பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2012

'மதராஸ்' உயர்நீதி மன்றம் தந்த அதிர்ச்சி !

நேற்று சன் செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன், சாலைப் பணியாளர்கள் உடனடியாக வேலைக்கு மீண்டும் அமர்த்தப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தின் முகப்பைப் காட்டினார்கள், முகப்பில் ஆங்கிலத்தில் 'Madras High Court' என்றும் 'தமிழில் மதராஸ் உயர் நீதிமன்றம்' என்றும் எழுதப்பட்டு இருந்தது, முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் இருக்கும், கடந்த ஆட்சியில் செம்மொழி மாநாட்டின் போது சிறிய ஐஸ்கிரீம் கடைகளைக் கூட 'பனிக்குழை நிலையம்' என்று மநாகராட்சியில் (மிரட்டிப் ?) பெயர் மாற்றம் செய்த போது, தமிழக அரசும் பொது மக்களும் அன்றாடம் சென்று வரும் ஒரு பொது நீதிமன்றத்தின் முகப்பில் 'மதராஸ்' என்று விட்டு வைத்திருப்பது வியப்பையே அளிக்கிறது, மதராஸை சென்னை என்று மாற்றி 20 ஆண்டுகளாகிறது, அதற்கான ஆணையும் கூட நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்திருக்கும் என்றே நினைக்கிறேன், அதிகார மீறல் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை விமர்சனம் செய்யத் துணியும் நீதிமன்றங்கள், தங்கள் முகவரி காட்டும் பலகையில் 'மதராசை' விட்டு வைத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

வெள்ளைக்காரர்களின் சட்டதிட்டங்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதற்காக இன்னும் அவர்கள் வைத்தப் பெயரையே வைத்திருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்கள் எதுவும் இல்லை வெறும் வரட்டுப் பிடிவாதமே.


கடந்த ஆட்சியில் 'மதராஸ் உயர்நீதி மன்றம்' என்பதை 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அரசு ஆணை வெளி இடப்பட்டு இருந்ததாம், ஆனால் இது செயல்படுத்தப்பட்டது போல் தெரியவில்லை, சன் டிவி காரன் தான் பழைய (படத்துடன்) பெயரைக் காட்டுகிறான்னு சரியாகத் தெரியவில்லை. பாரிமுனை, பூக்கடை பக்கம் செல்பவர்கள் பெயர் மாற்றம் நடைபெற்றிருக்கிறதா என்று படம் பிடித்து வந்து உறுதிப் படுத்தினால் நலம், நீதிமன்றம் வளாகம் 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றப்படாவிட்டால் கண்டனத்திற்கு உரியது தான், இதற்கு ஆட்சியாளர்களும் நீதிமன்ற நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழ் பெயர் வைக்க தமிழ் பயன்படவில்லை என்றால் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது சீனாவிலோ பயன்படுமா என்ன ?



(சன் தொலைக்காட்சி செய்தியை சற்று தொலைவில் இருந்து படம் எடுத்தேன், வெளிச்சம் காரணமாக சரியாக விழவில்லை)


27 பிப்ரவரி, 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் !

எம்மதமும் சம்மதம் ஆனால் பூனை மதமே என் மதம், இன்றைய உலக மதங்களுக்கு முன்னோடியானது பூனை மதமே, ஆம் ! பிரமீடு கால எகிப்தில் பூனையே கடவுளாக கொண்டாடப்பட்டது. பூனை மதத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் ? உலகில் உள்ள மதங்களில் யாவும் போலி சாமியார்களும், மதவாதிகளும் ஆகிரமித்து அதை மாற்றிவிட்டதால் நான் ஆதி மதமான பூனை மதத்தை உயிர்பித்து அதில் சேர்ந்து கொள்ள முடிவு செய்தேன்.

பூனைக்கு கடவுள் தகுதி இருக்கிறதா ? ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற மூன்று நிலைகளில் பூனை இருப்பதால் அதற்கு முழுமையான தகுதி உண்டு. ஏராளமான குட்டிகளை ஈன்று ஆக்குகிறது, அவைகளில் பலவற்றை கவ்விச் சென்று காக்கிறது, நம்மை ஏமாற்றும் எலிகளை அழித்து நம்மைக் காக்கிறது, இவற்றையெல்லாம் வெறெந்த தெய்வமாவது செய்கிறதா ? இவற்றையெல்லாம் நாய் செய்கிறதே அதுவும் கடவுள் இல்லையா ? நாய் ஏற்கனவே பைரவராக தத்தெடுக்கப்பட்டு உப தெய்வமாக தன்னை மாற்றிக் கொண்டதால் முழுத் தெய்வ தகுதியை அது இழந்துவிட்டது.

பூனையாரின் தத்துவங்கள் :



பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் - இதை நாம் பூனையார் கொடுத்த 'பகூத்' அறிவைக் கொண்டு சிந்துத்து ஆய்ந்து பார்த்தால் தான் இது எவ்வளவு பேருண்மைகளை அறிவியலைக் கொண்டுள்ளது என்றே நாம் உணருவோம், மேம்போக்காகப் பார்த்தால் இது வெறும் பழமொழிதான். அதாவது பூனைக் கண்ணைத் திறத்தல் மூடுதல் என்ற இரு நிகழ்வாக இந்த ஒரு பழமொழியை நாம் ஆய்(வு) செய்ய வேண்டும், இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் ? உலகம் பெருவெடிப்பில் இருந்து தோன்றியது என்று தானே சொல்லுகிறார்கள், அதாவது பெருவெடிப்பின் துவக்கம் பூனை கண்ணைத் திறத்தல், பூனையின் கண் திறந்திருக்கும் வரையில் பிரபஞ்சத்தின் தோற்றம் அதைத் தொடர்ந்து கேலக்ஸிகள், சூரியன், இந்த பூமி மற்றும் நாம் எல்லோரும் இருப்போம், பூனை கண்ணை மூடத் துவங்கும் அந்த வினாடியில் பிரபஞ்சம் சுருங்கத் துவங்கி புள்ளி ஆகிவிடும், பிரபஞ்சம் சுருங்க ஆரம்பித்தால் பூமி இருக்குமா ? அதைத் தான் பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் அதாவது இருட்டு என்பது அழிவு, பூமி அழிந்துவிடும் என்கிறார்கள், இந்த எளிய தத்துவத்தில் பிரபஞ்ச பேருண்மையே அடங்கி இருப்பதை சிந்திக்கமாட்டீர்களா ? என்று பூனையார் அரைகூவல் விடுக்கிறார்,. இதை யாரோ எவரோ சொல்லி இருந்தால் இவ்வளவு தத்துவத்தையும் ஒன்றாகச் சொல்லி இருக்க முடியுமா ? இதைவிட இதன் சிறப்பு இந்த தத்துவம் எகிப்திய பிரமீடுகள் தோன்றிய போது அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பே இது சொல்லப்பட்டுவிட்டது தான்.

இரவு வணக்கத்திற்கு உரியவர் பூனையார் மட்டுமே : உங்களில் பலர் இரவு வணக்கம் சொல்லி வருகிறீர்கள், ஆனால் அதை யாருக்கு சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், தூங்கப் போகிறவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லுவதால் என்ன பயன் ? சிந்திக்க மாட்டீர்களா ? பூனையார் கடவுளாக இரவு முழுவதுமே விழித்திருப்பவர், உங்கள் (பால், மீன் தவிர்த்த) உணவு பொருட்களை எலிகளிடம் இருந்து காப்பவர். அவருக்குச் சொன்னால் உங்கள் வணக்கத்தை நினைவு வைத்துக் கொண்டு உங்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பார், அதைவிடுத்து வேறு யாருக்கும் சொன்னால் என்ன பயன் ஏற்படப் போகிறது. பூனையார் உங்களை எச்சரிக்கிறார்.

