பின்பற்றுபவர்கள்

18 செப்டம்பர், 2007

ஆசிய நாடுகளில் பரவிய அவதாரகதைகள்...



மரணத்துக்கு அச்சப்படதாவர்கள் விண்ணுலகிலும் இல்லை போலும். ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் பிறப்பு இறப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள எதாவது வழி இருக்கிறதா ? என்று பரமசிவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும் அதை எடுத்து உண்டால் மரணமில்லாமல் என்றும் இளமையுடன் வாழலாம் என்றும் கூறினாராம். இது சரியான வழி என்று தேவர்களும் அசுரர்களும் முடிவு செய்து கிருஷ்ணனின் உதவியையும் கேட்டனர். வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு மந்தாகினி மலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தனர். மத்துக்கு கீழே முட்டுக் கொடுத்து தாங்கி பிடிக்க கிருஷ்ணன் ஆமை அவதாரம் எடுத்து தாங்கிபிடித்தாராம்.

அவ்வாறு பாற்கடல் கடையும் போது அதிலிருந்து தோன்றியதுதான் காமதேனு, கற்பகவிருட்ஷம், லக்குமி மற்றும் பல பல. அமிர்த்தம் திரளும் முன்பு வலி பொருக்காமல் வாசுகி(பாம்பு) விஷத்தை கக்க ஆரம்பித்ததும் அதனை எடுத்து சிவன் உண்டதாகவும், சிவனின் உடல் நீல நிறமாக மாறியதையும், வயிற்றுக்குள் சென்றுவிட்டால் ஈரேழு உலகமுமே அழிந்துவிடும் என்பதால் பார்வதி சிவனின் கழுத்தில் கையை வைத்து விஷம் வயிற்றுக்குள் இறங்காமல் தடுத்துவிட்டாள் நீல விஷத்தை தொண்டையில் தாங்கிக் கொண்டுள்ளதால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்ததாக அந்த கதையில் மேலும் சொல்ல்லப்படும் தகவல். இவ்வாறாக பாற்கடல் கடைந்து அமிர்த்தம் வந்ததும் அவற்றை தாங்கள் மட்டுமே அடைய வேண்டும் என்று தேவர்கள் சூழ்ச்சி செய்தனர். இதற்கு மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணன் உதவி செய்வதாகவும், மோகினியே சமமாக அமிர்த்த கலச்சத்தில் இருந்து அமிர்தத்தை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. தீர்த்து முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுக்கப்பட்டது இதனை தெரிந்து கொண்ட அசுரர்களில் ஒருவன் தேவர் உருவம் எடுத்து தேவர்களுக்கு இடையே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டுவிடுவான். இதனை அறிந்த கிருஷ்ணன் அந்த அசுரனை நோக்கி சக்ராயுதத்தை வீச அவன் உடல் தலைவேறு முண்டம் வேறாக ஆகிவிடுவான். இந்த அசுரன் ஏற்கனவே அமிர்த்தம் உண்டு இருப்பதால் மரணிக்க மாட்டான். பின்னர் அவன் உடலில் ஒரு பாம்பை வெட்டி தலையை முண்டத்துடனும், உடலை தலையுடனும் இணைக்க ஒன்று இராகுவாகவும், மற்றது கேதுவாகவும் மாறிவிடுவதாக மகா விஷ்ணு அவதாரக் கதைகளில் ஆமை அவதார கதையில் சொல்கிறார்கள். இது போன்ற கதைகளை பயபக்தியுடன் படித்தால் அடுத்தவரின் உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை எப்படி ஏமாற்றுவது போன்ற நல்லொழுக்கங்களை கற்றுக் கொள்ள முடியும். :)

புத்தரை கிருஷ்ணனின் ஒன்பதாவது அவதாரமாக (விஷ்ணு என்று) வைணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதால் (பெளத்ததை வைதிக வைணவம் உள்வாங்குதல்) புத்தமதம் பரவிய கிழக்கு ஆசிய நாடுகளில் கிருஷ்ண அவதாரக்கதைகளும் புத்த மதத்துடன் சேர்ந்தே பரவியுள்ளது. புத்தரின் போதனைகளை உள்வாங்கி அத்வைதம் அமைந்ததால் ஆதிசங்கரையும் வைணவர்கள் பிரசன்ன புத்தர் என்றே அழைத்தார்கள். குறிப்பாக இராமயணம் கடல் கடந்து சென்றதற்கு காரணம் அவை புத்தருக்கும் விஷ்ணுவிற்கும் ஏற்கனவே தொடர்பு படுத்திவிட்டதால், வைணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் வைணவ கதைகளை மேடை நாடகங்களுக்காக பவுத்தர்களால் ஆசிய நாடுகளுக்கு எடுத்துச் சென்று இருக்கக்கூடும், பல கிருஷ்ண அவதாரக்கதைகளும், இராமயணமும் கடல் கடந்து சென்றுள்ளது. அம்மக்களுக்கு கிருஷ்ணன், இராமன் என்றால் புத்தரின் மற்றொரு பிறவி, அவதாரம் என்று தான் கொள்கிறார்கள். கிழக்கு ஆசியவில் பலநாடுகளில் சூரியன் கோவில்கள் இருக்கிறது. ஆனால் அங்கு சூரியன் இல்லை. ஞான சூரியனான புத்தரே அங்கு இருக்கிறார்.

