர்பார்க்க முடியாது / அவர்களாலும் அப்படி இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

மிகச்சிலர் முன்பு இருந்தனர் இந்திய அளவில் இராமகிருஷ்ணரும், தமிழக அளவில் கிருபாணந்த வாரியார் சாமிகள் மற்றும் வள்ளலார். இவர்கள் அரசியல் பேசாத ஆன்மிகவாதிகள். மிகச் சிலரே அவ்வாறு இருப்பதால் 'எலிமினேசன் ப்ராசஸ்' படி இவர்கள் 'அவுட் ஆப் திஸ் போஸ்ட்' :)))

கையேடு சொன்னது…

கடவுள் என்ற ஒற்றை வார்த்தைக்கு இருக்கும் உலக விளக்கங்கள் வெகுவாக ஆச்சர்யப்படுத்துகின்றன. இந்த ஒற்றை வார்த்தை மனித உருவம் கொள்ளலாம், கலப்பு உருவமும் கொள்ளலாம், அறிவியல் பேசினால் அதன் விளிம்பில் இதை உட்கார வைக்கலாம், அதையும் மீறி இது ஒரு உணர்வு அல்லது ஒரு நம்பிக்கை என்று தனிமனித உரிமையைப் பேசலாம்... இந்த ஒற்றை வார்த்தையின் வாழ்வே அது எதிராளியின் வாதத்திற்கேற்ப அதன் வடிவத்தையும் வரையறையையும் மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுப்பதுதான்.

மற்ற விவாதங்களுக்கெல்லாம் பதில் கூறினால் கூட இந்த நம்பிக்கை அல்லது உணர்வு என்ற தனிமனித உரிமை பேசுபவர்களுக்கான சில கேள்விகளை திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களின் இறைவன் இருக்கின்றாரா என்ற பதிவிலும் பதிய வைத்திருக்கிறேன்.

ஜீவி சொன்னது…

//சிவில் சட்டங்களில் இந்து சட்டம், இஸ்லாமிய ஷரியத் சட்டம், கிறித்துவ சட்டம் என்று இருப்பவற்றை அரசியல் அரசு என்னும் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகாரம் கிடைத்த மற்றொரு அமைப்பு அவ்வகை சட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.//

மற்ற மத சட்டங்களைப் பற்றித் தெரியாது. ஆனால், சிவில் இந்துச்
சட்டத்தில் "இருதார மண தடைச் சட்டம்" அமுலில் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியெனில், நீங்கள்
சொல்கிறபடி "அரசியல் அரசு என்னும் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகாரம் கிடைத்த மற்றொரு அமைப்பு அவ்வகை சட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதா?" பாதுகாப்பு அளிப்பதாக நீங்கள் சொல்லியிருப்பதால் உங்களிடம் இந்தக் கேள்வி.
அல்லது நீதிமன்றம் சட்டப்பாதுகாப்பு அளிக்கிறதா?.. தங்களுக்கு இச்சட்டங்கள் சரிப்பட்டு வரவில்லை என்று இவற்றை மீறுபவர்கள், இந்துக்கள் இல்லையா? அதை ஒரு அரசாங்கமோ அன்றி நீதிமன்றமோ
தீர்மானிக்க முடியுமா? புரியவில்லை.
2. பெண்களுக்கும் வாரிசு சொத்துரிமை உண்டு போன்ற ஒரு சட்டம் அரசு இயற்றினால், அந்த
சட்டம் எல்லா மதம் சார்ந்தவர்களுக்கும் பொருந்துமா?
அரசு இயற்றும் அந்தச் சட்டத்திற்கு
எல்லா மதத்தினரும் கட்டுப்பட்டவரா?
தங்களுக்கு விளக்கம் தெரியுமெனில்,
குறிப்பிட வேண்டுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மற்ற மத சட்டங்களைப் பற்றித் தெரியாது. ஆனால், சிவில் இந்துச்
சட்டத்தில் "இருதார மண தடைச் சட்டம்" அமுலில் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியெனில், நீங்கள்
சொல்கிறபடி "அரசியல் அரசு என்னும் சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகாரம் கிடைத்த மற்றொரு அமைப்பு அவ்வகை சட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதா?" பாதுகாப்பு அளிப்பதாக நீங்கள் சொல்லியிருப்பதால் உங்களிடம் இந்தக் கேள்வி.
அல்லது நீதிமன்றம் சட்டப்பாதுகாப்பு அளிக்கிறதா?.. தங்களுக்கு இச்சட்டங்கள் சரிப்பட்டு வரவில்லை என்று இவற்றை மீறுபவர்கள், இந்துக்கள் இல்லையா? அதை ஒரு அரசாங்கமோ அன்றி நீதிமன்றமோ
தீர்மானிக்க முடியுமா? புரியவில்லை.
2. பெண்களுக்கும் வாரிசு சொத்துரிமை உண்டு போன்ற ஒரு சட்டம் அரசு இயற்றினால், அந்த
சட்டம் எல்லா மதம் சார்ந்தவர்களுக்கும் பொருந்துமா?
அரசு இயற்றும் அந்தச் சட்டத்திற்கு
எல்லா மதத்தினரும் கட்டுப்பட்டவரா?
தங்களுக்கு விளக்கம் தெரியுமெனில்,
குறிப்பிட வேண்டுகிறேன்.//

