பின்பற்றுபவர்கள்

31 மே, 2014

அப்பாவின் நண்பர்கள் !

நட்பு என்பது நம்மோடு முடிந்து போகும், உறவுகள் மட்டுமே நிலைக்கும் என்பதால் தான் உறவுகள் தொடர்கதை என்று உணர்ந்தே சொல்லி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் போது எண்ணங்களை சுமந்து கொண்டு வரும் போது வெறுமையுடன் திரும்புவது எனக்கு வாடிக்கைதான். அப்பா மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அப்பாவின் செயல்களை தம்பி ஞாபகப்படுத்துவான், அப்பா எடுக்கும் காவடி அப்பா செல்லும் சபரிமலை பயணம் இதெல்லாம் நினைவு வைத்திருந்து தம்பி செய்து கொண்டுவருகிறான். எனக்கு தனிப்பட்ட முறையில் காவடி எடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், பார்த்து பழகியது, அப்பாவை நினைவு படுத்துவது என்பதால் முடிந்த வரையில் மே மாதம் காவடி நிகழ்வின் போது ஊரில் இருப்பதற்கு முடிந்த வரையில் முயற்சி செய்து சென்றுவிடுவேன்.
(இது என் தம்பி)
அம்மாவின் முயற்சியில் இல்லாம் விவாசயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிற்கு அவ்வப்போது கொத்தனார் வேலை தான், நாகப்பட்டினத்தில் கொத்தனார் சங்கத்தை முன்னின்று உருவாக்கியது, மாநில அளவில் சங்க தலைவர்களை பொன் குமார் உள்ளிட்டவர்களை அழைத்துவந்து கொத்தனார் தொழிலில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் என்பதால் நாகைப் பகுதி கொத்தனார்களுக்கு நன்கு அறிமுகமாகியவர், கொத்தனார் சங்கத்தின் சார்பில் நாகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது எடுக்கப்படும் 'கைலாச வாகன' ஊர்வல நிகழ்வில் அப்பாவிற்கு மாலை அணிவித்து பரிவட்டமெல்லாம் கட்டுவார்கள், மாரியம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் இரவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும்,  இந்த முறை சென்றிருந்த போது கூடப் பார்த்தேன், அங்கு வந்த கொத்தனார்களில் அதில் ஒருவரையும் எனக்கு தெரியவில்லை, அந்த நாளில் அதேநேரத்தில் மறுநாள் காவடிக்காக, நிகழ்வு நல்லபடியாக நடக்க காத்தவராயன் பூசை செய்ய நாங்கள் அங்கு இருப்போம், அங்கு வந்தவர்களில் சிலரை தெரியும் என்றான் தம்பி.

அப்பாவும் நாகை கொத்தனார் சங்கத்தில் தலைவராக இருந்தார் பின்னர் தலைவராக இன்னொருவருக்கு வழிவிட்டார், பெரும்பாலும் சங்கக் கூட்டம் எங்கள் வீட்டுவாசலில் திங்களுக்கு (மாதம்) ஒருமுறை நடக்கும், 25 லிருந்து 50 பேர் வரை வருவார்கள், அவர்களில் 20 பேராவது எனக்கு தெரிந்திருந்திருக்கும், அண்ணன் மாமா என்றெல்லாம் உறவு முறைகளில் அவர்கள் அழைத்துக் கொள்வார்கள். அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பா வைத்திருந்த கரனை, ரசமட்டம், மட்டப் பலகை உள்ளிட்டவற்றை ஞாபகார்த்தமாக சிலர் வாங்கிச் சென்றார்கள், அப்பாவின் மறைவிற்கு பிறகு கொத்தனார்களும், கொத்தனார் தொழிலும் சற்று தள்ளிப் போனாலும் அண்ணன் சிவில் பொறியாளர் என்பதால் அவர்களில் சிலரிடம் இன்னும் தொடர்பு இருக்கிறது, எனக்குத்தான் ஒருவரையும் தெரியவில்லை.

அப்பாவின் அடுத்த நடவடிக்கை ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்வது, 12 வயதில் என்னையும் ஒருமுறை அழைத்துச் சென்றிருக்கிறார், அப்பாவின் சபரிமலைக்கு மாலை போடும் நண்பர்கள் என்கிற பெரிய நண்பர் வட்டமே இருந்தது. வாரத்தில் ஒருநாள் / இரண்டு நாள் ஐயப்பன் பூசை என்று அவ்வப்போது அழைப்பு வரும், அப்பா மலைக்கு செல்லத்துவங்கியது முதல் அப்பாவின் பெயர் 'சாமி' என்றே நிலைத்தது, அவருடன் பழகும் யாருக்குமே அவருடைய பெயரே தெரியாது, சபரிமலை சீசன் இல்லாத காலங்களிலும் அழைத்துப் பழகியவர் என்பதால் 'சாமி' என்றே அழைப்பார்கள், இவரும் 5 வயது குழந்தைகள் முதல் எந்தவயது பெரியவர் என்றாலும் 'சாமி' என்றே கூப்பிடுவார். வீட்டில் நாங்களும் அப்பா என்று கூப்பிட்டத்தைவிட 'சாமி' என்றே கூப்பிட்டுவந்தோம், 