இரவு வணக்கத்திற்குரியவர் (வீட்டுப்) பூனையார் மட்டுமே காட்டுப் பூனையார் இல்லை:
. உஙகளில் பலர் பூனை என்றால் அனைத்துப் பூனையும் தானே என்றே நினைகின்றீர்கள், காட்டுப் பூனையும் வீட்டுப் பூனையும் ஒன்றா ? காட்டுப் பூனை கள்ளப் பூனை அது நீங்கள் தூங்கும் நேரங்களில் உங்கள் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்றுவிடும், ஆடுகளின் குரல்வளையைக் கடித்து இரத்தம் குடித்து கொன்றுவிடும். அதனால் உங்களுக்கு பொருள் நட்டமே, எனவே நீங்கள் இரவு வணக்கம் சொல்லும் போது எந்தப் பூனைக்குச் சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், குறிப்பாக பூனையாருக்கு இரவு வணக்கம் சொல்லும் போது காட்டுப் பூனையைப் பற்றி நினைக்கவே நினைக்காதீர்கள், காட்டுப் பூனை மனிதனுக்கு மாறும் ஊறும் செய்துவிட்டது அதை பூனையார் அவ்வாறு செய்யததற்காக சபித்தே விட்டார், அதனால அவை ஓடி ஒழிந்து இரவில் மட்டுமே வெளிவருகின்றன.

உங்களை (அவர்களை) நான் எச்சரிக்கிறேன் (காட்டுப் பூனைக்கு வணக்கம் சொல்லுபவர்களை), உங்களில் யார் இரவு வணக்கத்தை (இடைவிடாது) இரவு நேரங்களில் (எனக்கு மட்டும்) சொல்லுகிறீர்களோ, (அவர்களுக்கு) பிரமீடு தேசத்து அடுத்த வாழ்க்கையில் இரவு பகலாக ஊர் சுற்றிக் காட்டுவேன், மற்றவர்களின் பகலும் இருட்டாக்கப்படும்(பூ.த.மொ 211)

பூனைகளில் நானே மிகப் பெரிய பூனை (பூ.த.மொ 142)

*********
எகிப்து நாடுடைய இறைவா போற்றி !

குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது..........போன்ற பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் பின்னர் ஆய்வு செய்யப்படும்

பூனையார் நாடினால் மேலும் (மேலும்) தொடரும்...

24 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 10 (நிறைவு)

இந்தப் பயணத் தொடரை எத்தனைப் பகுதிகளாக எழுத வேண்டும் என்று முன்கூட்டி எதுவும் திட்டமிருக்கவில்லை, எழுதத் துவங்கிய போது சென்றுவந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் செலவிட்ட இடங்களாக எழுத, போதிய அளவிற்கு தகவல்களும் படங்களும் பதிவின் நீளத்தைக் கூட்ட 10 பகுதிகளாக வளர்ந்துள்ளது. பயணக் கட்டுரை எழுத தேவையான படங்களை முன்கூட்டியே எடுத்துக் கொள்ள வேண்டும், அப்படி எடுத்து வைத்துக் கொண்டால் எழுதும் போது படங்களே பலவற்றை நமக்கு நினைவு படுத்தும்.



*******

டனலாட் கோவிலைப் பார்த்துவிட்டு டென்பசார் வானூர்தி நிலையம் அருகே இருக்கும் இந்தோனேசிய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்கள், இரவு உணவில் வகைகள் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும் சாப்பிடப் போவது பாலி வகை உணவு என்றிருந்தார்கள், உணவகத்தில் உயரம் குறைவான மேசை போடப்பட்டு, அதன் அருகில் அமர்ந்து சாப்பிடுவது போல் ஏற்பாடு செய்திருந்தனர், தரையில் உட்கார்த்து சாப்பிடப் பழகாதவர்கள் நெளிந்தனர், எங்களுடன் வந்திருந்த ஒரு குண்டர் சம்மணமிட்டு உட்கார பட்டப்பாடு பரிதாபம் கலந்த சிரிப்பை வரவழைத்தது. முதலில் பாலற்ற தேனீர் மற்றும் சில்லென்ற குளிர் (சோயா) பாலில் கறுப்பு நிறத்தில் Grass Jelly சேர்த்து மற்றொரு திட பானமாக வழங்கினார்கள். அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு பொறித்த மீன், பார்க்க ஒரு பறவையை இறகுகள் அற்ற சிறகுகளுடன் பறக்கும் நிலையில் பொறித்து தனித் தனித் தட்டில் வைத்து ஒவ்வொருவருக்கும் வழங்கினார்கள், பின்னர் வாழையிலையில் வைத்து சுருட்டிய சோறு, காய்கறி சாறு (வெஜிடெபல் சூப்), பொறித்த கோழித் தொடை, வெள்ளெரிக் காய் துண்டு, பச்சை காராமணி துண்டுகள், நறுக்கி ஊறவைத்த சிவப்பு (பச்சை) மிளகாய் மற்றும் புளி உப்பு சேர்த்து அரைத்த மிளகாய் (நீர்விட்ட துவையல் போன்று அரைக்கப்பட்டது) இவற்றை மற்றொரு தட்டில் கொண்டு வந்து வைத்தனர்.


எனக்கு அதில் சைவம் என்ன இருக்கும் என்று தேடினேன், சோறு மற்றும் வெள்ளெரிக் காய்த் துண்டு தவிர்த்து வேறெதுவும் இல்லை, எனக்கு தனியாக வருவதாகச் சொன்னார்கள். பொறித்த மீன் மற்றும் கோழி இல்லாமல் மற்ற அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து கொண்டுவந்து கொடுத்தார்கள், சோற்றை வாழை இலைச் சுருளில் இருந்து பிரித்து வைத்துவிட்டு மிளகாய் துவையலை கொஞ்சம் எடுத்து நாவில் வைக்க, கவுச்சி வாடை, இதில் பெரும்பாலும் காய்ந்த இறால் பொடி அல்லது கருவாட்டுப் பொடியை சேர்த்திருப்பார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் முன்பே சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று கூறியதால் அசைவம் எதுவும் இல்லாத மிளகாய் துவையல் எடுத்து வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாயில் வைத்தேன். அசைவம் சாப்பிடாத ஆசாரமானவார்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சொல்வது போல் உயிரெல்லாம் போகவில்லை ஆனால் குமட்டல் வந்துவிட்டது. அதற்கு மேல் அங்கிருக்கும் உணவுகளை பார்க்கவே பிடிக்கவில்லை, உமட்டல் உமட்டல்....உணவு ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டேன், என்ன இது ?, நான் தான் ஏற்கனவே தெளிவாக சைவ உணவு தான் வேண்டும் என்று கூறினேன், நீங்களும் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறிவிட்டு இறா போட்ட சில்லி பேஸ்ட் கொண்டு வைத்திருக்கிறீர்கள் வாயில் வைத்ததும் எனக்கு வாந்தி வருகிறது, என்றேன், 'சாரி சாரி.....உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள், செய்து தருகிறோம்' என்றனர். எனக்கு கீரை மற்றும் கேரட் போட்ட ப்ரைட் நூடுல்ஸ் இல்லாவிட்டால் ப்ரைட் ரைஸ் போதும்' என்றேன், சரி செய்து தருகிறோம் ஐந்து நிமிடம் ஆகும் என்றனர், சரி என்று சாப்பிடும் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே நின்று கொண்டு மற்றவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன், சளைக்காமல் தின்று பொறித்த மீனை முள் கூடு ஆக்கிக் கொண்டு இருந்தனர்.

