பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2011

திரட்டிக்காக திரள்வோம் !

வலைப்பதிவில் எழுதுவதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அது போல் தொடர்ந்து எழுதாமல் இருக்கவும் காரணங்கள் இருக்கின்றன. முன்பு போன்று ஏன் மிகுதியாக எழுதுவதில்லை என்று கேட்பவர்களுக்கு இதைத்தான் சொல்லிவருகிறேன், போதக் குறைக்கு கூகுள் பஸ்ஸ், கூகுள் + அதன் பக்கம் கவனம் சென்றதால் பகிர்வதை நம் வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணம் ஒரு காரணம், என்ன இருந்தாலும் வலைப்பதிவு திரட்டிகள் வழியாக கிடைக்கும் இணைய நட்பின் ஈர்ப்புகள் பஸ்ஸ் உள்ளிட்ட பிற சமூகத் தளங்களில் இல்லை என்றே சொல்லுவேன். இது என் தனிப்பட்ட கருத்து தான்.

வலைப்பதிவே வைத்திருக்காதவர்கள் கூட வலைப்பதிவினருடன் நட்பில் இணைகிறார்கள், அதன் காரணம் ஒருவரது எண்ணங்கள் வலைப்பதிவின் வழியாக முழுமையாக உள்வாங்கப்பட்டு அதன் தொடர்பில் அவை ஏற்பட்டுவிடுகின்றன. பிற சமூக தளங்களில் ஒருவரது முழுமையான சிந்தனைகள் இவ்வாறென்பதை தெரிந்து கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது எனக்கு. மற்றபடி அவர்களுடன் அதே சமூகத் தளம் வழியாக மட்டுமே தொடர்பில் இருப்பது ஒன்றும் கடினமாகத் தெரியவில்லை, மேலும் அதன் எல்லை அதை தாண்டியும் வளர்வது சற்று கடினம் தான் என்றே நினைக்கிறேன். எழுத்துகளை வாசிப்பது, கருத்துரைப்பது என்பது தாண்டி நல்லதொரு தொடர்புகளை நட்புகளை உருவாக்கித் தருவதில் எனக்கு வலைப்பதிவுகளே முதன்மையாகத் தெரிகிறது. இருந்தாலும் துவக்கத்தில் சேர்ந்த நட்புக் கூட்ட எண்ணிக்கை ஆண்டுகள் செல்லச் செல்ல புதிய நட்புகளின் சேர்க்கை எண்ணிக்கை குறைவு தான். இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 பதிய நண்பர்கள் கிடைப்பது அரிது, அதுவும் அவர்களாக தொடர்பு கொண்டு கேட்கும் போது மட்டுமே கூடிவருகிறது. புதியவர்களின் நட்புகளைத் தேடிப் பெருவதில் இருக்கும் சிக்கல், ஏற்கனவே போதுமானதாக நட்பு வட்டம் பெருகியுள்ளதே காரணம் என்றே நினைக்கிறேன். மற்றபடி ஒரு புதிய வலைப்பதிவரை நட்பாக்கிக் கொள்ள சாதி மத மற்றும் பிற அரசியல் நிலைப்பாடுகள் அல்லது எழுத்து அனுபவம் என எதுவும் காரணமே இல்லை. இதுவும் என்னைப் பொருத்த அளவில் தான்.

இன்றைய தேதிக்கு தனித் தனி குழுமங்களாகவும் (பெரும்பாலும் வாழும் நாடு அல்லது நகரம், ஊர் பெயரில்), மொத்தமாகவும் தமிழ் பதிவர்களின் வட்டம் பெருகியுள்ளது. ஒரளவு நன்கு அறிமுகமான பதிவர் தனது இல்லவிழாவிற்கோ, திருமணம் ஆகாத பதிவர்கள் திருமணத்திற்கு அழைக்கும் பொழுது (குறிப்பாக சஞ்செய், ஆயில்யன் இன்னும் பிறர்) திரளாக வலைப்பதிவர்கள் தம் தம் வீட்டு விழாக்களைப் போல் சென்று வாழ்த்தி வருகிறார்கள், அதைத் தாண்டி ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலும் உதவி வருகிறார்கள், அவர்களில் சிலர் தன்னலத்துடன் நடந்து கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாக தமிழ் பதிவர் குழுமம் தமக்குள் நல்லொதொரு புரிந்துணர்வையும் நட்புணர்வையும் பெருக்கிக் கொண்டே வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் தமிழகம் சென்றால் நாம் போவதும் வருவதும் கூட உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து யாருக்கும் தெரியாது, இப்போதெல்லாம் சென்னை அல்லது திருச்சி, மதுரை வழியாக செல்லும் போது அந்த பகுதி வலைப்பதிவர்களை சந்திக்காமல் செல்ல முடிவதே இல்லை, அப்படியும் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் சென்று வந்தால் பின் தெரிந்ததும் அன்புடன் கடிந்து கொள்கிறார்கள், சென்னையில் எங்கு தங்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கெல்லாம் இல்லாமல் எங்களுடன் தங்குங்கள் என்று அழைப்பவர்கள் நிறைய பேர், எந்த ஒரு நகருக்குச் சென்றாலும் நமக்கு தெரிந்தவரில் ஒருவர் அங்கு உண்டு என்பதை வலைபதிவர் வட்டம் உறுதி செய்துவருகிறது, இதெல்லாம் நன்கு பிறருடன் பழக நினைப்பவர்களுக்கும் அவர்களுடன் பழகுபவர்களுக்கும் ஏற்படும் தனிப்பட்ட அனுபவம் ஆகும்.