ஜீவி அவர்களே,

நீதிமன்றங்கள் சட்டம் இயற்றுவது இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களே அதில் சேர்த்தலையும், நீக்கலையும் செய்கின்றன. எவராவது நீதிமன்றம் சென்றால் வழக்கை ஆராய்ந்து அது சட்டப்படியா ? என்று பார்த்து நீதிபதி செயல்படுவார். எனவே மதம் தொடர்பான சட்டங்கள் இருக்கலாமா ? வேண்டாமா ? என்பதை தீர்மாணிப்பது அரசுகளே. வாரிசுரிமை சட்டம் சிவில் சட்டப் பிரிவில் வரும் என்றே நினைக்கிறேன். வழக்கறிஞர்கள் இதை தெளிவுபடுத்த முடியும்.

கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தும். சிவில் சட்டங்கள் பொருந்தாது.

ஜீவி சொன்னது…

கோவி அவர்களே,
விரைவான தங்கள் பதிலுக்கு நன்றி.
'சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அங்கீகாரம் பெற்ற மற்றொரு அமைப்பு' என்னும் சொற்றொடர் சிறு
குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது;
இதில் வேடிக்கைப் பார்த்தீர்களா?
'மதம் சாரா மனிதன் இருக்கமுடியாது'
என்பதே அரசு உள்ளிட்ட எல்லா அமைப்புகளின் தீர்ப்பாகவும் இருக்கிறது, பாருங்கள்!
இப்படியிருக்கையில், மதம்-அதைச்
சார்ந்த இறைவன் - அந்த இறைவனைச் சார்ந்த பக்தி என்னும்
வழிபாட்டு முறைகள் - எல்லாமே
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் பொழுது, பக்தி எப்படி பாத்ரூம்
சமாச்சாரம் ஆகும்? கோயில்களில்,
அர்ச்சனைத் தட்டை நீட்டும் பொழுதே
பெயர், குலம், கோத்திரம் கேட்கிறார்களில்லையா? அப்படி கேட்கவில்லையெனில், அது அர்ச்சனை இல்லை. அர்ச்சனை இல்லையெனில், அர்ச்சனைக்கான
அனுமதி சீட்டு இல்லை, அந்த அனுமதிச் சீட்டு இல்லையெனில்,
கோயில் என்கிற இனத்தில் அரசுக்கு
வருமானம் இல்லை..
ஒளவையாரின், 'வரப்புயர..' மாதிரி
தொடர்பும் அதற்கானத் தொடர்ச்சியும்
எப்படிப் போகிறது, பாருங்கள்!

