பின்பற்றுபவர்கள்

11 ஏப்ரல், 2012

* மொய்க்கும் கண்களைப் பார்த்த அச்சம் !


முத்துப் படத்தில் மேடை நாடக நடிகையாக நடிக்கும் மீனா கீழே அமர்ந்து கிண்டல் அடிக்கும் ரஜினியிடம் சொல்லுவார் "யோவ் அங்கே ஒட்கார்ந்து கொண்டு என்ன வேணுமானாலும் பேசலாம், இங்கே (மேடையில்) வந்து பேசமுடியுமா உன்னால் ? ரஜினியுடன் அமர்ந்திருப்பவர்கள் உசிப்பிவிட அவரும் மேடை மீது ஏறி நாற்காலியில் உட்கார்ந்து எதை எதையோ பேசி, இந்த நாற்காலி நமக்கு சரிப்படாது என்பார். ரஜினிக்கு அரசியல் பஞ்ச் ஆக வைக்கப்பட்ட காட்சியாக இருந்தாலும் மேடை ஏறிப் பேசுவது என்பது எல்லோராலும் முடியாது என்பதை அந்தக் காட்சி சொல்லும். சிலருக்கு மேடைக் கிடைத்தால் கேட்பவர்கள் கதறி எழுந்து ஓடும் வரை பேசிக் கொண்டே இருப்பார்கள். சிலர் கூட்டத்தினரை கட்டிப் போட்டது போல் மிகச் சுவையாக பேசிக் கொண்டே இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு பேசச் சொல்லித் தரவேண்டியதே இல்லை.

தனிமனிதனின் தனித்திறமைகள் என்பதில் ஓவியம், எழுத்து, நடனம், நடிப்பு என்பதையெல்லாம் வீட மேடைப் பேச்சு கடினமானது என்றே நினைக்கிறேன். ஓவியம் வரைபவர்களுக்கு வரையும் திறமையுடன் பொறுமை இருந்தாலே போதும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் வரையும் போது சிந்திக்கத் தேவை இல்லை, எழுத்தாளர்களுக்கு எழுதும் போதே அல்லது எழுதிய பிறகு வெளியிடும் முன்பே என்ன எழுதி இருக்கிறோம் என்று தெரிவதால் அதைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும், அவர்களும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை எழுதும் போது சிந்திக்கத் தேவை இல்லை. நடனம், (மேடை) நடிப்பு இவையெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டபடி முன்கூட்டிய பயிற்சியுடன் செய்வதால் சொதப்பி விடுவோமோ என்கிற அச்சம் இருந்தாலும் தொடர்ச்சி என்ன என்பது முன்கூட்டியே தெரியும் என்பதால் பார்வையாளர்களுக்கு பயப்படத் தேவை இல்லை, ஆனால் மேடைப் பேச்சு என்பது அவ்வளவு எளிதான ஒன்றாகத் தெரியவில்லை. மேடையில் பேசுபவர் பார்வையாளர்களின் கண்களாலும் காதுகளாலும் கவனிக்கப்படுபவர், 100க் கணக்கான பார்வையாளர்களின் நேரங்களை எடுத்துக் கொள்கிறோம் என்கிற பொறுப்புணர்வுடன் தான் மேடைப் பேச்சாளர்கள் அந்த தகுதியுடன் அங்கே செல்கிறார்கள்.