வலைப்பதிவில் எழுதுவதன் மூலம் இவை வாய்ப்பாக அமைந்தது என்றாலும் அந்த வலைப்பதிவுகளின், வலைப்பதிவர்களின் முகவரிகளை நமக்கு அறிமுகப்படுத்திக் கொடுத்தததில் முதன்மைத் திரட்டியாக நான் நினைப்பது தமிழ்மணம் தான். எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் திரட்டி சேவையை வழங்கி வந்தவர்கள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை மற்றும் பிற மேம்பட்ட வசதிகளை சேர்த்துக் கொள்ள ஆகிய பொருள் செலவை ஈடுகட்ட விளம்பர பதிவுகளை இணைத்துக் கொண்டுள்ளனர், தற்பொழுது வலைப்பதிவர்களின் எண்ணிக்கை உயர உயர திரட்டி சேவை திணறி வருகிறது, இதனை சரி செய்ய இணையத் தளத்தை முற்றிலும் மாற்றி வேறொரு இணைய வழங்கியாளர் (வெப் ஹோஸ்டிங்) வழியாக செய்ய முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கான செலவுகளை கருத்தில் கொண்டு வலைப்பதிவர்கள் இயன்றவரை பொருளுதவி செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். துவக்க காலம் முதலே வலைப்பதிவர்களிடம் நெருக்கமான உறவு கொண்டு இருந்தாலும் தமிழ்மண நிர்வாகம் இது போன்று வெளிப்படையாக உதவி கோரியதில்லை என்பதை நாம் கருத்தில் கொண்டு இயன்றவரை உதவுவோம். இது ஹிந்திகாரர்களுக்கோ, கன்னட, தெலுங்குகாரர்களோகோ நடத்தப்படும் திரட்டியல்ல, முழுக்க முழுக்க நமக்காக நடத்தபடும் திரட்டி. நான் பிர திரட்டிகளை இங்கு ஒப்பிடவில்லை, சொல்லவருவது முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சியாக தயாரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை தமிழர்கள் பார்க்காவிட்டால் வீணாகிவிடும் அல்லவா அது போன்றதே.

நாங்கள் அதாவது சிங்கைப் பதிவர்கள் ஒவ்வொரும் இயன்றத் தொகையை சேர்த்து சிங்கைப் பதிவர் குழுமமாக தமிழ்மணம் நிர்வாகத்திற்கு அனுப்ப உள்ளோம், அதே போன்று உங்கள் பகுதிகளில் 'பொறுப்பான' ஒருவர் மூலம் சேகரித்து அனுப்பலாம் அல்லது தனித்தனியாகக் கூட அனுப்பலாம். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கேட்டுப் பெரும் நிலையில் இருக்கும் சங்கடங்களைப் போன்று தான் தமிழ்மணத்தின் அறிவிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டுள்ளேன்.

இதை ஏன் நான் எழுதுகிறேன் என்றால் தமிழ்மணம் திரட்டியின் வழியாக அறிமுகமான நட்புகளின் மூலம் பயனும் மகிழ்ச்சியும் அடைந்தேன் என்கிற முறையில் இதை நான் ஒரு கடமையாகவே நினைக்கிறேன். தமிழ்மணம் நன்கொடை தொடர்பாக நண்பர் ஜாக்கி சேகர் கூட இதுபற்றி எழுதியுள்ளார். எதிர்காலத்தில் நல்ல சேவைகளைத் தொடரும் பிற திரட்டிகளையும் கவனத்தில் கொள்ளுவோம் அவர்களும் உதவி தேவை என அறிவிக்கும் போது.

20 ஜூலை, 2011

கருணாநிதி இந்திய பிரதமர் ஆகிறார்.

அண்மையில் சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி முன்னாள் முதல்வர் கருணாநிதிய அவரது அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னாள் தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதியே அடுத்த பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக தெரிவதாகவும், மன்மோகன் தலைமையில் காங்கிரஸ் பல சிக்கல்களை குறிப்பாக ஸ்பெக்டரம் உள்ளிட்டவற்றில் பாஜகவை சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்து, தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய பிரதமராக இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பை திரு கருணாநிதிக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களையும் தமிழர்களையும் தாம் மிகவும் நேசிப்பதாலாயே அவர்களின் பாசத் தலைவர் திரு மு கருணாநிதிக்கு பிரதமர் பதவிக்கு தாம் பரிந்துரைப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக அரசின் பல சாதனைகளை பட்டியல் இட்டு திரு மு.கருணாநிதியிடம் பேசிய முகர்ஜி, அத்தகைய திட்டங்களை இந்தியா எங்கும் விரிவுபடுத்த கருணாநிதியே சரியான தேர்வு என்பதையும் தெரிவித்துள்ளார். முகர்ஜி சந்திப்பின் போது பக்கத்தில் இருந்த பேரன்களின் ஒருவர் 'தாத்தா எனக்கு ஹிந்திப் படம் எடுத்து வட இந்திய கலைத் துறைக்கு தொண்டு ஆற்ற ஆவல் எழுந்துள்ளது', எனவே பிரதமர் பதவிக்கான தேடிவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல, நெகிழுந்து போனாராம் முகர்ஜி, காரணம் தென்னிந்தியர்களுக்கு தேசிய உணர்வு குறைவு என்று நினைந்திருந்ததற்கு கருணாநிதியின் பேரனின் இ(ஹி)ந்திய தேசிய பற்று சாட்டையடி கொடுத்துள்ளதாம்.

முகர்ஜியின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கிய திரு கருணாநிதி, தம் மகள் மற்றும் ராசா திகார் சிறையில் இருக்க என்னைப் பிரதமர் ஆக்குவது சர்சை ஆகாதா ? என்று ஐயம் கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த முகர்ஜி 'இவை எல்லாம் வட இந்திய ஆரிய பத்திரிக்கைகள் சூடான செய்திக்காக கிளப்பிவிடப்பட்ட ஆறிப்போன வதந்தி, நீதிமன்றம் அவற்றை தற்காலிகமாகத்தான் நம்பியுள்ளது, குற்றச் சாட்டுகள் ஆதரமற்றவை விரைவில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தேறுதல் கூறினாராம், இருந்தாலும் முதுமையையும் கவனத்தில் கொள்ளச் சொன்ன கருணாநிதியை அங்கிருந்து இடைமறித்த திரு முக அழகிரி இந்தியாவின் 21ஆவது பிரதமரும், 22 ஆவது பிரதமரும் நீங்கள் தான் இதில் மாற்றம் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் தமிழக திமுகவின் தலைமைப் பதவியை இதற்காக விடத் தேவை இல்லை தொடரலாம் என்று கூறி உள்ளார்.

