உலகின் மிக விரைவான ரயில் பயணம் !
Tuesday, May 31, 2011
எந்த ஒரு வளரும் நாட்டின் முதன்மையான வளர்ச்சிக்கு அதன் சுற்றுலாத் துறை மேம்படுவது மிகத் தேவை. சீனர்கள் முந்துகிறார்கள், சீனா முந்துகிறது, இந்தியா சீனாவை எட்டிப் பிடிக்க 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகலாம். இதில் பொறுமை, பொறாமை என்பதையெல்லாம் மீறி சமூக நலன்களும் இருக்கின்றது, 1000 கிராமங்களை அழித்துவிட்டு அங்கு ஒரு தொழில் நகரை உருவாக்க நினைத்தால் அதை சீனாவால், சீனாவில் செய்யமுடியும். சீனாவின் நகர வளர்ச்சிகள் அப்படியானது தான். அந்த வகையான விரைவான வளர்ச்சிகள் இந்தியாவிற்கு தேவை இல்லை, ஏனெனில் தொலைந்த கிராமங்களும், அதன் அமைதி சூழலான வாழ்க்கை முறையும் மீண்டும் உருவாக்கப்படுவதில்லை. சீனாவின் தற்போதைய கணக்கெடுக்கின் படி கிராமப்புறங்களில் சுமார் 5 1/2 கோடி குழந்தைகள் (நாட்டு மக்கள் தொகையில் 5 விழுக்காடு) பெற்றோர்கள் நகரை நோக்கி வேலை தேடி சென்றதால் கைவிடப்பட்டு அல்லது உறவினர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள், நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பல இடர்களை தோற்றுவிக்கும் வீக்கமாகும் இவை என்பது மனித உரிமை அமைப்பினரின் கருத்து ஆகும்.
*******
சென்ற முறை அலுவல் தொடர்பில் சீனா சென்ற போது தட்டிச் சென்ற அதிவிரைவு தொடர்வண்டி பயண ஆசை இந்த முறை (27 மே 2011) நிறைவேறியது, ஷாங்காய் புத்தொங் விமான நிலையத்திலிருந்து சுற்றுலாவாசிகளை கவருவதற்காகவே மெக்லெவ் எனப்படும் உலகின் அதிவிரைவு மின்காந்த புல்லெட் தொடர்வண்டியை இயக்கி வருகிறார்கள். நேர அட்டவணைப்படி மணிக்கு 431 கிமி விரைவு மற்றும் 301 கிமி விரைவு என இரு வேறுபட்ட விரைவுகளில் ரயில் பயணம் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றனர். அந்த அட்டவணைப்படி காலை வேலைகளிலும், மாலை வேலைகளிலும் மணிக்கு 431 கிமி விரைவிலும், நண்பகலுக்கு சற்று முன்னும் பின்னும் 301 கிமி விரைவிலும் பயணிக்க முடியும். நான் சென்ற நேரம் நன்பகல் நெருங்கி இருக்க, எனக்கு 301 கிமி விரைவில் பயணம் செய்ய மட்டும் தான் வாய்ப்புக் கிடைத்தது.மெக்லெவ் எனப்படும் அந்த ரயில் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து ஷாங்காய் நகரின் மையப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள லோங்யாங் சாலை வரை சுமார் 40 கிமி வரை சென்று திரும்புகிறது. போக வர ரயில் கட்டணம் (80 யுவான், சிங்கை வெள்ளிக்கு 15.38, இந்திய ரூ 538), மறு பகுதியை அடைய சுமார் 8 நிமிடங்கள் தான். இருக்கை வசதிகள் மிகவும் நேர்தியாக வசதியாக இருந்தன, விஐபிகளுக்கு தனிப்பகுதி பெட்டியும் மேலும் சிறப்பான இருக்கைகளும் வைத்திருக்கிறார்கள், கொஞ்சம் கூடுதல் கட்டணம் அவ்வளவு தான். நான் பொதுப் பெட்டியிலேயே பயணித்தேன். நேரம் மற்றும் ரயிலின் வேகம் காட்டுவதற்கு பெட்டியினுள் இருபுறமும் மின்னனு காட்சி (டிஸ்ப்ளே) உள்ளது.
ஷாங்காய் வழியாகவோ அல்லது ஷாங்காய் நகருக்கோ செல்பவர்கள் மோக்னெட்டிக் ரயில் பயண வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொண்டால் நல்லதொரு பயணத் துய்ப்புக் கிடைப்பது திண்ணம். இதற்கு முன் ஐரோப்பாவின் ஈரோ ஸ்டார் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறேன், ஆனால் அதன் வேகம் 200 கிமி தான். உலகின் பிற பகுதிகளிலும் மின்காந்த இரயில்கள் இருந்தாலும் ஷாங்காய் ரயிலின் வேகத்தில் அவை பயணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் எப்போது இந்தியாவிலும் நடக்கும் என்ற ஏக்கமா ? மேலே முதற்பத்தியை திரும்ப படிக்கவும். Read more...