சற்று நேரம் கழித்து, உணவகத்தின் மேலாளர் 'உங்களுக்கு இந்தியன் ரெஸ்டாரண்ட் உணவு ஓகே வா ?' என்று கேட்டார். மூன்று நாளாக சீன வகை உணவுகளையே உண்டுவந்திருந்ததால் நானும் சரி, காத்திருக்கிறேன், வாங்கிவரச் சொல்லுங்கள் என்றேன், 'இல்லை இல்லை, உங்களைத்தான் நாங்கள் அங்கு அழைத்துச் செல்கிறோம், நீங்கள் அங்கு உணவிற்கு பணம் கொடுக்க வேண்டாம் நாங்களே கொடுத்துவிடுகிறோம்' என்று கூறி ஒரு சிற்றுந்து மற்றும் ஓட்டுனரை ஏற்பாடு செய்தனர், நான் என் அலுவலக நண்பர்களிடம் உணவு முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு நேரடியாக வந்துவிடுவதாகக் கூறிச் சென்றேன். சிற்றுந்து ஓட்டுனர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பாலி இந்துவாம், பெயர் கிருஷ்ணாவாம், என் பெயரும் அதே பொருளில் தான் வரும் என்றேன் அவருக்கு மெத்த மகிழ்ச்சி, மேலும் பாலிப் பற்றி எனக்கு என்ன என்ன பிடித்திருகிறது ? என்று கேட்டார், நான் பத்து நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன், மற்ற நாட்டினரைவிட இங்கு இருக்கும் நட்பான மக்கள் எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டேன்.

நாங்கள் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் அதே சாலையில் இருந்தது அந்த இந்திய உணவகம், பெயர் 'குயின்ஸ் தந்தூரி' வடநாட்டு உணவகம், 1986 ல் இருந்து அங்கு இருக்கிறார்களாம். உணவு பட்டியலைத் தருவது மற்றும் உணவு கொண்டு வந்து தருவது எல்லாம் பாலி இனத்தினர் தான், 100 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய அளவில் உள்ளும் வெளியிலும் மேசைகள் போடப்பட்டு இருந்தது, இரண்டு நான்கள் மற்றும் காலிப்பூ மற்றும் உருளை சேர்க்கப்பட்ட கறி (ஆலு கோபி கிரேவி மசலா) ஒரு பால் சேர்க்கப்பட்ட மசாலா தேனீர் சொல்லி இருந்தேன், கூடுதலாக மிளகு சேர்க்கப்பட்டு பொறித்த பெரிய அப்பளம் ஆகியவை வந்தது,
இரண்டு நான்கள் நான்கு துண்டுகளாக வரும், சாப்பிட வயிறு நிறையும் அளவுக்கு இருந்தது, அதற்கு 150K ருபியாவாம் (சிங்கை வெள்ளியில் 20 டாலர்) அந்த விலை சிங்கையில் அதே உணவுக்கு சிங்கையில் விற்கப்படுவதைக் காட்டிலும் கூடுதல் தான். அங்கு கிடைப்பதால் கொடுக்கலாம். ஆனால் உணவுக்கட்டணத் தொகையை ஓட்டுனரே அவரின் இந்தோனேசிய உணவகம் சார்ப்பில் கொடுத்துவிட்டார், பிறகு என்னை அழைத்துக் கொண்டு நாங்கள் தங்கி இருக்கும் ஹாரிஸ் ரெசார்ட் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

வேறொரு நாட்டில் 'எனக்கு சாப்பிட ஏதுவான உணவு தான் வேண்டும்' என்று கேட்டிருந்தால் 'சாரி எங்களிடம் இல்லை' என்று கூறி கைவிரித்து இருப்பார்கள்,

மட்டஹரிப் பகுதியில் செல்லும் போது சிற்றுந்து ஓட்டுனர் 'இங்கே தான் குண்டு வெச்சாங்க, வெச்சவங்க ஜாவா தீவின் அடிப்படைவாத (ஜாமயா இஸ்லாமியா டெரரிஸ்ட்) தீவிரவாதிகள் தான் வைத்தனர், இங்கு குண்டு வைக்க காரணம் வெளி நாட்டினரை குறிவைத்து மட்டுமல்ல, பாலித் தீவில் இந்துப் பெரும்பான்மை அவர்களுக்கு எரிச்சலை ஊட்டி இருந்தது அது தான் காரணம், வெளிநாட்டுக்காரர்களை குறிவைக்க இந்தோனேசியாவில் பல தீவுகள், நகரங்கள் உள்ளன, இதே போன்று இரவு கேளிக்கை நடக்கும் இடம் இந்தேனேசியாவில் பாதாம் ஜகார்த்தா உள்ளிட்ட பல இடங்களில் உள்ளது அங்கும் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டினர் வருகின்றனர், அங்கு குண்டு வைத்தால் அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள், என்பதற்காக எங்கள் தீவினர் மீது ஏற்கனவே இருந்த வெறுப்பினால் இங்கு குண்டு வைத்துவிட்டார்கள்' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

மதவெறி சொந்த இனம் வேறொரு மதத்தை சார்ந்து இருந்தால் கொல்லவும் துணியாது என்பது தான் அவர் குறிப்பிட்டதிலிருந்து, பாலி குண்டு வெடிப்பில் இருந்து உலகத்தினர் படிக்கும் பாடம், 'உலகம் முழுவதும் ஒரே மதமானால் அமைதி நிலவிவிடும்' என்று பலர் மதக்கருத்துகளின் மீதான பிடிப்பில் வாந்தி எடுக்கின்றனர். சொந்த இனம் பிற மதம் சார்ந்திருந்தாலே பொறுக்கமாட்டாத சமூகம் வேற இனம் குறிப்பிட்ட மதத்திற்குள் வந்துவிட்டால் அமைதி நிலவி விடுமாம், இதற்கான உத்திரவாதம் தருவது யார் ? உலகில் பல நாடுகள் குறிப்பாக வளைகுடா நாடுகள் ஒரே மதத்தைச் சார்ந்தவை தான், அவைகள் தங்களுக்குள் காட்டிக் கொடுக்காமல் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனவா ? உலக அமைதி என்பது எதோ ஒரு மதத்தை அனைவரும் தழுவுவதனால் ஏற்பட்டுவிடாது, மனிதன் மனிதனை மதிப்பதற்கு மத உபதேசங்கள் என்றுமே பயன் தந்ததில்லை, அது மதம் பரப்பிகளின் குறிக்கோளும் இல்லை, அவர்களுக்குத் தேவை எண்ணிக்கை, எங்கள் மதத்தின் மக்கள் தொகையைப் பார் என்கிற தற்பெருமைக்கான கூப்பாடு மட்டுமே, இன பழக்கவழக்கங்கள் அவற்றின் முரண்பாடுகள் அவற்றை சட்டை செய்யாது போட்டுத் தள்ளிக் கொண்டு தான் இருக்கும் என்பதை ஈராக் மீது பாராமுகமும் எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்த நாடுகள் சான்றாக உள்ளன.