இதையெல்லாம் கேட்டு நெகிழ்ந்த திரு மு.கருணாநிதி முகர்ஜியிடம் 'பிளாட்டின வெண்ணிலவு அன்னை சோனியாவிடம் தாம் பிரதமர் பதவிக்கு இசைந்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்ததாகச் சொல்லவும்' என்று விடை கொடுத்துள்ளார். அதன் பிறகு முரசொலியின் நாளைய பதிப்புக்காக நெகிழ்ச்சி குன்றாமல் உபி களுக்கு கடிதம் எழுதத் துவங்கிய கருணாநிதி

'பார்த்தாயா உடன்பிறப்பே, பதவிகள் என்னும் முள்கிரிடமும், பாராட்டுவிழாக்கள் என்னும் மலர் மாலைகளும் நான் வேண்டாம் என்றாலும் அவை என்னை நோக்கிய தேடி வருகின்றன, அன்னைத் தமிழுக்கு ஆற்றும் அரும் தொண்டாகவே நான் இந்த இடற்களை சுடர்விளாக்காக் கண்டு ஏற்றுக் கொள்கிறேன்,. மைனாரிட்டி அரசு என்று கழக அரசை இகழ்ந்த கொடை நாட்டு தென்குமரி தமிழக நலத்திட்டத்திற்கு பிரதமரிடம் கைநீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, இதைத் தான் அண்ணா அன்று சொன்னார் 'ஆணவம் கூடாது அதுவும் ஆட்சியாளர்களுக்கு அறவே கூடாது' என்றார், பிரதமர் ஆனால் தாய் தமிழ்நாட்டை தற்காலிகமாக பிரிந்து செல்கிறோமே என்று வருத்தமே என்னிடம் ஏற்பட்டுள்ளது, அயல்நாடு சென்று உழைக்கும் தமிழர்களுக்கு அன்றாடம் தாய் தந்தையர் மனைவி மக்கள் நினைவு இருப்பதைப் போல் டெல்லி சென்றாலும் என் எண்ணமெல்லாம் எப்போதும் தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்தே இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.........

**********

ஏந்திரிங்க மணி ஆச்சு ஆபிஸ் கிளம்பல.........

அட விடியற்காலை கனவா ? இது நடந்துவிட்டால் பின்னர் ஜெ-வை பிரதமர் ஆக்கும் துர்பாக்கிய, திரிசங்கு நிலையில் வெளியில் இருந்து ஓட்டுப் போடாவிட்டாலும் ஆதரவு கேட்க வேண்டி இருக்குமோ ? தமிழகத்துக்குத்தான் சாபக்கேடுகள் தொடரும் என்று நினைத்தேன், இந்தியாவுக்குமா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்

நக்கீரனில் 'மத்திய மந்திரி ஆகிறார் கனிமொழி' என்பதை படித்த பிறகு இந்தமாதிரி கெட்ட கெட்ட கனவாக வருது

18 ஜூலை, 2011

மொட்டை !


குழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு சென்று மூன்று வயதிற்குள் அடிக்க வேண்டுமாம். எனக்கு இந்த சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களின் அறிவுறுத்தல், சென்டிமென்ட்ஸ் மற்றும் இதர வகைகளினால் ஒருவயதிற்குள் மொட்டையடிப்பது என்று முடிவாகியது. மேலும் குழந்தையாக இருக்கும் போது முதல் மொட்டை போட முடி கரு கருவென்று வளர்வதற்கு வழிசெய்யும். சிலருக்கு இளம் வழுக்கையை மறைத்து இளமையாக்க மொட்டை பயன்படுகிறது. மகளுக்கு பள்ளி விடுமுறை அடுத்து டிசம்பரில் தான் என்பதாலும் அதற்குள் ஒரு வயது ஓடிவிடும் என்பதால் சிங்கப்பூர் - மலேசியாவில் ஏதோ ஒரு கோவிலில் மொட்டையடிக்கலாம் என்று முடிவாகி, சின்ன சுற்றுலாவாக மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள பத்து மலையில் மொட்டையடிக்கலாம் என்று உறுதி செய்து பயண ஏற்பாடுகளை செய்தேன். பயண ஏற்பாடுகளுக்கான முன்பதிவுகளை செய்து கொடுத்ததும் கூடவே பயணம் முழுவதும் எங்களுடன் இருந்தார், பதிவர் நண்பர் வெற்றிக்கதிரவன் (எ) விஜயபாஸ்கர். ஒரு நாள் விடுப்பு வெள்ளி அதன் தொடர்ச்சியாக வார இறுதி சனி ஞாயிறு என மூன்று நாள் பயணமாக மலேசியாவிற்குக் கிளம்பினோம்.

சிங்கையிலிருந்து கிளம்பி, அதனை அடுத்துள்ள மலேசியா ஜோகூரில் இருந்து இரவு நேர படுக்கை வசதியுள்ள ரயிலில் தான் பயணம், வியாழன் நள்ளிரவில் கிளம்பிய ரயில் வெள்ளி விடிய காலை 6:30 மணிக்கு கோலாலம்பூர் சென்ட்ரல் சென்று அடைந்தது. அங்கிருந்து மகிழுந்துவில் பயணத்து ஓட்டல் அறையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு கிட்டதட்ட 11 மணி வாக்கில் மற்றொரு மகிழுந்தில் பயணித்து பத்துமலை சென்றோம். கிட்டதட்ட 20 நிமிட பயணம் தான். மலை அடிவாரத்தை நெருங்கும் முன் தொலைவிலேயே பத்து மலை முருகனின் மிகப் பெரிய சிலை வியக்க வைத்தது, இதற்கு முன்பு அங்கு சென்றிருக்கிறேன் என்றாலும் சிலை அமையப் பெற்ற பிறகு சென்றது முதல் முறை என்பதால் அந்த இடமே மாறுபட்டத் தோற்றத்தில் இருந்தது. உருவ வழிபாட்டை புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள் நிறைந்து இஸ்லாமிய நாடாகவே இருக்கும் மலேசியாவில், இந்திய சமய நம்பிக்கைகளின் ஒன்றான குறிப்பாக தமிழர் நம்பிக்கைகளின் சாட்சியாக கழுத்து சுளுக்கும் அளவுக்கு நிமிர்ந்து பார்க்க வைக்கும் சிலை உருவம், மலேசிய மக்களின் மதச் சகிப்புத் தன்மையின் சாட்சியாக விளங்கியது. இது போன்ற மாபெரும் சிலையை நான் இதுவரை எங்கும் பார்த்தது இல்லை.