அரசியல்வாதிகள் பேச்சுத் தவிர்த்து நான் கேட்ட வகையில் சாலமன் பாப்பையா, சுகிசிவம் ஆகியவர்கள் மிகச் சிறப்பாக நகைச்சுவையாக பேசுவார்கள், மலேசியாவில் தென்றல் என்னும் வார இதழில் ஆசிரியர் வித்யாசாகர் நகைச்சுவையாகப் பேசுவார், பேசு பொருள் ஒன்று இருக்கும் அதனூடாக நகைச்சுவைக்காக வேறு தகவல்களச் சொல்லிவருவார்கள், பின்னர் எங்கு விட்டுச் சென்றார்களோ அங்கு துவங்குவார்கள், சட்டென்று பெயர்கள் சரியாக நினைவுக்கு வரவில்லை, இன்னும் நிறைய பேர் இது போல் நகைச்சுவையாகப் பேசுவர்கள் எங்கும் உண்டு, இலங்கை கம்பவாருதி ஜெயராஜ் மிக நகைச்சுவையாக அன்றைய அரசியல் கலப்போடு கலகலப்பாகப் பேசி கலக்குவார். மறைந்த தென்கச்சி சாமிநாதன் கொஞ்சமும் சிரிக்காமல் பார்வையாளர்களைத் தொடர்ந்து சிரிக்க வைப்பார். தன்முனைப்புப் பயிற்சி அல்லது தொழில் சார்ந்த மேடைப் பேச்சு என்பதைத் தாண்டி வெறும் இலக்கியத்திற்காக மேடைப் பேச்சுகளை ரசிக்கும் கூட்டம் தமிழர்கள் கூட்டம் இதில் மதவேறுபாடுகள் , ஆத்திகம் நாத்திகம் எதுவுமே கிடையாது. மிகப் பெரிய அரங்குகளில் மேடைப் பேச்சாளர்களை அழைத்து வந்து தமிழ்சார்ந்த பட்டிமன்றம் மற்றும் இலக்கியம் சார்ந்த மேடைப் பேச்சு நிகழ்ச்சி நடத்துவதும், அதை பெரும்திரளாக தமிழர்கள் கண்டுவருவதும் வெறெந்த இனத்தில் காணக் கிடைக்காத ஒரு காட்சி. மொழி சார்ந்த பழக்கவழக்கம். ஏசு அழைக்கிறார் வாருங்கள் போன்ற மாபெரும் கூட்டங்கள் பிற மொழி இனத்தினிடையேயும் நடப்பது உண்டு, இருந்தாலும் மதம் சாராத இலக்கிய நிகழ்ச்சியாக பிற இனத்தினரிடம் / மொழியினரிடம் நடப்பதை நான் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை, ஆங்கிலத்தில் அல்லது குறிப்பிட்ட மொழியில் தன்முனைப்பு பேச்சு மற்றும் பயிற்சி பட்டறைகள் நடக்கும், தமிழகத்திலும் தமிழரிடத்திலும் மேடைப் பேச்சுகள் என்பது தனிப்பட்ட அடையாளமாகவே திகழ்கிறது.

*****

மேடையில் பேசவேண்டியவை இவை மற்றும் கேட்கவந்தவர்களின் விருப்பம் எதைச் சார்ந்தது என்ற தெளிவோடு பேசவேண்டும், தவிர மேடையில் பேசும் போது பேசியதை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு என்பது சொல் தடுமாற்றம் மட்டுமே, ஆனால் தகவல் தடுமாற்றமாக பேசிவிட முடியாது. பேசப் போவது குறிப்பிட்ட தகவல் சார்ந்தது என்றாலும் முதல் முறை மேடை ஏறிப் பேசுவது அதுவும் போதிய பயிற்சி இன்றிப் பேசுவது என்பதைவிட எதிரே இருக்கும் பார்வையாளர்களைப் பார்த்ததுமே நடுக்கம் வந்துவிடும். கடந்தவாரத்தின் சனிக்கிழமையில் சிங்கைப்பதிவர்கள் சார்பில் ஏற்கனவே சிங்கை நூலக பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 'மாணவர்களுக்கு வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லி அறிமுகம் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு தமிழ் நிகழ்சியின் ஊடக நடத்த ஒப்புக் கொண்டு இருந்தோம், தேதியைச் சொல்லி நூலக பொறுப்பாளர் நிர்மலா நண்பர் குழலியை அழைத்துக் கேட்டனர், அவர் குறிப்பிட்ட நாளில் தமிழகம் சென்றதால் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டார். நமக்கு தெரிந்தத் தகவலைத் தானே கூறப் போகிறோம் என்பதால் நானும் ஒப்புக் கொண்டு பவர்பாயிண்ட் சிலைடுகளை தாயார் செய்து கொண்டு நிகழ்ச்சிக்குச் சென்றேன்.  அலுவலக கூட்டம் போல் நீள மேசையின் இருபுறமும் மாணவர்கள் அமர அவர்களுக்கு ஸ்லைடு போட்டு விளக்கலாம் என்று தான் நான் நினைத்துச் சென்றேன், அங்கு சென்றதும் 400 பேர் அமரும் பெரிய அரங்கத்தைக் காட்டி அதில் தான் நிகழ்ச்சி நடக்கும் என்றதும், எனக்கு 'திக்' என்றாகியது.