அப்பாவுக்கு இருமுடிகட்டும் குருசாமி அப்படியே அவர்கள் அனைவரையும் மன்னார் குடி அருகே இருக்கும் லட்சுமாங்குடிக்கு அழைத்துச் என்று அங்குள்ளவர்களுக்கு முடிகட்டி பின்னர் சபரிமலைக்கு செல்வார்கள், ஆண்டுக்கு ஒருமுறை வெறும் 5 நாட்கள் சந்தித்தவர் என்ற முறையில் அந்த ஊரில் உள்ள ஒரு அயப்ப சாமிகள் அப்பாவுக்கு நண்பர்களாகவும் ஆனார்கள், அதில் ஒருவர் அப்பாவின் காலம் வரையில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் வீட்டுக்கு வந்து செல்வார், சபரிமலை பெருவழியில் நான் நடக்க முடியாமல் திணறிய போது என்னை தூக்கிக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர்/. அவரின் பெயர் எங்களைப் பொருத்த அளவில் 'லட்சுமாங்குடி சாமி' சபரிமலை சீசன் முடிந்து ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்த போது அவருக்கு அளித்த விருந்தில் தான் அவர் அசைவம் சாப்பிடுகிறார் என்று வியப்படைந்தேன், 'லட்சுமாங்குடி சாமி' சாமி என்று நினைத்துவந்ததால் என்னவோ அவர் அசைவம் சாப்பிடமாட்டார் என்று நினைத்திருந்தேனோ என்னவோ ? அப்பாவின் மறைவிற்குப் பிறகு லட்சுமாங்குடி சாமி என்ன இருக்கிறாரா ? இல்லையா என்றே தெரியவில்லை.

அப்பா காலை 6 மணிக்கு எழுந்ததும் டீ கடை, அங்கு தான் காலை ஒரு மணி நேரம் செல்லும், பெரும்பாலும் கடையாக இடம் பெயராவிட்டால் டீ கடையை மாற்றமாட்டார், ஒரு மணி நேரத்தில் இரண்டு டீ, மைனர் சேட் பீடி, செய்தித் தாள் அங்குள்ளவர்களுடன் அரட்டை மற்றும் அரசியல், அப்பாவை தேடிவருவர்களிடம் டீ கடையில் இருபபர் என்று எளிதாக வழிகாட்டிவிட முடியும், அப்பா அங்கு இல்லை என்றால், 'சாமி எப்போ போனார் ?' என்று கேட்டால் அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாரே என்று சொல்லிவிடுவார்கள். டீ கடை நடத்துபவர்களும் அங்குள்ள பணியார்களும் உறவினர்கள் போலவே பழகி வீட்டிற்கெல்லாம் வந்து செல்வார்கள். அதே போன்று ஆண்டு கணக்கில் அப்பா ஸ்டார் திரையரங்கு அருகே இருக்கும் முடித்திருத்தகத்திற்கு மட்டுமே செல்வார், அது எந்தக் கடை என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அங்கு யார் யாரிடம் பழகினார் என்கிற விவரமும் தெரியாது.

அப்பா வேலைக்குச் செல்லாத நேரங்களிலும் மாலை வேளைகளிலும் அப்பாவின் மற்றொரு பொழுது போக்கிடம் இரண்டு மரக்கடைகள், ஒருவர் நாயர், இன்னொருவர் திருமேணி, அங்கு செய்தி தாள்கள் இருக்கும், அதைப் படிக்க வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை எந்நேரமும் நான்கைந்து நபர்கள் இருப்பார்கள், அவர்களில் சிறுவர்களிடம் 'கட்டியால் எட்டு கட்டி... கால் அரை முக்கால் மாற்று....' என்ற விடுகதைப் போடுவது, கழுத கால் ரூபாய், குதுரை முக்காருவ...' போன்ற கணக்கு போட்டு திணறடிப்பது, பெரியவர்களிடம் அரசியல் என்று ஓடும், அங்கு செய்தித்தாள் படிக்க வரும் என்னுடன் +2 வில் சேர்ந்து படித்த எஸ்  இரவிச்சந்திரனுக்கும் அப்பாவிற்கும் நல்ல நட்பு போல, 'என் பையனும் ஆண்டனீஸ் பள்ளியில் தான் படிக்கிறான் என்றார், பேரைக் கேட்டேன், 'கண்ணன்' என்று சொன்னார்' நீ ஏண்டா அவருடைய பையன் என்று சொல்லவே இல்லை ?' என்று கேட்டப்போது அப்பா பீடி குடிப்பார், கொத்தனார் வேலை செய்பவர் என்பதால் வெளிப்படையாக இவர் தான் என் அப்பா ? என்று நான் ரவிச்சந்திரனிடம் முன்பே அறிமுக்கப்படுத்ததால் எனக்கு சற்று அவமானமாகவே இருந்தது. அவனிடம் எதோ சொல்லி சமாளித்தேன். 