அண்மையில் கட்டப்பட்டுள்ள தாய்லாந்தின் புதிய விமான நிலையமான சொர்ண பூமி விமான நிலையத்தில் மேற்சொன்ன பாற்கடல் கடைதல் பற்றிய அமைப்புக் காட்சி வைக்கப்பட்டு இருந்தது. மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதிகாசங்களுக்கு உருவம் கொடுத்தை இந்தியாவில் சூரசம்ஹாரம் தவிர்த்து வேறெதும் நான் பார்த்தது இல்லை.

படங்களை பெரிதாக பார்க்க 'கிளிக்' செய்யுங்கள்.


அன்புடன்,

கோவி.கண்ணன்

11 கருத்துகள்:

RATHNESH சொன்னது…

நண்பரே, படிக்க சுவையாக இருந்த பதிவு. உள்விளக்கங்களும் கிளைக்கதைகளும் கொண்ட நிகழ்வுகளை ரத்தினச் சுருக்கமாக அழகாக விவரித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம்.

//ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் பிறப்பு இறப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள எதாவது வழி இருக்கிறதா ? என்று பரமசிவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும் அதை எடுத்து உண்டால் மரணமில்லாமல் என்றும் இளமையுடன் வாழலாம் என்றும் கூறினாராம். இது சரியான வழி என்று தேவர்களும் அசுரர்களும் முடிவு செய்து கிருஷ்ணனின் உதவியையும் கேட்டனர்.//

நான் படித்த புராணக்கதைகளில் ஆரம்பத்தில் அசுரர்கள் அந்தக் கூட்டணியில் இல்லை; வாசுகி பாம்பின் தலைப்பகுதியைப் பிடிக்கும் தைரியம் தேவர்களுக்கு இல்லை என்பதால் அசுரர்களுடன் கூட்டணி அமைக்கவும், வென்ற பிறகு கூட்டணி மந்திரி சபை அமையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ணனே ஐடியா கொடுத்ததாகவும் தான் இருந்தது. தாங்கள் ஆதாரபூர்வமாய் எதையும் எழுதுபவர். என் கருத்து தவறா என்று மட்டும் விளக்குவீர்களா?

RATHNESH

ஜமாலன் சொன்னது…

நல்ல பதிவு..

புதிய செய்தியும்கூட.. அவதாரக்கதைகள் ஆசிய நாடுகளில் பரவியிரப்பதை இப்பதிவின் மூலமே அறிந்து கொண்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் படித்த புராணக்கதைகளில் ஆரம்பத்தில் அசுரர்கள் அந்தக் கூட்டணியில் இல்லை; வாசுகி பாம்பின் தலைப்பகுதியைப் பிடிக்கும் தைரியம் தேவர்களுக்கு இல்லை என்பதால் அசுரர்களுடன் கூட்டணி அமைக்கவும், வென்ற பிறகு கூட்டணி மந்திரி சபை அமையாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ணனே ஐடியா கொடுத்ததாகவும் தான் இருந்தது. தாங்கள் ஆதாரபூர்வமாய் எதையும் எழுதுபவர். என் கருத்து தவறா என்று மட்டும் விளக்குவீர்களா?

RATHNESH
//

ரத்னேஷ்,

நீங்கள் சொல்வது சரிதான். இந்த படத்திலும் பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்கள் தான் நின்றுகொண்டு இருக்கிறார்கள். நானும் இதை எழுதலாம் என்று இருந்தேன்.
:)))

ஜெகதீசன் சொன்னது…

பதிவுக்கு நன்றி.. புதிய செய்திகள் சில அறிந்து கொண்டேன்...

பாரதி தம்பி சொன்னது…

நல்ல பதிவு. உள்ளூர் தாண்டியும் பரவியிருக்கும் அவதாரங்களையும், அவற்றின் ஆதிக்க மரபுகளையும் எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி..!