ஜீவி சொன்னது…

கோவி அவர்களே,
தேர் என்ன முட்டுச்சந்தில்
மாட்டிக் கொண்டு விட்டதா, நண்பரே?கட்டை போட்டு நிலை சேர்க்க வேண்டாமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படியிருக்கையில், மதம்-அதைச்
சார்ந்த இறைவன் - அந்த இறைவனைச் சார்ந்த பக்தி என்னும்
வழிபாட்டு முறைகள் எல்லாமே
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் பொழுது, பக்தி எப்படி பாத்ரூம்
சமாச்சாரம் ஆகும்? //

ஜீவி,

முன்பே பதில் சொல்ல நினைத்தேன் அதையே திரும்பவும் வழியுருத்தனுமேன்னு தான் விட்டேன்.

சரி, தினமும் நடப்பது, எங்கும் நடப்பது, அதற்கென்றே ஒரு முறை என்ற உங்க கணக்கு படியே பார்த்தால் 'பாத்ரூம்' சமாச்சாரமும் அப்படித்தானே.

:))

ஜீவி சொன்னது…

//சரி, தினமும் நடப்பது, எங்கும் நடப்பது, அதற்கென்றே ஒரு முறை என்ற உங்க கணக்கு படியே பார்த்தால் 'பாத்ரூம்' சமாச்சாரமும் அப்படித்தானே.

:))//
இது நகைச்சுவைக்காக என்று நீங்கள்
எடுத்துக் கொண்டால்..ஓ.கே.
முடிவுறா விவாதங்களை வளர்த்த
நானும் விரும்பவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவி said...
இது நகைச்சுவைக்காக என்று நீங்கள்
எடுத்துக் கொண்டால்..ஓ.கே.
முடிவுறா விவாதங்களை வளர்த்த
நானும் விரும்பவில்லை.//

ஜீவி நகைச்சுவைக்காக சொல்லவில்லை. சீரியஸ் ஆகவே சொன்னேன்.

இந்த சுட்டியை படித்துவிட்டு வாருங்கள்

விவாதம் தொடருவோம்.

ஜீவி சொன்னது…

"பக்தி என்பது பாத்ரூம் சங்கதி.உன்னை மட்டும் பொறுத்தது.அங்கே செய்வதை நீ வெளியேயும் செய்வேன் என்பதில்தான் பிரச்சினையே"
--இந்த விஷயத்தில் தான் நான் வேறுபட்டேன். ஒருவரின் சொந்த சங்கதியாகிய பெயர்,கோத்திரத்தை
பொதுஇடமான கோயிலில் கேட்டுத்தானே இறைவனுக்கு அர்ச்சனை என்ற ஒன்றைச் செய்கிறார்கள்...அப்பொழுதே பக்தி என்னும் பெயுரில் இவன் இறைவனுக்குச்செய்யும் அர்ச்சனை,
இவனது சொந்த சமாச்சாரங்களான
பெயர்,கோத்திரம் போன்றவை
பிறர் அறிய் பகிரங்கப்படுத்தப் படுகிறதே..ஒரு அர்ச்சனைக்கே
அப்படியிருக்க பக்தி எப்படி பாத்ரூம்
சமாசாரம் ஆகும்?--என்று கேட்டிருந்தேன்.. ஆனால், நீங்கள் கொடுத்திருந்த சுட்டி, இதற்கு சம்பந்தமில்லாதிருப்பதால், நீங்கள்
எப்படி புரிந்துகொண்டீர்கள் என்றுத்
தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//"பக்தி என்பது பாத்ரூம் சங்கதி.உன்னை மட்டும் பொறுத்தது.அங்கே செய்வதை நீ வெளியேயும் செய்வேன் என்பதில்தான் பிரச்சினையே"
--இந்த விஷயத்தில் தான் நான் வேறுபட்டேன். ஒருவரின் சொந்த சங்கதியாகிய பெயர்,கோத்திரத்தை
பொதுஇடமான கோயிலில் கேட்டுத்தானே இறைவனுக்கு அர்ச்சனை என்ற ஒன்றைச் செய்கிறார்கள்...அப்பொழுதே பக்தி என்னும் பெயுரில் இவன் இறைவனுக்குச்செய்யும் அர்ச்சனை,
இவனது சொந்த சமாச்சாரங்களான
பெயர்,கோத்திரம் போன்றவை
பிறர் அறிய் பகிரங்கப்படுத்தப் படுகிறதே..ஒரு அர்ச்சனைக்கே
அப்படியிருக்க பக்தி எப்படி பாத்ரூம்
சமாசாரம் ஆகும்?--என்று கேட்டிருந்தேன்.. ஆனால், நீங்கள் கொடுத்திருந்த சுட்டி, இதற்கு சம்பந்தமில்லாதிருப்பதால், நீங்கள்
எப்படி புரிந்துகொண்டீர்கள் என்றுத்
தெரியவில்லை.