அப்பாவிற்கு சோதிடத்தில் நல்ல நாட்டம், கட்டம் பார்த்து சொல்லுவார், பாம்பு பஞ்சாங்கம் பார்ப்பார், புலிப்பாணி புத்தகம், மற்றும் 50 க்கும் மேற்பட்ட புத்தகம் வீட்டில் இருக்கும், செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மாலையில் வீட்டு வாசலில் பெரும் கூட்டமே சோதிடம் கேட்க வரும், அதில் பெரும் பகுதியினர் பக்கத்தில் உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் உள்ளிட்ட ஏழைகள் தான், பொண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும், காணாமல் போன மாடு கிடைக்குமா ? போன்றவைகள் குறித்து கேட்க வந்திருப்பர், கட்டணமாக எதுவுமே வாங்குவதில்லை, அவர்கள் வாங்கிவரும் வெற்றிலைபாக்கு நாலண காசு, அது மட்டும் தான், காசை பக்கத்தில் உள்ள கோவில் உண்டியலில் போட்டுவிடுவார், வெற்றிலை பாக்கை போடுவர்களிடம் கொடுத்துவிடுவார், சோதிடம் பார்க்க வருபவர்கள் தவிர்த்து சோதிட ஆர்வம் உள்ள, சோதிடம் தெரிந்த நண்பர் கூட்டமும் அப்பாவுக்கு உண்டு, அவர்களெல்லாம் என்ன ஆனார் என்றே தற்போது தெரியவில்லை.

இது தவிர்த்து குழுமமாக செயல்பட்டு எடுக்கும் எட்டுக்குடி காவடி, முத்துமாரியம்மன் கோவில் காவடி, அரப்ஷா தர்கா சந்தனக்கூடு என்கிற இன்னொரு நண்பர்கள் வட்டத்திலும் அப்பா இன்றியமையாதவராகவே இருந்தார், நாகை வெளிப்பாளையத்தில் சாமி வீடு எது ? என்று கேட்டால் எங்க வீட்டுக்கு வழிகாட்டும் அளவுக்கு அப்பாவிற்கு அந்த பகுதியில் நல்ல அறிமுகமே இருந்தது. அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பாவின் நெருங்கிய நண்பர்களில் சிலர் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டனர். அப்பாவின் சிறுவயதில் அவர் வளர்ந்த இடமான நாகை சவுரிராஜ பெருமாள் மேல வீதியில் இருந்த நண்பர்களில் அவரைவிட சிறியவர்கள் 'ரமண்ணா'  (ராமன் அண்ணா), என்று அப்பா வயதினர் 'டேய் ராமன்' என்றும், பெரியவர்கள் 'ராமு' என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன், அப்பா வழி உறவுக்காரகளுக்கு அப்பாவின் பெயர் 'ராமன்', எங்கள் பள்ளி சான்றிதழ்களில், அழைப்பிதழ்களில் கோவிந்தராஜு', மற்றவர்கள் எல்லோருமே கூப்பிடுவது 'சாமி', அப்பாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மறைந்த பிறகு 'இராமன்' என்று அப்பாவை உரிமையுடன் குறிப்பிட்டு சொல்ல இன்று யாரும் இல்லை, அவர் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் இன்றும் வாழும் ஒரு சிலர் 'ராமண்ணா பையனா வா, எப்படி இருக்கே ?' என்று கேட்பார்கள்.

இந்ந முறை ஊருக்கு சென்ற போது தம்பியிடம் அப்பாவின் நண்பர்கள் குறித்து கேட்க, சற்று நகைச்சுவையாக 'அப்பாவின் (அப்பா வயது) பிரண்ட் எல்லோருமே டிக்கெட் வாங்கிட்டாங்க...அதில் மீதம் சமூன் பாய் மட்டும் தான் இன்னும் இருக்கார்' என்றான். சமூன் பாய் இன்னும் இருக்க காரணம், அவருக்கு அப்பாவைவிட 15 வயது குறைவு, ஆனால் அவரை வெளியில் பார்க்க முடியவில்லை.

