அச்சோ அச்சோ அச்சச்சோ !
Tuesday, April 27, 2010
இந்த செய்தியை படித்துவிட்டு 'வேண்டுதல்கள் என்றால் என்ன ?' என்று கேள்வி எழுகிறது.
மட்டை ஆட்டத்தில் தன் அணி வெற்றி பெற வேண்டும் அம்பாணி குடும்பத்தார் மூலம் 2 கோடி ரூபாய்களை திருப்பதி உண்டியலில் பெருமாளுக்கு (லஞ்சமாக) போடப்பட்டதாம், மும்பை அணி தோற்றுவிட்டதால் அதை மண்ணைக் கவ்வவைத்துவிட்டார் பெருமாள், பெருமாளே டோனிக்கு தான் ரசிகர் என்று சொல்லிவிடலாமா ? அல்லது கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் சென்னை வெற்றி பெற இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உண்டியலில் போட்டு இருப்பார்களோ ?
*******
* பக்கத்து வீட்டுக்காரன் பாடையில் போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?
* என்னை திட்டியவன் நாசமாகப் போகவேண்டும் என்று வேண்டிக் கொண்டால் சாமி வரம் கொடுக்குமா ?
சிலர் வேண்டுதல் என்பதோடு நிறுத்தாமல் சூனியம் வைக்கவும் கிளம்புவார்கள், சூனியம் பலிக்கும் என்பது பலர் நம்பிக்கை, அப்படி என்றால் ஜெ சார்பில் கருணாநிதி குடும்பத்துக்கு சூனியம் வைக்கலாம். காங்கிரஸ் கோஸ்டிகள் உள்ளுக்குள் கோஷ்டி ஒழிப்பிற்கு சூனியம் வைத்து ஒழித்துவிட்டால் சோனியாவிற்கு தலைவலி மிச்சமாகும். சூனியம் சோதிடத்தின் ஒரு பிரிவு, கிரக நிலைகளை ஒப்பிட்டு ஒருவருக்கு மோசமான நிலை இருக்கும் போது சூனியம் வைத்தால் பலிக்கும் என்பது சூனியக்காரர்களின் சோதிட மற்றும் சூனிய நம்பிக்கை.
கிரிக்கெட் சூதாட்டங்களை தவிர்த்து பார்த்தால் விளையாட்டு என்பது இரு அணியினருக்கிடையேயான போட்டி, இதில் திறமை தான் வெற்றி பெரும், வெற்றி யை உறுதி செய்வோர் தவறிழைக்காமல் கடுமையாக போட்டி கொடுத்தால் வெற்றி பெற முடியும், விளையாட்டின் சித்தாந்தங்கள் அனைத்தும் இது தான். அது தவிர்த்து விளையாட்டில் வெற்றி என்பது எதிரியை ஏமாற்றுவதோ, குதறுக்கு வழியில் பெருவதோ இல்லை. தன் அணி வெற்றி பெற வேண்டும் என்கிற வேண்டுதல் கூட தவறு இல்லை, ஆனால் அதற்காக முன்பணமாக உண்டியலில் லஞ்சம் போடுவதெல்லாம் இறை நம்பிக்கையை கேலிக் குரியாக்கும் ஒரு தவறான முன் உதாரணம் ஆகும்.
போட்டியில் வெற்றி பெருவதைவிட தோல்வியே அடையாமல் இருக்க வேண்டுமென்றால் போட்டி இடாமல் இருப்பது தான் ஒரே (மாற்று) வழி. அதை விடுத்துவிட்டு தோல்விக்கு அஞ்சி கடவுளுக்கு கையூட்டு கொடுப்பவர்கள் வெற்றி என்பதையே வாங்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் பொருள். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுதல்கள் பயனளித்தாலும் கூட போட்டியில் எதிரணியில் இருப்போரை ஏளனம் செய்வது போலாகும்.
திருப்பதி சாமி சென்னை அணிக்கு வேண்டாதவரா ? வெற்றி தோல்விகளில் மூன்றாம் நபர் தலையீடுகள் இல்லை என்றால் அது ஞாயமான முடிவாகும், அதில் ஆண்டவன் என்கிற மூன்றாம் நபர் தலையீடு இருந்தால்
கிடைப்பது எதுவாக இருந்தாலும் அது அநீதி தான்.
உண்மையைச் சொல்லப் போனால் கிரிக்கெட் மைதானத்தில் வீரர்கள் நமாஸ் செய்தாலோ, சிலுவை குறி போட்டுக் கொண்டாலோ, இந்துக்களைப் போல் வேண்டிக் கொண்டாலோ அதை மாற்று மத சமூகத்தினர் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் தரையில் விழுந்து அல்லாவுக்கு நன்றி என்று நமாஸ் செய்வதை ரசிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர் யார் ?
விளையாட்டினுள் மதமோ வேண்டுதல்களோ நுழைவதை நேர்மையான விளையாட்டு என்று கொள்ள முடியுமா ? வேண்டிக் கொண்டு காசு போடுகிறவன் போடுகிறான் உனக்கென்ன என்று கேட்டாலும் கூட......'அட இவனுங்க நிஜமாலும் திறமையால் வெற்றி பெறவில்லையா ?' என்று பதில் வருமா வராதா ?
எந்த வித அநீதிகளும், ஞாயம் பற்றிய கேள்விகள் எதுவும் இல்லாத போட்டிகளில் தன்பக்கம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுவோர் போட்டியிடாமல் இருப்பதே போட்டிக்கான நன்மதிப்பு. விளையாட்டில் அரசியல், மதரீதியான வேண்டுதலகள் இவையெல்லாம் நுழையும் போது திறமை என்பதே கேள்விக்குரியாகிவிடுகிறது.