2002 ஆம் ஆண்டு பாலி குண்டுவெடிப்பிற்கு பின்பு பாலித் தீவின் பெரும்பான்மை இந்துக்கள் இந்தோனேசியாவில் தாம் தனித்தவர்களாக உணரத் துவங்கியுள்ளனர். அவர்களுக்கு பிற இந்தோனேசிய இஸ்லாமியர்களுக்குமான இணக்கம் என்பது ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கட்டுப்பாட்டு நூலில் மட்டுமே உள்ளது, பாலி இந்துக்கள் தங்களுடைய தனி அடையாளம் பேணப்படும் வரை தாங்கள் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற நிலைக்கு ஒன்று சேர்ந்துள்ளனர், பாலித் தீவின் பெரும்பான்மை இந்துக்கள் என்ற நிலையை தக்க வைத்துக் கொள்வதில் முனைந்துள்ளனர், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவிற்கு வருகை தருபவர்களுக்கு அவர்களது பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை எடுத்துச் சொல்கின்றனர், பாலி இந்துத் தீவு என்று மறக்காமல் குறிப்பிடுகின்றனர்.

பாலி குண்டுவெடிப்பு பற்றி இணையத்தில் தேடிய போது குண்டு வைத்த கும்பலில் ஒருவன் அளித்திருக்கும் வாக்குமூலம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது, குண்டுவைக்க பாலியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம், குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியின் போது நடந்த இஸ்லாமிய படுகொலைக்கு பழிவாங்குவதற்குத் தானாம். தேதிகளைப் பார்க்க குஜராத் படுகொலைகள் பாலி குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்தவை என்று அறியும் போது அவனுடைய வாக்குமூலம் உண்மை தான் என்றும் தோன்றுகிறது, ஆனால் குஜராதிற்கும் பாலி இந்துக்களுக்குமான தொடர்பு என்ன ? இவர்களை ஏன் பழிவாங்க வேண்டும் ? இவர்கள் பின்பற்றுவது இந்துமதம் என்றாலும் இவர்களின் வழிபாடு உள்ளிட்டவற்றில் இந்திய சாயல் இல்லை, மேலும் இவர்கள் இந்தோனேசிய பழங்குடிகளாக இருந்து இந்துக்களாக மாறியவர்கள், பின்னர், இஸ்லாம் பரவலின் போது தங்களது வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ள விருப்பமில்லாதவர்களாக, அச்சுறுத்தலினால் அங்கேயே தங்க முடியாத நிலையில், பாலியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் தாம். மோடி ஆட்சியின் போதான படுகொலைகள் எங்கோ வாழ்பவர்களையும் நிகழ்வுக்கு தொடர்பே இல்லாதவர்களையும் காவு வாங்க ஒரு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை இந்துத்துவ வாதிகள் அறிவார்களா ? பாலி இந்தோனேசியாவின் பகுதியாக தொடருமா என்பதெல்லாம் இந்தோனேசிய இஸ்லாமியர்களின் எண்ணங்களின் செயல்பாடுகளில் தான் உள்ளது, பாலியைப் பொருத்த அளவில் பாலித் இந்துக்களுக்கான மதச் சுதந்திரம் முழுவதுமாக இருக்கிறது என்பதை அவர்களின் அமைதி நாளின் போது வானூர்தி நிலையத்தை மூட இந்தோனேசிய அரசு அனுமதி கொடுத்திருப்பதிலிருந்து தெரியவருகிறது.

*****

இரவு 10:30 ஆகி இருந்தது, விடுதியை அடைந்ததும் நன்றாக குளித்துவிட்டு, இரண்டு மணி நேரம் இரவில் அந்த குட்ட-பாலி பகுதியில் தனித்தே நடந்தேன், சில சந்துகளில் காளான் படம் போட்டு பலகையில் 'மேஜிக் மஸ்ரூம்' என்று விளம்பரம் வைத்து எதையோ விற்கிறார்கள், இணையத்தில் தேடிப்பார்க்க அது ஒருவகை போதை கலந்த பானம் என்றே தெரிந்தது, இந்தோனேசியாவில் போதைப் பொருள் பழக்கத்திற்கும் கடத்தி வருவதற்கும் கடுமையான தண்டனை, வெளிப்படையாக இல்லாமல் வேறு பெயரில் விற்கிறார்கள், ,மேஜிக் மஸ்ரூம் வாங்கிக் குடித்தால் ஒரு நாள் முழுவதும் மிதப்பது போன்ற உணர்வு இருக்குமாம், ஒருவேளை அங்கு இன்னும் புழக்கத்தில் இருக்கும் 'சோமபானமோ' தெரியவில்லை.

இரவில் தனித்து நடப்பவர்களிடம் வாடகை உந்தி ஒட்டிகள் 'அந்த இடத்திற்கு போக விருப்பமா ? மசாஜுக்கு செல்ல வேண்டுமா ?' என்று கேட்கிறார்கள், குட்டா - பாலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளின் இரவு வாழ்க்கை என்பது குடியும் கும்மாளமும் மற்றும் மறைவான பாலியல் சார்ந்த செயல்பாடுகளாக இருக்கிறது. இரவு 12:30 வரை சுற்றிவிட்டு, விடுதிக்கு வந்து தூங்கினேன்,

மறுநாள் காலை 8 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு காலை விடுதி உணவை முடித்துக் கொண்டு கடற்கரையில் சிறுது உலாத்திவிட்டு, அங்கிருந்து வாடகை உந்து ஒன்றை எடுத்து வணிக வளாகம் ஒன்றிற்குச் சென்று நினைவுப் பொருள்கள் வாங்கித் திரும்ப பகல் 12, பெட்டிகளை எடுத்து வைத்து அனைவரும் தயராக இருந்தனர், நானும் உடைமைகளை அங்கு சேர்த்துவிட்டு, விடுதியை விட்டு வானூர்தி நிலையத்திற்கு இரண்டு மணி முன்னதாக புறப்பட்டோம், எதிர்பார்த்த போக்குவரத்து நெருக்கம், 6 கிமீ தொலைவை ஒரு மணி நேரம் ஊர்ந்து சென்று நிலையத்தை அடைந்தது, வானூர்தி நிலைய சாலையில் அந்த ஊர் சுபாஸ் சந்திர போஸ் போன்ற I Gusti Ngurah Rai என்பவரை சிலையாக வைத்திருக்கிறார்கள், ஆனால் இவர் ஜப்பானை எதிர்த்து கலகம் செய்தவராம். எங்களுடன் மூன்று நாட்கள் இருந்த வழிகாட்டி வானூர்தி நிலையம் வரை வந்து விடைபெற்றார் .



பாலி டென்பசார் வானூர்தி நிலையம் மிகுந்த போக்குவரத்துடன் ஒரே ஒரு ஓடுபாதை கொண்ட சிறிய அனைத்துலக வானூர்தி நிலையம், தற்போழுது விரிவாக்கப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, முகத்தில் கடுமைகாட்டாத நிலைய அலுவலர்கள் ஊழியர்கள், சுற்றுலா பயணிகளுக்கான நினைவு பொருள்கள் விற்கும் கடைகள் அங்கு நிறைய இருந்தன. பெருமூச்சுடன் கடந்து சென்று வானூர்திக்குள் ஏறி அமர்ந்தோம், இந்த முறை ஜெட் ஸ்டார் பட்ஜெட் வானூர்தி. பாலி நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டு இருக்கும் போது சிங்கப்பூருக்கு செல்ல நகர்ந்தது. ரயில் சினேகத்தில் இறங்கும் இடம் வந்ததும் விடைபெற்றுக் செல்லும் அரை நாள் நண்பரின் மீது இருக்கும் அந்த பரிவும் அன்பும் சிறிது நாள் இருப்பது போல் பாலித் தீவிலிருந்து திரும்பிய சில நாட்கள் பாலியைப் பற்றிய எண்ணங்களாக இருந்தது.