***

இதை நான் அப்பாவின் நண்பர்கள் குறித்து மட்டுமே எழுதவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவு தான் நெருக்கம் என்றாலும் நட்புகள் என்பவை அது அவர் வாழும் வரை மட்டுமே, அதை தொடர நண்பர்களுடன் திருமண உறவை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், 'சாதி' என்கிற ஒன்று குறுகே நிற்பதால், நண்பர்களின் நட்பு நாம் இருக்கும் வரை மட்டுமே, அப்பாவின் நினைவுகளைப் போற்றுகிறோம், ஆனால் அவருடைய நண்பர்களை சந்திக்க முயற்சித்தில்லை. நண்பரின் மறைவின் பிறகு நண்பரின் வீட்டை கடந்து  செல்லும் / நினைக்கும் நண்பர்கள் மனம் குறித்து நாம் நினைப்பது இல்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு தேடிச் சென்று பேசினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவில்லாதது என்பதை நாம் என்றுமே உணர்ந்தது இல்லை.

நட்புகள் நம்மோடு சேர்ந்தே மறித்துவிடுகின்றன. 

இதை வாசிக்கும்  நீங்கள் தந்தையை இழந்தவரென்றால் உங்கள் அப்பாவின் மற்றும் அவர் நண்பர்கள் பற்றிய நினைவை இவ்விடுகை கிளறிவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் அப்பாவின் நினைவுகளையும் அவர் தம் நண்பர்களையும் போற்றுங்கள். 

இது நான் தான்

23 ஏப்ரல், 2014

யாருக்கு வாக்களிக்கலாம் ?

இந்தியாவில் கால் நூற்றாண்டுகளாகவே எதாவது சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்பட்டுவிடும் என்று சொல்லத் துவங்கிவிட்டனர், இன்றும் கூட சஞ்சய்காந்தியைக் குறிப்பிட்டு சஞ்சய்காந்தி பிரதமராக இருந்திருந்தால் நாடு முன்னேரும், முதல்வன் படத்தில் ஷங்கர் நாட்டை திருத்த ஒரு முதல்வர் உருவாக்கியதைப் போல் சஞ்சய்காந்தி இந்தியாவை உருவாகி இருப்பார், பாகிஸ்தானை பயப்பட வைத்திருந்திருபபர் என்ற எண்ணங்கள் பரவலாக ஏற்பட்டு இருந்தது, காங்கிரசுக்கு மாற்று அரசு காங்கிரசில் இருந்து ஒருவரால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றே எண்ணி வந்தனர், நடப்பு காங்கிரசு ஆட்சியில் ஊழல் பூதங்கள் வெளிப்பட்ட பிறகு சர்வாதிகாரி குறித்த இந்திய வாக்களர்களின் தேர்வில் 'நான் தான் அது' என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் குஜராத் கலவரங்கள் மூலம் மக்கள் மனதில் பதியவைத்தவர் தான் நரேந்திரமோடி, அந்த பிம்பத்துடன் குஜராத் வளர்ச்சி என்னும் இட்டுகதைகளைக் கட்டி அவரை இந்தியாவைக் காக்க வந்த ஆபத் பாந்தவலு என்று முன்னிறுத்துகின்றனர். ஆளுமை, செயல் திறன் மிக்கவர் மோடி என்றும் அது தான் மோடி அலை என்னும் மாய வலையாக சரியாக பின்னப்பட்டு அவை விரிக்கப்பட்டு பலரால் 'ஆம்' என்று எண்ண வைத்ததே அவர்கள் பரப்புரைகள் மூலம் செய்த சாதனை. 

மின்பற்றாக்குறை என்பதைத் தவிர்த்து வேறு எந்த அரசு சார்ந்த புள்ளி விவரங்களிலும் மோடி ஆளும் குஜராத் தமிழ்நாட்டைவிட முன்னே நிற்கவில்லை அதற்கும் காரணம் குஜராத்தைவிட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகுதி என்பதை பல்வேறு கணிப்புகள் காட்டுகின்றன, இதை ஒப்புக் கொள்ளவும் மறுக்கவும் வழியில்லாமல் மோடி ஆதரவாளர்கள், தமிழ்நாட்டி சாராயம் விற்ற பணத்தில் குஜராத்தைவிட வளர்ந்துள்ளதாக காட்டுகிறார்கள், மற்றபடி மோடி சாரயம் விற்காமலே டீ விற்று குஜராத்தை வளப்படுத்தியுள்ளார் என்று கூறுகின்றனர். குஜராத்தில் கள்ளச் சாராய சாவுகள் குறித்து பேச நம்மிடம் போதிய தகவல்கள் இல்லை, குஜராத்தில் நட்சத்திர ஓட்டல்களிலும் சரக்கு விற்பதில்லையா ? அல்லது அங்குள்ளவர்கள் குடியையே மறந்துவிட்டார்களா ? என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் கள்ளச் சாராய சாவுகள் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்பதைத் தவிர்த்து நான் சாராயக்கடைகள் திறந்து வைத்துள்ளதற்கு எந்தவித ஞாயத்தையும் கற்பிக்கமாட்டேன். அரசு சாரயம் விற்கவில்லை என்றால் குடிப்பவர்கள் எண்ணிக்கையும், அளவும் குறையலாமே அன்றி குடி முற்றிலும் ஒழிந்துவிடும் என்று நம்புவதற்கில்லை. தமிழ்நாட்டில் அரசு மது விற்காத முன்பும் பிற மாநிலங்களை ஒப்பிட்ட அனைத்து வகைகளிலுமே முன்னேற்றம் கண்டிருத்தது, அதற்கு காரணம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும், அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு எடுத்த நடவடிக்கைதான். எனவே சாராயத்திற்கு முன், பின் எப்போதும் பிற வடமாநிலங்களை, தென்மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறி தான் இருந்தது.