சிறுது நேரம் சிலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு நிழல்படங்களை எடுத்துக் கொண்டு முடி இறக்கும் இடத்திற்கு வந்தோம், கோவில்களில் இருப்பது போன்று முடி இறக்க தனியாக இடம் இல்லை என்பதை நண்பர் முன்பே தெரிவித்திருந்தார், ஆனால் அங்கு அடிவாரத்தில் இருக்கும் முடித்திருத்தகத்திலேயே 'முடி இறக்கும் இடம்' என்ற அறிவுப்பு பலகை இருந்தது,
அங்கு சென்று 10 ரிங்கிட் (மலேசிய நாணயம்) சீட்டு வாங்கி, குழந்தைக்கு மொட்டை ஏற்பாடு செய்தோம், குழந்தையை வெற்றிக்கதிரவன் மடியில் இருத்திக் கொண்டார்,
சிறிது நேரம் அமைதியாக இருந்த குழந்தை அழத் துவங்கினான், பிறகு அவன் அம்மாவிடம் கொடுத்து புட்டிப்பால் புகட்டிக் கொண்டே மொட்டை மொட்டை அடிக்கப்பட்டது, பாதியிலேயே வீரிட்டுக் கத்தத் துவங்கினான்.
மொட்டை அடிக்கும் வேலை 3 நிமிடங்கள் தான் என்பதால் அழுகையை கண்டு கொள்ளாமல் அழுத்திப் பிடித்து கொண்டு மொட்டையை நிறைவு செய்தாகிவிட்டது, கீறல் விழாமல் மொட்டையடித்தைப் பாராட்ட கூடுதலாக 10 ரிங்கிட்டுகள் கொடுத்தோம். குழந்தைகளை குளிப்பாட்ட மின்சார சாதன வெந்நீர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், குளித்து முடித்து, புத்தாடை அணிவித்து தலையில் சந்தனத்தைத் தடவி கோவில் படிக்கட்டுகளை நெருங்கினோம் அதுவரை அழுது கொண்டிருந்தான் பிறகு அங்கிருக்கும் புறாக்களைப் பார்த்து அமைதியானான். நம்மை எதோ செய்கிறார்கள் என்கிற பயம் இருக்கும் போல் குழந்தைகளுக்கு, அங்கு பிறந்த ஒரே மாதம் ஆனக் குழந்தைகளைக் கூட மொட்டை அடிக்க அழைத்துவருகிறார்கள், உச்சிக் குழி மூடாமல் மொட்டையடிப்பதை நினைத்தால் பதட்டமாகவே இருக்கிறது, சீனர்களும் கூட அவர்கள் வழக்கத்தில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பதாக முன்பு என்னிடம் தெரிவித்திருந்தார்கள்.


செங்குத்தான படி, 15 - 20 படிக்களுக்கு இடையே கொஞ்சம் அகலமான படிக்கட்டுகளுடன் 300க்கு மேலான படிக்கட்டுகளுடன் படிகள் அமைக்கப்பட்டுள்ளன, முக்கால் பங்கு தொலைவு மேலே ஏறியதும் தான் முருகன் சிலையின் தலை உயரம் வருகிறது, உயரமும், அதன் பின் இருக்கும் மாலை அலங்காரமும் மொத்த சிலையும் கலை அமைப்புடன் 'விசுவ ரூப' தோற்றம் என்று வடமொழியில் கடவுள் குறித்தான கதையாடலில் சொல்ல்படுவதன் சாட்சியாகக் காணப்படுகிறது. அமைப்பாளர்களைப் பாராட்டலாம்.





படிகளின் கைப்பிடிச் சுவர்களில் அங்கங்கே குரங்குகள் விளையாடுகின்றன, சுற்றுலாவாசிகள் படமெடுக்கிறார்கள், மேலே சென்றால் பெரிய குகை, மலைகள் உருகி கூம்புகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன
அவற்றில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருந்தன, நல்ல குளுமை, மழைத் துளிபோல் குகையின் திறந்த பகுதிகளில் மேலிருந்து தண்ணீர் துளிகள் எப்போதும் விழுந்து கொண்டிருக்கின்றன. குகையின் நடுவே தனியாக இருக்கும் முருகன் கோவிலும்,
அதைக் கடந்த படிக்கட்டுகளில் மேலே ஏற அதனை அடுத்து வள்ளி தெய்வானையுடன் நிற்கும் முருகன் கோவிலும் உள்ளது, குகையின் சுவர்களில் சுற்றுலாவாசிகள் பெயர்களை எழுதி இருக்கிறார்கள், அதனைத் தடுக்க 'சுவர்களில் எழுதாதீர்கள்' என்ற அறிவிப்பும் அங்கங்கே இருக்கிறது, குகைச் சுவர்களில் அங்கங்கே பல்வேறு சாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடமே இயற்கைச் சூழலுடன் அமைதியாகவும் காணப்படுகிறது.



அங்குள்ள பூசாரிகளிடம் (இங்கு பார்பனர்கள் அர்சகர்களாக இல்லை, முழுக்க முழுக்க தமிழ் வழிபாடு தான்) திருநீறு குங்குமம் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு திரும்பினோம்,
ஏராளமான ஐரோப்பியர்கள் அங்கு வந்து செல்கிறார்கள், தன் மதம் பற்றிய தெளிவுகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அல்லது புறம் தள்ளிவிட்டு அங்கு கோவிலில் இருக்கும் பூசாரியிடம் மணிக்கட்டில் மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொள்கிறார்கள். இந்தக் காட்சியை பிறமதவாதிகள் பார்த்தால் 'இந்தப் பூசாரி சைலண்டாக பிற மதத்தினரை மதம் மாற்றுகிறார் பார்...' என்றும் இந்துமதவாதிகள் பார்த்தால் 'இந்து ஞானமரபினைப் போற்றி இந்து கோவிலுக்கு ஆர்வமாக வரும் கிறித்துவர்கள்' என்றும் சொல்லுவார்கள் நண்பரிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன், கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்), ஆனால் சுற்றுலாவாசிகளாக குகைகளில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.