என் நிகழ்ச்சிக்கு முறைவந்ததும், கணிணியைப் பொருத்தி ஸ்லைடுகளை ஓடவிட்டு ஒலிவாங்கி முன் நின்று முன்னே பார்வையாளர்களின் மொய்க்கும் கண்களைப் பார்க்க அடிவயிற்றில் பயம், அச்சம், லேசான நடுக்கம், இத்தனைக்கும் பார்வையாளர்கள் மொத்தம் 100 பேர் தான் என்றாலும் மாணவர்கள், பெரியவர்கள், நடுத்தர வயதினர் என பலதரப்பினர் அமர்ந்திருந்தனர், கொஞ்சம் கொஞ்சம் திணறினாலும் சமாளித்தேன், தொண்டை வரண்டே விட்டது, அடுத்ததாக பேச இருந்த மற்றொரு இலக்கிய பேச்சாளர் சகோதரி சித்ரா ரமேஷ் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு நேராக பேச்சுக்கு சென்றுவிட்டேன், முதலில் அனைவருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வணக்கம் சொல்ல வேண்டும் என்கிற நினைப்பு வரவே இல்லை, அதே போன்று ஒரு 'வணக்கத்துடன்' முடித்துக் கொண்டேன், நன்றி தெரிவிக்கவும் மறந்துவிட்டேன், செய்முறையாக சிலவற்றை மாணவர்களுக்கு திரையில் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்ததும் மறந்துவிட்டது, 15 நிமிடங்கள் மேடையில் நின்று என்ன பேசினேன் என்று எனக்கு தெரியாது, அதன் பிறகு நன்றாக, எளிமையாக, புரியும்படி இருந்ததாக எனக்கு அறிமுகமில்லாத பார்வையாளராக அமர்ந்திருந்த ஆசிரியர் சொல்லி என்னிடம் சொல் பேசி எண்கள், மின் அஞ்சல் முகவரிகள் கேட்டப் போது தான், ஓரளவு என்ன பேசவேண்டுமோ அதைத்தான் பேசி இருக்க்கிறேன் என்ற மன நிறைவுடன் என் பார்வையாளர் இருக்கைக்குச் சென்று அமர்ந்தேன்.

என்னால் மணிக்ககணக்கில் தொடர்ந்து எதையாவது தட்டச்சு செய்து அதன் தொடர்ச்சியைக் கொண்டு வரமுடியும், ஆனால் 40 பேர் முன் நின்று பேசமுடியாது என்பது தெரிந்தது, இருந்தாலும் முதல் நிகழ்ச்சி கொடுத்த தெம்பு, உற்சாகம் மேடை நடுக்கங்களை அடுத்து அடுத்து குறைக்கும் என்றே நினைக்கிறேன். பரிசு வாங்க மேடை ஏறுவது அல்லது மேடையில் பேசி வெளிவரும் வதும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது, தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது நாலு பேர் நம்மைக் கவனிக்கிறார்கள், அவர்கள் காது கொடுத்து கேட்கும் நிலைக்கு நாம் தகுதியிடன் வளர்ந்து இருக்கிறோம் என்று நினைக்க அது பெருமைக்கு உரிய ஒன்றாகவும் உள்ளது.