தமிழ்நாட்டில் காங்கிரசை ஒழிப்பது பற்றி பேச்சுக்கே இடமில்லை, காரணம் காமராஜருக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவி, தமிழக வாக்களர்கள் தற்பொழுது கையை உதறியே விட்டார்கள், காங்கிரஸ் தொண்டர்கள் தவிர்த்து பொதுமக்களிடம் காங்கிரசுக்கு எந்த செல்வாக்கும் இல்லை, எனவே காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்வது கூட அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று சொல்லும் விளம்பரமாக அமைந்துவிடும் என்பதால் அதனை தவிர்க்கிறேன்.

பாஜகவிற்கு வாக்களிக்கலாமா ? தமிழ்நாட்டிற்குள் தேசிய கட்சிகளை வளர்த்துவிடுவது தமிழக நலனை தமிழர்களே கைவிடும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும், நாம் ஏற்கனவே பார்த்தபடி தமிழக காங்கிரசாரின் தமிழகம் சார்ந்த எந்த ஒரு திட்டத்திற்கும் அன்னை சோனியாவின் கை அசைவிற்காக காத்துக் கொண்டு இருப்பார்கள், அல்லது 'அன்னை சோனியாவின் வழிகாட்டுதலுடன் என்றே பேசத் துவங்குவார்கள்' பாஜகாவும் தேசியவாதக் கட்சி தான், அவர்களால் தமிழ்நாட்டிற்கு என்று சிறப்பு கவனிப்பாக எதையும் செய்துவிட முடியாது, மையத்தில் ஆட்சியில் அமரும் எந்த தேசிய கட்சிக்கும் தமிழ்நாடு என்பது 22 மாநிலங்களில் ஒன்று எனவே நாம் அவர்களிடம் இருந்து தனித்து எதையும் பெற்றுவிட முடியாது. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை வளர்த்துவிடுவதன் மூலம் நமது தனிப்பட்ட பலத்தை, போராட்ட குணத்தை, தனித்தன்மையை இழந்துவிடுவோம்.

திமுக ஊழல் செய்யவில்லையா ? அதிமுக ஊழல் செய்யவில்லையா ? ஒருவேளை 2ஜி ஏலத்தின் போது பாஜக ஆட்சியில் இருந்தால் ஊழல் நடைபெற்றிருக்காது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் பங்காரு லெட்சுமனன் டெகல்ஹா வீடியோவும், அதன் பிறகு நடந்த்தையும் நாம் அறிவோம், பக்கத்து மாநிலத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற கிரானைட் ஊழல்கள் புகழ்பெற்றவை, எனவே பாஜக மிகப் பெரிய ஊழல்கள் செய்யாத கட்சி என்பதற்கு அவர்கள் ஆட்சியில் 2ஜி ஏலத்திற்கு வரவில்லை என்பது தவிர்து வேறு காரணம் இல்லை.  திமுக அல்லது அதிமுக நாம் நினைத்தால் அவர்களில் ஒருவரை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும், பாஜகவை வளர்த்துவிட்டால் அந்த வாய்ப்பை பாஜக எடுத்துக் கொள்ளும், தமிழகத்தில் யாருடைய ஆட்சி என்பதை தமிழகத்தில் கூட்டணி சேரும் காங்கிரஸ் முடிவு செய்யும் நிலையில் இருந்தது, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு ஆதரவளித்து அதில் ஒருமுறை மண்ணையும் கவ்வினார்கள். அப்பொழுது தமிழக காங்கிரசார் எவ்வளவோ மன்றாடியும் காங்கிரஸ் தலைமை செவி சாய்க்கவில்லை, பாஜகவை வளர்த்துவிட்டால் தமிழக முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கும் சக்தியாக மாறுவார்கள், அது திராவிட சிந்தனைகளுக்கும் நாளடைவில் நெருக்கடியாகவே அமையும்.