நடக்க இயலாதவர்கள் படிக்கட்டு வழியாக மேலே வர வாய்ப்பில்லை, பிற ஏற்பாடுகள் எதுவும் இல்லை, அவர்கள் கிழிறிந்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான், இழுவை ரயில்கள் இன்னும் அமைக்கப்படவில்லை, எதிர்காலத்தில் அவை வரலாம். முன்கூட்டியே வேட்டி எடுத்துவந்த்தால் மடித்துக் கட்டிக்கொண்டு ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாகத்தான் இருந்தது, சுற்றுலாவாசிகள் காலணிகளுடன் ஏறுகிறார்கள், அவை தடைசெய்யப்படவில்லை, இந்துக்கள் காலணிகளை கீழேயே விட்டுவிட்டு ஏறுகிறார்கள்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஒருவிதத்தில் பத்து மலை மலேசியாவின் ஆகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு தமிழர் பண்பாட்டு சின்னங்களை அமைத்திருப்பது அடுத்து செல்லும் நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, அவர்களின் உழைப்பும், ஈடுபாடும் போற்றுதலுக்குரியது. பிற நாடுகளில் வாழும் சீனர்களுக்கு அடுத்து தங்களுக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதில் தமிழர்கள் முனைப்புடன் தான் இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும் என்பதை நினைத்துக் கொண்டே திரும்பினேன்.

பின்குறிப்பு : குழந்தைப் படங்களை பதிவுகளில் போடுவதற்கு நிறைய நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து தனிப்பட்ட முறையில் நன்கு சொல்லி இருக்கிறார்கள், இதில் ஏன் போடுகிறேன் என்றால், எனக்கு இருக்கும் பதிவர் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியான பொழுதுகளை பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ந்து பிறகு இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவணமாகத் தான் போடுகிறேன்.

11 ஜூலை, 2011

ஆந்திராவை பிரித்து கொடுங்கள் !

பிரிவினை என்பதை எதோ செய்வினைச் சொல்லாக்கி, கசப்பு உணர்வுடன் பார்ப்பதற்கு அவை தேவையற்ற பாலபாடமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதே காரணம். குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்க்களின் அடிப்படை கூட்டமைப்பு அல்லது அவர்களின் உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நிலப்பரப்புகள் மொழி வாரி மாநிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இந்திய தேசிய நீரோடையில் கலந்தன. குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்கள் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் தான் தமிழ் அடையாளப் பெயர்களை தாங்கிய தமிழர் வாழ்ந்த நிலங்கள் கூட அண்டை மாநிலங்களுக்கு சென்றது, திருப்பதி, பாலக்காடு போன்றவை இந்த வகையே, அதே போல் ஹொசூர், ஊட்டி போன்றவை தமிழகத்தில் இருந்தாலும் அந்தப் பெயர்களுக்கான பொருள் கன்னடம் சார்ந்தது. ஊட்டி மற்றும் ஹொசூர் (ஓசூர்) தமது மாநிலத்தைச் சேர்ந்தவை என்பதை கர்நாடகத்தவர்களும் கூறி வருகிறார்கள். விடுதலைக்குப் பிறகு மாநிலங்கள் நில எல்லைக்குள் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றைச் சொல் அனைவரையும் ஒன்றிணைப்பதாக பாடத் திட்டங்களில் சொல்லுகிறார்கள், இவை ஏட்டளவே ஏனெனில் தண்ணீர் உள்ளிட்ட பொதுவான வளங்களில் பகிர்ந்தளிப்பதில் ஒற்றுமை என்பது அவை மீந்து போகும் போது மட்டும் தான் என்ற அளவில் இருக்கிறது. தெலுங்கான - ஆந்திரா பிரச்சனை என்பது அண்டைமாநில பிரச்சனை அல்ல, உள் மாநில பிரச்சனையே.

தெலுங்கான ஆந்திராவின் ஏனைய பகுதிகளைவிட வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது என்பதே குற்றச்சாட்டாகவும், அதை சரி செய்யும் நோக்கில் தனிமாநிலமாக அப்பகுதி அமையவேண்டும் என்பதே பெரும்பான்மை தெலுங்கானவாசிகளின் கோரிக்கை. இவை உண்மை எனும் போது ஆந்திர அரசு தெலுங்கான பகுதிகளை முன்னேற்ற முன்வந்து பிரச்சனைகளை களைந்திருக்க வேண்டும், தென்னிந்திய மாநில ஆட்சியாளர்களின் போக்கே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டால் போதும் என்ற நிலையில் இருந்து கொண்டு ஒட்டு மொத்த மாநில நலனை புறக்கணித்தே வருகின்றனர். ஆந்திராவில் எந்த ஒரு ஆளும் கட்சியும் தனித் தெலுங்கான கோரிக்கையை ஆதரித்து நடவடிக்கை மேற்கொண்டது போல் தெரியவில்லை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயசாந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து தனி தெலுங்கான மாநிலம் அமைய வேண்டும் என்று கோரிவருகிறார்கள். ஆந்திராவின் ஆட்சி மாற்றங்களுக்கு ஆளும் முறையவிட தெலுங்கான ஆதரவு என்ற ஒற்றைச் சொல்லின் மீதான ஆதரவே அவற்றை ஏற்படுத்திவருகிறது, தெலுங்கான உறுதி என்று கூறிய காங்கிரஸ் இதுவரை அவற்றில் முனைந்து செயல்பட்டது இல்லை. அவ்வப்போது பரிசீலிக்கிறோம் என்று கூறியே வந்தனர். ஆனாலும் தெலுங்கான அமைவதற்கான சூழலுக்கு அவர்கள் முயலவில்லை, எதோ தெலுங்கான கமிட்டியெல்லாம் அமைத்தும் அவர்களது பரிந்துரை குவிஸுக்கு வகை வினாக்களுக்கு கொடுக்ப்படும் பல்வேறு விடை போன்றே சிறுபிள்ளைத்தனமான பரிந்துரையாகவே இருந்தது. இது மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது, இந்த முறை தெலுங்கான அமைவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.