8 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

எல்லோருக்கும் எல்லாக்கலைகளும் கைகூடுவதில்லை! சிலருக்கு மேடைக் கூச்சம்! பலருக்கு மேடை நடுக்கம்!இந்த ஒன்றினாலேயே மேடை ஏறி முழங்குகிறவர்களைத் தமிழகத்து மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்களோ என்று கூட எண்ணத்தோன்றும்! :-)

உங்களுடைய மேடைப்பேச்சு அனுபவத்தைப் படித்தபோது, பள்ளிப்பருவத்தில் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்ற நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடிவீதியில் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த பேச்சுப் போட்டி ஒன்றில் பேசும்போது முதல்தரமாக மைக் முன்னால்! என்னுடைய குரலே ஒலிபெருக்கியில் எதிரொலிப்பதைப் பார்த்து மிரண்ட அந்தத் தருணம் நினைவுக்கு வந்தது.

வவ்வால் சொன்னது…

கோவி,

நல்லா இருக்கு :-))

ஹி..ஹி எல்லாரும் நம்மைப்போல தான் ,நான் 10 பக்கம் கூட தொடர்ச்சியா எழுதிடுவேன், மைக் புடிச்சா வெறும் காத்து தான் வரும் :-)) ஒரு தடவை மானம் கப்பல் ஏறிச்சு அதுக்கு அப்புறம் விஷப்பரிச்சையில் இறங்குவதில்லை.

ஆனாலும் தைரியசாலி தான் மேடையில திரும்பவும் ஏறி கும்புடு எல்லாம் போடுறிங்க :-))

துளசி கோபால் சொன்னது…

உண்மைதான்.

எனக்கு.... மேடையில் நின்னு மைக் பிடிச்சதும் எதிரில் இருக்கும் பார்வையாளர்களை அதிலும் முன் வரிசையில் இருக்கும் கோபாலைப் பார்க்கக்கூடாது:-)))))

அன்பு ஆமீரா சொன்னது…

வணக்கம் அண்ணா,
எனக்கு லியோனி பட்டிமன்ற பேச்சு அதிகம் பிடிக்கிறது. உங்கள் மேடை அனுபவம் படிக்க நன்றாக உள்ளது.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் சொன்னது…

//////என்னால் மணிக்ககணக்கில் தொடர்ந்து எதையாவது தட்டச்சு செய்து அதன் தொடர்ச்சியைக் கொண்டு வரமுடியும், ஆனால் 40 பேர் முன் நின்று பேசமுடியாது என்பது தெரிந்தது//////same blood
என்னதான் பேச்சுத்திறமையுள்ள ஆளாக‌ இருந்தாலும் மேடைப்பேச்சு என்று வரும்பொழுது ஒரு நடுக்கம் ஏற்படத்தான் செய்யும் அதுதான் உங்களுக்கும் வந்திருக்கின்றது.இது முதல்நிலைதானே போகப்போக சரியாகிவிடும்.நீங்கள் துணிந்து சென்று பேசிவிட்டீர்கள் நான் அந்த சூல்நிலைகளை அமையக்கூட இடம்கொடுப்பதில்லை காரணம் பயமா (அ) வெட்கமா என்று தெரியவில்லை.சகோ வவ்வால் சொன்னதுபோல் எதற்கு விஷப்பரீட்சை என்று இருந்துவிட்டேன்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

இப்ப தெரியுதா எங்க கஷ்டம்? இன்னா நக்கல் விடுவீங்க!! :))))

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் அன்பரே

கிரி சொன்னது…

கோவி கண்ணன் மேடைப் பேச்சு ரொம்ப ரொம்ப சிரமம். எனக்கு இது போல அனுபவம் இல்லை என்றாலும் மேடை என்றாலே பயம். எழுதக்கூறினால் எவ்வளவு வேண்டும் என்றாலும் எழுதி விடுவேன்... ஆனால் இது ஆகாது :-)

கூட்டத்தைப் பார்த்தாலே நீங்கள் கூறியது போல என்ன பேச வேண்டும் என்று நினைத்தோமோ அனைத்தும் மறந்து விடும். இது போல ஒரு முறை போனால் அந்த பயம் நீங்கி விடும்.

அதோட எழுதினால் அடித்து திருத்தலாம்.. இதில் கூறிய வார்த்தைகள் திரும்ப வாங்க முடியாது என்பதே இதில் சிரமம். மிக கவனமாக பேச வேண்டும்.

என்னுடைய அப்பா மேடைபேச்சு சிறப்பாக பேசுவார் நான் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்