குமரன் (Kumaran) சொன்னது…

படங்கள் மிக நன்றாக இருக்கின்றன கோவி.கண்ணன். நம் நாட்டில் வழங்கும் இந்த பாற்கடல் கடையும் கதை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் தாய்லாந்திலும் வழங்குவது மிக்க வியப்பை அளிக்கிறது. பல வண்ண அசுரர்கள் சிலைகளும் ஒரே வண்ண தேவர்கள் சிலைகளும் புன்சிரிப்பையும் வரவழைத்தன.

புத்தரை ஒன்பதாவது அவதாரமாகச் சொல்லும் வைணவக் கதைகளில் சென்று பார்த்தால் அந்தப் புத்தர் கௌதம புத்தர் இல்லை; வேறொரு புத்தர் என்று தெரிகின்றது. புத்த அவதாரக் கதையில் வரும் புத்தர் கௌதம புத்தர் செய்த எதுவும் செய்யவில்லை. தொடக்கத்தில் வேறே ஏதோ ஒரு புத்தரைப் பற்றி அவதாரக் கதைகளில் சொல்லத் தொடங்கி பின்னர் கௌதம புத்தர் தான் வைணவம் அவதாரமாகச் சொல்லும் புத்தர் என்ற கருத்து பரவிவிட்டது என்று தோன்றுகிறது. பொதுவாக அப்படித் தான் கருதுகிறார்கள். ஆனால் வைணவர்கள் கௌதம புத்தரை பெருமாளின் அவதாரமாகக் கருதுவதில்லை. அப்படிச் சொல்லி அவரை வணங்குவதும் இல்லை. இதனை கௌதம புத்தரின் மேல் உள்ள வெறுப்பாகவும் சிலர் திரித்துக் கூறுவதைக் கண்டிருக்கிறேன்.

ஆனால் கோவில்களில் உள்ள ஓவியங்களிலும் பிற்கால நூல்களிலும் கௌதம புத்தரையே ஒன்பதாவது அவதாரமாகக் காட்டியிருக்கிறார்கள். அதனால் காலப்போக்கில் கௌதம புத்தரை வைதிக மதம் உள்வாங்கிவிட்டது என்பது சரி தான்.

வைணவத்தில் சொல்லப்பட்ட அவதாரக் கதைகள் தென்கிழக்கு ஆசியாவில் பரவியதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன். பல்பிறப்புக் கதைகளை முதலில் பௌத்தம் சொல்லத் தொடங்கிப் பின்னரே வைதிக மதம் சொல்லத் தொடங்கியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன். புத்தரின் ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் போதிசத்துவர்களின் கதைகள் இப்படி எண்ண வைக்கிறது. ஆனால் உறுதியாகச் சொல்ல எந்த தரவும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
நல்ல பதிவு..

புதிய செய்தியும்கூட.. அவதாரக்கதைகள் ஆசிய நாடுகளில் பரவியிரப்பதை இப்பதிவின் மூலமே அறிந்து கொண்டேன்.
//

ஜமாலன்,
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
பதிவுக்கு நன்றி.. புதிய செய்திகள் சில அறிந்து கொண்டேன்...
//

ஜெகதீசன்,

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆழியூரான். said...
நல்ல பதிவு. உள்ளூர் தாண்டியும் பரவியிருக்கும் அவதாரங்களையும், அவற்றின் ஆதிக்க மரபுகளையும் எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி..!
//

ஆழியூராரே,

ஆதிக்க மரபுகள் வெளி நாடுகளில் வழிபாட்டளவில் பரவி இருப்பது உண்மைதான். ஆனால் அங்கு ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அறுத்துவிடுவார்கள்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
படங்கள் மிக நன்றாக இருக்கின்றன கோவி.கண்ணன். நம் நாட்டில் வழங்கும் இந்த பாற்கடல் கடையும் கதை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் தாய்லாந்திலும் வழங்குவது மிக்க வியப்பை அளிக்கிறது. பல வண்ண அசுரர்கள் சிலைகளும் ஒரே வண்ண தேவர்கள் சிலைகளும் புன்சிரிப்பையும் வரவழைத்தன. //

குமரன்,
அசுர - தேவர்களின் நிற வேறுபாடு எனக்கும் பளிச் சென்று கண்ணில் பட்டதும் வியப்பாகவே இருந்தது. புராணம் சிதையாமல் தான் இருக்கிறது :)) நமக்கு புரியும் அளவுக்கு அந்நாட்டுமக்களுக்கு அது புரியுமா என்பது ஐயமே... :)