ஹைதராபாத் தெலுங்கானாவுக்கா ? ஆந்திராவுக்கா ? என்ற நிலையில் ஆந்திர பகுதிவாசிகள் முற்றிலுமாக தெலுங்கான கோரிக்கையை எதிர்த்துவருகிறார்கள். அளவுக்கு மிகுதியான மொழிப்பற்றும் ஒரு காரணம், எங்கே பிரிந்துவிட்டால் தெலுங்கு பேசும் மக்கள் பிரிந்துவிடுவார்களோ என்கிற தேவையற்ற அச்சம் பிரிவினைக்கு எதிராக நிற்கிறது. வெறும் மொழிப் பற்று ஒட்டுமொத்த அம்மாநிலத்தின் நலனையும் பிரதிபலிக்கவில்லையே. வெறும் மொழிபற்று மட்டுமே இருக்கிறது, ஆனால் அவை மாநிலத்தின் பிற பகுதி மக்களை ஒன்றாகப் பார்க்கவில்லை என்பது தான் தெலுங்கானவாசிகளின் குற்றச் சாட்டும் ஆகும். இங்கு தமிழ்நாட்டுக்குள்ளேயே தனிமாநிலம் (புதுவை மாநிலங்கள்) செயல்படுகிறது, தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்று யாரும் அச்சப்பட்டது போல், அது பற்றி சிந்தித்து போல் தெரியவில்லை. தனித் தெலுங்கானவும், ஆந்திராவும் தெலுங்கர்களுக்கு அமைந்தால் அவை தெலுங்கர்களுக்கு பெருமையே, ஏனெனில் ஒரே மொழியைப் பேசும் பெரிய இரு மாநிலங்கள் என்ற தகுதி இந்தியாவில் வெறெந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை. தேவையற்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை விட்டுவிட்டு தனிதெலுங்கான அமைய ஆந்திர தெலுங்கர்கள் ஒத்துழைப்பதே ஒட்டுமொத்த தெலுங்கு சமுகத்திற்கும் நன்மை பயக்கும்.

வரும்கால தெலுங்கான மாநிலத்திற்கு முன்கூட்டிய நல்வாழ்த்துகள்.

6 ஜூலை, 2011

குறி சாமியார் குப்பு சாமி (வெ.ஆ.மூர்த்தி - ஸ்பெசல் ) !

சாமியார் பிஸ்னஸ் நல்லாப் போகுதுன்னு நல்லாத் தெரிஞ்ச வெண்ணிற ஆடை மூர்த்தி சாமியார் வேசம் கட்டிவிட்டார். குன்றத்தூர் மலையடிவாரத்தில் குத்துக்கல்லாட்டாம் குந்திக்கிண்டு இருக்கும் அவரிடம் மக்கள் குறி கேட்க வர்றாங்க.
பக்கதில் 'குன்றத்தூர் குறிசாமியார் குப்புசாமி' ன்னு பெயர் பலகை இருக்கு.





வெ.ஆ.மூர்த்தி : ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பூ.....ப்ர்ர்ர்ர்ர்ர்பூ.....(உதடால ஊதி .......ஒருபயலையும் காணுமெ.......) என்று சிந்திதபடி இருக்கிறார்

50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தொப்பையோடு அவரிடம் வருகிறார்

'வணக்கம் சாமி.......நான் புவனகிரி புஷ்பநாதன் மகன் புண்ணிய கோடி'

வெ.ஆ.மூர்த்தி : (ரொம்பவும் தெரிஞ்சவரிடம் பேசுவது போல) வா....புண்ணியக் கோடி..உன்னப் போலா ஆளுக்காகத்தான் ஒத்த குச்சியோட உட்கார்ந்து குறிபார்த்து குறிபார்த்து சொல்லிக்கிட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி யாருகூடேயும் ஓடிட்டாளா ?

பு.கோ : ஹிஹி..... அட ஆமாம் சாமி அது எப்படி உங்களுக்குத் தெரியும் ?

வெ.ஆ மூர்த்தி : அதான் மூதேவி உன் மூஞ்சப்பார்த்தாலே தெரியுதே......உன்கிட்ட இவ்வளவு நாளு அவ இருந்ததே கஷ்டம்

பு.கோ : ஹி ஹி, இப்ப நான் ஓடிப் போன பொண்டாட்டி திரும்பி வருவாளான்னு கேட்க வரல, அடுத்து எனக்கு கல்யாணம் ஆகுமான்னு பார்த்துச் சொல்லுங்க

வெ.ஆ.மூர்த்தி : டம்பி........நான் சொல்றேன்ன்னு தப்பா நெனச்சுக்காதெ, வெட வெடன்னு ஆடுற ஒன்கிட்ட இன்னொருத்தி வந்தாலும் அவ கட கடன்னு ஓடிப்போவான்னு தான் ஒன் நாடி சொல்லுது......ம்கூம்.....உன் வாயெல்லாம் ஓவரா நாறுது......கொஞ்சம் தள்ளி உட்காரு.

பு.கோ : அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா ?

வெ.ஆ மூர்த்தி : ம்கூம் கல்யாணம் ஆகாது ஆனா இன்னொன்னு சொல்லுவாங்களே... கருமாதி அது ஆகும்...எந்த குறிகாரன் இல்லாட்டி குறிகாரியிட்ட கேட்டாலும், குடிகாரங்கிட்ட கெட்டாலும் அதான் சொல்லுவான், காத்தால எழுந்து நெதம் பல்லு வெளக்கு.......கல்யாணம் ஆகாட்டியும் எவன் கூடவோ ஓடிப் போன ஒம்பொண்டாட்டி திரும்பி வந்தாளும் வருவா ?

பு.கோடி பெருமூச்சு விட்டபடி எஸ்கேப் ஆகிறார்

வெ.ஆ மூர்த்தி : டேய் டேய் குறிக்கேட்டதுக்கு எதாவது கொடுத்துட்டுப் போடா........தொங்க தொங்க நாக்கு வரண்டு போய் குந்திகினு இருக்கேன்......இப்படி ஏமாத்திட்டுப் போறானே பாவி இவன் உறுப்படுவானா ?

**********

அடுத்ததாக இன்னொருவர்

கும்பிடுறேன் சாமி, நான் கொருக்குப்பேட்ட கோபாலு

வெ.ஆ.மூர்த்தி : வா கோபாலு உட்காரு கோபாலு, உனக்கு என்ன பிரச்சனை ? நல்லா ஓடிக் கிட்டு இருந்த பிஸ்னஸ் இப்ப சொம்மா ஆடிக்கிட்டு இருக்கா ?

