
*****
ஐந்தாண்டுக்கு முன்பு வரை இருந்த இரண்டாம் குழந்தை ஆசை பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனது, காரணம் பெரிதாக இல்லை, ஒரு குழந்தையையே வீட்டில் வைத்து வளர்க்க (வேறு) வழியில்லாமல் பள்ளி முடிந்ததும் மாணவ காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மனைவியோ, நானோ இருவரில் முன்பே செல்லும் ஒருவர் அலுவலகம் முடிந்த பிறகு அழைத்துவரும் நிலையில் இரண்டாவது தேவையா ? என்கிற எண்ணம் தான். பிறகு சென்ற ஆண்டு மகளாகவே கேட்கத் துவங்கினாள், எங்கு சென்றாலும் பல இடங்களில் இரு குழந்தைகளைப் பார்த்துவிட்டு.....'நம்ம வீட்டில் ஏன் இன்னொரு பேபி வரவே இல்லை.......எப்போதான் வருமோ ?' என்று ஒருவித ஏக்கமாக கேட்க்கத் துவங்கினாள். பொருளியல் தேவையை சீராக வைத்திருக்கவும், மகளின் எதிர்காலத்திற்கு நல்லக் கல்வியைக் கொடுக்கவும் எண்ணம் இருப்பதால் உடனடியாக மனைவி வேலையை விட மனதில்லா சூழலில் 'பணிப் பெண்ணை அமர்த்திப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம்.....இரு குழந்தைகளை மாணவ காப்பகத்தில் விடுவதும் பணிப்பெண் வைத்திருப்பதிற்கும் மிகப் பெரிய செலவின வேறுபாடுகள் இல்லை என்பதால் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவாகியது.
இருந்தாலும் எங்களது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடுத்து பெண் குழந்தையாகப் பிறந்தால் அவளுக்கு திருமணம் முடிக்கும் வரை கூட பொறுப்புணர்வு என்கிற டென்சன் இருக்குமே என்கிற டென்சன் இருக்கத்தான் செய்தது. எப்படி இருந்தாலும் நம் குழந்தை தான், அப்படியே பெண்ணாக பிறந்தாலும் ஏற்கனவே இருக்கும் மகளைப் போல் இன்னொரு மகள் தானே பிறப்பாள், அவளை நேசிப்பது உண்மை என்றால், அவள் செயல்களை போற்றுவது உண்மை என்றால் பிறக்கப் போகும் மற்றொரு பெண் குழந்தையையும் அவ்வாறு நேசிக்க முடியாமலோ போய்விடும் ? என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சரி என்ற முடிவில் செயலாற்ற, மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு பள்ளி விடுமுறைக்குச் தமிழகம் சென்ற அந்த திங்களிலேயே அவள் ஆசை நிறைவேறத் துவங்கியது.
என் மகள் தெளிவாக இருந்தாள், தம்பி தங்கச்சி எதுவாகிலும் என்னுடையவர்கள் தானே என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். சிங்கையில் குழந்தை வளர்ச்சியை ஸ்கேனிங்க் செய்து பார்க்கும் போது பாலினம் தெரிய துவங்கும் ஐந்தாம் திங்களில் பெற்றோர்கள் விரும்பினால் குழந்தையின் பாலினம் பற்றிச் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது பெற்றோர்களின் உரிமை என்பதால் சிங்கையில் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி எந்த குற்றமும் இல்லை. ஐந்தாம் மாதத்தில் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள், இருந்தும் குழந்தை பிறக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பது மனைவியின் அடிப்படை பயம் கலந்த கட்டளையாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து இரண்டாம் குழந்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.
கடைகுட்டி, மூத்தவ(ள்)ன், நடுவுள்ளவ(ள்)ன் என்கிற செல்லப் பெயர்களெல்லாம் தற்போதான இருகுழந்தை கட்டுப்பாடுகளினால் காணாமல் போய்விட்டது, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா இதில் ஏதோ ஒன்று தான் இரு குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் வாரிசுகளுக்கு கிடைக்கும் உறவுப் பெயர்கள், அதிலும் ஒரே குழந்தையாக வளரும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆனதும் தன்னைப் போன்றே தனித்து பிறந்தவர்களை திருமணம் செய்ய அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உறவு முறைகளில் எதுவுமே கிடைக்காது.
பெண்ணோ ஆணோ எந்த குழந்தையும் சரி என்று முடிவு செய்திருந்தாலும் ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரண்டாவதாக ஆண் குழந்தை என்று அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. மகப்பேறுக்கு முதல் நாள் வரையில் சீனர்கள் அலுவலகம் சென்று வருவார்கள், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பேறு நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார் இன்னும் நாள் இருக்கிறதே என்பதாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தார் மனைவி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க கடந்த 17 ஆம் தேதி அலுவலகம் சென்று திரும்பியதும், அருகில் இருந்த கடைத் தொகுதிக்குச் தன் தாயாருடன் சென்று திரும்பும் நேரத்தில் பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணர்ந்த மனைவி மகிழுந்தில் ஏறி உடனே வீட்டுக்கு வந்தார். பனிக்குடம் முழுதாக உடையாமல் கசிவாக இருந்ததால் சிறுது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வலி ஏற்பட்டதுடன் செல்லலாம் என்று காத்திருந்தோம், மேலும் கசிவு ஏற்பட..உடனடியாக வலி ஏற்பட்டால் பதட்டம் ஆகிவிடும் என்பதால் உடனடியாக இரவு 11:50 வாக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். மருத்துவ மனையில் சோதனை செய்து மகப்பேறு அறையில் உடனடியாக சேர்த்துவிட்டார்கள், நானும் மகப்பேறு அறையில் மகள் பிறக்கும் போது இருந்தது போலவே அருகில் இருந்தேன்.
17 ஆம் தேதி முடிய 18 ஆம் தேதியும் முடிய போகும் நேரம் வரை குறைவாக விட்டு விட்டு வலி ஏற்பட்டது தவிர்த்து பெரிதாக வலி ஏற்படவில்லை, பனிக்குடம் முழுதாக கசிந்தும் குழந்தை சரியான அமைப்பில் இருந்தும் வெளிவர முயற்சிக்காமல் வழக்கம் போல் உதைத்துக் கொண்டு தான் இருந்தது, ஆனால் நாடித் துடிப்பு குறையத் துவங்கியது, பனிக்குடத்தில் தண்ணிர் இல்லை என்றால் தொப்புள் கொடி சுருங்கி குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைய நாடித் துடிப்பு குறையுமாம் , உணர்ந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது தான் தாய்கும் சேய்க்கும் நல்லது என்று சொல்லி, என்னை அனுப்பிவிட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, 18 ஆம் தேதி இரவு 11:55 வாக்கில் அறுவையை துவங்க சரியாக இரவு 12 மணி தாண்டிய சில நிமிடங்களில் ஆங்கில நாள் படி ஆகஸ்ட் 19ல் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் பிரிக்கப்பட்டார்களாம். அறுவை சிகிச்சை அறையில் கணவரை அனுமதிக்கமாட்டார்கள். அறுவை முடிந்து தையல் போடும் நேரத்தில் குழந்தையை குழந்தைகள் வைக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். நல்லிரவுக்கு மேல் என்பதால் அங்கு கண்ணாடி தடுப்பு இருந்ததும் நாங்கள் பார்க்க வசதியாக அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டனர். ஈரம் முற்றிலும் காயாத நிலையில் பிறந்த 10 ஆம் நிமிடத்தில் கழுத்தைத் திருப்பி அனைவரையும் நன்றாகப் பார்த்து பிறகு மெலிதாக சிரித்தான்.