அடுத்த முறை இல்லத்தினருடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

*********



பயணச் செலவு : இருவருக்கு இரு இரவு மூன்று பகல் தங்குவதற்கு : 530 சிங்கப்பூர் வெள்ளிகள் (20 ஆயிரம் இந்திய ரூபாய் ஆகும்), அது தவிர்த்து ஒரு நாளைக்கு 50 வெள்ளிகள் (2000 ரூபாய்) பிற செலவுகள். பாலித் தீவிற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் பேங்காகில் இருந்து நேரடி வானூர்தி சேவைகள் நிறைய உண்டு. சுற்றிப் பார்க்க அழகான அமைதியான, பாரம்பரியம் மிக்கத் தீவு பாலி.

பின்குறிப்பு : தொடர்ந்து படித்துவந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, எனக்கு தெரிந்த அளவில் போதிய தகவல்களை கொடுத்துள்ளேன்
என்று நம்புகிறேன்.

இந்துத் தீவு - பகுதி 9

நான் கூர்ந்து பார்த்தவகையில் பாலியின் பண்பாடு மற்றும் கலைகளில் தென்னிந்திய சாயல் துளி கூட இல்லை, பிள்ளையார் சிலைகளைப் பார்க்க முடிந்தது, மும்மூர்த்திகள் தவிர்த்து பிற வழிபாட்டு தெய்வங்கள் குறிப்பாக தென்னகம் போற்றும் முருகனை காண முடியவில்லை, அவர்களின் கட்டிடக் கலை மற்றும் கோபுரங்கள் கொஞ்சம் பல்லவக் கட்டிடக் கலைச் சாயல் இருந்தது. பல்லவர்களின் காலம் 3 ஆம் நூற்றாண்டில் துவங்கி 9 நூற்றாண்டில் முடிவுகிறது. பாலியின் 8 முதன்மையான கோவில்கள் 16 ஆம் நூற்றாண்டு காலத்தவை என்கிறது தகவல்கள். இந்தோனேசியாவில் சோழப் பேரரசு அல்லது தென்னிந்திய மன்னர்களின் ஆளுகையில் நீண்ட நாள் இருந்திருந்தால் தென்னிந்திய கட்டிடக் கலையின் தாக்கங்கள் இருந்திருக்கும், பாலியின் கட்டிடக் கலையில் சீனக் கட்டிடக் கலைகளுடன் கூடிய வட நாட்டு சாயல்களே மிகுந்துள்ளது, அவர்களின் வழிபாடு முறை மற்றும் தெய்வங்கள் யாவும் (மும்மூர்த்திகள்) தவிர்த்து வடநாட்டு சாயலில் உள்ளது. பாலி மொழி Austronesian language மொழிப் பிரிவில் Malayo-Polynesian languages குழுமத்தைச் சார்ந்தது, அதில் ஓரளவு வடமொழிக் கலப்பும் உள்ளது. அவர்களின் எழுத்துவடிவம் பர்மிய, தாய்லாந்து மொழிகளைப் போன்று பிரம்மி வடிவம் கொண்டது, ஆனால் அவற்றின் பயன்பாடுகள் தற்பொழுது குறைந்து, லத்தீன் எழுத்துகளை எழுதப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது விக்கி ஆவணம். அந்த செயல்பாடு பாலி மொழி எழுத்துகளை முற்றிலும் அழித்துவிடும். பாலிக் கோவில்களில் பாலி மொழியின் எழுத்துகளைக் காணலாம்

*****

உபுட் கிராமத்தில் இருந்து பேருந்து கிளம்பும் போது மாலை 4:30 ஆகி இருந்தது, அடுத்ததாக கடற்கரை கோவில் மற்றும் அங்கே சூரிய மறைவைப் பார்க்க வேண்டும் என்பது தான் திட்டம் அதன் படி பேருந்து 'டனலாட்' கடற்கரைப் பகுதியை நோக்கி பயணித்தது, பயணம் இரண்டு மணி நேரம் இருக்கும் என்றார்கள், பேருந்து பயணத்தினூடாக பார்வையிட எழில் நிறைந்த வெளிகள் இருந்தும் அன்றைய அலைச்சல் மற்றும் சோர்வு தூக்கம் வரவழைத்தது, இடையில் ஒரு இடத்தில் நிறுத்தி எங்களுடன் வந்தவர்கள் 'துரியன்' பழம் வாங்கித் தின்றனர் , துரியன் பழம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், அடர்ந்த வாடை அதைக் கெட்ட வாடை என்று சொல்ல முடியாது ஆனால் ஒரு சில வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டால் அருகில் உள்ளவர் முகம் சுளிப்பார்கள் அது போன்றே பழவாசனைகள் அனைத்தையும் சேர்தால் போல் மணம் நாசியை முடக்கும், துரியன் பழச் சுவை ? பலாப் பழத்தை அரைத்து கூழாக்கி சுவைப்பது போன்று கொஞ்சம் தித்திப்பாகத்தான் இருந்தது, நன்கு உணவு சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிடக் கூடாது, அப்படிச் சாப்பிட்டுவிட்டும் ஏப்பம் விட்டால் ஏப்பக் காற்று பக்கத்தில் உள்ளவரை மயங்கி விழும்படி தாக்கும் வல்லமை பெற்றது :)

ஒரு மணி நேரத்தூக்கம் களையவும் டனலாட் பகுதி நெருங்கவும், சூரியன் மறைய 10 நிமிடங்களே இருந்தன. நாங்கள் சென்ற கோவில் பாலியின் மிக முதன்மையான 8 கோவில்களில் ஒன்று, பல அரச வம்சங்கள் பாலியில் இன்னும் வசிக்கின்றன, அவர்களுக்கு சொந்தமானது என்ற அளவில் கோவில்கள் பொதுமக்களால் வழிபடப்படுகிறது, டனலாட் என்றால் கடற் பகுதியாம் அந்தக் கோவிலுக்குள் செல்லும் பகுதி கடல் மட்டத்திற்கு 20 அடி உயரத்தில் உள்ளது, அங்கு இரு கோவில்கள் உள்ளன, ஒன்று 20 அடி உயர கரையில் இருந்து இயற்கையாக அமைந்த பாறைப் பாலத்தின் மீது பாதை போடப்பட்டு கடலுக்குள் இருக்கும் செங்குத்தான பாறைமேல் அமைக்கப்பட்ட கோவில், கொஞ்சம் இடது அல்லது வலது பக்கம் தள்ளி நின்று பார்க்க, டைனசர் கடல் நீரை கழுத்து நீட்டிக் குடிப்பது போன்ற தோற்றம், அடுத்த 500 மீட்டர் தொலைவில் முக்கியமான டனலாட் கோவில் கடலின் கரைப் பகுதியில் சற்று கடலினுள் உள்ளது, கடல் தண்ணீர் பெருகாத நாட்களில் கடற்கரையில் இருப்பது போன்றும் கடல் தண்ணீர் பெருகிய நாட்களில் அந்தக் கோவில் சிறிய கப்பல் மிதப்பது போன்றும் தோன்று(மா)ம். அன்று கடல் நீர் பெருக்கு இல்லை.