கொ.கோ : ஆமாம் சாமி, பார்டனர் என்னை மோசம் செஞ்சுட்டான், அவனுக்கு செய்வன வெக்கனும்

வெ.ஆ.மூர்த்தி : டம்பி நான் சொல்றேன்ன்னு தப்பா நினக்காதே அதிகமா கைவென வைக்கிறவனும் செய்வென வெக்கிறவனும் அத்தாலாயே சாவான்.

கொ.கோ : செய்வின தெரியும் அது என்ன சாமி கைவின ?

வெ.ஆ.மூர்த்தி : இதெல்லாம் வெவரமா கேளு, அதிகமா கைய நீட்டுறவன் யாராலாவது அடிவாங்கியே சாவான்னேன் நான் சொல்றது சரிதானே ?

கொ.கோ : அப்ப நான் என்ன தான் தொழிலு செய்றது ?

வெ.ஆ.மூர்த்தி : டம்பி கைத் தொழில் சரி இல்லைன்னா கலைத்தொழில் எதாவது செஞ்சுப் பொழச்சிக்கலாம், உன் ரேகைப்படி உனக்கு கூத்து வரும். ஆடிப் பொழச்சுக்கோ..... சினிமாவில் சேரு....நல்லா வருவே

கொ.கோ : அப்ப நான் வாரன் சாமி

வெ.ஆ.மூர்த்தி : நீ வார்றது இருக்கட்டும், காத்தாலேர்ந்து நாஷ்டா இல்லாமல் நட்டுகிட்டு இருக்கேன், துட்டக் கொடுத்து எங்கேயாவது போய் தொல

******

அடுத்து ஒரு 30 வயது தக்க பெண் வருகிறாள்

சாமி வணக்கம்,

வெ.ஆ.மூர்த்தி : நீ ஆதம்பாக்காம் ஆளவந்தான் மக அன்னக்கிளி தானே.........?

'இல்லை அது எங்க அக்கா.......நான் வண்ணக்கிளி'

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா ....அப்ப உங்க அப்பாவுக்கு ஒரு சின்ன வீடும் இருக்கா ?

வ.கிளி : நாசமாப் போச்சு.....போய் வாயைக் கழுவுங்க சாமி......எங்கப்பாவுக்கு இரண்டு வீடு இல்ல ஒரே வீடு தான், அவ என் கூடப் பொறந்த அக்கா

வெ.ஆ.மூர்த்தி : தப்பா நெனச்சுக்காதம்மா....உங்கப்பா அந்தக்காலத்து ஆளேச்சேன்னு கேட்டேன், இப்ப ஒனக்கு என்ன கொற ?

வ.கிளி : அத ஏன் கேட்கிறிங்க....எங்க ஊட்டுக்காரர் இராவைக்கு 12 மணிக்கு மேல பூனை மாதிரி வந்து படுத்துக்கிறார்.....காத்தால அஞ்சுமணிக்கெல்லாம் வெளியே போய்டுறார்......எங்கே என்னை கைவிட்டுவாரோன்னு பயமா இருக்கு ?

வெ.ஆ.மூர்த்தி : அவனுக்கு சின்ன வீடு இருக்கான்னு குறிபார்க்கனும், அதானே ?

வ.கிளி : அந்த கண்றாவி புடிச்சவனுக்கு நான் கிடச்சதே பெருசு, அது மோரக்கட்டைக்கு இன்னொருத்தி சிக்குவாளாக்கும்

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.......தப்பா நெனச்சுக்காதே ஒருவேளை ஒன் மோரக்கட்டையைப் பார்க்க புடிக்காமல் தான் ராவொடு வந்துட்டுப் போறானோ......

வ.கிளி : ம்கும்......இரண்டு புள்ளையை பெத்திருக்கேனாக்கும்.....புடிக்கமாலா இருக்கும்....

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா....உங்க வீட்டுல டிவி ஓடுதா ?

வ.கிளி : அதான் என்னேரமும் ஓடுது சாமி, இன்னிக்கு சீரியல் கீரியல் எதுவும் கிடையாது அதான் இந்தப்பக்கமா குறிகேட்க வந்தேன்.....நேத்திக் கூட செல்லம்மா சீரியலில் அஞ்செலி பொண்ணை அரஸ்ட் செஞ்சப்ப எழவெடுத்த கரண்டு பட்டுன்னு போச்சு, அதுக்குப் பெறகு என்ன ஆனதோ மனசு பட்டு....பட்டுன்னு அடிச்சுகுது

வெ.ஆ.முர்த்தி : பாப்பா மறுபடியும் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே, கார்த்தாலேர்ந்து ரா வரைக்கு முழுச்சு முழுச்சு மூதேவியாட்டாம் மெகாசீரீயல் பார்த்துக்கிட்டே இருந்தீன்னா....எப்பேர்பட்ட மவராசனாக இருந்தாலும் வீட்டுப்பக்கமே ஒரு எட்டுக்கூட வந்துட்டுப் போவமாட்டான், டிவிய அணைச்சிட்டீன்னா அவன் வருவான் வந்து அவனே லைட்ட அணைப்பான்

வ.கிளி : போங்க சாமி எனக்கு வெட்கமா இருக்கு

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.....வந்ததே வந்த...... அவுத்துக் கொடுத்துட்டு நல்லா முடிச்சுப் போட்டுட்டு போ.....சுத்திலும் பூறா களவானிப் பசங்க பார்த்துட்டா அப்படியே அமுக்கிடுவானுங்க.

வ.கிளி : ...ங்ஙெ.............!

வெ.ஆ.மூர்த்தி : அட சில்லரையையும் சுறுக்கு பையையும் பத்தரம்னு சொன்னேன்

*******

பின்குறிப்பு : வெண்ணிற ஆடை ரசிகர்களுக்காக இந்த புனைவு நகைச்சுவை. இதை இன்னும் கொஞ்சம் தூக்கலாக எழுத முடியும் ஆனால் சுவை ரசபாசமாகிடும், அதாவது நாரசம்...ஆபாசம்!

5 ஜூலை, 2011

கவுண்டமணி Vs சந்தானம் !