நடப்பது நாடாளுமன்ற தேர்தல், அறுதி பெரும்பான்மையால் மோடி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவு, கூட்டணி ஆட்சி தான் ஏற்படும்,  தமிழக எம்பிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சியால் மட்டுமே தமிழகத்துக்கு நன்மை, அந்த வாய்ப்பை தேசியவாதக் கட்சிகளுக்கு வக்களித்து ஆதரிப்பதால் தமிழகம் இழந்துவிடும். காமராசருக்கு பிறகு இந்தி திணிப்பு உள்ளிட்ட தேசியவாதத்தினாலும் தேசிய கட்சிகளினாலும் தமிழகம் எப்போதும் நன்மை அடைந்ததே இல்லை. 

ஆகவே சிந்திப்பீர் வாக்களிப்பீர் !!!
தமிழகம் சார்ந்த அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விசி மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் நேர்மையான / செயல்படக் கூடிய வேட்பாளருக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

13 ஏப்ரல், 2014

உலக வலம் (1) !

எழுத நேரமின்மையால் மற்றொரு நொடுந்தொலைவு பயணம் பற்றி எழுத வேண்டும்... எழுத வேண்டும் என்று நினைத்து ஆறுதிங்கள்கள் கடந்துவிட்டன, எழுதுவது மற்றவர்களுக்கும் திரட்டிக் கொடுக்கும் தகவல் மட்டுமின்றி தத்தம் நினைவிற்கான சேமிப்பு என்ற அளவில் பயணக் கட்டுரைகள் எழுதுவதை பெரும்பாலும் தவிர்த்தது இல்லை. ஊர் சுற்ற பொருள் (பணம்) முதன்மையானது போலவே அதற்கான நேரம் வாய்பதும் இன்றியமையாததே. பணம் இருப்பவர்கள் அனைவரும் ஊர் சுற்றுவது இல்லை, பெரும்பாலும் பொருள் ஈட்டுவதிலேயே தங்களது நேரத்தை செலவிட்டுவிடுவார்கள், ஓய்வு காலத்தில் உடலும் ஓய்ந்துவிடும், சுற்றுச் சூழல் பருவ நிலைகளும் அச்சப்பட வைக்கும், காலும் கையும் நன்றாக இருக்கும் பொழுதே சுற்றும் வரை சுற்றிவிட வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு.

இந்த அறிவியல் உலகத்தில் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு வானூர்திப் பயணம், எத்தனை முறை வானூர்தியில் பயணம் செய்தாலும் எனக்கு அலுத்ததே இல்லை, இடையே இடையே டர்புலன்ஸ் எனப்படும் காற்றுகுறைந்த வெற்றிடத்தைக் வானூர்திக் கடக்கும் போது குலுங்குவதில் அடிவயிறு கலக்கும், அந்த வேளையில் எனக்கு நீச்சல் தெரியும் என்கிற ஆறுதல் உயிர் அச்சத்தைக் கொஞ்சம் குறைக்கும், மற்ற ஊர்த்திப் பயணங்களைவிட வானூர்திப் பயணம் மிகவும் பாதுகாப்பானதே. வானூர்திப் பயணங்களில் உணவு முடிந்த பிறகு பெரும்பாலும் தூங்கிவிடுவேன்.

ஏற்கனவே ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு அமெரிக்க வேலைவாய்ப்பிற்காக முயற்சித்தார், அப்பொழுது அமெரிக்காவில் கடுமையான வேலையின்மை காரணங்களினால் எனக்கான வேலை வாய்ப்பு கிட்டவில்லை, அத்துடன் அமெரிக்கா செல்லும் எண்ணங்களை முற்றிலும் மறந்தே போனேன், சுற்றுலாவாக செல்லாம் என்றாலும் இந்திய கடவு சீட்டுக்கு அவ்வளது எளிதாக நுழைவு அனுமதி கிட்டுவதில்லை என்பதால் அமெரிக்காவிற்கு செல்வதற்கு பதில் அமெரிக்கர் காலடி வைத்த நிலவிற்கே சென்றுவிடலாம் என்ற அலுப்பு தான் தோன்றியது,

என்னுடைய தற்போதைய சூழலில் எனக்கு அமெரிக்கா நுழைவு அனுமதி பிரச்சனை இல்லை என்றாலும் பெரிதாக ஆர்வமும் இல்லாமல் இருந்தது, இந்த சூழலில் பணி தொடர்பில் வீட்டு அம்மணி கனடாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவே, சரி எல்லொருமே சென்றுவரலாம் என்று திட்டமிட்டு 2013 நவம்பர் திங்களில் செல்ல முடிவெடுத்து அதற்கு ஏற்பாடாக பயணச் சீட்டு, குளிர் உடைகள் எல்லாவற்றையும் மூன்று திங்களுக்கு முன்பாகவே ஏற்பாடு செய்து கொண்டே வந்தோம்.