நாங்கள் சென்ற அன்று நான் முன்பு குறிப்பிட்டிருந்த களுங்கன் பெருநாளின் மறுநாள் என்பதால் அன்று(ம்) பாலி இந்துக்கள் இந்தக் கோவில்களுக்கும் குடும்பம் குடும்பமாக வந்து சடங்குகள் செய்து கொண்டிருந்தனர், வசதிபடைத்தவர்கள் சிற்றுந்திலும், வசதி குறைந்தவர்கள் சிறிய லாரி போன்ற உந்திகளிலும் வந்தனர். டைனசர் போன்ற தோற்றம் உள்ள அந்தக் கோவிலை அடுத்து கடற்கரையின் உயரப் பகுதியில் இருந்து தீர்தம் விழும் கடற்கரைப் பகுதி ஒன்று உள்ளது அங்கு பாலி இந்துத் தலைவர் (அவர்கள் மொழியில் ப்ராமணா) வருபவர்களுக்கு ஆசிக் கொடுத்து நெற்றியில் அரிசிகளை பதித்துவிட்டார், எங்கள் அலுவலகத்து புத்தமதச் சீனர்கள் அங்கு சென்று ஆசி பெற்று வந்தனர்.
தொலைவில் இருந்து பார்க்க டைனசர் கழுத்து நீட்டியது போல் இருக்கும் இந்த கோவில் டனலாட் கோவில் அருகே அமைந்துள்ள மற்றொரு சிறிய கோவில் இதன் பெயர் Pura Batu Balong
அதன் நுழைவாயில்
அங்கு செல்லும் சிறிய பாதை
அதனுள் சென்று வழிபடுபவர்கள் (கடல் மட்டத்தில் இருந்து 20 அடி உயரம் கைப்பிடிச் சுவர் கிடையாது)
சூரியன் மறைய ஐந்தே நிமிடங்கள் மீதம் இருந்தன, நான் கடலுக்குள் இருக்கும் அடுத்த கோவில் பகுதிக்குச் சென்றேன். மேற்கு வானம் செந்நிரமாக காட்சி தந்தது, கொஞ்சம் மேகக் கூட்டங்கள் இருந்ததால் சூரியன் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மெல்ல மெல்ல சூரியன் கீழிறங்க அந்த மேற்குக்கடலில் பொன்னிறம் மின்னிக் கொண்டு இருந்தது, சாரை சாரையாக பாலி இந்து மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வழிபாட்டுக் கூடைகளுடன் டனலாட் கடல்கோவிலுக்குச் சென்று கொண்டு இருந்தனர்.

கோவிலுக்குச் செல்லும் வழி கடற்கரை என்றாலும் அவை பாறை மேடுகள் குண்டு குழிகள் நிரம்பியவாகவே இருந்தது, அவை எரிமலை குழம்புகளால் ஏற்பட்ட பாறைகள் என்பது பார்க்கும் போதே தெரிகிறது, எரிமலைகள் உருகி பரவி இந்தத் தீவை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். கோவிலுக்கு அருகே சென்றேன், கடற்கரைச் சுற்றிலும் சுற்றுலாவாசிகள் கோவிலையும் சூரிய மறைவையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.




டனலாட் கோவில் சிதைந்த கப்பல் போன்ற வடிவப் பாறைக் குன்றையும் அவற்றினுள் சிறிய குகைகளும் இருக்கும் குன்று, அதன் மீது வழிபாட்டுத் தளம் இருக்கிறது, நம்மால் கோவில் அருகில் மட்டும் தான் செல்லமுடியும், குன்றின் மீது ஏறுவதற்கோ, மேலே இருக்கும் கோவிலில் நுழைவதற்கோ அனுமதி இல்லை, பாலியைச் சேர்ந்த இந்துக்கள் தவிர்த்து வேறு எவருக்கும் அங்கு இருக்கும் கோவில்களில் நுழைந்து வழிபட அனுமதி கிடையாது. நானும் இந்து மதம் தான் உள்ளே வழிபடப் போகிறேன் என்றால் விடமாட்டார்கள். சீக்கிய மதத்தில் சீக்கியர்கள் மட்டும் இருப்பது போல், பாலி இந்துக்கள் என்றால் அதில் பாலித் தீவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் என்று புரிந்தது. பாலி இந்துயிசம் என்பது இந்திய இந்து மதச் சாயலில் பவுத்த சமண மதங்களையும் சேர்ந்த கலவையே, ஆனால் நாங்கள் புத்தரை வணங்கமாட்டோம் என்றே சுற்றுலா வழிகாட்டி என்னிடம் தெரிவித்து இருந்தார். என்னால் 3 நாள் சுற்றுலாவை பத்து இடுகைகளாக எழுத முடிகிறது என்றால், ஜெயமோகன் போன்றவர்கள் பாலிக்குச் சென்று வந்தால் 'இந்து ஞானமரபு பற்றி' 10 தொகுப்பாக, தொகுப்புக்கு 2000 பக்க அளவில் நாவல்கள் எழுத முடியும்,


வழிபாட்டிற்கு வரும் பாலி இந்து ஆண்கள் காதில் பூ வைத்துக் கொண்டு இருந்தனர், எல்லோருமே வெள்ளை நிற ஆடை அதில் சிறுவர்களும் தலைப்பாகை கட்டி இருந்தனர், பெண்கள் முழுக்கைச் சட்டை மற்றும் கைலி போன்ற ஒரு உடை அணிந்திருந்தனர், டனலாட் கோவிலுக்குள் இருப்பது சிவனாம்.
(இணையத்தில் எடுத்தப்படம்)

விக்கி இணைப்பு : டனலாட் கோவில்(புரா)

சூரியன் முற்றிலும் அமிழ்ந்துவிட்ட நிலையில் அந்த இடம் இருட்டத்துவங்கி இருந்தது, நிறைய புகைப்படங்களை எடுத்துவிட்டு திரும்பினோம்.
அடுத்து செல்ல வேண்டிய இடம் இரவு உணவிற்கான இந்தோனேசிய உணவு வகை உணவகம், ஒரு மணி நேரப் பயணம். வழிகாட்டி பாலித் தீவினர் ஈமக் கிரியை பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார் (சிவன் கோவிலைப் பற்றி எழுதிவிட்டு இதை எழுதாமல் விட்டால் எப்படி ?). பாலித் தீவினர் மரணத்தைக் கொண்டாடுபவர்களாம், வேறெந்த இல்ல நிகழ்வைக் காட்டிலும் மரணச் சடங்குகளுக்கு ஆகும் செலவு மிக அதிகமாம். இறந்த உடல்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூட்டமாக எரியவிடப்படுமாம், அதற்காக தற்காலிகமாக (பதப்படுத்தி) புதைத்துவிட்டு பிறகு எடுத்து திரளாக ஊர்வலமாகச் சென்று ஆட்டம் பாட்டம் இசை என்று கொண்டாடிச் சென்று எரிப்பார்களாம், இறந்தவரின் ஆவி வீடு திரும்பாமல் இருக்க ஊர்வலப் பாதியில் குழப்பங்கள் இருப்பது போல் செய்ய முன்னும் பின்னும் பக்கவாட்டு தெரு ஆகியவற்றில் மாறி மாறி சென்று வேண்டுமென்றே நடிக்கப்படுமாம், மரண ஊர்வலத்தில் இறந்த உடல் சாதி வழக்கத்திற்கேற்ப ப்ராமணர்களின் பிணம் மிகப் பெரிய காளை உருவத்துடன் ஊர்வலமாகவும், சத்திரியர்கள் குதிரை வடிவ ஊர்வலத்துடன், பிறர் ஆடு உருவ பொம்மைகளையும் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பார்களாம். எனக்கு அவன் - இவன் படத்தின் இறுதி காட்சி தான் நினைவுக்கு வருகிறது. (சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா ?) எரிமலைகள் கிளப்பும் சாம்பலைவிட பெரிதல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ. சாம்பல் பின்னர் கடலில் தூவப்படுமாம். பாலித் தீவினர் நம்பிக்கை இறந்தவர்கள் மீண்டும் மறுபிறப்பாக பாலியில் பிறப்பார்களாம், ஒரு காலத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அவமானமாகக் கருதப்பட்டதாம், தற்போது அது மூடப் பழக்கம் என்று மாற்றிக் கொண்டார்களாம்.

