திராவிட புத்திரி சூத்திரர் ஆனக் கதை !
Wednesday, June 29, 2011
இன்னிக்கு ஒரு முக்கியமான செய்தி, 'கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்காக காளகஸ்தி கோவிலில் 'ராகு - கேது' சர்ப தோஷ வழிபாடு செய்தாராம். இதில் என்ன கருணாநிதி தம்மை நாத்திகனாகக் கூறிக் கொண்டால் அவரது வாரிசுகள் கோவிலுக்குப் போகக் கூடாதா ? அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கக் கூடாதா ? என்பது தானே கேள்வி.
கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை, அவ்வாறு இருப்பதும் இல்லாததும் அவரவரின் விருப்பம். ஆனால் 'ராகு - கேது' சோஷியம் பரிகாரம் இன்னும் பிற இழவுகளும் இந்துமத அடிப்படைகளின் ஒன்று, இதைமட்டுமே இந்துமதம் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, பிறப்பினால் ஏற்றத் தாழ்வுடன் பிராமணன் - சூத்திரன் வரை பிரிவுகளை வைத்திருந்து வேதக் கல்வி கற்றிருந்தாலும் பிறப்பின் வழியாக பார்பனர் அல்லாதோர் ஆகமக் கோவிலும் பூசை செய்ய ஆகமம் இடம் தரவில்லை என்று தடையாணையுடன் நிற்கிறது. இந்த இராகும் கேதுவும் யார் ? அசுரரும் - தேவரும் அமிர்தம் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தில் அசுரர்களுக்கு பங்கில்லை என்று கைவிரித்து அவர்களை புறக்கணித்த போது அந்த அசுரரில் ஒருவர் தேவராக உருமாறி இடையில் நிற்க அமிர்தம் கிடைக்கப் பெற்று உண்டதும், அவர் தேவர் இல்லை என்பதால் உடல் வெட்டப்பட்டு, உண்ட அமிர்தத்தின் காரணமாக உயிர் போகமல் இருக்க இராகுவாகும் கேதுவாகவும் சபிக்கப்பட்டதாக இந்து மத இழிபுராணம் ஒன்று கூறுகிறது. இதை எதற்கு இழி புராணம் என்று கூறுகிறேன் என்றால் உடல் உழைப்பிற்கு அதாதவது அமிர்தம் கடைய உறுதுணையாக இருந்த அசுரர்கள் நிராகரிக்கப்பட்டதற்கு அவர்கள் தேவர்கள் அல்ல என்னும் அற்பக் காரணமே. இத்தகைய புராணங்கள் இழிபுராணம் அன்றி வேறென்ன ? இதே வழியில் தான் வேதம் படித்த பார்பனர் ஒன்று கூடி வேதம் படித்த பார்பனர் அல்லாதோர் பூசை செய்யும் தகுதி படைத்தவர் அல்லர் என்று வாதிட்டு தடை ஆணையும் பெற்றுள்ளனர்.
இந்து மதமும் அதன் புராணங்களும் குறிப்பாக இராகுவும் கேதுவும் இந்து மத ஏற்றத்தாழ்வுகளின் அவமானச் சின்னமாகவே தொடர்கின்றனர், உழைப்பாளிகளின் உழைப்பு மட்டுமே சுரண்டப்பட்டு அவர்களுக்கான பலன் மறுக்கப்பட்டதன் உவமானம் தான் ஒரு அசுரன் இராகு கேதுவாக சபிக்கப்பட்ட கதை. இது தான் ஆகமவழி கோவில்களின் அவலட்சணம். பிறப்பின் வழி ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கிறேன் என்று தோன்றிய இயக்கதின் தலைமை பதவியில் பலன்களை தொண்டர்களின் ஆதரவால் பெற்ற ஒருவரின் பெற்ற மகள் இத்தகைய ஏற்றத் தாழ்வை போற்றும் இந்துமதம் பற்றியும் ஆகமக் கோவில் பார்பனர்களின் ஆளுமையையும் அறிந்திருக்கமாட்டாரா ? அவ்வாறு அறிந்திருக்கமாட்டார் என்றால் பெற்ற மகளுக்கே இத்தகைய அறிவை ஊட்டதாவர் பிறருக்கு செய்ததெல்லாம் ஊருக்கு உபதேச வகையில் தானா ?
தாம் திராவிடன் அல்லது திராவிடர் என்று நம்பும் ஒருவர் ஆகமக் கோவிலின் ஐயர்மார்கள் செய்து தரும் பரிகார பூசையை நம்பும் போது, இந்து மத ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்வதாகத் தான் பொருள். அது மட்டுமல்லாது அவர்கள் பார்பனர்கள் அல்லாதோர் என்றால் இந்துமதக் கோட்பாட்டின் படி தம்மை சூத்திரர்களாக பார்பனர் உள்ளிட்ட பலர் அழைப்பதை தாழ்வுடன் ஏற்றுக் கொள்பவரும் ஆகிறார்கள்.
கருணாநிதிக்கு நாகதோசமா ? ஒருவேளை பெரியார் சொன்னதில் பாதியைப் புரிந்து கொண்டு விட வேண்டிய பாம்புகளை அடித்துக் கொன்றாரோ ?
மு.க செல்வி காளகஸ்தி கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்து தம்மை சூத்திரர் ஆக்கிக் கொண்டுள்ளார், வாழ்க திரா'விடம்'