//

ஜீவி,

பக்தி ஆன்மிகம் எல்லாம் உயர்வு என்று நினைப்பதில் ஒன்றும் பிரச்சனையே இல்லை. நீங்கள் சொல்வது போல் கோவிலில் சென்று கோத்தரம் சொன்னாலும் வெளியே யாருக்கும் தெரியப்போவதில்லை.

ஆனால் ?

இந்த கடவுள் உயர்ந்தது, அந்த மதத்தில் சாத்தானை வழிப்படுகிறார்கள். கடவுளை நம்பாதவன் அயோக்கியன், இரக்க குணம் போன்ற எக்ஸ்ட்ரா சங்கதிகள் அனைத்தும் வழிபாட்டால் கிடைக்கிறது போன்ற தவறான கருத்துக்கள் உரத்து ஒலிப்பதாலேயே நம்பிக்கை என்பது பாத்ரூம் சங்கதி வெளியில் சொல்லத் தேவையில்லை. உயர்வென்றால் நம்பிக்கை என்ற அளவில் தானே உயர்வு. இதையெல்லாம் எதற்கு பெருமையாக பேச வேண்டும். அப்படி பேசுவது கூடபரவாயில்லை. தம்மை உயர்த்துவதைவிட பிறரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்றே செய்கிறார்கள் என்பதற்காக சொன்னேன்.

இப்போது புரிகிறதா ? இன்னும் புரியவில்லையா ?

ஜீவி சொன்னது…

எனது "இறைவழிபாடு-ஓர் அலசல்"
என்னும் பதிவைப்படித்து விட்டு,
பின்னூட்டமிட்டுப் பாராட்டியதோடு
அல்லாமல், உங்கள் கருத்தும் என்
கருத்தும் ஒத்திருக்கிறதே என்று
வியந்த நீங்கள் நான் எந்தப் பதிவிலும்
என் கருத்து என்று எழுதாத, விரும்பாத ஒரு விஷயத்தை எனக்கே எழுதி,"இப்பொழுதாவது புரிகிறதா?" என்று கேட்டால் நான் என்ன சொல்வது?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவி said...
எனது "இறைவழிபாடு-ஓர் அலசல்"
என்னும் பதிவைப்படித்து விட்டு,
பின்னூட்டமிட்டுப் பாராட்டியதோடு
அல்லாமல், உங்கள் கருத்தும் என்
கருத்தும் ஒத்திருக்கிறதே என்று
வியந்த நீங்கள் நான் எந்தப் பதிவிலும்
என் கருத்து என்று எழுதாத, விரும்பாத ஒரு விஷயத்தை எனக்கே எழுதி,"இப்பொழுதாவது புரிகிறதா?" என்று கேட்டால் நான் என்ன சொல்வது?
//

ஜீவி,

ஒருசிலரோடு ஒருசில கருத்துக்கள் ஒத்துப்போகும் போது வியப்பாக இருக்கும். ஆனால் அதுவே அவருக்கும் நமக்கும் எல்லாவிதத்திலும் ஒத்த சிந்தனைகள் என்ற அளவுகோள் அல்ல.

நான் புரிகிறதா ? என்று தானே கேட்டேன். ஒப்புக் கொள்கிறீர்களா ? அல்லது ஏற்கிறீர்களா ? என்று வழியுறுத்தவில்லை.

அதுபோன்றே "உங்கள் கருத்தும் என்
கருத்தும் ஒத்திருக்கிறதே என்று
வியந்த"
என்றதன் பொருள் 'அவைகள் எனது கருத்துக்கள்' என்ற பொருளிலும் சொல்லவில்லை. வியப்பினால் வந்த ஒருகருத்துமட்டுமே.

யார் மீதும் எவரும் எந்த கருத்தையும் திணிக்க முடியாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்