2013 ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து திட்டமிட்டு நிறைய தடங்கல், பள்ளி விடுமுறை, போதிய விடுப்பு இன்மை என்றெல்லாம் தள்ளிப் போய் நிறைவாக நவம்பர் நடுவில் செல்லலாம்  என்று முடிவு செய்திருந்தேன், எனக்கு இந்தியாவில் உறவினர்களை சந்தித்துவரவேண்டி இருந்தது, எனவே மனைவி, மகள் மற்றும் மகனை சிங்கப்பூரில் இருந்து கனடா கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டு நான் இந்தியாவில் இருந்து கனடா செல்ல முடிவு செய்திருந்தேன், சிங்கப்பூரில் இருந்து சென்னை, பின்னர் பயண சீட்டு செலவுகளை ஒப்பிட பெங்களூரில் இருந்து புறப்படும் ஏர் பிரான்ஸ் வானூர்தி தான், புறப்படும் நேரம், போய் சேரும் நேரம் உள்ளிட்டு எனக்கு எல்லா வகையிலும் சரியாக இருந்தது, 

சிங்கப்பூர் சாங்கி வானூர்தி (மூன்றாம்) நிலையம் 

பயணம் நல்ல துய்ப்பு, அமெரிக்கா கனடாவை பார்த்ததைவிட உலகத்தை வானூர்த்தி வழியாக வலம் வந்து, புறப்பட்ட இடத்தில் இருந்து கடிகார திசையில் மட்டுமே, ஒருவழி பயணமாக புறப்பட்ட இடத்திலேயே நிறைவுற்றது... எந்த வழியாக சென்றேன் ? மற்றும் யாரையெல்லாம் சந்தித்தேன், என்ன பார்த்தேன் ஆகியவற்றின் நிழல்படங்கள் இவற்றை பின்வரும் இடுகைகளில் தெரிவிக்கிறேன்.

31 மார்ச், 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.

காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.




தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

16 மார்ச், 2014

மோடி அலையா ? அலையின் நுரையா ?

தற்பொழுது இந்தியாவின் பொதுப் பிரச்சனை என்றால் ஊழல் தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை, ஊழலே இமாலயமாக எழுந்து நிற்பதால் மற்ற பிரச்சனைகள் பெரிதாகப் பேசப்படுவதும் இல்லை. ஊழல் பிரச்சனைகள் அடிக்கடி மறக்கடிக்கும்படி ஆட்சியாளர்களுக்கு பாலியல் வண்புணர்வு நிகழ்வுகள், குண்டுவெடிப்புகள் அல்லது வழிபாட்டு தலங்களில் பெரும் விபத்து, இயற்கை சீற்றத்தில் பலர் கொல்லப்படுதல் போன்ற தகவல்கள் வரும் பொழுது ஊழல் பிரச்சனைகள் தற்காலிகமாக மறக்கப்படும், 

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் உள்ளடக்கிய இந்தியவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர், பொதுவான கட்சி என்று தம்மை முன்னிலைபடுத்தி வளர்ந்து செயல்படும் அளவுக்கு ஒரு தேசிய கட்சி வருங்காலத்தில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தம் மாநில வளர்ச்சி அதில் உள்ள பிரச்சனைகள் தாண்டி, தேச வளர்ச்சி என்ற அளவுகோலில் வாக்களிப்பதற்கான வாய்புகள் குறைவு, மாநில கட்சிகள் பலம் பொருந்த்திய எந்த ஒரு மாநிலத்திலும் (தற்பொழுது இருக்கும்) தேசிய கட்சிகள் பெரிதாக வென்றுவிட முடியாது. இது பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்று உணர்ந்து வாக்களிப்பவர்கள் குறைவே.

உதாரணத்திற்கு ஆளும் தேசியகட்சி, (எதோ ஒரு மாநிலத்தில்) ஆளும் மாநில கட்சி ஆகிய இரண்டுமே ஊழல் கட்சி என்று பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிந்தால் வாக்குகள் அனைத்துமே மாநிலத்தில் அடுத்து பலம் பொருந்திய மற்ற கட்சிக்கு தான் வாக்குகள் சேரும், மற்றபடி அந்த கட்சி பிரதம வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் மக்கள் வாக்களிப்பார்கள், அதைத்தான் எதிர்ப்பு வாக்குகள் என்கிறார்கள்.

மோடி அலை தமிழகத்தில் பலமாக வீசுவதாக தமிழக முதல்வர் நம்பி இருந்தால் பாஜகவுட கூட்டு சேர்ந்து  பாஜகவிற்கு 2 - 5  இடம் ஒதுக்கிவிட்டு 38 - 35 இடங்களிலும் அதிமுகவே நின்றிருக்கும்,  ஏனெனில் பாஜகவினர் தங்களுக்கு அதுவே மிகுதி என்றும் தேர்தலுக்கு பின்னர் ஆதரவும் தொடரலாம் என்று நம்பி சேருவார்கள். தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பே மிகுதியாக உள்ளது, அவை மோடிக்கு ஆதரவாகும் என்று நம்புவதற்கும் இல்லை, ஒருவேளை ஜெ மோசமாக ஆட்சி நடத்தி வந்திருந்தால் ஜெ விற்கு எதிரான மனநிலையில் பலம் பொருந்திய மாற்று கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். 