//புத்தரை ஒன்பதாவது அவதாரமாகச் சொல்லும் வைணவக் கதைகளில் சென்று பார்த்தால் அந்தப் புத்தர் கௌதம புத்தர் இல்லை; வேறொரு புத்தர் என்று தெரிகின்றது. புத்த அவதாரக் கதையில் வரும் புத்தர் கௌதம புத்தர் செய்த எதுவும் செய்யவில்லை. தொடக்கத்தில் வேறே ஏதோ ஒரு புத்தரைப் பற்றி அவதாரக் கதைகளில் சொல்லத் தொடங்கி பின்னர் கௌதம புத்தர் தான் வைணவம் அவதாரமாகச் சொல்லும் புத்தர் என்ற கருத்து பரவிவிட்டது என்று தோன்றுகிறது. பொதுவாக அப்படித் தான் கருதுகிறார்கள். ஆனால் வைணவர்கள் கௌதம புத்தரை பெருமாளின் அவதாரமாகக் கருதுவதில்லை. அப்படிச் சொல்லி அவரை வணங்குவதும் இல்லை. இதனை கௌதம புத்தரின் மேல் உள்ள வெறுப்பாகவும் சிலர் திரித்துக் கூறுவதைக் கண்டிருக்கிறேன். //

புத்தர் என்பது ஒரு உயர்ந்த நிலையை குறிப்பது, கவுதம புத்தருக்கு முன்பு பலர் அந்நிலையை அடைந்திருந்தாலும் வரலாறு( சரித்திரம்) இருப்பதென்னவோ கவுதம புத்தருக்குத்தான். எதாவது ஒரு புத்தரை விஷ்ணு அவதாரமாக சொல்லி இருந்தாலும் பொதுவாக புத்த தத்துவங்களை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகத்தான் அந்த கருத்து இருக்கிறது.

//ஆனால் கோவில்களில் உள்ள ஓவியங்களிலும் பிற்கால நூல்களிலும் கௌதம புத்தரையே ஒன்பதாவது அவதாரமாகக் காட்டியிருக்கிறார்கள். அதனால் காலப்போக்கில் கௌதம புத்தரை வைதிக மதம் உள்வாங்கிவிட்டது என்பது சரி தான்.//

சோழர்கால கோவில்களில் குறிப்பாக கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் புத்தருக்கு சிறிய அளவில் உள்ளேயே கோவில் இருக்கிறது. காஞ்சி காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலைகள் இருப்பதாக படித்திருக்கிறேன்.

//வைணவத்தில் சொல்லப்பட்ட அவதாரக் கதைகள் தென்கிழக்கு ஆசியாவில் பரவியதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன். பல்பிறப்புக் கதைகளை முதலில் பௌத்தம் சொல்லத் தொடங்கிப் பின்னரே வைதிக மதம் சொல்லத் தொடங்கியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன். புத்தரின் ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் போதிசத்துவர்களின் கதைகள் இப்படி எண்ண வைக்கிறது. ஆனால் உறுதியாகச் சொல்ல எந்த தரவும் இல்லை.//

வைதீக ஆகமங்களோ, கோவில்களோ பவுத்த மதம் பரவிய நாடுகளில் இல்லை. கதைகள் மட்டுமே இருக்கிறது. தற்பொழுது அந்நாடுகளில் இருக்கும் இந்து கோவில்கள் 100 - 150 ஆண்டுகளுக்கு முற்பட்டு கட்டப்பட்டவை அல்ல. அவை அங்கு புலம் பெயர்ந்த பெரும்பாலும் தமிழர்களால் கட்டப்பட்டு இருக்கிறது. வேறு வகையில் அதற்கு முன்பு வைதீக தாக்கம் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. எனவே வேறு காரணங்கள் என்று எதையும் என்னால் ஊகிக்க முடியவில்லை. இந்திய இதிகாசங்கள் என்று புத்த மதத்தினர் அவதார கதைகளை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். தமிழக பவுத்தர்களால் அங்கு பவுத்தம் பரவி இருக்க வாய்ப்பு இல்லை அப்படி இருந்தால் ஐம்பெரும் காப்பியங்கள் அங்கு பரவி இருக்கும். அதற்கு முன்பே (தேராவாத) புத்தமதம் அங்கு பரவியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஜோ/Joe சொன்னது…

பாற்கடல் கடையும் காட்சியை கம்போடியாவில் அங்கோர் வாட் ஆலயத்தில் சுவர் சிற்பமாக பார்த்திருக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்