திருவாளர் கவுண்டமணி முதுமை காரணமாக திரையில் இருந்து விலகி இருந்தாலும், அவரில்லாத இடைவெளியை இட்டு நிரப்பி, வளர்ந்து வரும் ஒருவர் , கவுண்டரை கண்டு பிறந்த நாளுக்கு ஆசி வாங்க அவரைப் போலவே 'நக்கல் எகத்தாள காமடி' செய்துவரும் நடிகர் அதாவது சந்தானம் சந்திக்கிறார்

*********



சந்தானம் : வணக்கம் தலைவரே, எனக்கு பொறந்த நாளு உங்களப் பார்த்து ஆசி வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்

கவுண்டமணி : எலேய் நான் என்ன முற்றும் தொறந்த சாமியாரா ? என்கிட்ட எதுக்குடா ஆசி, நித்தி சாமி, சுத்திசாமின்னு சுத்திக்கிட்டு இருந்தியே அவனுங்க தரமாட்டானுங்களா ?

சந்தானம் : (முனுமுனுப்பாக) எதோ பெருசு யாரும் கண்டுகொள்ளமல் கெடக்குன்னு பார்த்தால் எகத்தாளத்தைப் பாறேன், அது இல்லிங்க கவுந்த சாரே...இல்ல கவுண்டர் சாரே.நீங்க எனக்கு சீனியரு, நான் உங்களுக்கு ஜூனியரு ஒரு மரியாதைக்கு தான்.

கவுண்டமணி : எலே அதெல்லாம் நாலு படத்துல நடிச்சுட்டு வருங்கால மொதலைமச்சருன்னு சொல்றானுங்க பாரு அவங்க கிட்ட சீனியர் ஜூனியர் டயலாக்கெல்லாம் சொல்லு அவனுக்கு அடுத்த முதலமைச்சர் ஆனாலும் ஆவே

சந்தானம் : டேய் டோப்பாத் தலையா......ஐயோ.....நாக்கை கடித்துக் கொண்டு, கவுண்டர் சார் கவுண்டர் சார் நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் ஜெனங்க நான் தான் உங்களுக்கு ஜூனியர்னு சொல்லிக்கிறாங்க

கவுண்டமணி : அப்ப நீயும் என்னைமாதிரி புத்திக் கெட்டுப் போய் கதாநாயகனாக நடிச்சுட்டு, ஒரு நாயும் மதிக்காமல் போய் அப்பறமாக வாய்ப்புக் கெடச்சா ஒரு ரவுண்டு வருவேன்னு சொல்லுறியா ?

சந்தானம் : (குறைவான குரலில்) கெழவனுக்கு கொழுப்பைப்பாரு....., 'கவுண்டர் சார் விவேக் சின்ன கலைவாணர்னு பட்டம் போட்டுக்கிறமாதிரி....நானும் சின்னக் கவுண்டமணி' ன்னு போட்டுக்கவா

கவுண்டமணி : அடேய் ஒரு வூட்டுல ஆயிரத்தெட்டு அண்டாக் குண்டான்னு இருந்தாலும் வீட்டுக்குள்ள ஒரே ஒரு மணி தான் இருக்கும், அதுல சின்ன மணி பெரிய மணியெல்லாம் உண்டாடா ? நீ எங்கேயாவது பார்த்திருக்கியா ? வந்துட்டாரு....... நீ வேணும்னா சின்னக் குஞ்சு மணின்னு போட்டுக்க இல்லாட்டி பெரிய குஞ்சமணின்னு கூட போட்டுக்க.

சந்தானம் : அது இல்லை ஒரு வளரும் கலைஞனுக்கு வளர்ந்த கலைஞன்....

கவுண்டமணி : (கர கர குரலில்) என்னது நீ இன்னும் வளரலையா ஒங்கொம்மாக்கிட்டச் சொல்லி காம்ப்ளானை வாங்கிக் குடிச்சுட்டு மம்மி மம்மின்னு சொல்லி எம்பி எம்பி நல்லா குதி வளர்ந்திடுவ

சந்தானம் : 'அடிங்க்.....பல்லு போன வயசுல லொள்ளைப் பாரு........எகத்தாளத்தைப் பாரு

கவுண்டமணி : எலேய் லொள்ளும் எகத்தாளமும் என்னமோ நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தாப்பல சொல்லிட்டு இருக்க, நான் சப்பிப் போட்ட மாங்கொட்டைய எடுத்து சப்பிக்கிட்டு இருக்கிற பய நீ என்கிட்டேயே எகத்தாளத்தப் பற்றிப் பேசுறியா ?

சந்தானம் : (மெல்லமாக) இந்தாளை ஏன் பீல்ட் அவுட் பண்ணினாங்கன்னு இப்பதான் தெரியுது, யாரு போனாலும் கடிச்சு வச்சிடுறானே, கவுண்டர் அங்கிள் அப்ப நான் வர்றேன் அங்கிள், சிங்கிள் டீ வேணுமா அங்கிள்....?

கவுண்டமணி : ம் எலி ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு யார் யாரையோ நக்கல் அடிச்சிருக்கேன், ஆனால் இப்பதான் நேரில் பார்க்கிறேன். காட்டவெட்டி கழனித் தண்ணிக் குடிச்சாலும் குடிப்பேன் ஒரு பய கையால எச்ச டீ வாங்கிக் குடிக்கமாட்டேன்

சந்தானம் : கையால வேண்டாம்னா கையுல ஒற போட்டு வாங்கித்தரவா கவுண்டர் அங்கிள்.

கவுண்டமணி : ஐயோ அங்கிள்னு சொல்லி உறவுக்காரனாக்கி நெஞ்ச நக்குறானே, இப்ப என்ன செய்யறது.......சரி சரி நீயும் சினிமாகாரனாப் போய்ட்டே உன் ஆசையை நான் ஏன் கெடுப்பானே, நல்லவேளை பொறயோடு வாங்கிதரேன்ன்னு சொல்லி நாயாக்கமல் விட்டியே....நீயாவது நல்லாயிரு...

(மெல்லிய வாய்சில் ....எங்க பய சிங்கிள் டீ கூட வாங்கிக் கொடுக்காமல் நழுவிடுவானோன்னு நினச்சேன் ஒற போட்டு வாங்கித்தரதா அவனே மாத்திச் சொல்லிட்டான், என்ன இருந்தாலும், நம்ம பாதிப்பு இருக்கத்தான் செய்யுது.......)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்