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேசிய கட்சிகள் காங் மற்றும் பாஜகவே பலம் பொருந்திய கட்சியாக உள்ளன, அங்கெல்லாம் காங்கிரசின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக அமையலாம்,  தமிழ்நாட்டில் அவ்வாறு நடப்பதற்கு வாய்புகள் குறைவு, அதனால் தான் பாஜக முடிந்தவரை கூட்டணி பலத்தைக் கூட்டி 5 - 10 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பைக் கூட்டிக் கொள்ளலாம் என்று கூட்டணி அமைக்க தமிழக உதிரிகட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள விஜய்காந்து தவிர்த்து மற்றவர்களுக்கு பெரிய ஆதயம் இருப்பது போல் தெரியவில்லை, என்ன தான் கூட்டணி உடன்படிக்கை என்றாலும் பாமக ஆதரவாளர்கள் யாரும் தேமுதிகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தேமுதிகவினரும் பாமகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தமிழகத்தில் வடமாநிலத்தில் மட்டுமே இந்த இரண்டு கட்சிகளுக்கும் கனிசமான வாக்களர்கள் உள்ளனர். தென் தமிழகத்தில் இவர்களுக்கு வாக்கு வங்கிகளே கிடையாது. 

இன்னும் திராவிடம் பேசும் வைகோவிற்கு தமிழக பாஜக தொண்டர்கள் வாக்களிப்பார்கள் என்பதும் ஐயமே. வாக்கு பதிவு முடிந்த பிறகு, மொத்த வாக்குகளில்  பாஜக கூட்டணி 15 விழுக்காடு பெற்றிருந்தால்  கூட, என்னுடன் சேர்ந்ததால் பாஜக கூட்டணிக்கு இவ்வளவு வாக்குகளாவது கிடைத்துள்ளது என்று அதனை தம் வாக்கு வங்கியாக விஜயகாந்து அறிவித்துக் கொள்வார். (ஒருவேளை) தோல்விக்கு காரணம் கூட்டணி சேர்ந்த கட்சிகள் எங்களுக்கு ஓட்டுப் போடாமல் ஏமாற்றிவிட்டனர் என்று சொல்லிவிடுவார், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு கிடைத்த வாக்குகளின் விழுக்காட்டு அளவை சாதமாக்கிக் கொண்டு செயல்படுவார். பஜாக கூட்டணிக்கு தேமுதிக சேர்ந்துள்ளதால் பாஜகவிற்கோ, தேமுதிகவிற்கோ எந்த இழப்பும் இல்லை, பாஜவிற்கு பலனும் இருப்பது போல் தெரியவில்லை.

இந்த தேர்தல் தமிழகத்தைப் பொருத்த அளவில் மும்முனை போட்டி மட்டுமே, ஒன்று அதிமுக, அடுத்து திமுக மூன்றாவது பாஜக கூட்டணி. மீண்டும் திமுகவின் மீது நம்பிக்கை வைக்கும் படி தமிழகத்தில் திமுக எந்த அதியத்தையும் செய்து காட்டாததால் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்புகள் மிகுதி. எப்போதும் பாஜக ஆதரவு மனப்பாண்மை உள்ள 'மேட்டுக்குடிகள்' பாஜக நேரடியாக நிற்கும் தொகுதிகளில் பாஜகவிற்கும் மற்ற தொகுதிகளில் அதிமுகவிற்கும் வாக்கு அளிப்பார்கள். அவர்களின் வாக்கு எண்ணிக்கை குறைவு என்றாலும் வெற்றி தோல்வி சில இடங்களில் சில ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் மாறிவிடுகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும், மோடி அலை என்று காட்டுவதால் அதிமுக வாக்குக்கள் குறையும் என்று நான் நம்பவில்லை.


ஊழல் தேசிய பிரச்சனை என்று உருவாகி தமிழக்த்திலும் நுழைந்துள்ள ஆம் ஆத்மிக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பமுடியவில்லை. தமிழகம் ஒருவேளை ஊழல் மலிந்த மாநிலமாக உருவானால் ஆம் ஆத்மி வளரலாம். அந்த ஊழல் மலிந்த நிலையை தமிழகம் தொட தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள். மோடி அலை என்று தமிழகத்திலும் கிளப்பிவிடப்படும் மாயை தமிழகத்தில் தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .

பிகு : எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் (எழுதியதை திரும்பவும் படித்துப் பார்க்கவில்லை)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்