பிறக்கும் குழந்தை பெயரில்லாமல் பிறக்கக் கூடாது என்பது என் விருப்பம் அதனால் மகளுக்கும் பிறக்கும் மூன்று திங்களுக்கு முன்பே பெயரை முடிவு செய்து பிறந்த மறுநாளே பிறப்பு சான்றிதழில் பதிந்துவிட்டேன். அதே போன்று மகனுக்கும் பெயரை முடிவு செய்யும் போது தமிழ் பெயர் தான் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன், கூப்பிட எளிதாக அழகாக இருந்தால் எந்தப் பெயராக இருந்தாலும் சரி என்று சொல்லி இருந்தார் மனைவி. பத்து பெயர்கள் வரை முடிவு செய்து அதில் இரண்டை தெரிவு செய்து மனைவியிடம் சொன்னேன். எல்லோருக்கும் பிடித்தப் பெயராக இருக்க வேண்டும் என்பதாக அதிலிருந்து அவர் தெரிவு செய்து முடிவு செய்தப் பெயர் தான் 'சிவ செங்கதிர்' கூடவே மனைவி பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலொழுத்து சேர்த்து 'GK சிவ செங்கதிர்' என்று மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லும் முன்பே பதிந்து பதிவு சான்றிதழ் பெற்றுவிட்டு சென்ற சனிக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டோம். படுக்கையில் அடிக்கடி மகனின் ஒண்ணுக்கு தீர்த்தம்.....வீட்டில் மகிழ்ச்சி மழை தான்.

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் .

பின்குறிப்பு : பதிவர்களில் பலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் நலம் விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்க நேரமின்மையால் இடுகை வழியாக அறிவிக்க, தெரிவிக்க இப்பதிவை எழுதினேன். மற்றபடி இதைப் பதிவாகவே எழுதுவது எனக்கு தயக்கமான ஒன்று தான்.