பாலி இந்துக்களின் ஈமச்சடங்குகள் பற்றிய கீழ்கண்ட படங்கள் இணையத்தில் எடுத்தது







மேலும் இணைய படங்களுக்கு....இணைப்பு


இந்தத் தொடர் அடுத்தப் பகுதியில் நிறைவுறும்.

23 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 8

பண்பாடுகள் நாட்டுக்கு நாடு வேறுபடும், உலகில் நாம தான் உயர்ந்தப் பண்பாட்டை உடையவர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளோம். நாட்டுக்கு நாடு பண்பாடுகளைக் கொண்டாடும் முகமாக அரச பரம்பரைகள் கொண்டாடப்படுகின்றன, அவர்கள் பயன்படுத்தியப் பொருள்கள் பொக்கிசமாக பாதுக்காப்படுகின்றன.

*******

எரிமலையைப் பார்த்துவிட்டு கிளம்பினோம், அதே மலைப்பகுதிப் பாதையில் ஒரு அரைமணி நேரப் பயணம் பிறகு உபுட் (UBUD) கிராமம் நோக்கிய சாலையில் பேருந்து சென்றது. மலைப்பாங்கு மற்றும் பள்ளத்தாக்கான பசுமையான பகுதிகளில் பயணம் இருந்தது, பாலித் தீவு பார்க்க கோழியும் முட்டையும் சேர்ந்த வடிவமாக இருக்கும், அதைக் குறிப்பிட்டுச் சொல்லிய வழிகாட்டி, எங்கள் நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு கண்டிப்பாக லாபம் உண்டு என்பதைத் தான் எங்களது நாட்டின் வரைபடம் சொல்லுகிறது என்றார். பெரும்பாலும் வெளிநாட்டினர் முதலீடு என்பது பாலியில் சுற்றுலா சார்ந்தது தான், விடுதிகள் கட்டுவதில் வெளிநாட்டினர் மிகுதியாக முதலீடு செய்கின்றனர், அதனால் சுற்றுலாத் துறை வளர்ச்சி பாலியில் கனிசமாக உயர்ந்துள்ளது, 2002 அக்டோபர் பாலி குண்டுவெடிப்பின் பிறகு மூன்று மாதம் சுற்றுலாவாசிகள் இன்றி தீவு வெறிச்சோடிக் கிடந்ததாம் அரசு முயற்சி எடுத்து விடுதியில் தங்கும் செலவில் பல சலுகைகள் கொடுக்க முன்வந்த பிறகு நிலைமை வெறும் மூன்று மாதத்திற்குள் சரி ஆனதாம். தொடர்ந்து சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒருமுறை விமானங்கள் தரையிரங்கும் சுறுசுறுப்பான தீவில் விமானப் போக்குவரத்து நின்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் ?

உலகெங்கிலும் இல்லாத நடைமுறை ஒன்றை வழிகாட்டி குறிப்பிட மிகவும் வியப்பாக இருந்தது, அதாவது பாலித் தீவினர் 'அமைதி நாள்' என்று மார்ச் மாதம் ஒரு விடுமுறை நாள் வழக்கில் வைத்திருக்கிறார்கள், அன்று மின்சார விளக்குகள் மற்றும் மின்சாரம் தொடர்பாக எதையும் இயக்கமாட்டார்களாம், குறிப்பாக பாலி இந்துக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்களாம், சாலையில் போக்குவரத்து என்பதே இருக்காதாம், ஆனால் அவசரத் தேவை என்பதற்காக காவல் துறை, மருத்துவமனை மற்றும் தீயணைப்புத் துறை மட்டுமே இயங்குமாம். அன்று 24 மணி நேரத்திற்கு பாலி டென்பசார் விமான நிலையத்தில் இருந்து எந்த ஒரு விமானமும் கிளம்பாது, எந்த ஒரு விமானமும் தரையிறங்காது என்றார். இது மிகவும் வியப்பானது. உலகில் எந்த ஒரு விமான நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக நின்று போக இயற்கைப் பேரிடர், பனிமூட்டம், பனிப்பொழிவு அல்லது தீ ஆகிய காரணங்கள் மட்டுமாகத்தான் இருக்கும், ஆனால் பாலித் தீவில் கடைபிடிக்கும் அமைதி நாளுக்காக விமான நிலையமே மூடி இருப்பது பாலித் தீவின் வியப்புகளுள் ஒன்று.

ஏற்கனவே முந்தைய நாள் வந்துள்ள சுற்றுலா பயணிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடும் செய்யும் நிறுவனமும், விருந்தினர் விடுதிகளும் முன்கூட்டியே குறிப்பிட்ட நாளில் பாலியில் எங்கும் வெளியே செல்ல முடியாது, விடுதிக்குள் மட்டும் தான் இருக்க முடியும், விரும்பினால் தியானம் யோகம் இவை பயிற்றுவிக்கப்படுவதில் அன்று இணைந்து கொள்ளலாம் என்று கூறுவார்களாம், அதற்கு ஒப்புக் கொண்டு விருப்பமுள்ள சுற்றுலாவாசிகளே அன்று அங்கு இருப்பார்களாம். 90 விழுக்காட்டு மக்கள் அமைதி நாளை கடைபிடிக்கும் போது அதற்கு ஒத்துழைப்பாக 10 விழுக்காட்டு மக்களும் பிற வெளி நடவடிக்கை எதிலும் ஈடுபடமாட்டார்களாம். அமைதி நாள் அன்று வானம் மிகத் தெளிவாகத் தெரியும், நட்சத்திரங்கள் நிறைந்து காணப்படும் ஏனெனில் இரவில் மின் விளக்குகளே இல்லாததால் பாலித்தீவில் இருந்து பார்க்கப்படும் வானத்தின் கருமை நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றார்.

பாலித் தீவின் அமைதி நாள் பற்றி மேலும் தகவல்களை விக்கிப்பீடிய பகிர்ந்து கொள்கிறது: சுட்டி

உபுட் செல்லும் வழியில் மலைப் பாதை ஒன்றின் இடது பக்கம் சந்தைகள் நடந்தது, அந்த சந்தை பக்கத்து பெரிய தீவான ஜாவில் இருந்ந்து பொருள்கள் கொண்டு வந்து விற்கப்படுமாம், அவை ஜாவாத்தீவினரால் நடத்தப்படுகிறதாம், பாலித் தீவை ஒட்டி இருக்கும் ஜாவா தீவின் பகுதியில் உள்ளவர்கள் பாலியை நம்பித்தான் பிழைக்கிறார்கள், ஒரு 30 நிமிட படகு பயணத்தில் அவர்கள் பாலியை அடைந்துவிடுவார்கள், எனவே ஜாவாவில் இருந்து அன்றாடம் பாலிக்கு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவில் உண்டு. அவர்களைப் பொருத்த அளவில் பாலி இந்தோனேசிய பகுதி தான் என்பதால் வந்து போக எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

பேருந்து உபுட் கிராமத்திற்குள் நுழைந்தது, பெயர் தான் கிராமம் ஆனால் நன்கு வளர்ச்சி பெற்ற சிறுநகர் போன்று தான் இருந்தது, அந்த உபுட் கிராமத்தின் சிறப்பு அது பாலித்தீவினரின் பாரம்பரியத்தின் துவக்கப் புள்ளியாக இருந்ததாம், இன்றும் பாலித் தீவினருக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக உபுட் கிராமம் உள்ளது, அந்த கிராமத்தை உருவாக்கியவர் என்ற அளவில் ஒரு அரசரின் நினைவாக அவரது அரண்மனையும் அங்குள்ளது. அரண்மனைக்கு எதிரே உள்ள இடத்தில் மொத்த விற்பனை கடைகளை கட்டிக் கொடுத்து தன்னுடைய பார்வையில் அவற்றை மேம்படுத்தினாராம் அந்த அரசர். முன்பு பாலித்தீவில் விளையும் அரிசி உள்ளிட்ட அனைத்து வி ளைபொருள்களும் அந்த இடத்தில் தான் விற்க்கப்படுமாம், மருந்துப் பொருள்களும் மூலிகைகளும் அங்கு முக்கிய விற்பனை மையமாகச் செயல்பட்டதால் மூலிகை அல்லது மருந்தைக் குறிக்கும் பாலி மொழியில் அந்த இடத்தின் பெயர் 'உபுட்' என்று வழங்கப்படுகிறது.

உபுட் அரண்மனை அருகே பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி பார்வையிடச் சென்றோம், நிறைய சுற்றுலாவாசிகள் அலைந்து கொண்டு இருந்தனர், அரண்மனையின் முகப்பில் பாலி சாயல் கோபுரவாயில்கள் இருபக்க சுற்றுச் சுவரின் மையப்பகுதியில் அமைந்திருந்தது, நுழைவாயிலின் இடது பக்கம் அமைந்துள்ள சற்று உயரமான மண்டபம் அரண்மனை பாதுகாவலர்கள் நிற்பதற்காக அமைக்கப்பட்டு இருந்தது, நுழைவாயில் வழியாகச் செல்ல உள்ளே திறந்தவெளி மேடைப் பகுதியில் மற்றொரு நுழைவாயிலும் வலது பக்கம் அமைச்சரவைக் கூடம் ஒன்றும் அதன் வலப்பக்கம் 'அரண்மனை மணி' ஒன்றும் இருந்தது, அந்த அரண்மனை ஒரு ஏக்கர் சதுர அளவில் அமைந்திருந்தது, உள்ளே செல்ல சரஸ்வதி உருவம் ஒன்று பொறிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.




நடுவே வசந்த மண்டபம் மற்றும் ஆலோசனைக் கூடம், ஓய்வு அறை, சமையல் அறை, அந்தப்புரம் போன்ற பகுதி மற்றும் உள்ளே அவர்களின் குடும்பக் கோவில், அந்த அரண்மனைப் பகுதியின் உள்ளே பலவகை மலர் செடிகளை வைத்து நந்தவனம் போன்று வைத்திருந்தனர்.



அரண்மனை மட்டுமின்றி பாலித் தீவின் கோவில்களின் கதவுகள் ஒரு ஆள் நுழைவதற்கு ஏற்ற அளவில் குறுகியதாகவே உள்ளது, எதிரிகள் கூட்டமாக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை, கதவுகளில் தங்க முலாமோ தங்க வண்ணக் கலவையோ பூசப்பட்டு இருந்தது, அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது, நான் உள்ளே சென்ற போது யாருமே அங்கு இல்லை, உள்ளே ஒரே ஒரு மண்டபப்பகுதியில் சில பெண்கள் சமையலுக்கு தேவையானததிச் செய்து கொண்டு இருந்தனர்,


அவர்கள் அரசப்பரம்பரையைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன், வேறொரு வழியாக வெளியே வரும் போது, ஒருவர் குறுக்கிட்டு, உள்ளே சென்றீர்களா ? என்று கேட்டார், ஆம் என்றேன், அப்படி என்றால் டொனேசன் 50K கொடுங்கள் என்றார், கொடுத்தேன், இந்தக் கட்டணம் இருப்பது தெரியாமல் உள்ளே சென்று வந்தது கொஞ்சம் வெட்கமாகனது. எதனால் உள்ளே பலர் சென்றுவரவில்லை என்று தெரிந்தது. வெளிநாட்டுக்காரர்களுக்கு இந்தோனேசிய 50K பெரிய தொகை அல்ல. அரண்மனை முகப்பு மண்டபத்தினும் பாரங்க் நடனமும் சுற்றுலாவாசிகளுக்காக சிறிய நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது அரண்மணைக்கு வெளியே மக்கள் கூட பெரிய மண்டபமும் கட்டி வைத்துள்ளனர்.










அரண்மனை முகப்புக்கு எதிரே சாலையின் அடுத்தப்பக்கம் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் 100க் கணக்கில் இருந்தன. மரச்சிற்பங்கள், பீங்கான் பொருள்கள், பித்தளைச் சிற்பங்கள், வாசனை திரவியங்கள், வேலைப்பாடுகள் நிறைந்த துணிகள் என்று சுற்றுலாவாசிகள் நினைவு பொருளாக வாங்கிச் செல்ல பொருள்கள் ஏராளமானவைகள் இருந்தன, விலை(?) நாலுமடங்கு சொல்லுவார்கள் நாம் குறைத்துக் கேட்டு வாங்க வேண்டும்,





வெள்ளைக்காரர்களுக்கு 'விறைத்த ஆண் குறிகள்' மீது என்ன மோகமோ, அவர்களின் ரசனைக்காக மரச் சிற்பங்களாக பல்வேறு அளவுகளில் பல்வேறு வண்ணங்களில் செதுக்கி வைக்கப்பட்டு சாவிக் கொத்தாக பயன்படுத்தும் வளையத்துடன் மற்றும் சோடா பாட்டில் திறக்கும் காதுடன் ஆண் குறி மரச் சிற்பம் விற்கப்படுகிறது, இங்கு மட்டும் தான் என்பது இல்லை, மரச் சிற்பங்கள் விற்கும் அனைத்துக் கடைகளிலும் அவற்றைப் பார்கலாம், விமான நிலையக் கடைகளில் அவைகள் இருந்தன. பாலித் தீவு பூனைகளை போற்றும் தீவு, பாலித் தீவின் பூனைகள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறமானது, அவற்றை மரச்சிற்பங்களாக பல்வேறு வடிவங்களில் வடித்து வைத்திருக்கின்றனர்.

உபுட் கிராமத்தில் ஒரு மணி நேரம் இருந்தோம். பிறகு மேற்கு கடற்கரை நோக்கிய பயணம் பொன் மாலையும், சூரியன் மறைவையும் அங்கு தனிச் சிறப்பு வாய்ந்த கடற்கோவிலையும் பார்வையிடுவது தான் அன்றைய முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இருந்தது, அது குறித்த அழகான படங்களுடன் அடுத்தப் பதிவு வரும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்